உள்ளடக்கத்துக்குச் செல்

செல்லிடத் தொலைபேசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நகர்பேசி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆரம்ப திறன்பேசி வரையிலான செல்லிடத் தொலைபேசிகளின் படிவளர்ச்சி

நகர்ந்து கொண்டே பேசக் கூடிய வசதி அளிக்கும் தொலைபேசிகள் நகர்பேசி என்று அழைக்கப்படுகின்றன. இவை கம்பியில்லாத் தொலைதொடர்புக்கு உதவுபவை. வழக்கம் தொட்டே சாதாரண தொலைபேசிகள் இயங்க அவற்றிற்கு அருகிலுள்ள தொலைபேசி இணைப்பகத்தின் முனையத்துடன் கம்பித் தொடர்பு தேவை. நகர்பேசிகளுக்கு இத்தகைய இணைப்புகள் வானலைகள் மூலம் ஏற்படுத்தப்படுவதால் அவற்றுக்குக் கம்பித் தொடர்பு தேவையில்லை. நகர்பேசியின் இன்னொரு பெயர் செல்பேசி (செல்லுமிடமெல்லாம் எடுத்துச் சென்று பேச).8754830145[1][2][3]

நகர்பேசியை சாத்தியமாக்கும் தொழில் நுட்பங்கள்

[தொகு]

குறியீடு பிரிப்பு பன்னணுகல் முறை

[தொகு]
குறிமுறைப் பிரிப்பு பன்னணுகல் முறை இயங்கும் விதி

வானொலியை சுருதிகூட்டும் போது சில சமயம் ஒரே அலையெண்ணில் இரண்டு நிலையங்களின் ஒலிபரப்பை ஒரே நேரத்தில் கேட்க முடியும். இதற்குக் காரணம் நிலையங்களிலிருந்து வரும் வானொலிக் குறிகைகள் ஒரே அலையெண்ணில் இருப்பதால் அவை ஒன்றுக்கொன்று குறுக்கிடுகின்றன. குறியீடு பிரிப்பு பன்னணுகல் முறையில் இந்த குறுக்கிடுதல் வேண்டுமென்றே ஏற்படுத்தப்படுகிறது. குறியீடு பிரிப்பு பன்னணுகல் முறையில் இலக்கப்படுத்தப்பட்ட குரல் தரவு ஒரு பரவல் குறியீடு மூலம் அலையெண் கற்றையகலம் முழுவதும் பரப்பப்படுகிறது. ஒவ்வொரு அழைப்பிற்கும் (அல்லது இரு நகர்பேசிகளுக்கிடையான தொடர்புக்கும்) ஒரு தனிப்பட்ட பரவல் குறியீடு வழங்கப்படுகிறது. இக்குறியீடு மூலம் அலையெண்ணில் பல அழைப்புகளை ஒன்றுக்கு மேல் ஒன்று உடன்வைக்கலாம். குறியீடு பிரிப்பு பன்னணுகல் வலையத்தில் அழைப்பவர் மற்றும் அழைக்கப்படுபவர் கருவிகளில் மட்டும்தான் ஒரே பரவல் குறியீடு ஒதுக்கப்படுகின்றன. ஆகையால் இவ்விருவர்களுக்கிடையே தொடர்பு தெளிவாக இருக்கும். வலையத்தில் உள்ள மற்ற கருவிகளில் யாதேனும் வேறு வேறு அழைப்புகளில் இணைந்திருந்தால் அவைகளுக்கு வெவ்வேறு பரவல் குறுயீடுகள் ஒதுக்கப்படுகின்றன. எந்த ஒரு தொடர்பையும் அலையெண் கற்றையகலத்தைப் பகிர்ந்து கொள்ளும் மற்ற தொடர்புகள் தடங்கல் செய்யாது. இதனால் பல்லாயிரம் அழைப்புகளை கற்றையகலத்தில் பரப்பி ஒன்றுக்கொன்று மேல் அடுக்கலாம். இது பரவல் நிறமாலை தொழில்நுட்பம் என்று அழைக்கப்படுகிறது.

