வொயேஜர் 1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வொயேஜர் 1
Voyager 1
வொயேஜர் விண்கல வடிவமைப்பு (கலைஞரின் கைவண்ணம்)
திட்ட வகைவெளிக் கோள்கள், பரிதிசார்கோளம், விண்மீனிடை நடுத்தர ஆய்வு
இயக்குபவர்நாசா/ஜெட் செலுத்தி ஆய்வகம்
காஸ்பார் குறியீடு1977-084A[1]
சாட்காட் இல.10321[1]
இணையதளம்voyager.jpl.nasa.gov
திட்டக் காலம்
  • 46 ஆண்டு-கள், 7 மாதம்-கள், 20 நாள்-கள் கடப்பு
  • கோள் பணி: 3 ஆண்டு-கள், 3 மாதம்-கள், 9 நாள்-கள்
  • விண்மீனிடைப் பணி: 43 ஆண்டு-கள், 4 மாதம்-கள், 12 நாள்-கள் கடப்பு
விண்கலத்தின் பண்புகள்
விண்கல வகைமரைனர் வியாழன்-சனி
தயாரிப்புஜெட் செலுத்தி ஆய்வகம்
ஏவல் திணிவு815 கிகி[2]
உலர் நிறை721.9 கிகி[3]
திறன்470 உவாட்டுகள் (செலுத்தும் போது)
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்செப்டெம்பர் 5, 1977, 12:56:00 UTC
ஏவுகலன்டைட்டன் IIIE
ஏவலிடம்கேப் கேனவரல் செலுத்துகை வளாகம் 41
திட்ட முடிவு
கடைசித் தொடர்புTBD
வியாழன்-ஐ அணுகல்
மிகக்கிட்டவான அணுகல்மார்ச்சு 5, 1979
தூரம்349,000 கிமீ
சனி-ஐ அணுகல்
மிகக்கிட்டவான அணுகல்நவம்பர் 12, 1980
தூரம்124,000 கிமீ
டைட்டன்-ஐ (வளிமண்டல ஆய்வு) அணுகல்
மிகக்கிட்டவான அணுகல்நவம்பர் 12, 1980
தூரம்6,490 கிமீ
----
Flagship
← வொயேஜர் 2 கலிலியோ

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தையும், சூரியனின் பரிதிசார்கோளத்திற்கு அப்பால் உள்ள விண்மீன்களிடை வெளியையும் ஆய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும். இவ்விண்கலம் இதன் இரட்டையரான வொயேஜர் 2 விண்கலம் ஏவப்பட்ட 16 நாட்களின் பின்னர் புறப்பட்டது. இது நாசாவின் தொலை தூர விண்வெளி வலைப் பின்னல் (டிஎஸ்என்) மூலம் வழக்கமான கட்டளைகளைப் பெறுவதற்கும் பூமிக்கு தரவுகளை அனுப்புவதற்கும் தொடர்பு கொள்கிறது. நிகழ்-நேரத் தூரம், வேகத் தரவு ஆகியவை நாசாவினாலும் ஜெட் செலுத்தி ஆய்வகத்தின் மூலமாக வழங்கப்படுகிறது.[4] ஏப்ரல் 2024 நிலவரப்படி பூமியிலிருந்து 162.7 வாஅ (24.3 பில்லியன் கிமீ; 15.1 பில்லியன் மைல்) தொலைவில் உள்ள இத்தூரம்,[4] பூமியிலிருந்து மிகத் தொலைவில் உள்ள மனிதனால் உருவாக்கப்பட்ட பொருளாகும்.[5]

1979 இல் வியாழனையும், 1980 இல் சனியையும். சனியின் மிகப்பெரிய நிலா டைட்டனையும் அணுகியதன் மூலம் தனது திட்டத்தின் முக்கிய குறிக்கோளை இவ்விண்கலம் 1980 நவம்பர் 12 இல் நிறைவு செய்தது. நாசாவிற்கு புளூட்டோ அல்லது டைட்டன் அணுகலை செய்ய விருப்பம் இருந்தது; ஆனால் டைட்டன் ஒரு கணிசமான வளிமண்டலத்தைக் கொண்டிருப்பதாக அறியப்பட்டதால், நிலவின் ஆய்வுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.[6][7][8] வாயேஜர் 1 இரண்டு வளிமப் பெருங்கோள்களின் வானிலை, காந்தப்புலங்கள், வளையங்களை ஆய்வு செய்ததுடன், அவற்றின் நிலவுகளின் விரிவான படங்களை முதற் தடவையாக வழங்கியது.

