இலட்சுமிகர்ணன்
இலட்சுமிகர்ணன் | |
---|---|
சக்ரவர்த்தி, பரமபட்டாரக மகாராசாதிராச பரமேசுவரன் | |
தஹாலாவின் மன்னன் | |
ஆட்சிக்காலம் | சுமார் 1041-1073 பொ.ச. |
முன்னையவர் | கங்கேயதேவன் |
பின்னையவர் | யசகர்ணன் |
துணைவர் | அவல்லாதேவி |
குழந்தைகளின் பெயர்கள் | யசகர்ணன் |
அரசமரபு | திரிபுரியின் காலச்சூரிகள் |
தந்தை | கங்கேயதேவன் |
இலட்சுமிகர்ணன் (Lakshmikarna : ஆட்சிக் காலம் சுமார் கிபி 1041-1073 ), எனவும் கர்ணன் எனவும் அறியப்படும் இவர் மத்திய இந்தியாவிலிருந்த திரிபுரியின் காலச்சூரி வம்மசத்தில் ஒரு மன்னராக இருந்தார். இவரது இராச்சியம், மத்திய இந்தியாவிலிருந்த ( இன்றைய மத்தியப் பிரதேசம் ) சேதி நாடு அல்லது தஹாலா பகுதியை மையமாகக் கொண்டிருந்தது.
தனது வம்சத்தின் மிகவும் பிரபலமான மன்னரான இவர், சந்திரர்கள், சோழர்கள், மேலைச் சாளுக்கியர், சோலாங்கியர்கள், சந்தேலர்கள், பாலர்கள் உட்பட பல அண்டை நாடுகளின் பிரதேசங்களைத் தாக்கினான். பல இராணுவ வெற்றிகளுக்குப் பிறகு, இவன் பொ.ச. 1052-1053 இல் "சக்ரவர்த்தி" என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டார். கிபி 1055 இல், இவர் பரமார மன்னன் போஜனின் வீழ்ச்சியில் முக்கிய பங்கு வகித்தார். மேலும் போஜனின் மரணத்திற்குப் பிறகு மால்வாவின் பரமார இராச்சியத்தின் ஒரு பகுதியைக் கைப்பற்றினார். இருப்பினும், தனது ஆட்சியின் முடிவில், இவர் பல பின்னடைவுகளைச் சந்தித்தார். மேலும், போஜனின் சகோதரன் உதயாதித்தனிடம் மால்வாவின் கட்டுப்பாட்டை இழந்தார்.
இராணுவ வாழ்க்கை
[தொகு]இலட்சுமிகர்ணன் தனது தந்தை கங்கேயதேவனுக்குப் பிறகு பொ.ச.1041இல் திரிபுரியின் அரியணையில் அமர்ந்தான்.[1]
ஆரம்பக் கால போர்கள்
[தொகு]1048-49 ரேவா கல்வெட்டு, வங்கம் (நவீன வங்காளம்), அங்க இராச்சியங்களின் கிழக்குப் பகுதிகளில் இவனது இராணுவ வெற்றிகளை விவரிக்கிறது. [2] வங்கத்தில், இவன் சந்திர வம்சத்தைச் சேர்ந்த ஒரு மன்னனை தோற்கடித்தான். ஒருவேளை இது கோவிந்தச்சந்திரனாக இருக்கலாம். கைப்பற்றப்பட்ட பிரதேசத்தின் ஆளுநராக வஜ்ரதாமன் என்பவனை நியமித்தான். வஜ்ரதாமனின் மகன் சடவர்மன் இலட்சுமிகர்ணனின் மகள் விராச்ரி என்பவளை மணந்தான். பின்னர் கர்ணனின் அங்க தேசப் போரில் அவனுக்கு உதவினான். [2]
தெற்கில் உள்ள காஞ்சியைத் தாக்கியதாகவும் ரேவா கல்வெட்டு கூறுகிறது. சோழ மன்னன் இராஜாதிராஜனுடன் போரிட்டதை இது உணர்த்துகிறது.[2]
கல்வெட்டில், மேலைச் சாளுக்கிய மன்னன் முதலாம் சோமேசுவரனுடன் அடையாளம் காணப்பட்ட குந்தள மன்னனின் செல்வத்தை இவன் கைப்பற்றியதாகக் கூறுகிறது. இருப்பினும், சாளுக்கிய அரசவைக் கவிஞர் பில்ஹணன், இவனது சக்தியை சோமேசுவரன் அழித்ததாகக் கூறுகிறார். இரு அரசர்களுக்கிடையிலான போர் முடிவற்றதாக இருந்ததை இது உணர்த்துகிறது. [2]
