கணுக்காலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கணுக்காலி
புதைப்படிவ காலம்: 540–0 Ma
கேம்பிரியன் – தற்காலம் வரை
கணுக்காலிகள்
கணுக்காலிகள்
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கினம்
துணைத்திணை: யூமெட்டாஸோவா (Eumetazoa)
பெருந்தொகுதி: Ecdysozoa
தொகுதி: கணுக்காலி
Latreille, 1829
துணைத்தொகுதி மற்றும் வகுப்பு

கணுக்காலிகள் (Arthropod) என்பவை விலங்குகளின் பிரிவில் ஒரு மிகப் பெரிய தொகுதி. ஆறு கால்கள் கொண்ட பூச்சிகளும் வண்டுகளும், தேளினங்களும், எட்டுக்கால் பூச்சி, சிலந்திகளும், நண்டுகளும் அடங்கிய மிகப் பெரிய உயிரினப்பகுப்பு. இன்று மனிதர்களால் அறிந்து விளக்கப்பட்ட விலங்குகளில் 80% க்கும் மேல் கணுக்காலிகளைப் பற்றியவைதாம். கணுக்காலிகளை அறிவியலில் ஆர்த்ரோபோடா (Arthropoda) என்பர். இது கிரேக்க மொழியில் உள்ள ἄρθρον ஆர்த்ரோ (= இணைக்கப்பட்ட, கணு) என்னும் சொல்லும் ποδός (போடொஸ் = கால்) என்னும் சொல்லும் சேர்ந்து ஆக்கப்பட்டது. கணுக்காலிகளுக்குக் கடினமான புறவன்கூடு உண்டு. இவற்றின் உடல், பகுதி பகுதியாக, அதாவது கண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ள அமைப்பு கொண்டது. இவற்றின் கால்கள் இணை இணையாக ஒவ்வொரு உடற் கண்டத்திலும் உள்ளன. கணுக்காலிகளில் பிளாங்க்டன் (plankton) வகையைச் சேர்ந்தவையின் 0.25 மி.மீ அளவில் இருந்து, 20 கிலோ கிராம் எடையுடன் 4 மீட்டர் (12-13 அடிகள்) கால் விரிப்பு அகலம் கொண்ட மிகப்பெரிய நிப்பானிய எட்டுக்கால் நண்டு வரை மிகப்பல வகைகள் உள்ளன.

கணுக்காலிகளை வேறுபடுத்திக் காட்டும் முக்கிய மூன்று இயல்புகள்:

  • கைட்டினாலான புறவன்கூடு
  • துண்டுகளாலான உடல்
  • மூட்டுள்ள தூக்கங்கள் (மூட்டுள்ள கால்கள்)

இவை பார்வைக்காக கூட்டுக்கண்களையும் ஒசிலி எனும் பார்வைப் புலனங்கத்தையும் பயன்படுத்துகின்றன. பூச்சிகளில் கூட்டுக்கண்ணே பிரதானமான பார்வைப் புலனங்கமென்றாலும், சிலந்திகளில் ஒசிலிகளே பிரதான பார்வைப் புலனங்கங்களாகும். பூச்சிகளின் ஒசிலிக்களால் ஒளி வரும் திசையை மாத்திரமே கணிக்க முடியும். எனினும் சிலந்திகளின் ஒசிலிக்களால் முழு உருவத்தையும் கணித்துக்கொள்ள முடியும். கேம்பிரியன் காலப்பகுதியிலிருந்து கணுக்காலிகள் பூமியில் உள்ளன. அவற்றின் உடலகக் கட்டமைப்பின் சிறப்புத் தன்மையால், விலங்குகளில் அதிகளவான இனங்களும், அதிகளவான தனியன்களும் கணுக்காலிகளாக உள்ளன. எனவே இவையே விலங்குக் கூட்டங்களுள் அதிக வெற்றியுடைய கூட்டமாக உள்ளன. எனினும் உலகிலுள்ள உயிரினங்களுள் பக்டீரியாக்களே அதிக இனங்களையும், அதிக தனியன்களையும் கொண்ட கூட்டமாகும்.

கணுக்காலிகள் மனித வாழ்வில் பல்வேறு தாக்கங்களைக் காட்டுகின்றன. நாம் உண்ணும் உணவில் முக்கிய பங்கை வகிக்கும் இறால், நண்டு என்பன கணுக்காலிகளே. ஒவ்வொரு வருடமும் பயிர்களின் அறுவடைக்கு முன்னமும் பின்னரும் பயிரையும் விளைச்சலையும் அழித்து பல கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தும் பீடைகளில் அதிகமானவை கணுக்காலிகளே. தாவரங்களின் தேனை உறிஞ்சி அவற்றின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் வண்ணத்துப் பூச்சிகளும், தேனிக்களும் கணுக்காலிகளாகும். எறும்புகளும் இக்கூட்டத்தைச் சேர்ந்தவையே ஆகும். எனவே உயிரினப் பல்வகைமையில் கணுக்காலிகள் முக்கிய பங்கை வகிக்கின்றன.