வாயேஜர் திட்டத்தின் ஒரு பகுதியாகவும், அதன் சகோதர விண்கலம் வொயேஜர் 2 போலவும், விண்கலத்தின் விரிவாக்கப்பட்ட பணியானது, வெளிப்புறப் பரிதிசார்கோளத்தின் பகுதிகள், அவற்றின் எல்லைகள் ஆகியவற்றைக் கண்டறிந்து ஆய்வு செய்வதுடன், விண்மீன்களிடை ஊடகத்தை ஆராய்வதும் ஆகும். வொயேஜர் 1 பரிதிசார்கோளத்தைக் கடந்து 2012 ஆகத்து 25 அன்று விண்மீன்களுக்கு இடையேயான வெளியில் நுழைந்தது, அவ்வாறு செய்த முதல் விண்கலம் இதுவாகும்.[9][10] இரண்டு ஆண்டுகளின் பின்னர், வொயேஜர் 1 சூரியனில் இருந்து ஒளிவட்டப் பொருள் வெளியேற்றத்தின் மூன்றாவது அலையை அனுபவிக்கத் தொடங்கியது, இது குறைந்தது 2014 திசம்பர் 15 வரை தொடர்ந்தது, இதன்மூலம் அது விண்மீன் இடைவெளியில் உள்ளது என்பதை மேலும் உறுதிப்படுத்தியது.[11]

2017 ஆம் ஆண்டில், வாயேஜர் குழு 1980-இற்குப் பிறகு முதல் முறையாக விண்கலத்தின் பாதை திருத்தும் பணி (TCM) உந்துதல்களை வெற்றிகரமாக செலுத்தியது, இதன் மூலம் வொயேஜர் திட்டத்தை இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை நீடிக்க முடிந்தது.[12] வொயேஜர் 1-இன் நீடிக்கப்பட்ட பணி குறைந்தது 2025 வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் கதிரியக்க ஓரிடத்தான் வெப்பமின் இயற்றிகள் (RTGs) 2036 வரை அதன் அறிவியல் கருவிகளை இயக்குவதற்கு போதுமான மின்சாரத்தை வழங்கக்கூடும்.[13]

2023 திசம்பர் 12 அன்று, வொயேஜர் 1 இன் பறப்புத் தரவு அமைப்பு அதன் தொலைதூர தகவேற்ற அலகைப் பயன்படுத்த முடியவில்லை, அது அறிவியல் தரவை பூமிக்கு அனுப்புவதைத் தடுக்கிறது என்று நாசா அறிவித்தது.[14] ஆனாலும், 2024 ஏப்ரல் 18 அன்று, நாசா வேறொரு தீர்வைப் பயன்படுத்தியதில், இரண்டு நாட்களுக்குப் பிறகு புவியுடனான தரவுப் பரிமாற்றம் மீண்டும் தொடங்கியது.[15][16][17]

வரலாறு[தொகு]

1960களில், வெளிக்கோள்களை ஆராயும் திட்டத்தை முன்னெடுக்க முன்மொழியப்பட்டது. இதற்கான முன்னெடுப்புகளை நாசா 1970களின் முற்பகுதியில் ஆரம்பித்தது. ஆரம்பத்தில் வொயேஜர் 1 விண்ணாய்வி மரைனர் திட்டத்தின் கீழ் மரைனர் 11 என்ற பெயரில் வியாழன், சனி, யுரேனசு, மற்றும் நெப்டியூன் ஆகிய பெரும் வாயுக் கோள்களை ஆராய்வதற்காக அனுப்பபடவிருந்தது. ஆனாலும், நிதிப்பற்றாக்குறை காரணமாக, இது வியாழன், மற்றும் சனிக் கோள்களை மட்டும் அணுகும் திட்டமாக மட்டுப்படுத்தப்பட்டு, மரைனர் வியாழன்-சனி ஆய்வி எனப் பெயரிடப்பட்டது. பின்னர் இத்திட்டம் பழைய மரைனர் திட்டக் கலங்களிலும் பார்க்க பெருமளவு மாற்றங்களைப் பெற்றதால் வொயேஜர் எனப் பெயர் மாற்றம் பெற்றது[18].