இலட்சுமிகர்ணன் கூர்ஜர நாட்டின் மீது படையெடுத்து, அங்குள்ள பெண்களை விதவைகளாக மாற்றினான் என்று ரேவா கல்வெட்டு மேலும் கூறுகிறது. பிராகிருத-பைங்கலாவில் மேற்கோள் காட்டப்பட்ட ஒரு அபப்ராச வசனமும் இலட்சுமிகர்ணன் ஒரு கூர்ஜர அரசனை தோற்கடித்ததாகக் கூறுகிறது. இந்த மன்னனை சோலாங்கிய மன்னன் முதலாம் பீமதேவனுடன் அடையாளம் காணலாம். போர் ஒன்றில் பீமன் இலட்சுமிகர்ணனுடன் சேர்ந்து பங்கேற்றதால், இரு இராச்சியங்களுக்கிடையில் அமைதி ஏற்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. [2]
போஜனும் பீமனும்
[தொகு]மால்வாவின் பரமார மன்னன் போஜன், இலட்சுமிமிகர்ணனின் தந்தை கங்கேயதேவனை தோற்கடித்தான். 1050களின் நடுப்பகுதியில், இலட்சுமிமிகர்ணனும், சோலாங்கிய மன்னன் முதலாம் பீமதேவனும் போஜனுக்கு எதிராக ஒரு கூட்டணியை உருவாக்கினர். பீமன் மால்வாவை மேற்கிலிருந்து தாக்கினான். அதே சமயம் இவன் கிழக்கிலிருந்து தாக்கினான். [3]
14ஆம் நூற்றாண்டின் வரலாற்றாசிரியர் மெருதுங்காவின் கூற்றுப்படி, இரண்டு மன்னர்களும் மால்வாவைத் தாக்கிய போது போஜன் இறந்தான். பீமனும் இலட்சுமிகர்ணனும் போஜனின் இராச்சியத்தை தங்களுக்குள் பிரித்துக் கொள்ள ஒப்புக்கொண்டனர். ஆனால், போஜனின் மரணத்திற்குப் பிறகு இலட்சுமிகர்ணன் மால்வா பகுதி முழுவதையும் இணைத்துக் கொண்டான். இதன் விளைவாக, பீமன் இலட்சுமிகர்ணன் மீது படையெடுத்து அவனது தலைநகரான திரிபுரிக்கு முன்னேறினான். இலட்சுமிகர்ணன் யானைகளையும், குதிரைகளையும், போஜனின் தங்க மண்டபத்தையும் பரிசாக அளித்து சமாதானத்தை உருவாக்கினான். [3]
இலட்சுமிகர்ணன் சில மாதங்களில் மால்வாவின் கட்டுப்பாட்டை இழந்தான். போஜனின் வாரிசான செயசிம்மன் மால்வாவில் பரமார ஆட்சியை மீட்டெடுக்க மேலைச் சாளுக்கிய மன்னன் முதலாம் சோமேசுவரனிடம் உதவி கோரினான். [3] சோமேசுவரன் தனது மகன் ஆறாம் விக்ரமாதித்தனை செயசிம்மனுக்கு உதவ அனுப்பினான். இலட்சுமிகர்ணன் விக்ரமாதித்தனுக்கு எதிராக ஆரம்பகால வெற்றிகளைப் பெற்றான். ஆனால் இறுதியில் தோற்கடிக்கப்பட்டான். கிபி 1055இல் செயசிம்மன் தனது மூதாதையர் அரியணையை திரும்பப் பெற்றான். [3]
சந்தேலர்கள்
[தொகு]இலட்சுமிகர்ணன் சந்தேல மன்னன் தேவவர்மன் மீது (ஆட்சி பொ.ச.1050-1060) போர் தொடுத்தான் சந்தேல அரசவை அறிஞர் கிருட்டிண மிசுராவால் இயற்றப்பட்ட "பிரபோத-சந்திரோதயம் " என்ற உருவக நாடகம், காலச்சூரி மன்னன் சந்தேல மன்னனை அரியணையில் இருந்து நீக்கியதாகக் கூறுகிறது. மற்றொரு இலக்கியப் படைப்பு - பில்ஹணனின் -விக்ரமாங்க-தேவ-சரிதம் - காலச்சூரி மன்னன் இலட்சுமிகர்ணன் கலிஞ்சரின் ( அதாவது தேவவர்மனின் ) மரணத்திற்கு காரணமாக இருந்ததாகக் கூறுகிறது.
