குடிப்படை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமெரிக்கக் குடிப்படையாளி

குடிப்படை (Militia) [1] - ஒரு நாட்டின் இராணுவத்திற்குத் தேவையான நேரத்தில் உதவி புரிவதற்காக, முன்னேற்பாடாக அமைக்கப்பட்டிருக்கும் படை.அமைதி நிலவும் காலத்தில் நிலையான பெரும்படையைப் பராமரிப்பது என்பது எந்த நாட்டினாலும் இயலாத ஒன்றாகும். அப்படிச் செய்தால் நாட்டின் பொருளாதார வசதிகளும், செல்வமும் சீர்கெடும். எனவே, போரில் அல்லது அயலவர் படையெடுப்பை முறியடிக்கும் பணியில் இராணுவம் ஈடுபட்டிருக்கும் பொழுது, உள்நாட்டில் அமைதிக் காக்கவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் குடிப்படை அமைக்கப்படுகிறது.இப்படையினருக்கு எல்லாப்படைப்பயிற்சிகளும் அளித்து, இரண்டாவது வரிசை இராணுவமாக உருவாக்குகின்றனர். இதனால் போர் நடவடிக்கைகளுக்குக் கூடுதலான வீரர்கள் தேவைப்படும் பொழுது, ஏற்கனவே பயிற்சி பெற்று முன்னேற்பாடாக இருக்கும் இப்படையிலிருந்து, இராணுவத்திற்கு வீரர்களை சேர்த்துக் கொள்ளப் படுகின்றனர்.

இந்திய அமைப்பு[தொகு]

இந்தியாவில் குடிப்படை என்ற பெயரில் ஒரு அமைப்பு இல்லை. எனினும், பிரதேசப்படை(Territorial army), லோக் சகாயக் சேனை(Lok sahayak sena) என்னும் இரண்டு அமைப்புகள் குடிப்படையின் தரத்துடன் இருக்கிறது.

பிரதேசப்படை[தொகு]

பொதுமக்களையும் நாட்டுப்பாதுகாப்பில் ஈடுபடுத்துவதே, இப்படையின் முக்கிய நோக்கமாகும். தரைப்படைக்குப் பக்கபலமாக இருந்து, போக்குவரத்துப் பாதைகளையும், கடற்கரைகளைக் காப்பதும், பொதுவாக நாட்டில் அமைதியும், சட்டமும் நிலவுவதற்கு, அரசாங்கத்துக்கு உறுதுணையாக நிற்பதும், தேவையானபோது இராணுவத்திற்கு ஆட்களை அனுப்பி உதவுவதுமே இதன் கடமைகளாகும்.இந்தியாவில் இரண்டாவது பாதுகாப்பு அணியாக (second line defence) 1949-இல் , பிரதேசப்படையொன்று அமைக்கப்பட்டது. பிரதேசப்படைச் சட்டம் 1948, செப்டம்பரில் இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றியது. 1949 முதல் ஆட்களைச் சேர்ப்பது தொடங்கப் பட்டது. இப்படையில் பல்வேறு படைக்கல, படைப்பணி அணிகள் உள்ளன. அவை வருமாறு;-

  1. பீரங்கிப்படை - இதில் வானூர்தி எதிர்ப்பும், கரைப் பாதுகாப்பும் அடங்குகிறது.
  2. பொறி இயலர் அணி - இதில் துறைமுக தொடருந்துப் பிரிவுகளும் அடங்கும்.
  3. செய்தி அணி - தபால் தந்தி உட்பட
  4. தரைப்படை அணி
  5. மருத்துவப்படை அணி
  6. மின்சார-எந்திரப் பொறியியலர் படை அணி

பயிற்சியும், சலுகைகளும்[தொகு]

இவ்விதம் திரட்டப்படும் படை அணிகள், மாநிலப் பிரிவுகள்,நகர்பிரிவுகள் என இருவகையாக ஆட்களைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சியளிக்கின்றனர். பயிற்சி ஏதுமில்லாத சாதாரணத் தொழிலாளர்கள் முதல் உயர்ந்த தொழில் நுட்ப நிபுணர்கள் வரை, 18 முதல் 35 வயதுடைய(அகவையுடைய), திடமான உடல்உடைய எல்லோரும் இப்படையில் சேரத் தகுதியுள்ளவர்கள் ஆவார்கள். முன்னாள் இராணுவத்தினருக்கும் உயர்ந்த தொழில் நுட்பத் தகுதி வாய்ந்தவர்களுக்கும் வயது வரம்பு தளர்த்தப்படுகிறது. அரசு ஊழியரும், தனியார் அலுவலக ஊழியரும் கூட இப்படையில் சேரலாம்.அவர்களின் பயிற்சிகாலங்கள், அவர்கள் முன்னர் பணிசெய்த இடங்களின் பணிநாட்களையே குறிக்கும். இந்நடைமுறை மூலம் பயின்றவர்களின் வேலை முன்னிலைக்(seniority) காக்கப்படுகிறது.

