பேக்கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேக்கான்
Pecan
Carya illinoinensis.jpg
கார்யா இல்லினாய்னெசிசு
Carya illinoinensis
மார்ட்டன் ஆர்பொரேட்டம் acc. 1082-39*3
Secure
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
பிரிவு: பூக்கும் நிலைத்திணை
மாக்னோலியோவை'ட்டா,
Magnoliophyta
வகுப்பு: Magnoliopsida
வரிசை: Fagales
குடும்பம்: Juglandaceae
பேரினம்: கார்யா(
இக்கரி, hickory வகை
இனம்: C. illinoinensis
இருசொற் பெயரீடு
Carya illinoinensis
(Wangenh.) K.Koch
Carya illinoinensis

பேக்கான் ('Pecan), அறிவியற் பெயர் கார்யா இல்லினாய்னென்சிசு (Carya illinoinensis), என்பது வட அமெரிக்காவில் தென்-நடுவான பகுதிகளிலும், மெக்சிக்கோவில் கோஅவிலா (Coahuila), அதன் தெற்கே ஃகாலிசுக்கோ (Jalisco) முதல் வேராகுரூசு (Veracruz) வரை இயற்கைச் சூழலில் காணப்படும் பெரிய மரம்[1][2]. அமெரிக்கக் கூட்டு நாடுகளில் அயோவா மாநிலத்தின் தெற்கும், இல்லினாய்சு, இந்தியானா மாநிலத்தில் கிழக்கு முதல் கென்ட்டக்கி மாநிலத்தின் மேற்கு வரையும், வட கரோலினா, தென் கரோலினா, டென்னிசியின் மேற்கு, சியார்ச்சியா மாநிலம், அலபாமா, மிசிசிப்பி,லூசியானா, டெக்ஃசாசு, ஓக்லகோமா, ஆர்கன்சா ஆகிய இடங்களில் காணலாம்.

பேக்கான் கொட்டையில் உள்ளேயுள்ள பருப்பு

பேக்கான் என்னும் சொல் வட அமெரிக்க முதற்குடிகளில் ஒன்றான அல்காக்கியன் மொழியில் இருந்து பெற்றது. அல்காக்கியன் மொழியில் பேக்கான் என்றால் "கொட்டையை உடைக்கக் கல் தேவைப்படும் வகை" என்று பொருள்.[3] (தமிழில் பேச்சு மொழியில் எளிதில் "பேக்க" முடியாத கொட்டை என்று புரிந்து கொள்ளலாம்)

மர இயல்புகள்[தொகு]