இனப்பல்வகைமை[தொகு]

ஒரு கணிப்பின் படி இதுவரை அறியப்பட்ட கணுக்காலி இனங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1,170,000 ஆகும். எனினும் புவியில் வாழும் கணுக்காலி இனங்களின் உண்மையான எண்ணிக்கை 5-10 மில்லியன்கள் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. இவற்றின் எண்ணிக்கை ஒரு பிரதேசத்தின் சராசரி இனப்பல்வகைமையைக் கொண்டே கணிக்கப்படுகின்றது. எனினும் துருவப் பிரதேசங்களை விட அயனமண்டலப் பிரதேசங்களின் கணுக்காலி இனங்களின் பல்வகைமை மிக அதிகமாகும். 1992ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி கோஸ்டா ரிகா எனும் சிறிய அயன மண்டல நாட்டில் மாத்திரம் 365000 கணுக்காலி இனங்கள் உள்ளன. எனினும் துருவங்களுக்கருகிலுள்ள மிகப்பெரிய நாடுகளிலும் இவ்வெண்ணிக்கை இதை விடக் குறைவாகவும் காணப்படலாம்.

உடலமைப்பு[தொகு]

கணுக்காலிகளின் அடிப்படை உடலியல் கட்டமைப்பு
    = இதயம்
    = குடல்
    = மூளை, நரம்புகள், கன்கிலியா
O = கண்
Arthropod body struct 01.png
கணுக்காலிகளின் அடிப்படை உடலியல் கட்டமைப்பு

கணுக்காலிகளின் மிக முக்கியமான தனித்துவமான இயல்பு மூட்டுள்ள தூக்கங்களைக் கொண்டிருத்தலும், கைட்டினாலான புறவன்கூட்டைக் கொண்டிருத்தலுமாகும். இம்மூட்டுள்ள தூக்கங்கள் கணுக்காலிகளின் இடப்பெயர்ச்சி, உணவுண்ணல், புலனுகர்ச்சி போன்றவற்றிற்கு உதவும். இவை இருபக்கச் சமச்சீருள்ள, முப்படை கொண்ட, அனுப்பாத்து துண்டுபட்ட உடலுடைய விலங்குகளாகும். இவற்றிற்கு பூரணமான உணவுக்கால்வாய் உண்டு. கணுக்காலிகள் திறந்த குருதிச்சுற்றோட்டத் தொகுதியை உடையவையாகும். நன்கு விருத்தியடைந்த வரித்தசை காணப்படும். இக்கூட்டத்தில் தலையாகு செயலும், புறத்தே குறித்த எண்ணிக்கையான உடற்துண்டங்கள் இணைவதன் மூலம் தக்குமா ஆகும் செயலும் சிறப்படைந்து காணப்படுபவை. பூச்சிகளில் தலை, நெஞ்சறை, வயிறு என மூன்று தக்குமாக்களும் (Tagma) நண்டு இறால் பொன்ற கிரஸ்டீசியன்களில் நெஞ்சறை, வயிறு என இரண்டு தக்குமாக்களும் உள்ளன. முளையவிருத்தி இயல்புகளின் அடிப்படையில் கணுக்காலிகள் protostome விலங்குகளாகும். அதாவது இவற்றின் முளைய விருத்தியில் சமிபாட்டுத் தொகுதியில் முதலில் விருத்தியடைவது அவற்றின் வாயாகும். எனினும் முள்ளந்தண்டுளிகள் போன்ற Deutorosome விலங்குகளில் குதமே முதலில் விருத்தியடைகின்றது. வாழும் சூழலுக்கேற்றபடி இனங்களின் சுவாசத்தொகுதியும் இனப்பெருக்க முறையும் வேறுபடுகின்றன. நீரில் வாழும் கணுக்காலிகள் பொதுவாக புறக்கருக்கட்டல் முறையையும், நில வாழ் கணுக்காலிகள் அகக்கருக்கட்டல் முறையையும் பின்பற்றுகின்றன.


பூச்சியொன்று தனது வளர்ச்சித் தேவையின் பொருட்டு தனது கைட்டினால் ஆன புறவன்கூடை நீக்குகின்றது.