விண்கலத்தின் அமைப்பு[தொகு]

வொயேஜர் 1 விண்ணாய்வி ஐக்கிய அமெரிக்காவின் ஜெட் இயக்க ஆய்வகத்தினால் அமைக்கப்பட்டது. இதன் வானலை வாங்கி எப்போதும் பூமியை நோக்கி இருக்கத்தக்கதாக இந்த விண்கலத்தில் 16 ஐதரசீன் அமுக்கிகள், மூவச்சு நிலைபேறு சுழல் காட்டிகள், மற்றும் சூரிய உணர்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன் விண்வெளியில் இது பயணிக்கும் போது எதிர்ப்படும் விண்பொருட்களை ஆய்வு செய்வதற்காக 11 அறிவியல் உபகரணங்களும் இணைக்கப்பட்டுள்ளன[19].

வொயேஜர் 1 இன் வானொலித் தொலைத்தொடர்பு அமைப்புகள் இந்த விண்ணாய்வியின் மிகப்பெரும் தூரத்துக்கு விண்வெளிப் பறப்பை மேற்கொண்டு செல்லும் போது சூரியக் குடும்பத்துக்கு அப்பாலும் பயன்படுத்தப்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இத்தொலைத் தொடர்பு அமைப்புகள் பூமியில் உள்ள மூன்று புறவெளித் தொடர்பு நிலையங்களினூடாக வானொலி அலைகளை அனுப்புவதற்கும், பெறுவதற்குமாக 3.7 மீட்டர் விட்டம் கொண்ட பரவளைவு வட்டு உயரீட்ட அலையுணரியைக் (படத்தைப் பார்க்க) கொண்டுள்ளது.

வொயேஜர் 1 வெப்பமின்னியக்கி
Voyager Golden Record
Voyager Golden Record

வொயேஜர் 1 விண்ணாய்வி பூமியுடன் நேரடியான தொடர்புகளை இழக்க நேரும் போது இவ்வாய்வியில் பொருத்தப்பட்டுள்ள எண்ணிம நாடாப் பதிவி (DTR) மூலம் 62,500 கிலோபைட்டுகள் தகவல்களைப் பதிய முடியும். இத்தகவல்கள் பின்னர் பூமியுடன் தொடர்பு ஏற்படுத்தப்படும் போது பூமிக்கு அனுப்பப்படும்[19]. வொயேஜர் 1 இலிருந்து தகவல் ஒன்றை பூமிக்கு அனுப்புவதற்கு, அல்லது பூமியில் இருந்து அதற்கு அனுப்புவதற்கான நேரம் t = D/c, என்ற இலகுவான சமன்பாட்டினால் கணிக்கப்படும், இங்கு, D என்பது பூமிக்கும் விண்கலத்திற்கும் இடையேயான நேர்கோட்டுத் தூரம், c, ஒளியின் வேகம் (கிட்டத்தட்ட 300,000 கிமீ/செ).

வொயேஜர் 1 மூன்று பெரும் கதிரியக்க சமபொருண்மை வெப்பமின்னியற்றிகளைக் (radioisotope thermoelectric generators, RTGs) கொண்டுள்ளது. இந்த மின்னியற்றிகள் ஒவ்வொன்றும் 24 அழுத்திய புளூட்டோனியம்-238 ஒக்சைடு கோளங்களைக் கொண்டுள்ளது. விண்கலம் ஏவப்பட்ட போது இந்த கோளங்களில் வெளிவிடப்பட்ட வெப்பம் 157 வாட்டுகள் மின்திறனை உருவாக்கியது, மீதமானவை கழிவெப்பமாக வெளியேற்றப்பட்டன. இதனால் மூன்று மின்னியற்றிகளிலும் இருந்து மொத்தம் 470 வாட்டுகள் மின்திறன் பிறப்பிக்கப்பட்டது. இந்த மின்திறனைக் கொண்டு 2025 ஆம் ஆண்டு வரையில் வொயேஜர் 1 விண்கலத்தை இயக்க வைக்க முடியும்.[19][20] (பார்க்க: படம் 1, 2)

