தாலி (மகளிர் அணி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாலி
அம்மன் தாலி

தாலி என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் மணமகன் மணமகளின் கழுத்தில் கட்டும் ஓர் அட்டிகை ஆகும். தாலி ஒரு திருமணமான பெண்ணாக நிலையைக் காட்டுகிறது.[1] இது ஓர் அணிகலன்.

திருமணத்தில் தாலி கட்டும் வழக்கம் இக்காலத்தில் உள்ளது. பல்வேறு வகையான குடிமக்கள் பல்வேறு வகையான தாலிகளைக் மணமகளுக்குக் கட்டுகின்றனர். மதுரை மீனாட்சியம்மனுக்குச் சொக்கநாதர் தாலி கட்டுவதாக ஒரு சடங்கு நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெறுகிறது. தமிழர் திருமணம் என்னும் பெயரில் தாலி கட்டும் சடங்கு இக்கால வழக்கத்தில் உள்ளது.

தமிழர் பண்பாட்டில் தாலி[தொகு]

திருமணம் என்பது மக்கள் சமுதாயப் பண்பாட்டில் ஒரு முக்கியக்கூறாக விளங்குகிறது. சங்க இலக்கியங்களில் தாலி என்பது தொங்குகின்ற ஒரு அணியினைக் குறிக்கும் சொல்லாகப் பயின்று வந்துள்ளது. நாலுதல் என்பது தொங்குதல் என பொருள்படும். ‘நகரம்’ தகரமாகத் திாிந்து ‘தாலி’ என்று மாறியிருக்கக்கூடும்.[2] தாலி என்பது புலியின் வாய் வடிவில் அமைந்த ஆபரணம். தாலி என்பது பெண்களின் மங்கல அணியாக விளங்குகிறது. தமிழா் சமுதாயத்தில் திருமணம் என்ற நிகழ்வில் பெண்களுக்கு கணவரால் அணிவிக்கப்படும் மங்கல அணியாகத் தாலி விளங்குகின்றது. கணவனின் வாழ்நாளாகவும், கற்புடைய பெண்கள் இதனை ஒரு நொடியேனும் கழற்றாமல் பேணி காத்து வருகின்றனா். ‘தாலி’ என்பது மங்கல அணியாகத் திகழ்கிறது. தமிழா் தம் பண்பாட்டின் அடையளமாகப் போற்றி வருகின்றனா்.

தாலியின் வகைகள்[தொகு]

ஒவ்வொரு குலத்திற்கு ஏற்றவாறு தாலி அமைப்பு வேறுபடுகின்றது. பொதுவாகத் தாலியை கருந்தாலி, மஞ்சள்தாலி என இரு வகையில் அடங்கும்.

  • கருந்தாலி - கழுத்தைச் சுற்றி நெருக்கமாக அமையும்.
  • மஞ்சள் தாலி - நீண்டு கழுத்திலிருந்து தொங்கும்.
  • தங்கத்தாலி - தங்கச்சங்கிலியுடன் கோர்க்கப்பட்டு கழுத்திலிருந்து நீண்டு தொங்கும்.
  • தென்பகுதி வழக்கில் - பெருந்தாலி, சிறுதாலி, தொங்குதாலி, பொட்டுத்தாலி, சங்கத்தாலி, மண்டத்தாலி, ரசத்தாலி, தொப்புத்தாலி, உருண்டைத்தாலி, இருதாலி போன்ற பல தாலி வகைகள் பற்றி அறியலாம்.

ஆண், பெண் இளையர் அணி[தொகு]

யார் யார் தாலி அணிந்திருந்தனர், அந்தத் தாலி எவற்றால் செய்யப்பட்டிருந்தது என்பது பற்றிய செய்திகளைச் சங்கப்பாடல்கள் தெரிவிக்கின்றன.

