போதைப்பொருள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(போதைப் பொருள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

போதைப்பொருள்கள் போதை ஏற்றிக்கொள்வதற்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் மக்களால் உட்கொள்ளப்படுகின்றன. போதைப்பொருள் பழக்கம் உடல் நலத்திற்கும் சமூக நலத்திற்கும் பெறும் ஊறு விளைவிக்கும் பிரச்சனையாகும். இதனால் தனிமனிதன், சமுதாயம் என பல வகைகளிலும் பாதிப்புகள் ஏற்படுகிறது.

போதைப் பொருள் வகைகள்[தொகு]

போதைப் பொருட்களில் மதுபானம், புகையிலை, அபின், ஹெராயின், கஞ்சா, பான் மசாலா, போதை தரும் இன்ஹேலர்கள் என பல வகைகள் அடங்கும்.

காஃவீன்[தொகு]

காஃவீன் என்பது சில செடிகொடிகளில் உள்ள மனிதர்களுக்கு ஒரு புத்துணர்வூட்டும் (விறுவிறுப்பூட்டும்) ஒரு போதைப் பொருள். இது காப்பியில் இருப்பதை முதலில் உணர்ந்ததால் இதற்கு காஃவீன் என்று இத்தாலிய மொழிவழி இப்பெயர் ஏற்பட்டது. இதே பொருள் பிற செடிகொடிகளில் இருந்து பெறும்பொழுது வேறு பெயர் கொண்டாலும் இதன் வேதியியல் பெயர் காஃவீன் (Caffeine) என்பதுதான். பிற செடிகளில் இருந்து பெறும் பொருள்களுக்கு சில எடுத்துக்காட்டுகள்: தேயிலைச் செடியில் இருந்து பெறுவதை தேயீன் (theine) என்றும், குவாரான் என்னும் செடியில் இருந்து பெறுவதை குவாரைன் (guaranine) என்றும், யெர்பா மேட் என்னும் செடிப்பொருளில் இருந்து பெறுவதை மேட்டீன்(mateine) என்றும் கூறுவது வழக்கம்.

கஞ்சா[தொகு]

கஞ்சாவில் சில வர்க்கங்கள் போதையூட்டும் பொருட்களாகவும் மருத்துவப் பொருளாகவும் பயன்படுகின்றது. இதில் காணப்படும் வேதிப்பொருளான THC (Δ9- tetrahydrocannabinol), இவ்வியல்புக்குக் காரணமாகும். சிவகை என அழைக்கப்படும் கஞ்சா பக்தி கலந்த போதையை ஊட்டுவதாகக் கருதப்படுகின்றது.

கோக்கைன்[தொகு]

கோகோயின் என்பது கோகோ தாவர இலைகளில் இருந்து பெறப்படும் ஒரு பளிங்குரு கொண்ட டிரோபேன் அல்கலாய்டு ஆகும். “கோகோ” என்ற பெயருடன் சேர்ந்து அல்கலாய்டு துணைப் பெயரான -ine என்பது சேர்ந்து கோகோயின் என்ற வார்த்தையை உருவாக்குகிறது. இது மத்திய நரம்பு மண்டலத்தின் கிளர்ச்சியூட்டியாக இருப்பதுடன் பசி அடக்கியாகவும் செயல்படுகிறது. குறிப்பாக, இது ஒரு செரோடோனின்-நோரெபினிஃப்ரைன்-டோபமைன் மறுஉறிஞ்சல் தடுப்பான் ஆகும், இது புறத்திலமைந்த கடேகாலமைன் டிரான்ஸ்போர்ட்டர் ஈந்தணைவியின் (exogenous catecholamine transporter ligand) செயல்பாட்டை மத்தியஸ்தம் செய்கிறது. மீஸோலிம்பிக் ரிவார்ட் பாதையை இது பாதிக்கும் விதத்தின் காரணமாக, கோகோயின் அடிமைப்பழக்கத்திற்கு ஆட்படுத்தத் தக்கதாய் இருக்கிறது.

ஏறக்குறைய உலகின் அனைத்து பகுதிகளிலும் மருத்துவம் சாராத நோக்கங்களுக்கு அல்லது அரசு ஒப்புதலின்றி இதனை வைத்திருப்பது, வளர்ப்பது மற்றும் விநியோகம் செய்வது சட்டவிரோதமாக இருக்கிறது. ஏறக்குறைய எல்லா நாடுகளிலும், இதனை சுதந்திர வர்த்தகமயமாக்குவது சட்டவிரோதமானதாகவும் கடுமையான தண்டனைக்கு உரியதாகவும் இருந்த போதிலும், உலகளாவிய அளவில் இதன் பயன்பாடு பல்வேறு சமூக, கலாச்சார, மற்றும் தனிநபர் அந்தரங்க மட்டங்களில் பரந்துபட்டதாக இருக்கிறது.

