விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/டிசம்பர் 25, 2007

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


இயேசு கிறிஸ்து கிறிஸ்தவ மதத்தின் காரணரும், மைய நபரும் ஆவார். இவர் ஏசு, கிறிஸ்து இயேசு, நாசரேத்தூர் இயேசு மற்றும் நசரேயனாகிய இயேசு என்ற பெயர்களிலெல்லாம் அழைக்கப்படுகிறார். இஸ்லாம் மற்றும் பஹாய் நம்பிக்கை போன்ற சமயங்களிலும் இவர் ஒரு முக்கியமான தீர்க்கதரிசியாகக் கருதப்படுகிறார். இயேசு பற்றிய தகவல்கள் புனித விவிலியத்தின் நான்கு நற்செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்கள் இயேசுவை கடவுளின் மகன் என்றும், விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் முன்னுரைக்கப்பட்ட மெசியா (இரட்சகர்) என்றும் விசுவாசிக்கின்றனர். மேலும், சிலுவையில் மரித்த இயேசு, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததாகவும், அவர் மூலமாக தாங்கள் பாவத்திலிருந்து இரட்சிக்கப்பட முடியும் என்றும் நம்புகின்றனர். வரலாற்று ஆய்வாளரின் கருத்துப்படி இயேசு கி.மு. 8–2 தொடக்கம் கி.பி. 29–36 வரை பூமியில் வாழ்ந்ததாகக் கருதுகின்றனர்.


காவிரி ஆறு இந்தியத் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. அது கர்நாடக மாநிலத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் தோன்றுகிறது. இதன் நீளம் 800 கிமீ. கர்நாடகத்தில் குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு புறநகர், சாம்ராஜ் நகர் மாவட்டங்கள் வழியாகவும் தமிழ்நாட்டில் தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி , தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் வழியாகச் சென்று பூம்புகார் என்னும் இடத்தில் வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது. இது பொன்னி ஆறு என்றும் அழைக்கப்படுகிறது.


மிக குறுகிய அகலமுடைய ஆடு தாண்டும் காவிரியிலிருந்து தமிழகம் வரும் காவிரியானது பில்லிகுண்டுவை தாண்டி ஒகேனக்கல் அருவியை அடைகிறது. பின் காவிரியானது மேட்டூர் அணையை அடைந்து ஸ்டான்லி நீர்த்தேக்கத்தை உருவாக்குகிறது. இங்கிருந்தே தமிழக காவிரி பாசனம் தொடங்குகிறது. மேட்டூரிலிருந்து வெளிவரும் காவிரியுடன் பவானி என்னுமிடத்தில் பவானி ஆறு கலக்கிறது. ஈரோடு நகரை கடந்து செல்லும் காவிரியுடன் கொடுமுடி அருகேயுள்ள நொய்யல் என்னுமிடத்தில் நொய்யல் ஆறு கலக்கிறது. அமராவதி ஆறு கரூர் அருகேயுள்ள கட்டளை என்னுமிடத்தில் காவிரியுடன் கலக்கிறது.