புர்கான் கல்துன்

ஆள்கூறுகள்: 48°45′14″N 108°39′50″E / 48.753889°N 108.66375°E / 48.753889; 108.66375
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புர்கான் கல்துன்
Burkhan Khaldun mount3.jpg
புர்கான் கல்துன்
உயர்ந்த இடம்
உயரம்2,450 m (8,040 ft) Edit on Wikidata
ஆள்கூறு48°45′14″N 108°39′50″E / 48.753889°N 108.66375°E / 48.753889; 108.66375
புவியியல்
அமைவிடம்மங்கோலியா
மூலத் தொடர்கென்டீ மலைகள்
உலகப் பாரம்பரியக் களம்
புர்கான் கல்துன்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்

புர்கான் கல்துன் (சிரில்லிக்: Бурхан Халдун) என்பது கென்டீ மலைத்தொடரில் உள்ள ஒரு மலையாகும். இத்தொடர் வடகிழக்கு மங்கோலியாவின் கென்டீ மாகாணத்தில் அமைந்துள்ளது. இம்மலை அல்லது இதன் இடம் செங்கிஸ் கானின் பிறப்பிடமாக நம்பப்படுகிறது. மேலும் இங்குதான் அவர் புதைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. அவரது வெற்றிகரமான தளபதிகளுள் ஒருவரான சுபுதையின் பிறப்பிடமும் இதுதான்.

செங்கிஸ் கான் இதனை ஒரு சக்திவாய்ந்த மைல்கல்லாக மாற்றியதற்கு முன்பே இது மதரீதியாக வலுவான முக்கியத்துவத்தை கொண்டிருந்தது. இது செங்கிஸ் கானால் புனிதமானதாக ஆக்கப்பட்டதற்குப் பின் மங்கோலியாவின் மிகவும் புனிதமான மலையாகக் கருதப்படுகிறது. இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய களமாக ஜூலை 4, 2015 அன்று "பெரிய புர்கான் கல்துன் மலை மற்றும் அதன் சுற்றியுள்ள புனித நிலப்பகுதி" என்ற தலைப்பில் எழுதப்பட்டது. 1955 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தீர்மானத்தின் கீழ் இந்த மலையின் வழிபாடு முறைப்படுத்தப்பட்டு வருகிறது. இம்மலை ஒரு தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது. இதன் சுற்றுச்சூழல் மத்திய ஆசிய ஸ்டெப்பியில் உள்ள தாவரங்களின் தனித்துவமான பல்லுயிர்த் தன்மையைக் கொண்டுள்ளது. இதில் 50 வகையான உயிரினங்கள் மற்றும் 253 வகைப் பறவைகள் உள்ளன.

அமைவிடம்[தொகு]

புர்கான் கால்துன் கென்டீ மலைத்தொடரின் நடுவில் உள்ளது. இம்மலைத்தொடர் கான் கென்டீ பாதுகாக்கப்பட்ட பகுதியில் உள்ளது. [1] பாதுகாக்கப்பட்ட பகுதியின் பரப்பளவானது சுமார் 12,000 சதுர கிலோமீட்டர்கள் (4,600 சதுர மைல்கள்) ஆகும். இப்பகுதி 1992ல் உருவாக்கப்பட்டது. [2]

புவியியல்[தொகு]

புர்கான் கல்துன் என்பதற்குக் கடவுள் மலை என்று பொருள். இது கென்டீ கான் (கென்டீ மலைத்தொடரின் மன்னன்) என்றும் அழைக்கப்படுகிறது. [3]:12 இது வடகிழக்கு மங்கோலியாவின் கென்டீ மாகாணத்தில் உள்ள கென்டீ மலைகளில் ஒரு மலையாகும். [3] இது இப்பகுதியின் மிக உயர்ந்த மலையாகும். 2,362 மீட்டர் (7,749 அடி) உயரத்திற்கு உயர்ந்துள்ளது. பிறை வடிவில் உள்ளது. இது பல நதிகளின் பிறப்பிடமாகும்: ஆனன் மற்றும் கெர்லென் ஆறுகள் அமுர் ஆற்றுடன் இணைந்து பசிபிக் பெருங்கடலில் கலக்கின்றன; தூல் மற்றும் எரூ ஆறுகள் வடக்குநோக்கிச் சென்று செலெங்கே ஆற்றுடன் இணைந்து ஆர்க்டிக் பெருங்கடலில் கலக்கின்றன. இது தனிப்பட்ட பல்லுயிரிகளுடன் சிக்கலான சுற்றுச்சூழலில் உள்ளது. இச்சூழலானது சைபீரிய பனி நிலங்கள் மற்றும் பெரிய புல்வெளிகளின் இடைப்பகுதி எனப்படுகிறது. [4][3]:8

வரலாறு[தொகு]

