உள்ளடக்கத்துக்குச் செல்

நோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பிணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
காசநோய் ஏற்படுவதற்கு முதன்மைக் காரணியாக உள்ள மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ் தொற்று பாக்டீரியாவின் அணுக்கற்றை நுண்வரைவிப் படம்

நோய் (வியாதி, பிணி) என்பது உயிரினங்களின் உடலிலோ, மனதிலோ ஏற்படும் அசாதாரண நிலைகளைக் குறிக்கும். இதனை நலமற்ற நிலை, சீரழிந்த நிலை எனலாம். நோய் மனித வாழ்வின் நிலையான துன்பங்களில் ஒன்று. நோய் பொதுவாக அறிகுறிகள் (signs) மற்றும் உணர்குறிகளுடன் (symptoms) தொடர்புடைய மருத்துவ நிலை எனலாம்[1]. நோய் ஏற்படும்போது, நோய்வாய்ப்படும் உயிரினம் சில அசெளகரியங்களை, சீரற்ற நிலையை அல்லது அசாதாரண நிலையை உணர்தல் உணர்குறி என்றும், மருத்துவருக்குத் தெரியக்கூடிய அசாதாரண நிலைகள் அறிகுறிகள் எனவும் அழைக்கப்படுகின்றன.

நோயானது உள்ளகக் காரணிகளாலும், வெளிக் காரணிகளாலும் தோற்றுவிக்கப்படலாம். நோய்க்காரணிகளால் ஏற்படக்கூடிய தொற்றுநோய்கள் வெளிக்காரணிகளால் ஏற்படும் நோய்களாகும். உடலின் செயற்பிறழ்வுகளால் ஏற்படும் தன்னெதிர்ப்பு நோய்கள் உள்ளகக்காரணிகளால் ஏற்படும் நோய்களாகும்.

வலியை உண்டாக்கும் நிலைகள், உடலின் செயற்பிறழ்வுகள், கடுந்துன்பம் ஏற்படுத்துபவை, சமூகப் பிரச்சனைகளை உண்டாக்குபவை, ஒருவருக்கு மரணத்தை விளைவிக்கக்கூடியவை அல்லது நோய்வாய்ப்பட்டவருடன் உள்ளத் தொடர்பால் பிறருக்கு மரணத்திற்கு இணையாக நிகழும் பிரச்சனைகள் என மனிதர்களில் நோய் என்பது விரிவானதொரு பொருளில் உபயோகப்படுத்தப்படுகிறது. இத்தகு விரிவானதொரு பொருளில் சிலநேரங்களில், பிற சூழல்கள் அல்லது நோக்கங்களுக்காகத் தனித்துவமாக வகைப்படுத்தக்கூடியவையாக உள்ள காயங்கள், உடல் ஊனங்கள், நலச் சீர்கேடுகள், நோய்க்கூட்டறிகுறிகள், நோய்த்தொற்றுகள், தனிப்பட்ட நோய் உணர்குறிகள், பொது நிலையிலிருந்து விலகிய நடத்தைகள், மனித வடிவம் மற்றும் செயல்களில் உள்ள அசாதாரணமான வேறுபாடுகள் ஆகிய அனைத்தையும் நோய் என்றே குறிப்பிடுகின்றோம். சாதாரணமாக பிணிகள் உடலளவில் மட்டுமல்லாது உணர்வுப்பூர்வமாகவும் மனிதர்களைப் பாதிக்கின்றன. பலவிதமான வியாதிகளுடன் நோய்வாய்ப்பட்டு வாழ்வது வாழ்வைப் பற்றிய ஒருவரின் கண்ணோட்டத்தினை, மனோபாவத்தினை முற்றிலுமாக மாற்றியமைக்கக்கூடியதாகும்.