  1. தாய் வீட்டில் இருக்கும் மகள் ஒருத்தி இதனை அணிந்திருந்தது பற்றிச் சங்கப்பாடல் ஒன்று தெரிவிக்கிறது.[3] மகள் தன் காதலனைத் திருமணம் செய்துகொண்டு வாழ்வதற்காக அவனுடன் அவன் ஊருக்குச் சென்றுவிட்டாள். அவளைத் தேடிக்கொண்டு செவிலித்தாய் செல்கிறாள். வழியில் ஒரு மானைப் பார்த்து என் மகளைக் கண்டதுண்டா என்று கேட்பது போன்ற நயத்துடன் இந்தப் பாடல் அமைந்துள்ளது. தாய் தன் மகள் எப்படி இருப்பாள் என்று அடையாளம் சொல்லும்போது தாலி அணிந்திருப்பாள் என்று குறிப்பிடுகிறாள்.அந்தத் தாலி எப்படி இருக்கும் என்பதும் அவள் குறிப்பிடும் தொடரில் விளக்கப்பட்டுள்ளது. புலியின் பல்லை மணியாகக் கொண்டு அதனைப் பொன்னில் சேர்த்துச் செய்யப்பட்டிருந்ததாம். இது தனியே[4] தெரியும்படித் தொங்கும்.
  2. தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் போருக்குச் சென்றபோது இளைஞனாக இருந்தான். இளமையில் காலில் அணிந்திருந்த கிண்கிணியைக் களைந்துவிட்டு வீரக் கழல் அணிந்தான். குடுமி என்னும் அரச முடியை களைந்துவிட்டு நெற்றியில் வேப்பம்பூ மாலை அணிந்துகொண்டான். அத்துடன் தன் கோட்டையைக் காப்பாற்றும் அடையாளப் போருக்குரிய உழிஞைப் பூவையும் அணிந்துகொண்டான். தொடி அணிந்திருக்கும் கையில் வில்லைப் பற்றிக்கொண்டான். தேரில் தோன்றும் அவன் சிறுவனாக இருக்கும்போது அவன் அணிந்திருந்த தாலியை மட்டும் அவன் களையவில்லை.[5]
  3. சிறுவர் புலிப்பல் கோத்த தாலியைக் கழுத்தில் அணிந்திருந்தனர். [6]
  4. தழையாடை அணிந்திருந்த கானவன் மகள் பொன்னிழையில் புலிப்பல்லும், மணியும் கோத்துத் தனியே தெரியும்படித் தாலி அணிந்திருந்தாள்.[7]
  5. தாய் பாலூட்ட அழைக்கும் சிறுவன் பொன்னால் செய்யப்பட்ட தாலி அணிந்திருந்தான்.[8]
  6. உடும்புக்குத் தாலி என்னும் பெயர் உண்டு.[9][10]

படங்கள்[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Wedding necklaces
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. Subhamoy Das. "Mangalsutra Necklace – Hindu Symbol of Love & Marriage". About.com Religion & Spirituality. Archived from the original on 13 May 2016. பார்க்கப்பட்ட நாள் 8 May 2016.
  2. தாலம் என்னும் சொல்லுக்குப் பொருள் கூறும் நா. கதிரைவேல் பிள்ளையின் தமிழ் அகராதி (பதிப்பு 2003) கூந்தல்பனை, தேன் ஆகியவற்றையும் குறிப்பிடுகிது. இவற்றில் கூந்தல்பனை கூந்தல் போல் தொங்கும் பூக்களைக் கொண்டது. தேன்கூடு தொங்கும்.
  3. பொன்னொடு புலிப் பல் கோத்த புலம்பு மணித் தாலி (அகநானூறு 7)
  4. புலம்பே தனிமை. (தொல்காப்பியம் - உரியியல் - 33)
  5.   
    கிண்கிணி களைந்த கால் ஓண் கழல்தொட்டுக்
    குடுமி களைந்த நுதல்வேம்பின் ஒண்தளிர்
    நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து
    குறுந்தொடி கழித்தகைச் சாபம் பற்றி,
    நெடுந்தேர்க் கொடிஞ்சி பொலிய நின்றோன்
    யார்கொல்? வாழ்க அவன் கண்ணி!
    தார்பூண்டு தாலி களைந்தன்றும் இலனே;

  6. புலிப் பல் தாலிப் புன் தலைச் சிறாஅர் (புறம்-374)
  7.   
    பொன்னொடு
    புலிப் பல் கோத்த புலம்பு மணித் தாலி,
    ஒலிக் குழைச் செயலை உடை மாண் அல்குல்,
    ஆய் சுளைப் பலவின் மேய் கலை உதிர்த்த 20
    துய்த் தலை வெண் காழ் பெறூஉம்
    கல் கெழு சிறுகுடிக் கானவன் மகளே (அகநானூறு 7)

  8.   
    முகிழ் நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள்!
    பொன்னுடைத் தாலி என் மகன் ஒற்றி,
    வருகுவைஆயின், தருகுவென் பால் என,
    விலங்கு அமர்க் கண்ணள் விரல் விளி பயிற்றி, 20
    திதலை அல்குல் எம் காதலி
    புதல்வற் பொய்க்கும் பூங்கொடி நிலையே (அகநானூறு 54)

  9.  
    பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை
    வரி வெண் தாலி வலை செத்து வெரூஉம்
    மெல்லம் புலம்பன் தேறி,
    நல்ல ஆயின, நல்லோள் கண்ணே.(ஐங்குறு நூறு-166),

  10. உடும்பின் இடுப்பில் கயிறு கட்டி அதில் தொங்கிக்கொண்டு ஏற முடியாத இடங்களுக்கு ஏறுதல் வழக்கம். உடும்பு பல்லி இனம். பல்லி போல் எங்கும் பற்றிக்கொள்ளும். இதனால் உடும்பைத் தாலம் என்றனர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாலி_(மகளிர்_அணி)&oldid=3876810" இலிருந்து மீள்விக்கப்பட்டது