தூல் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தூல் ஆறு (Туул гол)
தோலா
ஆறு
கோர்கி-டெரெல்ஜ் தேசிய பூங்கா வழியாக தூல் செல்கிறது
பெயர் மூலம்: மொங்கோலியம்: தூலக், "ஊடுருவிச் செல்லுதல்"
செல்லப்பெயர்: அரசி தூல்
நாடு  மங்கோலியா
ஐமக்குகள் கென்டீ, தோவ், புல்கன், செலெங்கே
கிளையாறுகள்
 - வலம் தெரெல்ச் ஆறு
நகரம் உலான் பத்தூர்
உற்பத்தியாகும் இடம் கான் கென்டீ பாதுகாக்கப்பட்ட பகுதி
 - அமைவிடம் எர்தின் மாவட்டம், தோவ் ஐமக்
கழிமுகம் ஒர்கோன் ஆறு
 - அமைவிடம் ஒர்கோந்தூல் மாவட்டம், செலெங்கே மாகாணம்
நீளம் 704 கிமீ (437 மைல்)
வடிநிலம் 49,840 கிமீ² (19,243 ச.மைல்)

தூல் ஆறு அல்லது துலா ஆறு (மொங்கோலியம்: Туул гол, சீனம்: 土拉河; பின்யின்: Tǔlā Hé) மத்திய மற்றும் வடக்கு மங்கோலியாவில் ஒரு ஆறு ஆகும். இது மங்கோலியர்களுக்கு புனிதமானதாகும். தூல் பொதுவாக மங்கோலிய மொழியில் கதான் (ராணி) தூல் என்று அழைக்கப்படுகிறது. இது 704 கிலோமீட்டர் (437 மைல்) நீளம் கொண்டது. இதன் வடிநிலத்தின் பரப்பளவு 49,840 சதுர கிலோ மீட்டர் (19,240 சதுர மைல்) ஆகும். சுயி அரசமரபின் அரசாங்க வரலாற்றுப் புத்தகத்தில் (கி.பி. 636) இது "துலுவோ ஆறு" என்றழைக்கப்படுகிறது. மங்கோலியர்களின் இரகசிய வரலாறு (கி.பி. 1240) அடிக்கடி "தூல் ஆற்றின் கருப்பு காடு" பற்றிக் குறிப்பிடுகிறது. இங்கு தான் வாங் கானின் அரண்மனை அமைந்திருந்தது. சீனாவில் இருந்து மங்கோலியப் பேரரசின் நீக்கம் மூலம் மிங் வம்சம் (கி.பி. 1368 - கி.பி. 1644) நிறுவப்பட்டது. பெய்ஜிங்கைக் கைப்பற்றிய பின், மிங் வம்சத்தை நிறுவிய கோங்வு பேரரசர் கி.பி. 1372ல் துலா ஆற்றில் மங்கோலியர்களைத் தோற்கடித்து அவர்களை ஒர்கோன் நதிக்கு திரும்பிச்செல்ல வைத்தார். கி.பி. 1414ல் மீண்டும் துலா ஆற்றில் ஒயிரடுகளைத் தோற்கடிக்க வேண்டிய அவசியம் கோங்வு பேரரசருக்கு ஏற்பட்டது.[1] கென்டீ மலைகளில் உள்ள கான்-கென்டேயின்-நுரூ இயற்கைப் பகுதியில் இந்த ஆறு உருவாகிறது. இப்பகுதி தோவ் ஐமக்கில் உள்ள எர்தின் மாவட்டத்தில் உள்ளது. [2] அங்கிருந்து தென்மேற்கில் பயணம் செய்யும் இந்த ஆறு உலான் பத்தூர் எல்லையை அடைகிறது. இதன் நீர் தலைநகரின் தெற்குப் பகுதி வழியே செல்கிறது. பெரிய சுழல்களாக மேற்குத் திசையிலே பயணிக்கிறது. புல்கன் ஐமக்கின் எல்லையைச் சந்திக்கும் போது வடக்கே திரும்புகிறது. அந்த எல்லையில் ஓடுகிறது. செலெங்கே ஐமக்கிற்குள் நுழைகிறது. ஒர்கோந்தூல் மாவட்டத்தின் மையப்பகுதியில் ஒர்கோன் ஆற்றில் கலக்கிறது. [3]