நோய்வாய்ப்பட்டு இறப்பது இயற்கையான மரணமாகக் கருதப்படுகிறது. நோய்களை நோய் விளைவிக்கின்றவை, குறைபாட்டு நோய், பரம்பரை வியாதி, உடலியக்கப் பிறழ்வுகள் என நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். நோய்களைத் தொற்று நோய்கள், தொற்றா நோய்கள் என்றும் பிரிக்கலாம். மனிதர்களில் கொடிய வியாதியாகக் குருதியோட்டத்தைத் தடுக்கும் வளி குறைபாட்டு இதயநோயையும் (ischemic heart disease)[2], இதற்கு அடுத்ததாகப் பெருமூளை குருதிக்குழல் நோய் (cerebrovascular disease), கீழ் சுவாசக்குழாய்த் தொற்றுகள் (lower respiratory infections) ஆகியவற்றைக் கூறலாம்[3].

சொல்லியல்[தொகு]

கோட்பாடுகள்[தொகு]

நோய், பிறழ்வுகள், நோயுற்ற விகிதம், உடல்நலக் குறைவு ஆகிய சொற்கள் ஒன்றுக்குப் பதில் இன்னொன்றாகப் பல இடங்களில் வேறுபடுத்தப்படாமல் உபயோகப்படுத்தப்படுகின்றன[4]. சில இடங்களில், குறிப்பிட்ட சொற்களைப் பயன்படுத்துவது விரும்பப்படுகிறது.

நோய்
சீரான உடல் நிலையைப் பாதிக்கின்ற, இயல்பான உடல், உள்ளப் பணிகளை முடக்கும் எந்தவொரு நிலைமையையும் பொதுவாக "நோய்" என்கிறோம்[5]. பொதுவாக, நோய் என்பது நோய்த்தொற்றுகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. மருத்துவச் சோதனைகளில் வெளிப்படையாகத் தெரியும் இத்தகு நோய்த்தொற்றுகள், தீ நுண்மங்கள், பாக்டீரியா, பூஞ்சை, மூத்தவிலங்கு, பலசெல் உயிரிகள் (multicellular organisms), பிறழ்வானப் புரதங்களான புரதப்பீழைகள் ஆகிய நுண்ணுயிரி நோய்க்காரணிகளால் உண்டாகின்றன. மருத்துவச் சோதனைகளில் வெளிப்படையாகத் தெரியாத அல்லது இயல்பான செயற்பாடுகளை முடக்காத தொற்றுகள் இருப்பது (உதாரணமாக, குடலில் உள்ள பாக்டீரியா, ஈஸ்டுகள்) நோய் என்று கருதப்படுவதில்லை. ஆனால், நோய்வளர் காலத்தில் நோய்க்குறிகளை உண்டாக்காத, பின்னர் நோய் அறிகுறிகளைத் தோற்றுவிக்கக்கூடிய நோய்த்தொற்றுகளைச் சாதாரணமாக நோய் என்றே அழைக்கிறோம். பிற நோய்ககளான புற்றுநோய், இதயக் குழலிய நோய், மரபணுப் பிறழ்ச்சி ஆகியவை தொற்றாநோய்கள் என்று அழைக்கப்படுகின்றன.
உடல்நலக் குறைவு
உடல்நலக் குறைவு (illness), நோயுணர்வு (sickness) என்னும் சொற்கள் "நோய்" என்பதற்கு இணையானப் பெயர்களாகப் பொதுவாக வழங்கப்படுகின்றன[6] என்றாலும், இப்பெயர்கள் சிலவேளைகளில் நோயாளிகள் தங்களுக்கேற்பட்ட நோயினைக் குறித்த தனிப்பட்ட அனுபவத்தைக் குறிப்பிட உபயோகப்படுத்தப்படுகின்றன[7][8]. இதன்படி, உடல்நலக் குறைவில்லாமல் ஒருவர் நோய்வாய்ப்பட்டிருக்க முடியும் (உதாரணமாக, நோய்க்குறிகளற்ற மருத்துவ நிலையைக் கூறலாம்). அதேபோல, நோய்வாய்ப்படாமல் உடல்நலக் குறைவுடன் (உதாரணமாக, நோயற்ற நிலையை நோயுற்றதாக ஒருவர் எண்ணும் நிலைமை) இருக்க முடியும். உடல்நலக் குறைவு என்பது பெருமளவு நோய்த்தொற்றுகளினால் ஏற்படுவதில்லை. ஆனால், நம் உடலில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகள் (எதிர்வினைகள்-நோயுணர்வு நிலை) நோய்த்தொற்றுகளை நீக்க உதவுகிறது. சோம்பல், மனத்தளர்ச்சி, பசியின்மை, தூக்கக்கலக்கம், மிகை வலியுணர்வு (hyperalgesia), ஒருமுகப்படுத்துவதில் சிக்கல்கள் போன்றவற்றை உடல்நலக் குறைபாடுகள் எனக் கூறலாம்[9][10][11].
பெறப்பட்ட நோய்கள் (Acquired disease)
ஒருவரின் வாழ்நாளில் ஏதாவது ஒரு கட்டத்தில் தொற்றிய நோய் அல்லது பிறவி நோயாக (congenital diseases) தொடரும் நோய்களை எதிர்த்து வாழும் நோய்நிலையாகும்.பெறப்பட்ட என்பது "தொற்று வழியாக பெறப்பட்டது" அல்லது ஒட்டுவாரரொட்டி என்பதைக் குறிப்பதாகும்.இது இரண்டாம் நிலை நோயைக் குறிக்கும். ஆனால் பெறப்பட்ட நோய் முதன்மை நோயாக இருக்கலாம்.
தீவிர நோய் நிலை (Acute disease)
கடுமையான நோய் நிலையையும் குறிக்கிறது.
கடுஞ் சீரழிவுநோய் (Chronic disease)
நீண்ட காலப்பிரச்சினையுள்ள நோய்
பிறவி நோய்கள் (Congenital disease )
பிறப்பிலேயே இருக்கும் நோய். இது பெரும்பாலும், மரபணு மற்றும் மரபுவழியாகப் பரவுவதாகும். இது எச்.ஐ.வி / எய்ட்ஸ் போன்ற நோய்த்தொற்றுள்ள தாயிடமிருந்து குழந்தைக்கு நேரடியாக பரவுதல் போன்ற காரணங்களாக இருக்கலாம்.
மரபியல் நோய்கள் (Genetic Disease)
மரபணு திடீர் மாற்றங்களால் ஏற்படும் மரபு வழி பரவும் நோய் நிலையை குறிக்கிறது.

