உள்ளடக்கத்துக்குச் செல்

கரகல்பக்ஸ்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கரகல்பாக்ஸ்தான் (Karakalpakstan, கரகல்பக மொழி : Qaraqalpaqstan / Қарақалпақстан; உசுபேகிய மொழி : Qoraqalpogʻiston), அதிகாரப்பூர்வமாக கரகல்பாக்ஸ்தான் குடியரசு (கரகல்பக மொழி : Qaraqalpaqstan Respublikası / Қарақалпақстан Республикасы; உசுபேகிய மொழி : Qoraqalpogʻiston Respublikasi) என்பது உஸ்பெகிஸ்தானுக்குள் உள்ள ஒரு தன்னாட்சி குடியரசு. இது உஸ்பெகிஸ்தானின் வடமேற்கு முனை முழுவதும் பரவியுள்ளது. இதன் தலைநகரம் நுகஸ் ( Noʻkis / Нөкис ) ஆகும். கரகல்பாக்ஸ்தான் குடியரசு 160,000 சதுர கிலோமீட்டர்கள் (62,000 sq mi) பரப்பளவில் உள்ளது. பாரசீக செவ்வியல் இலக்கியங்களில் இப்பகுதி கோட் (کات) என்று அழைக்கப்பட்டாலும், இதன் பகுதி குவாரசமியாவின் பாரம்பரிய நிலப்பகுதிக்கு உட்பட்டது.

வரலாறு

[தொகு]

கிமு 500 முதல் கிபி 500 வரை, இப்போதய கரகல்பக்ஸ்தான் பகுதியானது பரந்த அளவில் நீர்ப்பாசனம் கொண்ட ஒரு வளமான வேளாண் பகுதியாக இருந்தது. நாடோடிகளாகவும், மீனவர்களாக இருந்த கரகல்பக் மக்கள் குறித்து 16 ஆம் நூற்றாண்டில் முதன்முதலில் பதிவு செய்யப்பட்டது. கராகல்பாக்ஸ்தான் உருசிய பேரரசுக்கு கிவாவின் கானேட்டால் 1873 இல் விற்கப்பட்டது. சோவியத் ஆட்சியின் கீழ், இது 1936 இல் உஸ்பெகிஸ்தானின் ஒரு பகுதியாக மாறுவதற்கு முன்பு உருசிய சோவியத் கூட்டாட்சி சோசலிச குடியரசிற்குள் ஒரு தன்னாட்சி பகுதியாக இருந்தது. 1960 கள் மற்றும் 1970 களில், ஆமூ தாரியாவிலிருந்து நீர்ப்பாசனம் விரிவாக்கப்பட்டபோது, இப்பகுதி மிகவும் வளமானதாக இருந்தது. இருப்பினும், இன்று, ஏரல் கடலின் வடிகாலான கரகல்பகஸ்தான் உஸ்பெகிஸ்தானின் ஏழ்மையான பகுதிகளில் ஒன்றாக ஆகியுள்ளது. இப்பகுதி பரந்த அளவில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது, இதற்கு காரணம் ஓரளவு வானிலை என்றாலும், பெரும்பாலும் அமு மற்றும் சிர் தாரியா ஆற்று நீரானது நாட்டின் கிழக்குப் பகுதியில் பெரும்பாலும் சுரண்டப்படுவது ஒரு முக்கியக் காரணமாகும். பயிர் பொய்த்தலால் சுமார் 48,000 மக்களை அவர்களின் முக்கிய வருமான ஆதாரத்தை இழந்துவிட்டனர். மேலும் குடிநீர் பற்றாக்குறையால் தொற்று நோய்களின் எழுச்சியை உருவாக்கியுள்ளது.

நிலவியல்

[தொகு]

கரகல்பகஸ்தான் இப்போது பெரும்பாலும் பாலைவனமாக உள்ளது மற்றும் மேற்கு உஸ்பெகிஸ்தானில் ஏரல் கடலுக்கு அருகில், அமு தர்யா வடிநிலத்தில் மிகக் குறைந்த பகுதியில் அமைந்துள்ளது.[1][2][3] இதன் பரப்பளவு 164,900   கிமீ² [4] ஆகும். மேலும் இது பாலைவனத்தால் சூழப்பட்டுள்ளது. கிசில்கும் பாலைவனம் கிழக்கே அமைந்துள்ளது மற்றும் காராகும் பாலைவனம் தெற்கே அமைந்துள்ளது. ஒரு பாறை பீடபூமி மேற்கு நோக்கி காசுப்பியன் கடல் வரை நீண்டுள்ளது.[5]

அரசியல்

[தொகு]