பிற்கால சந்தேலக் கல்வெட்டுகள் தேவவர்மனின் வாரிசான கிருத்திவர்மன் சந்தேல சக்தியை உயிர்த்தெழுப்பியதாகக் கூறுகின்றன. [4] மேலும், இலட்சுமிகர்ணனுக்கு எதிரான போரில் தேவவர்மன் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது. [3]
இலட்சுமிகர்ணன் சந்தேலப் பிரதேசத்தின் ஒரு பகுதியை ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகத் தெரிகிறது. இருப்பினும், இவன் இறுதியில் பொ.ச.1075-76க்கு முன்பு கிருத்திவர்மனால் வெளியேற்றப்பட்டான். [3]
பாலர்கள்
[தொகு]இலட்சுமிகர்ணன் இன்றைய மேற்கு வங்காளத்திலிருந்த பாலப் பேரரசு ஆட்சி செய்யும் கௌடப் பகுதியை ஆக்கிரமித்தான். பிர்பூம் மாவட்டத்தில் உள்ள பைகார் (அல்லது பைகோர்) என்ற இடத்தில் காணப்படும் தூண் கல்வெட்டு, இலட்சுமிகர்ணனின் உத்தரவின் பேரில் ஒரு உருவத்தை உருவாக்கியதை பதிவு செய்கிறது.[5] இது இலட்சுமிகர்ணன் பிர்பூம் மாவட்டம் வரை முன்னேறியதாகக் கூறுகிறது. [3]
பால அரசன் நாயபாலன் ஆட்சிக்காலத்திய சீயான் கல்வெட்டு ஒன்று நாயபாலனின் மகன் முதலாம் மஹிபாலன், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு காலச்சூரி மன்னன் கர்ணனை தோற்கடித்ததாகக் கூறுகிறது.[5] பௌத்தத் துறவி அதிசர் இரு அரசர்களுக்கும் இடையே சமாதான உடன்படிக்கைக்கு பேச்சுவார்த்தை நடத்தியதாக திபெத்திய கணக்குகள் தெரிவிக்கின்றன.[6] வரலாற்றாசிரியர் ரமேஷ் சந்திர மஜும்தார் இரண்டாவது அரசரை இலட்சுமிகர்ணனுடன் என்று அடையாளப்படுத்துகிறார். [6]
12 ஆம் நூற்றாண்டின் சமண எழுத்தாளர் ஹேமச்சந்திரன், இலட்சுமிகர்ணன் கௌட வம்ச மூன்றாம் விக்ரகபாலனின் ஆட்சியின் போது இலட்சுமிகர்ணன் கௌடர்கள் மீது தாக்குதல் நடத்தி தோற்கடித்ததாகவும், கௌட அரசன் தனது உயிரையும், சிம்மாசனத்தையும் காப்பாற்ற ஒரு கனமான தொகையை வழங்கியதாகவும் கூறுகிறார். இரண்டு அரசர்களும் இறுதியில் ஒரு சமாதான உடன்படிக்கையில் போரை முடித்துக்கொண்டனர். இதன்மூலம் இலட்சுமிகர்ணனின் மகள் யுவனாசிறீ ஒரு இளவரசனை மணந்தாள். [3] . [3]
முதலாம் சோமேசுரவனுடனானக் கூட்டணி
[தொகு]கல்யாணி சாளுக்கிய மன்னன் முதலாம் சோமேசுவரனின் மரணத்திற்குப் பிறகு, அவனது இரண்டு மகன்கள் இரண்டாம் சோமேஸ்வரனும், ஆறாம் விக்ரமாதித்யனும் அரியணையைப் பிடிக்க போராடினர். இலட்சுமிகர்ணன் இரண்டாம் சோமேசுவரருடன் கூட்டணி வைத்தான். அதே சமயம் பரமார மன்னன் செயசிம்மன் ஆறாம் விக்ரமாதித்யாவின் பக்கம் நின்றான். இலட்சுமிகர்ணன், இரண்டாம் சோமேசுவரன் ஆகியோரது கூட்டுப் படை, மால்வாவின் பரமாரப் பகுதியைத் தாக்கி, செயசிம்மனை வீழ்த்திய பிறகு அதைக் கைப்பற்றியது. இருப்பினும், போஜனின் சகோதரன் உதயாதித்தன் இலட்சுமிகர்ணனை தோற்கடித்தான். மேலும் கிபி 1073இல் பரமார இராச்சியத்தின் கட்டுப்பாட்டை மீட்டான். [7]
சொந்த வாழ்க்கை