காரணிகள்[தொகு]

இன்ஃபுளுவென்சா போன்ற ஒரு சில தொடுதல் மூலம் பரவும் நோய்களாகவோ அல்லது பொதுவாக அறியப்படும் தொற்று நோய்க்களாகவோ நோய்க்காரணிகள் இருக்கக்கூடும். இந்த நோய்களை உண்டாக்குகின்ற நுண்ணுயிரிகளானது நோய்க்காரணிகளாக அறியப்படுகின்றன மற்றும் பாக்டீரியா வகைகள், வைரசுகள்,ஓரணு உயிர்கள் (protozoa) மற்றும் பூஞ்சை வகைகளும் இதில் அடங்கும்.தொற்று நோய்களானது தொற்றுள்ள பொருட்களை தொட்ட கைகள் மூலம் வாய்க்கோ, நோய்கிருமிகளைத் தாங்கித் திரியும் பூச்சிகள் கடிப்பதாலோ, அசுத்தமான உணவு மற்றும் நீரைப் பருகுவதாலோ (சில சமயங்களில் மலம் வழியாக) பரவுகின்றன [12]. கூடுதலாக, பாலியல் பரவும் நோய்களும் உள்ளன. சில நோய்கள் தடுக்கப்படலாம் அல்லது பொருத்தமான ஊட்டச்சத்து எடுத்துக்கொள்வதன் மூலமும் பிந வாழ்க்கை முறை மூலமாகவும் நோய் பாதிப்பிலிருந்து சீராக்கிக்கொள்ளலாம்.

புற்றுநோய், இதய நோய் மற்றும் மனநல குறைபாடுகள் போன்ற பெரும்பாலான நோய்கள் (சிலவற்றைத் தவிர) போன்றவை தொற்றா நோய்களாகும். பல தொற்றா நோய்கள் பகுதியாகவோ அல்லது முற்றிலுமாகவோ மரபணு அடிப்படையில் (மரபணு கோளாறு பார்க்கவும்) ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு பரவுவதாக உள்ளன.