உலகளாவிய நகரும் தொலைதொடர்பு அமைப்பு முறை

[தொகு]

உலகளாவிய நகரும் தொலைதொடர்பு அமைப்பு முறையில், காலப்பிரிப்பு பன்னணுகல் முறையில் அழைப்புகள் (அல்லது தொடர்புகள்) வலையத்தைப் பகிர்கின்றன. உலகளாவிய நகரும் தொலைதொடர்பு அமைப்பு மூலம் குரல் தரவுகள் குறுக்கப்பட்டு அதிக அழைப்புகளை வலையத்தில் ஏற்க இயல்பாகிறது.

கம்பியில்லா முறையின் அங்கங்கள்

[தொகு]

கம்பியில்லா தொலைதொடர்பு அமைப்பு முறையில் பல அங்கங்கள் உள்ளன. அவற்றைக் கீழே காண்போம்.

நகர் நிலையம்

[தொகு]

முதலில் இருப்பது நகர் நிலையம். இதுதான் ஒரு சந்தாதாரரின் நகர்பேசி. இது வானலைச் செலுத்துப்பெறுவி, காட்சித் திரை, இலக்கக்குறிகைச் செயலிகள், சூட்டிகையட்டை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சூட்டிகையட்டை, சந்தாதாரர் அடையாளக்கூறு எனவும் அழைக்கப்படுகிறது.

ஒரு நகர்பேசி சாதனத்தின் தனித்தன்மையான அடையாளத்திற்கு பன்னாட்டு நகர்சாதன அடையாளம் எனப் பெயர். சூட்டிகையட்டையில் பன்னாட்டு நகர்சந்தாதாரர் அடையாளம் - பதிந்துள்ளது. பன்னாட்டு நகர்சாதன அடையாளம் மற்றும் பன்னாட்டு நகர்சந்தாதாரர் அடையாளம் ஒன்றுக்கொன்று தனியானவை, அவைகளில் சேர்மானமும் தனித்தன்மையானது.

தள நிலையம்

[தொகு]

கம்பியில்லா அமைப்பின் அடுத்ததான உறுப்பு தள நிலையம். ஒரு தள நிலையம் என்பது தள செலுத்துப்பெறு நிலையம் மற்றும் தள நிலைய இயக்ககம் என இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு தள செலுத்துப்பெறு நிலையத் துணையமைப்பு பல வானலை செலுத்துப்பெறுவிகளைக் கொண்டது. நகரும் நிலையத்தின் தொடர்பிற்கான வானிணைப்புகளை நிர்வகிக்கிறது. மாநகரப் பகுதிகளில் தள செலுத்துப்பெறு நிலையங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

ஒரு தள நிலைய இயக்ககம் பல தள செலுத்துப்பெறு நிலையங்களை நிர்வகிக்கும். ஒரு தள நிலைய இயக்ககம் வானலைவரிவை துவக்கம், அலைவெண் துள்ளல், கைமாற்றங்கள் ஆகிய செயல்கூறுகளை பூர்த்திசெய்கிறது. தள நிலைய இயக்ககம் எனப்படுவது நகர் நிலைமாற்றகத்திற்கும் நகர்கருவிக்கும் இடைமுகமாக அமைந்துள்ளது.

நகர் நிலைமாற்றகம்

[தொகு]

பிணையத் துணையமைப்பின் மையத்தில் நகர் நிலைமாற்றகம் சேர்ந்துள்ளது. அது ஒரு பொது தொலைபேசி பிணையத்திற்கு அல்லது ஒருங்கிணைந்த இலக்கச் சேவைப் பிணையத்திற்கு ஒரு சாதாரண கணுவாக விளங்குகிறது. இது தவிர, நகர்கருவியுடன் பதிவுசெய்தல், உறுதிபடுத்துதல், இருப்பிடம் புதுப்பித்தல், கைமாற்றம், அலையும் சந்தாதாரரிற்கு அழைப்பு திவைவு ஆகிய பொறுப்புக்களை தாங்கும். நகர் நிலைமாற்றகம் துணைமுறைமை SS7 என்ற குறிகைமுறை மூலம் ஒரு பொது தொலைபேசி பிணையத்திற்கு அல்லது ஒருங்கிணைந்த இலக்கச் சேவைப் பிணையத்திற்கு இணைகின்றது.