கரகல்பாக்ஸ்தான் குடியரசு முறையான இறையாண்மையைக் கொண்டுள்ளது. மேலும் உஸ்பெகிஸ்தான் தொடர்பான முடிவுகளில் குடியரசானது வீட்டோ அதிகாரத்தைப் கொண்டுள்ளது. அரசியலமைப்பின் படி, கரகல்பகஸ்தானுக்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் " ஒப்பந்தங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன" மற்றும் எந்தவொரு சர்ச்சையும் "நல்லிணக்கத்தின் மூலம் தீர்க்கப்படுகின்றன". பிரிந்து போவதற்கான எந்தவொரு முடிவும் உஸ்பெகிஸ்தானின் சட்டமன்றத்தின் வீட்டோ அதிகாரத்தால் பிரிவினை உரிமை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.[4] பிரிவு 74, அத்தியாயம் XVII, உஸ்பெகிஸ்தானின் அரசியலமைப்பு, பின்வருமாறு கூறுகிறது:   "கரகல்பாக்ஸ்தான் குடியரசுக்கு உஸ்பெகிஸ்தான் குடியரசிலிருந்து இருந்து பிரிந்து செல்வதற்கான உரிமையானது கராகல்பாக்ஸ்தான் குடியரசால் நடைபெறும் நாடு தழுவிய வாக்கெடுப்பின் அடிப்படையில் இருக்கும்."

மக்கள்வகைப்பாடு

[தொகு]

கரகல்பாக்ஸ்தானின் மக்கள் தொகை சுமார் 1.7 மில்லியனாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது,[6] 2007 ஆம் ஆண்டில் சுமார் 400,000 மக்கள் கரகல்பக் இனக்குழுவினரும், 400,000 பேர் உஸ்பெக்கியர்களும், 300,000 பேர் கஜகர்களும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கரகல்பக் என்ற பெயரானது "கருப்பு தொப்பி" என்று பொருள்படும், ஆனால் கரகல்பக் கலாச்சாரம் சோவியத்மயமாக்கலினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. கருப்பு தொப்பி என்பதன் அசல் பொருள் இப்போது தெரியவில்லை   . கரகல்பக மொழி உசுபேகிய மொழியை விட காசாக்கு மொழியுடன் நெருக்கமாக கருதப்படுகிறது.[7] இந்த மொழி சோவியத் காலங்களில் மாற்றியமைக்கப்பட்ட சிரிலிக் எழுத்துக்களில் எழுதப்பட்டது மற்றும் 1996 முதல் லத்தீன் எழுத்துக்களில் எழுதப்படுகிறது.

2017 இல் மக்கள் தொகை 1.8 மில்லியனாக வளர்ந்தது. பிறப்பு வீதம் 2.19%: ஏறக்குறைய 39,400 குழந்தைகள் 2017 இல் பிறந்தனர். இதே காலகட்டத்தில் கிட்டத்தட்ட 8,400 பேர் இறந்தனர். இறப்பு வீதம் 0.47%. இயற்கைப் பிறப்பு விகிதம் 31,000, அல்லது 1.72%.

சராசரி வயது 2017 இல் 27.7 வயதாக இருந்தது, இது உஸ்பெகிஸ்தானின் மற்ற பகுதிகளை விட இளையது (நாடு முழுவதும் சராசரி வயது 28.5). ஆண்கள் 27.1 வயது, பெண்கள் 28.2 வயது.

தலைநகர் நுகுஸைத் தவிர, பெரிய நகரங்களாக சோஜெலி (சிரிலிக்: Ходжейли), டாக்ஸியோடோஷ் (Тахиаташ), ஷிம்பாய் (Шымбай), கொனிராட் (Қоңырат) மற்றும் மொய்னாக் (Муйнак) ஆகியன உள்ளன. முன்னர் ஏரல் கடலில் இருந்த மொய்னாக் துறைமுகம் இப்போது நாசாவின் கூற்றின்படி தற்போது முற்றிலும் வறண்டுவிட்டது.

குறிப்புகள்

[தொகு]
  1. Batalden, Stephen K. The newly independent states of Eurasia: handbook of former Soviet republics. பார்க்கப்பட்ட நாள் 2012-03-03.
  2. Thomas, Troy S. Warlords rising: confronting violent non-state actors. பார்க்கப்பட்ட நாள் 2012-03-03.
  3. Merkel, Broder. The New Uranium Mining Boom: Challenge and Lessons Learned. பார்க்கப்பட்ட நாள் 2012-06-07.
  4. 4.0 4.1 Roeder, Philip G. Where nation-states come from: institutional change in the age of nationalism. பார்க்கப்பட்ட நாள் 2012-03-03.
  5. Bolton, Roy. Russian Orientalism: Central Asia and the Caucasus. பார்க்கப்பட்ட நாள் 2012-03-03.
  6. The State Committee of the Republic of Uzbekistan on Statistics பரணிடப்பட்டது 2012-07-15 at Archive.today
  7. Karakalpakstan: Uzbekistan’s latent conflict பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம், 6 January 2012
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரகல்பக்ஸ்தான்&oldid=3792874" இலிருந்து மீள்விக்கப்பட்டது