பேக்கான் மரத்தில் முற்றிய பேக்கான் கொட்டை

பேக்கான் மரம் பொதுவாக 20-40 மீ (65-130 அடி) உயரமும், எப்பொழுதாவது 44 மீ (145 அடி) உயரமும், வளரும் இலையுதிர் வகையான பெரிய மரம்.[2]; பொதுவாக இம்மரம் 12-23 மீ] (40-75 அடி) அகலமும், அடிமரத்தின் விட்டம் 2 மீ வரையும் கொண்டிருக்கும். ஒரு 10 ஆண்டு வளர்ந்த மரம் ஏறத்தாழ 5 மீட்டர் உயரம் நிற்கும். இதன் இலைகள் மாற்றடுக்கு முறையில் அமைந்துள்ளன. இலைகள் 40-70 செமீ நீளமுடன் இறகிலை (pinnately) அமைப்பில் 9-17 சிற்றிலைகளுடன், ஒவ்வொரு சிற்றிலையும் 5-12 செமீ நீளத்துடனும் 2-6 செமீ அகலத்துடனும் காணப்படும். பூக்கள் காற்று வீசலால் மகரந்த சேர்க்கை அடைகின்றன. பூக்கள் ஊசல் சரமாக காட்சியளிக்கும் ஊசற்பூங்கொத்து (காட்கின், catkin) வகையானது. இவ் ஊசல்சரப் பூங்கொத்து 18 செமீ நீளம் இருக்கும். பேக்கான் மரம், ஆண்பூக்களும் பெண்பூக்களும் தனித்தனியே இருக்கும் ஓரில்லப்பூ (monoecious) இனப்பெருக்க வகையைச் சேர்ந்த மரம். பெண் ஊசற்சரப் பூங்கொத்து சிறியதாகவும் 3-6 பூத்திரள் கொண்டதாகவும் இருக்கும். இதன் கனி (பழம்), ஒருபுறம் கூம்பிய நீளுருண்டை வடிவில் 2-6 செமீ நீளமும் 1.5-3 செமீ அகலமும் கொண்ட கொட்டை ஆகும். கொட்டைக்குள் இருக்கும் பருப்பு கரும்பழுப்பு நிறத்தில் இருக்கும் (படத்தைப் பார்க்கவும்), அதன் உறையான தோல்பகுதி சொரசொரப்பாக 3-4 மிமீ தடிப்புடன் முதலில் பச்சையாகவும், முதிர்ந்த பின்னர், பழுப்பு நிறமாகவும் மாறும் தன்மை உடையது. முதிரும் பொழுது நான்கு பகுதியாக பிளவுற்று உள்ளே இருக்கும் மெல்லிய ஓடுடைய கொட்டையை வெளியே காட்டும.[2][4][5][6] பேக்கான்கள் அது உள்ள இக்கரி (hickory) குடும்பத் தாவரங்களின் பிறவற்றைப்போலவே உண்மையான கொட்டை/பருப்பு அல்ல ஆனால் அவை ஒட்டுக்கனிகள் (டிரூப், drupe). கனியின் மேலுறை பூவின் புறவுறைத் (எக்ஃசோக்கார்ப், exocarp) திசுக்களாலும், பழக்கொட்டை அகவுறையாலும் (எண்டோக்கார்ப், endocarp) உருவானவை.

பேக்கான் மரத்தைப் பற்றி ஐரோப்பியர்கள் 16 ஆவது நூற்றாண்டில் அறிந்தார்கள் (எசுப்பானிய புதுப்புலம் காண்பர் கபேசா டி வாசா (Cabeza de Vaca) என்பவர் முதன்முதலாக குறிப்பிட்டார் என்பர்). எசுப்பானியர்கள் பேக்கான் மரத்தை ஐரோப்பாவிலும் ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் 16 நூற்றாண்டில் அறிமுகப்படுத்தி வளர்க்க வழி வகுத்தனர். 1792 இல் வில்லியம் பார்ட்ராம் (William Bartram) தன்னுடைய நிலைத்திணையியல் (தாவர) குறிப்புகள் அடங்கிய பயணம் (Travels) என்னும் நூலில் யுகுலான்சு எக்ஃசலாட்டா (Juglans exalata) என்னும் மரம் பற்றி எழுதியிருந்தார். இதுவே அமெரிக்க பேக்கான் மரம் என்று இன்று சிலர் கருதுகின்றார்கள் ஆனால் வேறு சிலர் அது இக்கரி வகையைச் சேர்ந்த கார்யா ஒவாட்டா ( "Carya ovata") என்று கருதுகின்றனர் [7]. பேக்கான் மரம் அமெரிக்காவைப் பிறப்பைடமாகக் கொண்டது. ஐக்கிய அமெரிக்க நாடுகளின் தோற்றுனர்களில் ஒருவரான தாமசு செவ்வர்சன் கார்யா இல்லினாய்னென்சிசு (இல்லினாய்சு கொட்டை) என்னும் பேக்கான் மரங்களை வர்ச்சீனியாவில் உள்ள தன் மான்ட்டிசெல்லோ (Montecello) வீட்டை ஒட்டிய தோட்டத்தில் நட்டார். சியார்ச் வாசிங்டன் தன்னுடைய குறிப்பேட்டில் தாமசு செவ்வர்சன் தனக்கு இல்லினாய்சு கொட்டை தந்தார் என்றும் எழுதியுள்ளார்.