[தொகு]இலட்சுமிகர்ணன் அவல்லா-தேவி என்ற ஹூண இளவரசியை மணந்தான். கலாச்சூரி கல்வெட்டுகளின்படி, இலட்சுமிகர்ணன் தனது மகன் யஷகர்ணனை மன்னனாக முடிசூட்டினான். இது அவன் தனது மகனுக்கு ஆதரவாக அரியணையைத் துறந்ததாகக் கூறுகிறது. இது கிபி 1073இல் நடந்திருக்க வேண்டும், பொ.ச.1076 தேதியிட்ட யசகர்ணனின் கல்வெட்டு புதிய மன்னனின் சில போர்களைக் குறிப்பிடுகிறது. [8]
கலாச்சாரப் பங்களிப்புகள்
[தொகு]இலட்சுமிகர்ணன் அவனது வம்சத்தின் சிறந்த அரசனாகவும், சிறந்த போர்வீரனாகவும் இருந்துள்ளான். அதே சமயம் இவன் கலை மற்றும் கலாச்சாரத்தின் தாராளவாத ஆதரவாளரானாகவும் இருந்தான். [8]
இவன், பல சமசுகிருத, பிராகிருத, அபபிரம்ச அறிஞர்களை ஆதரித்தான். இவர்களில் புகழ்பெற்ற சமசுகிருதக் கவிஞரான பில்ஹணனும் அடங்குவார். அவருடைய விக்ரமாங்க-தேவ-சரிதம் - என்ற கவிதைத் தொகுப்பு இலட்சுமிகர்ணனின் அவையில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் கங்காதரன் என்ற ஒருவரைத் தோற்கடித்ததாகக் கூறுகிறது.[8] வில்லனன், நாச்சிராசன், கற்பூரன், வித்யாபதி ஆகியோரும் இவனுடைய மற்ற அரசவைக் கவிஞர்களாவர். [9]
இலட்சுமிகர்ணன் வாரணாசியில் கர்ண-மேரு என்ற கோயிலைக் கட்டினான்; இது சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாக இருக்கலாம். இவன் பிரயாகையில் (நவீன அலகாபாத்) கர்ண-தீர்த்த படித்துறை ஒன்றை அமைத்தான். பிராமணர்களுக்காக கர்ணாவதி அக்ரகாரத்தையும் (கிராமம்) நிறுவினான். [8]
சான்றுகள்
[தொகு]- ↑ V. V. Mirashi 1957, ப. 490.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 V. V. Mirashi 1957, ப. 491.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 3.8 V. V. Mirashi 1957, ப. 492.
- ↑ Sisirkumar Mitra 1977, ப. 91.
- ↑ 5.0 5.1 Susan L. Huntington 1984, ப. 75.
- ↑ 6.0 6.1 Alaka Chattopadhyaya 1999, ப. 98.
- ↑ V. V. Mirashi 1957, ப. 493.
- ↑ 8.0 8.1 8.2 8.3 V. V. Mirashi 1957, ப. 494.
- ↑ R. K. Sharma 1980, ப. 29.
உசாத்துணை
[தொகு]- Alaka Chattopadhyaya (1999). Atisa and Tibet: Life and Works of Dipamkara Srijnana in Relation to the History and Religion of Tibet with Tibetan Sources. Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0928-4.
- R. K. Sharma (1980). The Kalachuris and their times. Sundeep. இணையக் கணினி நூலக மைய எண் 7816720.
- Sisirkumar Mitra (1977). The Early Rulers of Khajurāho. Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120819979.
- Susan L. Huntington (1984). The "Påala-Sena" Schools of Sculpture. Brill Archive. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-06856-2.
- V. V. Mirashi (1957). "The Kalacuris". In R. S. Sharma (ed.). A Comprehensive history of India: A.D. 985-1206. Vol. 4 (Part 1). Indian History Congress / People's Publishing House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7007-121-1.