இந்த விண்கலங்கள் மற்றைய கோள்களில் உள்ள அறிவுஜீவிகளினால் கைப்பற்றப்பட்டால் முன்னெச்செரிக்கையாக இவை பொற்தகட்டினால் ஆன ஒலி-ஒளி குறுவட்டு ஒன்றைக் கொண்டு செல்கின்றன. இவற்றில் பூமி மற்றும் அதன் உயிரினங்கள் குறித்த படங்கள், அறிவியல் செய்திகள், புகழ்பெற்ற நபர்களின் (எ.கா. ஐநா பொதுச் செயலர், அமெரிக்க அரசுத்தலைவர், மற்றும் சிறுவர்களின்) வாழ்த்துச் செய்திகள், பூமியின் உயிரினங்களின் ஒலிகள் போன்றவை பதியப்பட்டுள்ளன.

வொயேஜர் திட்டக் குறிப்பு[தொகு]

பயணத்தின் காலக்கோடு
நாள் நிகழ்வு
1977-09-05 விண்கலம் 12:56:00 ஒசநே மணிக்கு ஏவப்பட்டது
1977-12-10 சிறுகோள் பட்டையை அடைந்தது
1977-12-19 வொயேஜர் 1 வொயேஜர் 2 ஐ முந்தியது. (பார்க்க)
1978-09-08 சிறுகோள் பட்டையில் இருந்து விலகியது.
1979-01-06 வியாழனின் அவதானிப்புக்குள் செல்லல்.
1980-08-22 சனி அவதானிப்பு ஆரம்பம்.
1980-12-14 வொயேஜரின் மேலதிக திட்டம் ஆரம்பம்.
விரிவாக்கப்பட்ட திட்டம்
1990-02-14 சூரியக் குடும்பப் படம் உருவாக்குவதற்காக வொயேஜர் 1 எடுத்த கடைசிப் படங்கள்.
1998-02-17 வொயேஜர் 1 பயனியர் 10 ஐ முந்தியது. 69.419 வாஅ தூரத்தில் சூரியனில் இருந்து மிக அதிக தூரத்தில் பயணிக்கும் விண்கலம். பயனியர் 10 ஐ விட சூரியனில் இருந்து ஆண்டுக்கு 1 வாஅ அதிக வேகத்தில் பயணிக்கிறது.
2003-05-11 சூரியனில் இருந்து 90 AU தூரத்திற்குச் சென்ற முதலாவது விண்கலம்.
2004-12-17 ஞாயிற்று உறையினுள் நுழைந்தது.
2007-02-02 பிளாசுமா துணைத்தொகுதியின் இயக்கம் நிறுத்தம்.
2007-04-11 பிளாசுமா துணைத்தொகுதியின் சூடாக்கி நிறுத்தம்.
2007-09-05 30 ஆண்டுகள் இடைவிடாத பயணம் 12:56:00 UTC.
2008-01-16 கோளிடை வானொலி வானியன் பரிசோதனைகள் நிறுத்தம்.
2012-08-25 121 வாஅ வேகத்தில் விண்மீன்களிடை ஊடகத்தை அடைந்தது.

ஏவல்[தொகு]

வொயேஜர் 1 விண்ணாய்வி 1977, செப்டம்பர் 5 ஆம் நாள் புளோரிடாவில் உள்ள கேப் கேனவரல் ஏவுதளத்தில் இருந்து டைட்டன் IIIE எவுகலன் மூலம் விண்ணுக்கு ஏவபட்டது. இதன் சகோதரக் கலமான வொயேஜர் 2 விண்ணாய்வி இரு வாரங்களுக்கு முன்னர், 1977 ஆகத்து 20 ஆம் நாள் ஏவப்பட்டது. பின்னராக ஏவப்பட்டாலும், வொயேஜர் 1 வியாழனையும், சனிக் கோளையும் குறுகிய பாதை மூலம் வொயேஜர் 2 ஐ விட முன்னதாகவே அடைந்து விட்டது.