உடல்நலம் சார் சமூகக் காரணிகளும் (Social determinants of health -SODH) நோய் சமூக நலமும் அவர்களின் உடல்நலத்தை நிர்ணயிக்கின்றன.நோய்கள் பொதுவாக சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் சுற்றுச்சூழல் சூழ்நிலைகளுக்கு தொடர்புபடுத்தப்படுகின்றன.

காரணிகளின் வகைகள்[தொகு]

காற்று மூலம் பரவும் நோய்கள்[தொகு]

இந்த நோயானது காற்று வழியாக பரவும் அனைத்து தொற்று நோய்க்காரணிகளால் ஏற்படுகிறது.நோய்த்தாக்கத்தின் விளைவாக மருத்துவரீதியாக வெளிப்படையான நோயாகும் (அதாவது, நோய் அறிகுறிகள் அல்லது மருத்துவ நோய் பண்புகள் மூலமாக)

தொற்று நோய்கள்[தொகு]

தொற்று நோய்கள் என்று அழைக்கப்படும் அவை பரவும் நோய்கள் என்றும் அழைக்கப்படுகிறது.தொற்று நோய்கள் - காய்ச்சல் அல்லது பொதுவான குளிர், பொதுவாக ஒரு நபரிடமிருந்து இன்னொருவருக்கு பரவுகிறது - பரவும் நோய்கள் என்பது ஒரு நபர் ஒருவருக்கொருவர் தொடாமலேயே காற்று , நீர், உணவு வழியாக பரவுகின்றன.

உணவுவழிப் பரவும் நோய்கள்[தொகு]

நோய் விளைவிக்கும் பாக்டீரியங்கள், நச்சு, வைரசுகள்,ஒட்டுண்ணிகள் அடங்கிய உணவினை உட்கொள்வதால் உணவுவழிப் பரவும் நோய்கள் அல்லது உணவு நஞ்சாதல் ஏற்படுகிறது.

வாழ்க்கை முறைகள்[தொகு]

வாழ்க்கை முறை நோய்களுக்கு காரணமான துரித உணவுகள்

தொழில்மயமாதலின் மூலமாக பல நாடுகளில், மக்களின் வாழ்க்கை முறைகளில் பெருமளவு மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அவர்களின் பழக்கவழக்க மாற்றங்களும் போதிய உடலுழைப்பு இல்லாத காரணமும்,உமிநீக்கப்பட்ட மாவுப்பொருள் (refined carbohydrates) துரித உணவுப்பழக்க வழக்ககங்களும் , மாறுபக்க கொழுப்பு (trans fat) உணவுகளும், மது நுகர்வுப் பழக்கமும் வாழ்க்கை முறை நோய்களுக்கு முக்கிய காரணிகளாகும்[13][14].

நோய்க் கடப்பாடு[தொகு]

நலக்குறைபாடுகளால் ஏற்படும் நிதி செலவீனம், இறப்பு, நோயுற்ற விகிதம், பிற சுட்டிகள் ஆகியவற்றைக் கொண்டு ஒரு பகுதியில் நிகழும் பாதிப்புகளைக் கணக்கிடுவது நோய்க் கடப்பாடு (Disease burden) எனப்படுகிறது[15][16][17][18].

நோய்ப்பகுப்பு சாத்தியமாக வாழக்கூடிய ஆண்டுகளில் இழப்புச் சதவிகிதம், உலக அளவில்[18] வாழும் ஆண்டுகளின் இழப்புச் சதவிகிதம் (ஊனத்தை அனுசரித்து சீராக்கப்பட்டது), உலக அளவில்[18] சாத்தியமாக வாழக்கூடிய ஆண்டுகளில் இழப்புச் சதவிகிதம், ஐரோப்பா[18] வாழும் ஆண்டுகளின் இழப்புச் சதவிகிதம் (ஊனத்தை அனுசரித்து சீராக்கப்பட்டது), ஐரோப்பா[18] சாத்தியமாக வாழக்கூடிய ஆண்டுகளில் இழப்புச் சதவிகிதம், அமெரிக்கா, கனடா[18] வாழும் ஆண்டுகளின் இழப்புச் சதவிகிதம் (ஊனத்தை அனுசரித்து சீராக்கப்பட்டது), அமெரிக்கா, கனடா[18]
தொற்று, ஒட்டுண்ணி நோய்கள், கீழ் சுவாசக்குழாய் தொற்றுகள், வயிற்றுப்போக்கு, எய்ட்சு, காச நோய், மலேரியா 37% 26% 9% 6% 5% 3%
உளப் பிறழ்ச்சி, எ.கா. பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவு 2% 13% 3% 19% 5% 28%
காயங்கள், எ.கா.சாலை விபத்து 14% 12% 18% 13% 18% 10%
இதயக் குழலிய நோய்கள், முதன்மையாக மாரடைப்பு, பக்கவாதம் 14% 10% 35% 23% 26% 14%
குறைப்பிரசவம், கருமுந்திய கால இறப்புகள் 11% 8% 4% 2% 3% 2%
புற்றுநோய் 8% 5% 19% 11% 25% 13%