ஒர்கோன் ஆறு செலெங்கே ஆற்றில் கலக்கிறது. செலெங்கே ஆறு உருசியாவுக்குள் நுழைந்து பைக்கால் ஏரியில் கலக்கிறது. தூல் ஆறு மேலும் குசதைன் நுரூ தேசிய பூங்கா பக்கத்தில் பாய்கிறது. இது நவம்பர் நடுப்பகுதியில் இருந்து ஏப்ரல் நடுப்பகுதி வரை பொதுவாக உறைந்து காணப்படுகிறது. தூல் ஆற்றின் அருகில் வில்லோ காடுகள் வளருகின்றன. இந்த ஆறு அருகிய இனமான ஸ்டர்ஜன் மீன்களின் இருப்பிடமாக உள்ளது. [4] தற்போது இந்த ஆறு மாசுபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளது. உலான் பத்தூரின் மத்திய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சாமர் பகுதியில் தங்க சுரங்கத்தால் ஏற்படும் கனரக கனிம மற்றும் வண்டல் மாசுபாடு ஆகியவற்றால் இது பாதிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, ஆற்றின் அருகே குடியேறும் மக்களின் தொடர் குடியேற்றமானது நீரின் தரம் சீரழியக் காரணமாக இருக்கலாம்.

விவரிப்புகள்[தொகு]

மங்கோலியாவிற்குப் பல முறை பயணம் செய்த பிரஞ்சு மத போதகர் சீன்-ஃபிரான்கோயிசு கெர்பில்லன், ஆகத்து 3, 1698 தேதியிட்ட அவரது பத்திரிகை இடுகையில் இந்த ஆற்றைப் பற்றிய விளக்கத்தை அளித்துள்ளார்:

இந்த ஆறு (துலா) கென்டய் மலைகளில், கெர்லோன் ஆற்றிலிருந்து 120 லி (0.5 கி.மீ.க்குச் சமமான ஒரு சீன அளவீடு) தொலைவில் தனது மூலத்தை எடுக்கிறது. முதலில் இது தென்மேற்கில் பாய்கிறது. பின்னர் ஒரு மலையைக் (தெற்கு உலான் பத்தூரில் உள்ள போக்த் கான் ஊல் மலை) கடந்து மேற்கு நோக்கி ஒரு நேரடி திருப்பத்தை ஏற்படுத்துகிறது. நாங்கள் முகாமிட்டுள்ள பாதையானது சிறிய தெரெல்கி ஆறு துல ஆற்றுடன் கலக்கும் பகுதிக்கு மேற்கில் அமைந்துள்ளது. இது கெர்லோன் ஆற்றைவிட மிகப்பெரியதாகும். இதன் நீரோடை அசாதாரணமான தெளிவானது மற்றும் ஆறானது கற்களின் படுகையில் பாய்கிறது. சமவெளியில் இதன் கரைகளைப்போல் அழகானவை எதுவும் இல்லை. இதன் கரைகள் அழகிய காடுகளால் மூடப்பட்டுள்ளன. ஆறு பல கிளைகளாகப் பிரிந்து மறுபடியும் இணைகிறது. இதன் காரணமாக சில சிறிய தீவுகளை உருவாக்குகிறது. இத்தீவுகளில் மிகவும் அடர்த்தியான மற்றும் புதர் நிறைந்த பல்வேறு மரங்கள் நிறைந்திருகின்றன. இம்மரங்கள் உலகிலேயே மிக அழகானவையாகும். இம்மரங்கள் நாங்கள் இருந்த பெரிய வெப்பத்தில் இனிமையான புத்துணர்ச்சியை வழங்கின. இந்த ஆற்றின் நீரானது மிக விரைவாக ஓடுகிறது. மரங்களைத் தாண்டி, இரு பக்கங்களிலும் ஏராளமாக வளமான புல்வெளியைக் காணலாம். ஒரு வார்த்தையில் கூற வேண்டுமானால், இது டார்ட்டரியில் எங்கள் பயணத்தின்போது பார்த்த மண்டலங்களிலேயே நினைவில் வரக்கூடிய மிகவும் அழகான மண்டலம் ஆகும்.[5]