இல் இருப்பிடம் பதிவகம் மற்றும் விஜய இருப்பிடம் பதிவகம் இரண்டும் நகர் நிலைமாற்றகத்துடன் ஓர் உலகளாவிய நகரும் தொலைதொடர்பு அமைப்பு முறை அழைப்பின் திசைவு மற்றும் அலையல் திறமைகளை பூர்த்திசெய்கின்றன.

ஒரு சந்தாதாரரின் எல்லா நிர்வாக விவரங்களும் இல் இருப்பிடம் பதிவகம் மூலம் சேகரிக்கப்படுகிறது. ஒரு சந்தாதாரரின் தற்போதய இருப்பிடம் நகர்நிலைய அலையல் எண் என்ற வடவத்தில் அறியப்படுகிறது. இந்த நகர்நிலைய அலையல் எண் மூலம்தான் ஓர் அழைப்பு சந்தாதாரர் கருவிக்கு திசைவுசெய்யப்படுகிறது. ஒரு உலகளாவிய நகரும் தொலைதொடர்பு அமைப்பு பிணையத்தில் தருக்கம்படி ஓர் இல் இருப்பிடம் பதிவகம் இருக்கும், ஆனால் அதை ஒரு பரவல் தரவித்தளமாகக்கூட செயல்படுத்தப்படலாம்.

விஜய இருப்பிடம் பதிவகம் அதன் கட்டுப்பாடு பகுதியிலுள்ள நகர்கருவிகளின் ஒருசில நிர்வாக விவரங்கள் மட்டும் இல் இருப்பிடம் பதிவகத்திலிருந்து எடுத்து சேகரிக்கும்.

நகர் நிலைமாற்றகத்திலேயே நகர்நிலையங்களின் விவரங்கள் சேமிக்கப்படாது. நகர் நிலைமாற்றகமும் விஜய இருப்பிடம் பதிவகமும் கம்பியில்லா நிலைமாற்றுக் கருவிகளில் ஒன்றாக செயல்படுத்தப்படுகிறது. ஆகையால் அவைகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளும் ஒன்றானவையே.

நகர்கருவி அடையாளப் பதிவகம் மூலம் ஓர் உலகளாவிய நகரும் தொலைதொடர்பு அமைப்பு பிணையித்திலுள்ள எல்லா நகர்கருவிகளின் பன்னாட்டு நகர்சாதன அடையாள எண்கள் ஒரு தரவுத்தளத்தில் சேகரிக்கப்படுகிறது. ஒரு சந்தாதாரின் நகர்கருவி தொலைந்தால் அதன் பன்னாட்டு நகர்சாதன அடையாள எண் தரவுத்தளத்தில் குறிக்கப்படுகிறது. உறுதிப்படுத்தகம் சந்தாதர்களின் சூட்டிகையட்டையின் ரகசியக் குறியீட்டை சேகரித்து நகர்கருவிகளை ஒரு பிணையத்திலுள் உறுதிபடுத்தும்.

கைமாற்றம் என்பது ஒரு நிகழும் அழைப்பை ஒரு கலத்திலிருந்து இன்னொன்றுக்கு நிலைமாற்றுவது. ஒரு கம்பியில்லா பிணையத்தில் நான்கு விதமான கைமாற்றங்கள் உண்டு.

  • ஒரு தள நிலைய இயக்ககத்துக்குள்ளேயே
  • இரு தள நிலைய இயக்ககங்களுக்கிடையே ஆனால் ஒரே நகர் நிலை மாற்றகத்திற்குள்ளே
  • இரு நகர் நிலை மாற்றகங்களுக்கிடையே

முதல் இரு கைமாற்றங்கள் அக கைமாற்றம் எனறழைக்கப்படுகின்றன. இறுதி இரண்டும் புற கைமாற்றம் என்றழைக்கப்படுகின்றன.