ஆண் ஊசல்சரப் பூங்கொத்துகள் (catkins)

பேக்கான் கொட்டையின் பருப்பை உண்ணலாம். இது பலவகையான ஊட்டசத்துகள் கொண்டவை. உண்டபின் உட்கொள்ளும் இனிப்புவகைகளில் பேக்கான் பருப்புகள் பயன்படுகின்றன.

பேக்கான் மரம் நாற்காலிகள், மேசைகள், இருக்கைகள், மரப்பலகைகளால் பதித்த தரைகள் போன்ற மரப் பொருட்கள் செய்யவும் பயன்படுகின்றது. இறைச்சியைப் புகைமூட்டி சமைக்கும் பொழுதும் மணத்திற்காக பேக்கான் மரங்கள் பயன்படுகின்றன.

மரம் வளர் வேளாண்மை[தொகு]

பேக்கான்கள் புறவுறையுடனும் அவை இல்லாமலும்
டெக்சாசில் உள்ள அபியென் என்னும் ஊரில் உள்ள ஒரு பெரிய பேக்கான் மரம்.

பேக்கான்கள் மிக அண்மையில் வளர்ப்பு மரமாக வேளாண்மை செய்யும் பெருமர இனம். முன்னரே இயற்கையில் வளரும் பேக்கான் மரங்களைப் பற்றி அறிந்திருந்த போதும், 1880 வரை பேக்கான்கள் வணிக நோக்கில் வேளாண்மைக்காக வளர்க்கப்படவில்லை[8] இன்று அமெரிக்கக் கூட்டு நாடுகள் 80% முதல் 95% வரையிலான உலக மொத்த பேக்கான் உற்பத்தியைச் செய்கின்றது. ஆண்டுதோறும் 150-200 ஆயிரம் டன்கள் உற்பத்தி செய்கின்றன. பேக்கான் கொட்டைகளை அக்டோபர் மாத நடுவில் அறுவடை செய்கின்றனர். வரலாற்று நோக்கில் சியார்ச்சியா மாநிலமும் அதனை அடுத்து டெக்சாசு மாநிலமும், நியூ மெக்சிக்கோவும் ஓகலகாமாவும் முன்னணி விளைச்சல் நிலங்கள். அரிசோனாவிலும், அவாயிலும் கூட விளைவிக்கிறார்கள். அமெரிக்கக் கூட்டுநாடுகளுக்கு வெளியே, ஆத்திரேலியா, பிரேசில், சீனா, இசுரேல், மெக்சிகோ, பெரு, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலும் விளைவிக்கிறார்கள். அமெரிக்க வேளாண்மைத் துறை வரையறை செய்யும் வலுவான நிலம் என்னும் அளவுகோலில் 5 முதல் 9 வரையான நில வகைகளில், ஆனால் கோடையில் வெப்பமுடன் ஊரப்பதம் நிறைந்த இடங்களில், பேக்கான் மரங்கள் வளரும்.

பேக்கான் மரங்கள் உண்ணக்கூடிய பருப்புடைய பழக்கொட்டைகளை 300 ஆண்டுகளுக்கு மேலாகவும் கொடுக்கவல்லவை.

ஊட்டச்சத்துகள்[தொகு]

பேக்கான்கள்
ஊட்ட மதிப்பீடு - 100 g (3.5 oz)
ஆற்றல்2,891 kJ (691 kcal)
14 g
நார்ப்பொருள்10 g
72 g
நிறைவுற்றது6 g
ஒற்றைநிறைவுறாதது41 g
பல்நிறைவுறாதது22 g
புரதம்
9 g