செங்கிஸ் கான் (சிங்கிஸ் கான்) மெர்கிடுகளுக்கு (மங்கோலியர்களின் பிரதான பழங்குடி கூட்டமைப்புகளில் (கான்லிக்) ஒன்று) எதிரான போரில் தோற்றார். புர்கான் கல்துன் மலையின் புனிதமான இடங்களில் பாதுகாப்பு தேடியதன் மூலம் மரணத்திலிருந்து தப்பித்தார். ஒரு வயதான பெண் அவரையும் ஒரு சிலரையும் காப்பாற்றினார். மலை மற்றும் வானத்திலுள்ள சூரியன் மேல் உள்ள பயபக்தியின் அடையாளமாக, அவரைச் சுற்றிலும் உள்ள மலையின் சக்திகளுக்கு மரியாதை செலுத்தி, காற்றிலும், பூமியிலும் பால் தெளித்தார். அவர் தனது கயிறுத் துணியை அகற்றி கழுத்தைச் சுற்றிலும் அதை வைத்தார். இந்த நடவடிக்கை மூலம், அடையாளமாக அவர் மங்கோலிய மனிதனின் பெருமையைச் சரணடைய வைத்தார். தெய்வங்களுக்கு தன்னைச் சமர்ப்பித்தார்.

அவர் தனது தொப்பியை அகற்றினார். மார்பு முழுவதும் வருமாறு கையை குறுக்காக வைத்தார். ஒன்பது முறை மண்டியிட்டு சூரியனுக்கும், மலைக்கும் மரியாதை செய்து வழிபட்டார். அவர் மூன்று நாட்களுக்கு மலையில் பிரார்த்தனை செய்தார். இது அவருக்கு மலையுடன் ஆன்மீக ரீதியில் பலமான உறவை ஏற்படுத்தியது. இதில் இருந்து சிறப்புப் பலம் பெற்றார். [5][2] மங்கோலியர்களின் இரகசிய வரலாறில், பிற்காலத்தில் உலகை வென்ற செங்கிஸ் கான், தனது சொந்த விதியை நம்பி, இவ்வாறு சொன்னார்: [3]:41

செங்கிஸ்கான் கான் பின்னர் தனது படையெடுப்பை மங்கோலியப் பகுதியையும், மக்களையும் வலுவான சக்தியாக ஒருங்கிணைப்பதற்காகத் தொடங்கினார். புர்கான் கல்துனுக்கு அரசியல்ரீதியாக புனித மலை என்ற நிலையை அவர் கொடுத்தார். [3]:8 மங்கோலியர்களின் இரகசிய வரலாற்றில் இதைப்பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. யுனெஸ்கோ 1990ல் மங்கோலியர்களின் இரகசிய வரலாற்றை உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த இலக்கிய படைப்பு என அங்கீகரித்தது. இந்த வரலாறில் புர்கான் கல்துன் விரிவாக விவரிக்கப்பட்டு 27 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. இது மங்கோலியாவின் பாரம்பரியத்தில் மலையின் தனிதத்துவமான நிலையை குறிக்கிறது. [3]:10 இந்த வரலாறு இம்மலையின் நம்பகத்தன்மையை பின்வருமாறு கூறுகிறது: [3]:11

1955ம் ஆண்டின் ஜனாதிபதித் தீர்மானம் ஒரு தேசிய நினைவுச்சின்னமாக புர்கான் கல்துன் மலையின் வழிபாட்டை முறைப்படுத்தியது. பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையின்படி முக்கிய "சொர்க்கத்தின் ஓவூ (புனித கற்குவை)" இடத்தில் மலைக்கு சிறப்பு விசேஷ வழிபாடு அளிக்கப்படுகிறது; இது மாநில மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின் சில அதிகாரிகள், சாமன்கள் மற்றும் ஒரு சில பௌத்த லாமாக்களுக்கு (துறவிகள்) ஒதுக்கப்பட்டுள்ளது. [3]:14

உலக பாரம்பரிய நிலை[தொகு]

ஜூலை 4, 2015 அன்று, உலக பாரம்பரியக் குழுவின் 39 வது அமர்வில் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக "கிரேட் புர்கான் கல்துன் மலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள புனித நிலத்தோற்றம்" என்ற தலைப்பில் புர்கான் கல்துன் பதிவு செய்யப்பட்டது. இக்களம் 443,739 ஹெக்டேர் பரப்பளவில் (1,096,500 ஏக்கர்) உள்ளது. கூடுதல் மண்டலமாக 271,651 ஹெக்டர் (671,260 ஏக்கர்) பரப்பளவையும் இது கொண்டுள்ளது. தனித்துவமான கலாச்சாரப் பாரம்பரியமாக கடந்த பல்லாயிரம் ஆண்டுகளாக மலை மற்றும் இயற்கை வழிபாடு, உலகளாவ அறியப்பட்ட வரலாற்று மற்றும் இலக்கிய காவியத்தில் மகத்தான முக்கியத்துவம் ஆகியவற்றின் காரணமாக இது அளவுகோல் 4ன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. [1]

மதரீதியாக முக்கியத்துவம்[தொகு]