பயிற்சிக்கு ஏற்ப நிரந்திரப் படைப்பிரிவினருக்கு அளிக்கப் படும் சம்பளங்களும், சலுகைகளும் இவர்களுக்கும் அளிக்கப்படுகிறது. இத்தகையப் பயிற்சிக்கு உரிய நிறுவனங்களும், அலுவலகங்களும் பயிற்சிக்கு தடையேதும் இல்லாமல் அனுப்ப வேண்டும். மேற்கூறியவைகள் பிரதேசப்படைச் சட்டத்தின் மூலம் காக்கப் படுகிறது. இந்திய இராணுவக் கழகத்தில் அளிக்கப்படும் அதிகாரிகள் பயிற்சிக்கு, பிரதேசப்படையினரையும் சேர்த்துக்கொள்ள2.5% இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இக்கழகத்தில் பயிற்சி முடிந்ததும், இராணுவத்தில் நிலையான ஆணைப் பெற்ற அதிகாரிகளாகச் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். எச்சூழ்நிலைகளிலும் மேற்கண்டப் பயிற்சி பெற்றவர்கள், இந்தியாவுக்கு வெளியே பணியில் அமர்த்தப்பட மாட்டார்கள்.

மாநிலப் பிரிவுகள்[தொகு]

மாநிலப்பிரிவுகளுக்கு , ஆட்கள் கிராமப் பகுதிகளிலிருந்து சேர்க்கப் படுகிறார்கள். இவர்களுக்கு ஆண்டுதோறும் 2,3 மாதங்கள் தொடர்ச்சியாகப் பயிற்சியளிக்கப் படுகிறது.

நகரப்பிரிவுகள்[தொகு]

நகரப்பிரிவுகளுக்கு, ஏற்கனவே அமைந்துள்ள பெரியநகரங்களிலிருந்து ஆட்கள் சேர்க்கப்படுகின்றனர். இவர்களுக்கு வாராந்திர அடிப்படையில் மாலை வேளைகளிலும், ஞாயிற்றுக் கிழமைகளிலும், விடுமுறை நாட்களிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது. அவ்வப்போது இவர்களுக்கென, தொடர்ந்து நான்கு நாட்களுக்கு மேற்போகாமல் பயிற்சி முகாம்களும் நடத்தப் படுகின்றன.

லோக் சகாயக் சேனை[தொகு]

இந்தியா சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து, நாட்டு மக்களுக்கு இராணுவப் பயிற்சி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வந்தது. இதற்கிணங்க,1950-இல் பிரதேசத் துணைப்படை அமைக்கப்பட்டது. பொதுமக்களில் இயன்ற அளவு அதிகமானவர்களுக்கு அடிப்படையான இராணுவப் பயிற்சியளிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். பின்னர், இத்திட்டத்தின் செயல்வரம்பை மேலும் விரிவு படுத்த எண்ணி, பிரதேசத் துணைப்படையைக் கலைத்து விட்டு, அதற்குப் பதிலாகத் தேசியத் தொண்டர் படை நிறுவினார்கள். இப்படைக்குத்தான் பின்னர் லோக் சகாயக் சேனை எனப் பெயிரிடப்பட்டது.

லோக் சகாயக் சேனை 1955, மே, 1-இல் தொடங்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்குள் ஐந்து இலட்சம் பேருக்கு இராணுவப் பயிற்சியளிக்கத்திட்டமிடப்பட்டது. முன்னால் இராணுவத்தினர், தேசிய மாணவர் படையினர் தவிர, 18 முதல் 40 வயதுவரையுள்ள உடல்திடமுடைய மற்ற எல்லோரும் இச்சேனையில் சேரலாம்.முன்னால் இராணுத்தினரும், மாணவர் படையினரும், பிரதேசப் படையில் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவர்.

தேசியப் பணியில் மக்களுக்கு ஆர்வம் உண்டாகும் படி செய்வதும், அவர்களை ஒழுங்கையும், கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்கும்படி செய்வதும், அவர்களிடம் தன் கையே தனக்குதவி என்ற மனப்பான்மையையும், பொறுப்புணர்ச்சியையும் வளர்ப்பதுமே இச்சேனையின் முக்கிய நோக்கங்களாகும். மாறாக, நாட்டுப் பாதுகாப்புக்கான படைவீரர்களைத் தேர்ந்தெடுப்பது இதன் நோக்கம் அன்று.

லோக் சகாயக் சேனையின் சார்பில் நாடெங்கிலும் பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகின்றன.இம்முகாம்களில், சேனை வீரர்களுக்கு, உடற்பயிற்சிகள், துப்பாக்கிப் பயிற்சிகள், போர்க்கள அடிப்படைப் பொறியியல் பயிற்சிகள், முதலுதவிப் பயிற்சிகள், சுகாதாரப் பயிற்சிகள் முதலிய இராணுவப் பயிற்சிகளோடு, பொதுக் கல்வியும் புகட்டப்படுகிறது.பயிற்சி முகாம்கள் ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் தொடர்ச்சியாக நடக்கும். எல்லையோர மாநிலங்களில் 15 நாட்கள் நடைபெறும். ஒவ்வொரு முகாமிலும் அதிக அளவு 500 பேருக்குப் பயிற்சியளிக்கப்படும்.

1955, மே1-லிருந்து, 1963 டிசம்பர், 31 முடிய நாடெங்கிலும் மொத்தம் 1,671 பயிற்சி முகாம்கள் நடந்துள்ளன. இவற்றில் மொத்தம் 7,40,284 பேர் பயிற்சி பெற்றிருக்கின்றனர். பொது மக்களை உடலாலும், உள்ளத்தாலும் திடமான குடிமக்களாக உருவாக்குவதற்கு லோக் சகாயக் சேனை உறுதுணையாக இருக்கிறது.

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. oxford dictionary - 1590 when it was recorded in a book by Sir John Smythe, Certain Discourses Military with the meanings: a military force; a body of soldiers and military affairs; a body of military discipline
"https://ta.wikipedia.org/w/index.php?title=குடிப்படை&oldid=2938195" இலிருந்து மீள்விக்கப்பட்டது