மேற்கோள்கள்[தொகு]

 1. டோர்லாண்ட் மருத்தவ அகராதியில் Disease
 2. Science Reporter - Volume 32 - Page 47, 1995
 3. what is the deadliest disease in the world? retrieved 28 November 2013
 4. "Mental Illness—Glossary". US National Institute of Mental Health. Archived from the original on 2010-05-28. பார்க்கப்பட்ட நாள் 2010-04-18.
 5. "Regents Prep: Living Environment: Homeostasis". Oswego City School District Regents Exam Prep Center. Archived from the original on 2012-10-25. பார்க்கப்பட்ட நாள் 2012-11-12.
 6. டோர்லாண்ட் மருத்தவ அகராதியில் Illness
 7. Emson HE (April 1987). "Health, disease and illness: matters for definition". CMAJ 136 (8): 811–3. பப்மெட்:3567788. 
 8. McWhinney IR (April 1987). "Health and disease: problems of definition". CMAJ 136 (8): 815. பப்மெட்:3567791. 
 9. Hart BL (1988). "Biological basis of the behavior of sick animals". Neurosci Biobehav Rev 12 (2): 123–137. doi:10.1016/S0149-7634(88)80004-6. பப்மெட்:3050629. 
 10. Johnson R (2002). "The concept of sickness behavior: a brief chronological account of four key discoveries". Veterinary Immunology and Immunopathology 87 (3–4): 443–450. doi:10.1016/S0165-2427(02)00069-7. பப்மெட்:12072271. 
 11. Kelley KW, Bluthe RM, Dantzer R, Zhou JH, Shen WH, Johnson RW, Broussard SR (2003). "Cytokine-induced sickness behavior". Brain Behav Immun 17 (Suppl 1): S112–118. doi:10.1016/S0889-1591(02)00077-6. பப்மெட்:12615196. 
 12. Alexander van Geen, et al. "Impact of population and latrines on fecal contamination of ponds in rural Bangladesh." Science Of The Total Environment 409, no. 17 (August 2011): 3174-3182.
 13. http://www.livestrong.com/article/442066-diseases-caused-by-eating-too-much-fast-food/
 14. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-08-26. பார்க்கப்பட்ட நாள் 2017-05-20.
 15. Prüss-Üstün, Annette; Corvalán, Carlos (2006). "Preventing disease through healthy environments: Towards an estimate of the environmental burden of disease" (PDF). Quantifying environmental health impacts. World Health Organization.
 16. (23–24 August 2000) "Methodology for assessment of Environmental burden of disease". ISEE session on environmental burden of disease.
 17. Prüss-Üstün, Annette; Mathers, C.; Corvalán, Carlos; Woodward, A. (2003). Assessing the environmental burden of disease at national and local levels: Introduction and methods. WHO Environmental Burden of Disease Series. Vol. 1. Geneva: World Health Organization. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9241546204.
 18. 18.0 18.1 18.2 18.3 18.4 18.5 18.6 ""Disease and injury regional estimates for 2004"". World Health Organization. Archived from the original on 2014-05-22. பார்க்கப்பட்ட நாள் 20 சூன் 2014.

நோய்கள் பட்டியல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நோய்&oldid=3928571" இலிருந்து மீள்விக்கப்பட்டது