இட்லர் கோடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஹிட்லர் கோடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ரோம் நகருக்குத் தெற்கே ஜெர்மானிய அரண்கோடுகள்

இட்லர் கோடு (Hitler Line) என்பது இரண்டாம் உலகப் போரின் போது இத்தாலியில் ஜெர்மானியர்களால் உருவாகப்பட்ட ஒரு பாதுகாவல் அரண்கோடு.

செப்டம்பர் 1943ல் நேச நாடுகள் இத்தாலி மீது படையெடுத்தன. தெற்கு இத்தாலியில் தரையிறங்கியிருந்த நேச நாட்டுப் படைகள், அம்மாத இறுதிக்குள் தெற்கு இத்தாலி முழுவதையும் கைப்பற்றின. ஜெர்மானியப் படைகள் வடக்கு நோக்கிப் பின்வாங்கின. நேச நாட்டுப் படை முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக ரோம் நகருக்குத் தெற்கே பல அரண் கோடுகளை ஜெர்மானியர்கள் உருவாக்கியிருந்தனர். இத்தாலியின் புவியியல் அமைப்பு இதற்கு சாதகமாக இருந்தது. இப்படி அமைக்கப்பட்ட அரண் கோடுகளில் ஒன்று இட்லர் அரண்கோடு. இது குசுத்தாவ் கோட்டுக்குப் பின்புறம் அமைந்திருந்தது. குசுத்தாவ் கோட்டினை நேச நாட்டுப் படைகள் ஊடுருவினால், ஜெர்மானியப் படைகள் பின்வாங்க வசதியாக இது அமைக்கப்பட்டிருந்தது. மே 1944ல் இதற்கு “செங்கர் கோடு” என்று பெயர்மாற்றப்பட்டது. தனத் பெயர் இடப்பட்ட ஒரு நிலை வீழ்ந்தால் அது நேச நாட்டுத் தரப்புக்கு பெரும் பரப்புரை வெற்றியாகும் என்று எண்ணிய இட்லர், இதன் பெயரை மாற்ற உத்தரவிட்டார். அப்பகுதியின் ஜெர்மானியத் தளபதி ஜெனரல் வோன் செங்கர் என்பவரின் பெயர் இதற்கு இடப்பட்டது. மே 24, 1944 அன்று பிரித்தானிய 8வது ஆர்மியைச் சேர்ந்த கனடிய மற்றும் போலியப் படைப்பிரிவுகள் இட்லர் அரண்கோட்டினை ஊடுருவின.

இதற்கு அடுத்து அமைந்திருந்த அரண் கோடு சீசர் கோடு என்றழைக்கப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இட்லர்_கோடு&oldid=1361217" இலிருந்து மீள்விக்கப்பட்டது