புனித அந்திரேயா தேவாலயம் (சென்னை)

ஆள்கூறுகள்: 13°4′47.28″N 80°15′49.32″E / 13.0798000°N 80.2637000°E / 13.0798000; 80.2637000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(புனித அந்திரேயா கோவில் (சென்னை) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
புனித அந்திரேயா தேவாலயம், சென்னை
St. Andrew’s Church (The Kirk)
புனித அந்திரேயா தேவாலயம்
அமைவிடம்சென்னை, தமிழ் நாடு
நாடுஇந்தியா
சமயப் பிரிவுபிரெஸ்பிட்டேரியன்
வலைத்தளம்www.thekirk.in
Architecture
செயல்நிலைசெயல்பாட்டில் உள்ளது
பாணிபல்லேடியன் கலைப்பாணி
நிறைவுற்றது25 பெப்ருவரி 1821
நிருவாகம்
Presbyteryஅருள்திரு பீட்டர் பிரான்சிஸ்

புனித அந்திரேயா தேவாலயம் (St. Andrew's Church) சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலை எழும்பூரில் அமைந்து, எசுக்காத்துலாந்து பிரெஸ்பிட்டேரியன் சபை உறுப்பினருக்கு வழிபாட்டு இடமாகச் செயல்பட்டுவரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க கிறித்தவ தேவாலயம் ஆகும்.

இத்தேவாலயம் கட்டட வேலை 1818ஆம் ஆண்டு ஏப்பிரல் 6ஆம் நாள் தொடங்கியது. கோவிலின் அர்ச்சிப்புவிழா 1821இல் நிகழ்ந்தது.[1]

சமயப் பிரிவு[தொகு]

சென்னையில் அமைந்துள்ள புனித அந்திரேயா தேவாலயம் எசுக்காத்துலாந்து நாட்டோடு நெருங்கிய தொடர்புடையது. அது "கோவில்" எனப் பொருள்படும் Kirk என்னும் எசுக்காத்து மொழிச் சொல்லாலும் அறியப்படுகிறது.

சென்னையில், கிழக்கிந்தியக் கம்பனியின் பிரித்தானியப் படைவீரர் பிரிவில் இருந்த எசுக்காத்துலாந்து நாட்டவர் வழிபடும் இடமாக டாக்டர் ஜான் ஆலன் (Dr. John Allan) தலைமையில் இத்தேவாலயம் தொடங்கியது. அவரே அக்கோவிலின் முதல் மறைப்பணியாளர் ஆனார்.

கட்டடக் கலைஞர் பெயர் மேஜர் தாமஸ் தே ஹாவிலாண்ட் (Major Thomas de Havilland). இத்தேவாலயம் எசுக்காத்துலாந்து பிரெஸ்பிட்டேரிய (Scottish Presbyterian) கிறித்தவ மரபைச் சார்ந்தது. அதன் வழிபாட்டு அமைப்பும் நிர்வாகமும் பிரெஸ்பிட்டேரிய மரபின்படியே உள்ளன. இருப்பினும், சமயக் கோட்பாடுகளில் ஒத்த பிற கிறித்தவ சபைகளின் வழிபாட்டுமுறைகளும் இக்கோவிலில் ஏற்கப்படுகின்றன.[2]

கோவிலின் வரலாற்றுச் சிறப்புகள்[தொகு]

இத்தேவாலயம் அமைந்திருக்கும் இடம் சதுப்பு நிலமாக இருந்தது. சுமார் 7 ஏக்கர் நிலத்தை அக்கால விலைப்படி 4000 பவுண்டுகள் கொடுத்து குறைந்த விலைக்கு வாங்கினராம். அதை உறுதிப்படுத்தி, தேவாலயத்திற்கு அடித்தளம் இடுவதற்காக இந்திய மரபில் சுமார் 300 கிணறுகள் 26 அடி தோண்டப்பட்டு, சல்லி, மணல் ஆகியவற்றால் நிரப்பப்பட்டன. அவற்றிற்கு மேலே கோவிலின் அடித்தளம் கட்டப்பட்டது.[3]

தேவாலயக் கட்டடத்திற்கு மாதிரியாக இருந்தது இலண்டனில் உள்ள புனித மார்ட்டின் தேவாலயம் (St. Martin-in-the-field) ஆகும். குறிப்பாக, வட்ட வடிவ உட்பகுதி இத்தேவாலயத்தின் சிறப்புக் கூறு. தேவாலயத்திற்கு அடிக்கல் இட்டபோது, அதன் கீழே செப்புத்தகடு ஒன்று வைக்கப்பட்டது. அதில் ஒரு புறம் ஆங்கிலத்திலும் மறுபுறம் இலத்தீனிலும் அடித்தளமிட்ட தகவல்கள் பொறிக்கப்பட்டிருந்தன. செப்புத்தகட்டின் கீழே ஒரு குழியில் இறுக்கமாக மூடப்பட்ட ஒரு குப்பியின் உள்ளே பிரித்தானிய மற்றும் இந்திய நாணயங்களும், இலத்தீன், ஆங்கிலம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட சுவடிகளும் வைக்கப்பட்டன. அச்சுவடிகளில் செப்புத்தகட்டில் செதுக்கப்பட்ட செய்தி எழுதப்பட்டிருந்தது.