வியாழனுக்குக் கிட்டவாகச் செல்லல்[தொகு]

வொயேஜர் 1 வியாழனை 1979 சனவரியில் படம் பிடிக்க ஆரம்பித்து 1979 ஏப்ரலில் நிறைவு செய்தது. 1979 மார்ச் 5 இல் வியாழனுக்குக் மிகக் கிட்டவாக, வியாழனின் நடுப்பகுதியில் இருந்து ஏறத்தாழ 349,000 கிலோமீட்டர்கள் (217,000 மைல்) தொலைவு வரை சென்றது. வியாழனுக்குக் கிட்டவாக இருந்த 48 மணி நேரத்திற்கு அது வியாழனின் நிலவுகள், வளையங்கள், காந்தப் புலங்கள், வியாழத் தொகுதியின் கதிர்வீச்சு வளையம் போன்றவற்றின் மிகத் தெளிவான படங்களைப் பூமிக்கு அனுப்பியது. இப்படங்களை அது ஏப்ரல் 1979 வரை பிடித்திருந்தது.

இரண்டு வொயேஜர் விண்ணாய்விகளும் வியாழனைப் பற்றியும், அதன் செயற்கைக்கோள்களைப் பற்றியும் பல முக்கிய தகவல்களைக் கண்டுபிடித்தது. மிக முக்கியமாக வியாழனின் ஐஓ நிலவில் எரிமலை வெடிப்பு இருப்பதைக் கண்டுபிடித்தது.

சனிக் கோளுக்குக் கிட்டவாகச் செல்லல்[தொகு]

வொயேஜர் விண்ணாய்விகள் இரண்டும் வியாழனைக் கடந்து சனிக் கோளையும் அதன் நிலவுகளையும், வளையங்களையும் அடைந்தன. வொயேஜர் 1' இன் சனிக்குக் கிட்டவான பறப்பு நவம்பர் 1980 இல் நிகழ்ந்தது. அதற்கு மிகக் கிட்டவாக 124,000 கிமீ (77,000 மைல்) தூரத்தை நவம்பர் 12, 1980 இல் அடைந்தது. சனியின் வளையங்களின் சிக்கலான அமைப்புகளை விண்கலத்தின் படம்பிடி கருவிகள் படங்களை எடுத்தன. மற்றும் அதன் தொலையுணர் கருவிகள் சனியின் வளிமண்டலத்தையும் மற்றும் அதன் நிலவு டைட்டனையும் படம் பிடித்தது[21]

பயனியர் 11 விண்கலம் ஓராண்டுக்கு முன்னதாகவே டைட்டனின் தடித்த, வளிம மண்டலத்தைக் கண்டறிந்ததனால், வொயேஜர் 1 டைட்டனை மிகக்கிட்டவாகச் சென்று ஆராயக் கட்டளையிடப்பட்டது.[22]

காந்த நெடுஞ்சாலை[தொகு]

சூரியன்சூழ் வான்மண்டலத்தில் (heliosphere) முன்னர் அறிந்திராத பகுதி ஒன்றை வொயேஜர் 1 விண்கலம் கண்டுபிடித்திருப்பதாக நாசா அறிவியலாளர்கள் 2012 டிசம்பர் 3 இல் அறிவித்தார்கள். "காந்த நெடுஞ்சாலை" (magnetic highway) எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்பிராந்தியம் சூரியனின் தெற்கு அரைக்கோளத்தில் இருந்தான காந்தப் புலத்தினால் உருவானது. இப்பகுதி சூரியன்சூழ் வான்மண்டலத்தில் உள்ள துணிக்கைகளை விண்மீன்களிடை வெளியை நோக்கி தப்பித்துச் செல்லவும், அதே வேளையில் விண்மீனிடை வெளியில் இருந்து அதிவேகத் துணிக்கைகளை உள்ளே வரவும் அது அனுமதிக்கிறது. வொயேஜர் விண்கலம் சூரியக் குடும்பத்தைத் தாண்டிச் செல்ல இதுவே கடைசித் தடையாக இருந்தது.[23][24]

சூரியன்சூழ் வான்மண்டலத்தில் இருந்து வெளியேறல்[தொகு]

வொயேஜர் 1 விண்கலம் எடுத்த சூரியக் குடும்பத்தின் "குடும்பப் படம்"