பேக்கான்களில் புரதப் பொருட்களும் நிறைவுபெறா கொழுப்பியங்களும் நிறைய உள்ளன. 100 கிராம் பேக்கான் பருப்பில் அதிக நிறைவுபெறா ஒற்றைகொழுப்பியம் 41 கிராமும் நிறைவுபெறா பல்கொழுப்பியம் 22 கிராமும் உள்ளன. உண்ணும் கொழுப்புச் சத்துகள் நிறைவுபெறா கொழுப்பிய வகையாக இருப்பது நல்லது. பேக்கான் அதிகம் உள்ள உணவு உட்கொண்டால், பித்தக்கற்கள் உருவாகும் தீவாய்ப்புகள் பெண்களில் குறையும் என்று கண்டுள்ளனர்.[9] பேக்கான் பருப்புகளில் அதிகமான அளவு ஆக்சிசனாக்குத் தடுப்பிகள் இருப்பதாலும் தாவர இசுட்டெரால் ([phytosterol) இருப்பதாலும் "கெட்ட" கொலசுட்ரால் எனப்படும் குறைந்த அடர்த்தி கொழுப்பியப்புரததை (குறைந்த அடர்த்தி லிப்போபுரோட்டினை)க் குறைக்க உதவும் [10] பிணிதீர் மருத்துவ முறை ஆய்வுகளின் படி நியூட்ரிசன் ஆய்விதழில் (செப்டம்பர் 2001) வெளியான ஆய்வு முடிவின் படி நாள்தோறும் கையளவு பேக்கான் பருப்புகளை உண்டுவந்தால் "கெட்ட" கொலசுட்ரால் அளவு மருந்துண்டு குறையும் அளவுக்குக் குறையக்கூடும் [11] Research conducted at the University of Georgia has also confirmed that pecans contain plant sterols, which are known for their cholesterol-lowering ability.[12] அமெரிக்கக் கூட்டு நாடுகளின் உணவும் மருந்தும் கட்டுப்படுத்து நிறுவனம் (FDA) கீழ்க்காணும் வாசகத்தை ஆய்வடிப்படையில் ஏற்றுக் கொண்டுள்ளது, "அறிவியல் உண்மைசுட்டிகளின் படி, ஆனால் நிறுவப்படாத கருத்தின் படி, குறைந்த அளவு நிறைகொழுப்புகளும் குறைந்த அளவு கொலசுட்ராலும் உள்ள திட்ட சத்துணவுகளில் ஒரு பகுதியாக ஒவ்வொரு நாளும் 1.5 அவுன்சு பேக்கான் போன்ற பெரும்பாலான கொட்டைப்பருப்புகளை உண்டு வந்தால் இதயநோய் ஏற்படும் தீவாய்ப்புகள் குறையும்" ("Scientific evidence suggests, but does not prove, that eating 1.5 ounces per day of most nuts, such as pecans, as part of a diet low in saturated fat and cholesterol, may reduce the risk of heart disease."[13]

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. Germplasm Resources Information Network: wellandbin/npgs/html/taxon.pl?9253 Carya illinoinensis[தொடர்பிழந்த இணைப்பு]
  2. 2.0 2.1 2.2 Flora of North America: Carya illinoinensis
  3. "History of Pecans - National Pecan Shellers Association". 2011-10-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-07-01 அன்று பார்க்கப்பட்டது.
  4. Oklahoma Biological Survey: Carya illinoinensis
  5. Bioimages: Carya fruits பரணிடப்பட்டது 2004-08-19 at the வந்தவழி இயந்திரம்
  6. Collingwood, G. H., Brush, W. D., & Butches, D., eds. (1964). Knowing your trees. 2nd ed. American Forestry Association, Washington, DC.
  7. Hostory of the Pecan
  8. "Pecans at Texas A&M University". 2010-05-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-07-01 அன்று பார்க்கப்பட்டது.
  9. Frequent nut consumption and decreased risk of cholecystectomy in women - Tsai et al. 80 (1): 76 - American Journal of Clinical Nutrition
  10. "LLUAHSC - Spring 2002 Newscope". 2009-04-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-07-01 அன்று பார்க்கப்பட்டது.
  11. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". ஜூலை 27, 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. ஜூலை 1, 2009 அன்று பார்க்கப்பட்டது.
  12. Pecans: Cholesterol Lowering Source of Antioxidants, Fiber, Vitamin E, Protein
  13. "FDA OK's Nutty Heart Health Claim". 2008-05-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-07-01 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Carya illinoinensis
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேக்கான்&oldid=3679938" இருந்து மீள்விக்கப்பட்டது