கைமாற்றங்கள் நகர்கருவி மூலம் துவக்கப்படுகின்றன அல்லது பிணையத்தின் உபயோகச் சுமையை சீர்ப்படுத்த நகர் நிலைமாற்றகம் மூலமும் துவக்கப்படுகின்றன. உலகளாவிய நகரும் தொலைதொடர்பு அமைப்பின் பயனில்லா காலகட்டங்கள், மற்றும் குறியீடு பிரிப்பு பன்னணுகல் முறையில் குறிப்பிட்ட அலைவெண்களில் நகர்கருவி ஒலிபரப்பு கட்டுப்பாடுத் தடத்தை வருடி அருகாமையிலுள்ள கலங்களில் 6 உன்னத கலங்களை அவைகளிருந்து பெறும் வானலை திறத்தின்படி சேகரிக்கும். இத் தகவலை தள நிலைய இயக்ககத்திற்கும் நகர் நிலை மாற்றகத்திற்கும் தெரிவிக்கும்.

கைமாற்றத்தின் செயல்படுத்தம் கம்பியில்லா பிணையத்தை பொறுத்தவரை உள்ளது. குறைவான ஏற்பு படிமுறைப்படி (Minimum Acceptance Algorithm) ஒரு நகர்கருவியின் பெறும் குறிகைத்திறன் (Received Signal Power) ஒரு அளவிற்கு மீது குறைந்தால் அதன் இயங்கும் திறன் (Operating Power) அதிகரிக்கப்படுகிறது. அது மீறி பெறும் குறிகைத்திறன் முன்னேற்றம் இல்லையினில் நகர்கருவி வேறு கலத்திற்கு கைமாற்றம் துவக்கும். திறன் சேமிப்பு படிமுறைப்படி (Power Budget Algorithm) இயங்கும் கலத்திலிருந்து குறிகைத்திறன் குறைந்தால் வேறு கலத்திற்கு கைமாற்றம் துவக்கப்படும்.

கம்பியில்லாவில் ஒரு நகர்கருவியின் இருப்பிடம் HLR மற்றும் VLR பதிவகங்கள் மூலம் புதுப்பிக்கப்படுகிறது. ஒரு நகர்கருவி ஒரு பிணையத்திலிருந்து மற்றொன்றிற்கு பயணம் செய்யும்போது அதற்கு பெறும் ஒளிபரப்பில் மாற்றம் தெரியும். அப்பொழுது நகர்கருவி தன் IMSI மற்றும் பழைய தாற்காலிக நகர்சந்தாதாரர் அடையாளம் எண்களை புது பிணையத்தின் VLR பதிவகத்திற்கு ஒரு புதுப்பிப்புக் கட்டளையாக (Update Request) அனுப்புகிறது. நகர்கருவிக்கு ஒரு புது MSRN எண் ஒதுக்கப்பட்டு புது பிணையத்தின் VLR மூலம் புது HLR பதிவகத்திற்கு அனுப்பபடுகிறது. புது HLR பழைய பிணையத்தின் VLRக்கு முந்திய MSRN எண்ணை ரத்து செய்யுமாறு தெரிவிக்கிறது; அந்த எண்ணை மறு உபயோகம் செய்ய இயல்கிறது. புது TMSI எண் ஒதுக்கப்படுகிறது. MSC அமைப்பு பொதுத் தொலைபேசி பிணையத்திற்கும் கம்பியில்லாப் பிணையத்திற்கும் இடைமுகமாகும். ஒரு PSTN பிணையத்திலிருந்து தோன்றும் அழைப்பு ஒரு நுழைவாயில் நகர்பேசி சந்தாதாரர் எண் (Mobile Station ISDN-MSISDN) மூலம் MSC நுழைவாயிலுக்கு திசைவு செய்யப்படுகிறது. இந்த நுழைவாயில் நகர்பேசி MSISDN எண்ணுடன் HSRஐ வினாவித்து MSRN எண்ணை பெறுகிறது. இந்த MSRN எண்ணுடன் அழைப்பு MSCக்கு திசைவு செய்யப்படுகிறது. MSCயின் VLR பதிவகம் MSRNஐ எடுத்து மாற்றி நகர்கருவிக்கு TMSI எண் ஒன்றை அளிக்கிறது. ஒரு அழைப்பு BSCயின் கட்டுப்பாடு மூலம் நகர்கருவிக்கு திசைவு செய்யப்படுகிறது.