ஓர் ஓவூ

புர்கான் கல்துன் மங்கோலியாவில் உள்ள வேறு எந்த மலையுமே பெற்றிராத ஆன்மீக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. மங்கோலிய தேசத்தின் "தொட்டில்" என்ற அடையாள நிலையைப்பெற்று "மங்கோலியாவின் நாடோடி மக்களின் வாழ்க்கையின் பாரம்பரிய வழிகள் மற்றும் பாரம்பரியத்தை" குறிக்கும் வகையிலே உள்ளது. (உறுதி செய்யப்படாத) செங்கிஸ் கான் இங்கு பிறந்தார்; இம்மலையில் எங்கோ புதைக்கப்பட்டார் என்பது இதன் புனிதத்தன்மையை அதிகமாக்கியுள்ளது. குறிப்பாக, கான் இங்கே வழிபாடு செய்ததாலும், நாட்டின் மிக புனிதமான மலை என்று அறிவித்ததாலும்.[3]:9

இது மலையின் ஆன்மீக இயல்புக்கு நம்பகத்தன்மையைக் கொடுத்திருக்கிறது. இதன் விளைவாக, மூன்று புனிதமான பிரதான ஓவூக்கள் அல்லது கற்குவைகளுக்கு ஒரு குறிப்பிட்ட வழியில் வழக்கமான புனித யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வழிகளில் மங்கோலிய சாமன் வழிபாடு நடைபெறுகிறது. [3]:12 இக்குறிப்பிட்ட பாதை தனித்துவமானதாகும். இது குர்வன் கோரியுத் ("மூன்று தடை விதிக்கப்பட்ட இடங்கள்") வழியாக மலை உச்சியில் உள்ள முக்கிய சொர்க்கத்தின் ஓவூ, ஊத் மோத் ("நுழைவாயிலின் இரண்டு மரங்கள்"), போஸ்கோ தெங்கரீன் தவா ("சொர்க்கத்தின் தொடக்க வழி"), கெர்லென் நதி மற்றும் புனித போக்த் நதிகளின் நீர்ப்பிடிப்பு மற்றும் இறுதியாக பெலீன் ("தாழ்ந்த") ஓவூ ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.[3]:12

தாவரங்கள்[தொகு]

இம்மலைப்பகுதியில் காணப்படும் தாவரங்கள் மத்திய ஆசிய புல்வெளியைச் சேர்ந்தவையாகும். இவை தைகா என்ற ஊசியிலைக் காடுகளைக் கொண்டுள்ளன.[1] மங்கோலிய சிவப்புப்பு புத்தகத்தில் 28 தாவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றில் 15 மிக அரிதான இனங்களாகவும், மற்றும் 28 இனங்கள் அரிதான இனங்களாகவும் பட்டியலிடப்பட்டுள்ளன. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் பட்டியலிடப்பட்ட இனங்கள்: இரண்டு மிக அருகிய இனங்கள், நான்கு அருகிய இனங்கள், மற்றும் எட்டு அழிவாய்ப்பு இனங்கள்.[3]:18

விலங்குகள்[தொகு]

கென்டீ மாகாணத்தில் உள்ள புர்கான் கல்துன் மலையின் "50 இனம், 27 பேரினம் மற்றும் 6 வரிசை விலங்குகளில் 5 வகை பாலூட்டிகள்/பூச்சியுண்ணிகள், 4 வகை கைமோனோப்தெரா, 4 வகை லாகோமோர்பா, 19 வகை கொறிணிகள், 13 வகை வேட்டையாடி உண்ணும் விலங்குகள், 5 வகை குளம்புடைய விலங்குகள், 1 வகை ஊர்வன மற்றும் 253 வகை பறவைகள்" உள்ளன.[3]:20 மங்கோலிய சிவப்பு தகவல் புத்தகத்தின் படி மிகவும் அரிதான பாலூட்டும் இனங்கள் மஸ்க் மான் (மோசுஸ் மோசிபெரஸ்) மற்றும் மூஸ் (அல்செஸ் அல்செஸ்); மிக அரிதான பறவை இனங்கள் சைபீரியக் கொக்கு (க்ருஸ் லுவேகோசெரானுஸ்), பெரிய புள்ளி கழுகு (அக்குயிலா க்லங்கா), அதீனா மீன் கழுகு (கலியாயீடுஸ் லெவுகோரிபுஸ்), வெள்ளை பிடறி கொக்கு (க்ருஸ் விபியோ), முக்காடு கொக்கு (க்ருஸ் மொனச்சா); மீன் இனங்கள் அமுர் ஸ்டர்ஜின் (அசிபென்செர் ஸ்ரென்கி) ஆகியவையாகும்.[3]:22–23

உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Great Burkhan Khaldun Mountain and its surrounding sacred landscape". UNESCO Organization. 19 November 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 "Burkhan Khaldun". CNN. 4 November 2012. 19 நவம்பர் 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 November 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 3.11 3.12 3.13 "Great Burkhan Khaldun Mountain and its surrounding sacred landscape: Nomination (Amended text)" (pdf). UNESCO organization. 2015. 19 November 2015 அன்று பார்க்கப்பட்டது.
  4. Weatherford 2005, ப. 33.
  5. Weatherford 2005, ப. 34.

நூற்பட்டியல்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புர்கான்_கல்துன்&oldid=3564185" இருந்து மீள்விக்கப்பட்டது