எத்தனால்[தொகு]

எத்தனால் என்பது எரிநறா அல்லது வெறியம் என்னும் வகையைச் சார்ந்த ஒரு வேதிச் சேர்மம். இது எரியக்கூடிய தன்மையுடையதும் நிறமற்றதும் ஆகும். மதுபானங்களில் பொதுவாகக் கலந்திருக்கும் இந்த வெறியம் ஆதி காலத்தில் இருந்து ஒரு போதைப் பொருளாக அறியப்பட்ட ஒன்று. சர்க்கரையை நொதிக்கச் செய்து எத்தனால் தயாரிப்பது மனிதகுலம் அறிந்த கரிம வேதிவினைகளுள் முதன்மையானவற்றுள் ஒன்று என்று நம்பப்படுகிறது.

நிக்காட்டீன்[தொகு]

நிக்காட்டீன் அல்லது நிக்கோட்டீன் எனப்படுவது, சில தாவர வகைகளில், சிறப்பாகப் புகையிலையிலும், சிறிய அளவில் தக்காளி, உருளைக்கிழங்கு, கத்தரி, பச்சை மிளகு போன்றவற்றிலும் காணப்படுகின்றது. இதனை, கோகேயின் (cocaine) என்னும் பொருளுடன் சேர்ந்து கொக்கோ தாவரத்தின் இலைகளிலும் காணலாம்.குறைவான செறிவில், இப்பொருள் பாலூட்டிகளில் ஒரு தூண்டியாகச் செயல்படுவதுடன், புகைத்தலில் தங்கியிருத்தலை உருவாக்குவதற்கான முக்கிய காரணிகளுள் ஒன்றாகவும் இது விளங்குகின்றது. அமெரிக்க இதயக் கழகத்தின் கூற்றுப்படி, நிக்காட்டீன் பழக்கம் நிறுத்துவதற்கு மிகக் கடினமானதொரு பழக்கம் ஆகும். புகையிலைக்கு அடிமையாதலைத் தீர்மானிக்கும் மருந்தியல் மற்றும் நடத்தை இயல்புகள், ஹெரோயின், கொக்கேயின் போன்ற போதைப் பொருள்களுக்கு அடிமையாவதைத் தீமானிக்கும் இயல்புகளை ஒத்தது.

புகையிலை[தொகு]

புகையிலையைப் புகைத்துப் பழக்கப்பட்டவர்கள் அப் பழக்கத்துக்கே அடிமையாகி விடுவர்.இதனைப் பயன்படுத்தும் முறையையும், அளவையும் பொறுத்து மனித உடலில் இது ஏற்படுத்தும் தாக்கம் குறிப்பிடத்தக்கது. இதனைப் பயன்படுத்துவதனால் ஏற்படக்கூடிய முக்கியமான உடல்நலக் கேடு குருதிச் சுற்றோட்டத்தொகுதியில் ஏற்படக்கூடிய நோய்கள் ஆகும். புகைத்தல் காலப்போக்கில், வாய், தொண்டை, நுரையீரல் ஆகிய பகுதிகளில் பெருமளவு புற்று நோயைத் தூண்டும் பொருட்களைப் படியச் செய்கிறது.

அபினி[தொகு]

அபினிஎன்பது போதையூட்டுகிற, வலிநீக்கி மருந்துப்பொருள் ஆகும். இது அபினிச் செடியில் இருந்து பெறப்படுகின்றது.அபினி வலிமையான போதையூட்டும் இயல்புகளைக் கொண்டது. இதிலுள்ள சேர்பொருட்களும், இதிலிருந்து பெறப்படும் பொருட்களும், வலிநீக்கிகளாகப் பயன்படுகின்றன. இதனால், சட்டத்துக்கு அமைவான அபினி உற்பத்தி, ஐக்கிய நாடுகள் அமைப்பினதும், வேறு அனைத்துலக ஒப்பந்தங்களினாலும் கட்டுப்படுத்தப்படுவதுடன், தனிப்பட்ட நாடுகளின் சட்ட அமுலாக்க அமைப்புக்களின் கடுமையான கண்காணிப்புக்கும் உட்படுகின்றது.

மேலதிக வாசிப்பிற்கு[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=போதைப்பொருள்&oldid=3675694" இலிருந்து மீள்விக்கப்பட்டது