கம்பியில்லா அணுகு நெறிமுறை

[தொகு]

கம்பியில்லா தொலைதொரபில் ஒரு முக்கியமான இடம் வைத்திருப்பது கம்பியில்லா அணுகு நெறிமுறை. கம்பியில்லா அணுகு நெறிமுறை மூலம் இணையத்திற்கும் ஒரு நகர்கருவிக்கும் இடையே தொடர்பு இயல்பாகிறது. கம்பியில்லா அணுகு நெறிமுறை என்பது ஒரு தூது நெறிமுறை (Messaging Protocol). கம்பியில்லா அணுகு நெறிமுறை மூலம் இணையம் மூலம் நகர்கருவிகளுக்கு மின்னஞ்சல், குரல்தகவல், நாட்குறிப்பு ஆகிய சேவைகளை நிறைவேற்ற இயல்கிறது. ஒரு கம்பியில்லா அணுகு நெறிமுறை அமைப்பில் 3 பாகங்கள் உண்டு: அவை:

  • கம்பியில்லா அணுகு நெறிமுறை நுழைவாயில்,
  • இணைய வழங்கன், மற்றும்
  • கம்பியில்லா அணுகு நெறிமுறை தெரிந்த நகர்கருவி.

கம்பியில்லா அணுகு நெறிமுறை நுழைவாயில் (Access Point) WML தகவல்களை கம்பியில்லா அணுகு நெறிமுறையை ஏற்கும் நகர்கருவியுடன் பரிமாற்றுகிறது மற்றும் HTML தகவல்களை இணைய வழங்கன் மூலம் பரிமாற்றுகிறது. இணைய வழங்கன் தரவுத்தளங்களுடன் ASP, ColdFusion, CGI அல்லது PHP ஆகிய மென்பொருள் கருவிகள் மூலம் தொடர்புகொண்டு HTML பக்கங்களை வழங்குகிறது.

இந்தியாவிலும் இலங்கையிலும் நகர்பேசித் தொழில் நுட்பம்

[தொகு]

இந்தியாவில் கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளாக நகரும் தொலைபேசிகள் நகர்புறங்கள் முதல் நாட்டுப்புறங்கள் வரை பரவியுள்ளன. நகர்பேசிகளின் பயன்பாட்டுத் திட்டங்களும் அதிகரித்து அவைகளின் கட்டணங்களும் படிப்படியாக குறைந்துள்ளன. ஒரு காலத்தில் இந்தியாவில் நகர்பேசி ஒரு அந்தஸ்துக் குறியாக இருந்த போதிலும் இன்று அது நாடெங்கும் இயல்பாக அனைவரும் உபயோகிக்கும் ஒரு பொருள் ஆகிவிட்டது. பல்வேறு கருவிகள் பல்வேறு திட்டங்கள் பல்வேறு சேவை நிறுவனங்கள்...