1990 பெப்ரவரி 14 இல், வொயேஜர் 1 சூரியக் குடும்பத்தின் "குடும்பப் படம்" ஒன்றை முதற்தடவையாக எடுத்தது.[25] இத்திட்டத்தில் 6 பில். கிமீ தூரத்தில் இருந்து எடுக்கப்பட்ட "வெளிர் நீலப் புள்ளி" என்ற பிரபலமான பூமியின் படமும் அடங்கும். இதுவே ஆகக் கூடிய தொலைவில் எடுக்கப்பட்ட புவியின் ஒளிப்படம் ஆகும்

1998 பெப்ரவரி 17 இல், வொயேஜர் 1 சூரியனில் இருந்து 69 வாஅ தூரத்தைக் கடந்து, பயனியர் 10 விண்கலம் சென்ற தூரத்தை விட அதிகமாகக் கடந்து பூமியில் இருந்து அதிக தூரம் சென்ற விண்கலம் என்ற பெயரைப் பெற்றது.[26] 17 கிமீ/செக். வேகத்தில்[27] செல்லும் இக்கலமே விண்கலம் ஒன்றின் மிக வேகமான ஞாயிற்றுமைய பின்னகர்வு வேகம் ஆகும்.[28]

வொயேஜர் 1 சூரியக் குடும்பத்தை விட்டு வெளியேறி விண்மீன்களிடை ஊடகத்தை நோக்கிச் சென்றாலும், அதன் ஆய்வுக் கருவிகள் சூரியக் குடும்பத்தை மேலும் ஆராய்ந்த வண்ணமே உள்ளன. [விண்மீன்களிடை ஊடகத்தினுள் சூரியக் காற்று செல்லும் சூரியன்சூழ் வான்மண்டல எல்லையை அறிவதற்கு வொயேஜர் 1, மற்றும் 2 இல் மின்ம அலை (plasma wave) சோதனைகளை நாசா வானியலாளர்கள் மேற்கொண்டனர்.[29]