மான்சியர் டி போர்போவுலோன் (பிரான்சு மந்திரி) கி.பி. 1860ல் இந்த ஆற்றிற்கு விஜயம் செய்தார்:

மான்சியர் டி போர்போவுலோன், மங்கோலியத் தலைநகரத்தின் வழியே பாதுகாப்பின்றியே பயணம் செய்ய விரும்பினார், உருசியப் பகுதியைக் கடந்து அவரது வழியில் தோவுலா ஆற்றின் கரைகளுக்குச் சென்றார்...மான்சியர் டி போர்போவுலோன் தோவுலா ஆற்றின் கரைகளுக்கு வந்தார், ஒரு பிர்ச் மரத்தின் கீழ் இருந்த மண் மேடு மீது அமர்ந்தார்: இந்த அற்புதமான இயற்கை வனப்புடைய நிலத்திற்கு முன்னால் மெய்மறந்த இன்பத்துடன், சிந்திக்க மனிதனுக்கு கொடுக்கப்பட்ட மிக அழகான ஒன்றுடன், இந்த அழகான நதியின் தூய நீர் அவரது காலடியில் மெல்லொலி எழுப்ப மகிழ்ச்சியுடன், பேரார்வத்துடன் சந்தோஷமடைந்தார், அவர் வறண்ட மற்றும் சலிப்பான பாலைவனங்களைக் கடந்த பிறகு, இந்த செழிப்பான மற்றும் அழகிய இயற்கையின் வளமையில் மகிழ்ந்தார். அவர் ஒரு சுவையான யோசனையில் மூழ்கியிருந்தார், அப்போது அவருக்குப் பின்னால் வார்த்தைகளின் குழப்பமான சத்தத்தைக் கேட்டார்: அது உயர் வர்க்க மங்கோலியர்கள், தைஜி அல்லது மதிப்புக்குரியவர்கள், அவர்கள் பல்வேறு அறிகுறிகள் மூலம் அவருக்குப் புரிய வைக்க முயற்சிகள் செய்தனர், அந்த நதியைக் கடக்க விரும்பியிருந்தால், அவர்களின் குதிரைகள் மீது மகிழ்ச்சியுடன் அவரை ஏற்றியிருப்பார்கள்.[6]

ஒர்கோன் கல்வெட்டுகள், ஒகுஸ் துருக்கியர்கள் தூல் ஆற்றுக்குப் பக்கவாட்டில் தாதர்களுடன் வசித்து வந்தார்கள் என்று கூறுகின்றன. ஒகுஸ் துருக்கியர்கள் இந்த இடத்திலிருந்து 8ம் நூற்றாண்டில் மேற்குப் பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

வெளி இணைப்புகள்[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. Chase, Kenneth Warren (2003). Firearms: A Global History to 1700. Cambridge University Press. பக். 41–47. https://archive.org/details/firearmsglobalhi0000chas. 
  2. "Russian army map "100k--m49-121"". Maps for the world. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-01-06.
  3. "Russian army map "100k--m48-114"". Maps for the world. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-01-06.
  4. "Mining and Mineral Development Management Policy in the Selenga River Watershed in proceedings of: Science for Watershed Conservation: Multidisciplinary Approaches for Natural Resource Management Conference" (PDF). United States Geological Survey (USGS), Institute of General and Experimental Biology, Siberian Division -Russian Academy of Sciences, and Mongolian Academy of Sciences. p. 11. பார்க்கப்பட்ட நாள் 2015-01-06.
  5. Histoire generale des voyages, 1753, p.59
  6. Voyage en Chine et en Mongolie de M. de Bourboulon et de Madame de Bourboulon 1860-1861, Paris, 1866, p.362
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூல்_ஆறு&oldid=3794309" இலிருந்து மீள்விக்கப்பட்டது