  • இந்தியாவில் சி.டி.எம்.ஏ சேவையை வழங்கும் நிறுவனங்கள்
  • ஜி.எஸ்.எம் சேவையை வழங்கும் நிறுவனங்கள்
ஏர்டெல் சின்னம்
ஐடியா சின்னம்

இலங்கையில் 2005 ஆம் ஆண்டு மே மாதத்தில் CDMA தொழில் நுட்பம் சண்டெல் மற்றும் லங்காபெல் நிறுவனங்களினால் அறிமுகம் செய்யப்பட்டது. இது தொலைத்தொடர்பிற்கு மாத்திரமன்றி இணைய இணைப்பிலும் சண்டெல் மற்றும் இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையம் விநாடிக்கு 115.2 கிலொபிட்ஸ் இணைப்பிலும் மற்றும் லங்காபெல் விநாடிக்கு 153கிலோபிட்ஸ் இணைப்பிற்கும் சண்டெல் விநாடிக்கு 230.4/115.2 கிலோபிட்ஸ் இணைப்பிலும், டயலொக் விநாடிக்கு 460.8/230.4. கிலோபிட்ஸ் இணைப்பிற்கும் உதவுகின்றது. போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாணங்களில் கிளிநொச்சி முல்லைத்தீவு தவிர இலங்கையின் எல்லா மாவட்டங்களிலும் இச்சேவை அறிமுகபப்டுத்தப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைத் தொடர்புநிலையத்தின் இச்சேவையை 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்தது. இப்போதுள்ள நிலையில் இலங்கைத் தொலைத்தொடர்பு நிலையமும் டயலொக் மற்றும் அதைத் தொடர்ந்து சண்டெல் மற்றும் லங்காபெல் வலையமைப்புக்களும் விளங்குகின்றன.

இலங்கையில் CDMA சேவையை வழங்கும் நிறுவனஙகள் :

இலங்கையில் GSM (TDMA) சேவையை வழங்கும் நிறுவனங்கள்

தொழில் நுட்பக் குறிப்புகள்

[தொகு]
  • உங்கள் சர்வதேச நகர்பேசியை அடையாளம் காணும் இலக்கத்தை அறிய கொள்ள நகர்பேசியின் *#06# என்று அழுத்தவும். இதில்
    • AAAAAA-BB-CCCCCC-D
    • இதில் AAAAAA - மாதிரியின் அனுமதிக் குறியீடு
    • இதில் BB - இறுதியாகக் கூட்டிணைக்கும் குறியீடு
    • இதில் CCCCCC - நகர்பேசியின் தொடரிலக்கம்
    • இதில் D - மிகையான இலக்கம்

இந்த இலக்கத்தைக் குறித்து வைத்துக்கொள்ளவும் இது நகர்பேசியானது தொலைந்தால் நகர்பேசியை செயலிழக்கச் செய்ய உதவுவதோடு களவெடுத்தவரைக் கையும் மெய்யுமாகக் கண்டுபிடிக்கவும் உதவும்.

நோக்கியா நகர்பேசி

[தொகு]
  • நோக்கியா (Nokia) நகர்பேசிகளின் தயாரித்த திகதியைக் கண்டறிய நகர்பேசியில் *#0000# விசைகளை அழுத்தவும்.
  • நோக்கியா நகர்பேசிகளில வேகமான அழைப்புக்களை ஏற்படுத்த xx# என்றவாறு அழுத்தவும் எடுத்துக்காட்டாக 24 ஆவதுசேமிக்கப்பட்ட இலக்கத்தை அழைக்கவேண்டும் எனில் 24# என்றவாறு விரைவாக டயல் செய்யலாம்.
  • நோக்கியா நகர்பேசியின் வரண்டி (Warranty) ஐப்பார்க்க *#92702689# அதாவது (*#WAR0ANTY#) வருமாறு அழுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Srivastava, Viranjay M.; Singh, Ghanshyam (2013). MOSFET Technologies for Double-Pole Four-Throw Radio-Frequency Switch. Springer Science & Business Media. p. 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3319011653.
  2. Teixeira, Tania (23 April 2010). "Meet the man who invented the mobile phone". BBC News. பார்க்கப்பட்ட நாள் 2 July 2021.
  3. "Timeline from 1G to 5G: A Brief History on Cell Phones". CENGN (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-09-21. பார்க்கப்பட்ட நாள் 2022-02-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செல்லிடத்_தொலைபேசி&oldid=4123667" இலிருந்து மீள்விக்கப்பட்டது