2012 பெப்ரவரி 8 இல் வொயேஜர் 1 விண்கலத்தின் பாதை.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Voyager 1". NSSDC Master Catalog. NASA/NSSDC. Archived from the original on January 30, 2017. பார்க்கப்பட்ட நாள் August 21, 2013.
  2. "NASA – Voyager Facts". NASA's Goddard Space Flight Center website. Archived from the original on December 10, 2022. பார்க்கப்பட்ட நாள் May 20, 2023.
  3. "Voyager 1". NASA's Solar System Exploration website. Archived from the original on April 18, 2019. பார்க்கப்பட்ட நாள் December 4, 2022.
  4. 4.0 4.1 "Voyager – Mission Status". Jet Propulsion Laboratory. நாசா. Archived from the original on January 1, 2018. பார்க்கப்பட்ட நாள் 7 சனவரி 2023.
  5. "Voyager 1". பிபிசி Solar System. Archived from the original on 3 பெப்பிரவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 4 செப்டெம்பர் 2018.
  6. "Voyager – Frequently Asked Questions". NASA. February 14, 1990. Archived from the original on October 21, 2021. பார்க்கப்பட்ட நாள் August 4, 2017.
  7. "New Horizons conducts flyby of Pluto in historic Kuiper Belt encounter". July 12, 2015. Archived from the original on September 6, 2015. பார்க்கப்பட்ட நாள் 2 செப்டெம்பர் 2015.
  8. "What If Voyager Had Explored Pluto?". Archived from the original on 13 ஏப்பிரல் 2020. பார்க்கப்பட்ட நாள் 2 செப்டெம்பர் 2015.
  9. "Interstellar Mission". NASA Jet Propulsion Laboratory. Archived from the original on 14 செப்டெம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 24 ஆகத்து 2020.
  10. Barnes, Brooks (September 12, 2013). "In a Breathtaking First, NASA Craft Exits the Solar System". த நியூயார்க் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து March 11, 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200311201559/https://www.nytimes.com/2013/09/13/science/in-a-breathtaking-first-nasa-craft-exits-the-solar-system.html. 
  11. Claven, Whitney (July 7, 2014). "Sun Sends More 'Tsunami Waves' to Voyager 1". நாசா. Archived from the original on December 21, 2018. பார்க்கப்பட்ட நாள் July 8, 2014.
  12. Wall, Mike (December 1, 2017). "Voyager 1 Just Fired Up its Backup Thrusters for the 1st Time in 37 Years". Space.com இம் மூலத்தில் இருந்து December 3, 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171203005509/https://www.space.com/38967-voyager-1-fires-backup-thrusters-after-37-years.html. 
  13. "Voyager – Frequently Asked Questions". Jet Propulsion Laboratory. Archived from the original on August 13, 2023. பார்க்கப்பட்ட நாள் July 30, 2020.
  14. Paul, Andrew (December 14, 2023). "Voyager 1 is sending back bad data, but NASA is on it". Popular Science (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on December 22, 2023. பார்க்கப்பட்ட நாள் December 15, 2023.
  15. "Engineers Pinpoint Cause of Voyager 1 Issue, Are Working on Solution – Voyager". blogs.nasa.gov (in அமெரிக்க ஆங்கிலம்). 2024-04-04. Archived from the original on April 12, 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-04-13.
  16. "NASA's Voyager 1 Resumes Sending Engineering Updates to Earth". NASA Jet Propulsion Laboratory (JPL) (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on April 22, 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-04-22.
  17. Strickland, Ashley (2024-04-22). "Voyager 1 is sending data back to Earth for the first time in 5 months" (in en) இம் மூலத்தில் இருந்து April 24, 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240424020430/https://www.cnn.com/2024/04/22/world/voyager-1-communication-issue-cause-fix-scn/index.html. 
  18. Chapter 11 "Voyager: The Grand Tour of Big Science" பரணிடப்பட்டது 2021-04-17 at the வந்தவழி இயந்திரம் (sec. 268.), by Andrew,J. Butrica, found in From Engineering Science To Big Science பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-16-049640-0 edited by Pamela E. Mack, NASA, 1998
  19. 19.0 19.1 19.2 "VOYAGER 1:Host Information". நாசா. 1989. Archived from the original on 9 செப்டெம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 2 சனவரி 2011.
  20. Furlong, Richard R.; Wahlquist, Earl J. (1999). "U.S. space missions using radioisotope power systems". Nuclear News 42 (4): 26–34. http://www2.ans.org/pubs/magazines/nn/pdfs/1999-4-2.pdf. பார்த்த நாள்: 2 சனவரி 2011. 
  21. "Encounter with saturn". பார்க்கப்பட்ட நாள் 29 ஆகத்து 2013.
  22. "Voyager – Frequently Asked Questions". Voyager.jpl.nasa.gov. 14 பெப்பிரவரி 1990. Archived from the original on 18 சூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 1 செப்டெம்பர் 2010.
  23. Voyager 1 Can ‘Taste’ the Interstellar Shore பரணிடப்பட்டது 2012-12-05 at the வந்தவழி இயந்திரம், Discovery News, திசம்பர் 3, 2012
  24. "Voyager 1 probe leaving solar system reaches 'magnetic highway' exit". Daily News & Analysis. பார்க்கப்பட்ட நாள் 3 திசம்பர் 2012.
  25. "Photo Capion". Public Information Office. பார்க்கப்பட்ட நாள் 26 ஆகத்து 2010.
  26. "Voyager 1 now most distant man-made object in space". CNN. 17 பெப்பிரவரி 1998. Archived from the original on 2012-07-01. பார்க்கப்பட்ட நாள் 2012-07-01.
  27. Webb, Stephen (4 அக்டோபர் 2002). If the Universe is Teeming with Aliens ... WHERE IS EVERYBODY?: Fifty Solutions to the Fermi Paradox and the Problem of Extraterrestrial Life. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780387955018. http://books.google.com/books?id=-vZ0BVSHix4C&pg=PA62. 
  28. Darling, David. "Fastest Spacecraft". பார்க்கப்பட்ட நாள் 19 ஆகத்து 2013.
  29. "Voyager 1 in heliopause". JPL. பார்க்கப்பட்ட நாள் 18 ஆகத்து 2013.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
வொயேஜர் 1
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=வொயேஜர்_1&oldid=3939864" இலிருந்து மீள்விக்கப்பட்டது