தேவாலயத்தின் வட்ட வடிவ உட்பக்கம் 83 அடி குறுக்களவு கொண்டுள்ளது. அதற்கு மேலே எழுகின்ற வட்டவடிவ குவிமாடம் சிறப்பு வாய்ந்தது. முழுவதும் சுண்ணம், சாந்து, கல் கொண்டு அமைந்த அக்குவிமாடத்தில் மரம் பயன்படுத்தப்படவில்லை. அதன் குறுக்களவு 51½ அடி, உயரம் 24 அடி. அம்மாடத்தைத் தாங்குகின்ற 16 பெருந்தூண்கள் ஒவ்வொன்றும் 26 அடி உயரமும் 2½ அடி குறுக்களவும் கொண்டன. குவிமாடத்தின் உட்புறம் இளநீல வண்ணம் பூசப்பட்டது.

கோபுரம்[தொகு]

கோவிலின் வட்ட வடிவ நடுப்பகுதிக்குக் கிழக்கும் மேற்கும் இரு சதுர வடிவ நீட்சிகள் உள்ளன. கிழக்கு நீட்சிக்கு அருகே ஒரு மாபெரும் கோபுரம் எழுகிறது. அது நான்கு அடுக்குகளைக் கொண்டுள்ளது. அதன் உயரம் தரைமட்டத்திலிருந்து 166½ அடி. அதன் உச்சியில் உள்ள காற்றுத் திசைகாட்டி மேலும் 3 ½ அடி கூட்டுகிறது.

1820 மே மாதத் தொடக்கத்தில் கோபுரம் கட்டி முடிக்கப்பட்டது. அதைக் கட்டிய மூன்றாம் நாளில் கோரமான புயல் 30 மணி நேரம் வீசியது. அதன் விளைவாக 16 அங்குலம் மழையும் கொட்டியது. அப்படியிருந்தும் புதிய கோபுரக் கட்டடம் யாதொரு சேதமும் அடையவில்லை என்பதிலிருந்து அதன் உறுதியான கட்டமைப்பு தெரிகிறது. கோவிலின் உள்ளே தங்கியிருந்த மறைப்பணியாளர் ஜான் ஆலன் புயல் முடிந்து ஓயும் வரை கோவிலை விட்டு வெளியே வர முடியாமற் போயிற்றாம்.

கோபுரத்தின் முற்பகுதியில் தேவாலயத்தின் முகப்பு உள்ளது. அங்கே 57 அடி அகலம் உடைய நுழைவாயில் பகுதி உள்ளது. சுற்றிலும் உயர்ந்த தூண்கள் உள்ளன.

தேவாலய மணி[தொகு]

கட்டடக் கலைஞர் தே ஹாவில்லாண்ட் புனித அந்திரேயா தேவாலயத்திற்காகப் பெரியதொரு மணி வார்த்தெடுக்க ஏற்பாடு செய்தார்.சென்னையிலேயே வார்த்தெடுக்கப்பட்ட மிகப் பெரிய அத்தேவாலய மணி 4 அடி குறுக்களவுடையது. அதோடு வேறு சிறிய மணிகள் இரண்டும் வார்த்தெடுக்கப்பட்டன.

அந்த மணிகள் முதன்முறையாக ஒலித்தது மறைப்பணியாளர் ஜான் ஆலன் இறந்தபோது ஆகும். அதைச் சிலர் நல்ல சகுனமாகக் கருதாததால் பெரிய மணி கோவிலிலிருந்து அகற்றப்பட்டது. தே ஹாவில்லாண்ட் நேரடியாக மேற்பார்வை பார்த்த அத்தேவாலயக் கட்டடப் பணிக்கு மொத்தம் 20 ஆயிரம் பவுண்டுகள் செலவாயின. அதில் தேவாலய மணி தொடர்பான சர்ச்சை மட்டுமே அவர் பெயருக்குக் களங்கமாக அமைந்தது. ஆனால் சென்னை நகரில் புதியதொரு சிறப்பான கட்டடம் உருவானதை யாரும் குறைகூறவில்லை.