கணுக்காலிகளின் புறவன்கூடு ஓரளவுக்கு மிகவும் பலமானதாகும். இது அவற்றை அதிக வெப்பநிலை, நீரிழப்பு, பாதகமான கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கின்றது. எனினும் இவ்வாறு உறுதியான புறவன்கூட்டுடன் கணுக்காலியொன்றால் வளர்ச்சியடைய முடியாது. எனவே இவற்றின் வளர்ச்சிக்காலத்தில் புறவன்கூட்டை அகற்றிய பின்னரே வளர்கின்றன. வளர்ந்த பின்னர் புதிய உறுதியான புறவன்கூட்டை ஆக்குகின்றன. அடுத்த வளர்ச்சிக் கட்டத்தில் மீண்டும் இவ்வாறு தோல் கழற்றப்படும். எனவே இவற்றின் வளர்ச்சியொழுங்கு நேரியதாகக் காணப்படாது. புறத்தோலை அகற்ற முன்னர் இவை உணவுண்பதை நிறுத்தி விடும். பின்னர் நொதியங்களைச் சுரந்து புறவன்கூடு உடலுடன் பொருந்தியுள்ள பகுதியை நீக்கி விடுகின்றன. அதிகளவான வளியையும், நீரையும் உடலினுள் எடுத்தி உடலை ஊதச் செய்து பழைய புறவன்கூட்டை உடைத்து நீக்கி விடுகின்றன. அனேகமான கணுக்காலிகள் தங்களது நீக்கப்பட்ட பழைய புறவன்கூட்டை உண்டு விடுகின்றன. பழைய புறவன்கூட்டை நீக்கும் போதே மெல்லிய உறுதியற்ற புதிய புறவன்கூடு உருவாகியிருக்கும். எனினும் இது உறுதி பெறும் வரை கணுக்காலிக்கு சிறந்த பாதுகாப்பை அளிக்காது. எனவே வளர்ச்சியடையும் காலத்திலேயே அனேகமான கணுக்காலிகள் ஊனுண்ணிகளால் தாக்கப்பட்டு இறக்கின்றன.

வகைப்பாடு[தொகு]

கணுக்காலிகள் ஐந்து பிரதான உபகணங்களுக்குள் வகைப்படுத்தப்படுகின்றன. இவற்றில் ஒரு கணம் இனமழிந்த உயிரினங்களை உள்ளடக்கியதாகும்.[1]

  1. திரில்லோபைட்டுக்கள்: பேர்மியன் காலத்து உயிரினங்கள்; தற்போது அழிவடைந்துள்ளன.
  2. செலிசரேட்டா: சிலந்தி, தேள், உண்ணி போன்றவற்றை உள்ளடக்கியது. இவற்றின் வாயிற்கு அருகில் செலிசரேட் எனும் தூக்கம் இருக்கும்.
  3. மைரியபோடா: மரவட்டை, பூரான் போன்ற உயிரினங்களை உள்ளடக்கியது. இவற்றின் உடல் பல துண்டங்களாலானது. ஒவ்வொரு துண்டமும் ஒரு சோடி அல்லது இரு சோடி தூக்கங்களைக் கொண்டிருக்கும். உதாரணமாக மரவட்டையில் துண்டத்துக்கு இரு சோடி தூக்கங்களும் (துண்டத்துக்கு 4 கால்கள்), பூரானில் துண்டத்துக்கு ஒரு சோடி தூக்கங்களும் காணப்படும்.
  4. கிரஸ்டேசியன்கள்: பொதுவாக நீர்வாழ் உயிரினங்கள். நண்டு, இறாள், பர்னக்கிள் மற்றும் மேலும் பலவற்றை உள்ளடக்கிய உபகணம்.
  5. ஆறுகாலிகள்: பூச்சிகளையும், பூச்சி போன்ற வேறு ஆறு கால் கணுக்காலிகளையும் உள்ளடக்கிய உபகணம்.
Panarthropoda

OnchyophoraTardigrada


Euarthropoda

செலிசரேட்டா


மன்டிபியூலேடா

மைரியபோடா


Pancrustacea

Ostracoda, Branchiura, Pentastomida, Mystacocarida 
Branchiopoda, Copepoda, Malacostraca, Thecostraca 
Remipedia, Cephalocarida ஆறுகாலிகள் (Hexapoda)
கிரஸ்டேசியா
முக்கியமான கணுக்காலி வகைகளுக்கிடையேயான கூர்ப்புத் தொடர்பு


படத்தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Arthropoda". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). பார்த்த நாள் August 15, 2006.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கணுக்காலி&oldid=1619029" இருந்து மீள்விக்கப்பட்டது