சென்னை கிறித்தவக் கல்லூரிக்கு அடித்தளம் இடப்படல்[தொகு]

இன்று புகழ்பெற்ற கல்வி நிறுவனமாக விளங்குகின்ற சென்னை கிறித்தவக் கல்லூரி (Madras Christian College) எழுவதற்கான விதை இங்குதான் ஊன்றப்பட்டது. மறைப்பணியாளர் ஜான் ஆன்டர்சன் என்பவர் 56 புரட்டஸ்தாந்து மாணவர்களுக்குக் கல்வி புகட்ட ஒரு கல்விக்கூடத்தைத் தொடங்கினார். அது வளர்ந்து, சிறந்த கல்லூரி ஆயிற்று.

விருதுவாக்கு[தொகு]

"ஆண்டவரும் மீட்பருமான இயேசு கிறித்துவுக்குக் கீழ்ப்படிகின்ற சீடர்களின் குழு" என்பதே இத்தேவாலயம் சமூகத்தின் விருதுவாக்கு ஆகும்.

வழிபாட்டு நேரங்கள்[தொகு]

வழிபாட்டு நிகழ்ச்சி (Worship Services):
ஒவ்வொரு ஞாயிறும்
காலை 7 மணி; 9 மணி (முதன்மை வழிபாடு); மாலை 6 மணி.

  • அனைத்து வழிபாட்டு நிகழ்ச்சிகளும் ஆங்கிலத்தில் நடைபெறும்.

நற்கருணை வழிபாடு (Holy Communion Services):
முதல் ஞாயிறு: காலை 7 மணி; காலை 9 மணி.
மூன்றாம் ஞாயிறு: மாலை 6 மணி.
மாதத்தின் முதல் நாள்: காலை 6:30 மணி.

நில உரிமைப் பிரச்சினை[தொகு]

புனித அந்திரேயா தேவாலயம் வகை யாருக்கு உரியது என்பது குறித்து நெடுநாளைய சர்ச்சை உள்ளது. பிரித்தானியர் இந்தியாவை விட்டுச் சென்ற வேளையில் இத்தேவாலயம் வகை, சட்டப்படி தனி உரிமை பெற்றது. 1969இல் இந்திய அரசு அவ்வுரிமையை உறுதிப்படுத்தியது.

இதற்கிடையில், இந்திய புரட்டஸ்தாந்து சபைகள் மிகப் பல ஒன்றிணைந்து தென்னிந்தியத் திருச்சபை 1947இல் உருவானது. அந்த ஒன்றியத்தில் பிரெஸ்பிட்டேரியன் சபை 1959இல் இணைந்தது. அதன் விளைவாக புனித அந்திரேயா கோவிலும் சொத்தும் தென்னிந்தியத் திருச்சபைக்கு உரிமையாயின என்பது தென்னிந்தியத் திருச்சபையின் வாதம். அதற்கு எதிராக, புனித அந்திரேயா தேவாலயம் தனி உரிமை கொண்டது என்பது தேவாலயம் தரப்பினர் வாதம்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தேவாலயம் மற்றும் தேவாலயச் சொத்தின் உடைமையுரிமை இந்திய அரசின் பாதுகாப்புத் துறையைச் சாரும் என்றும், அது தென்னிந்தியத் திருச்சபைக்குக் குத்தகையாகக் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் தீர்ப்பளித்தது.[4]

தென்னிந்தியத் திருச்சபை என்னும் ஒன்றியத்தில் ஆங்கிலிக்கன், மெதடிஸ்டு, பிரெஸ்பிட்டேரியன் மற்றும் கான்ங்கிரகேஷனல் சபைகள் ஒன்றிணைந்தன. தமிழ் நாடு, கேரளம், கர்னாடகம் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய தென்னிந்திய மாநிலங்களும், புதுச்சேரியும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளும் இத்திருச்சபை அமைப்பின் கீழ் வரும். "தென்னிந்தியத் திருச்சபை அறக்கட்டளைக் கழகம்" (Church of South India Trust Association - CSITA) என்னும் சட்டப்பூர்வ அமைப்பு அத்திருச்சபையின் சொத்துரிமையைக் காக்க உருவாக்கப்பட்டது.

படத் தொகுப்பு[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "புனித அந்திரேயா கோவில், சென்னை".
  2. "புனித அந்திரேயா கோவில், சென்னை".
  3. "உறுதியான அடித்தளம்". Archived from the original on 2010-11-29. பார்க்கப்பட்ட நாள் 2012-11-28.
  4. நீதிமன்ற வழக்கு