கடமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கடமா
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்குகள்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: Artiodactyla
குடும்பம்: Bovidae
துணைக்குடும்பம்: Bovinae
பேரினம்: Bos
இனம்: B. gaurus
இருசொற் பெயரீடு
Bos gaurus
Smith, 1827

கடமா (Bos gaurus) அல்லது காட்டெருது எனப்படுவது இந்தியக் காடுகளில் காணப்படும் இரட்டைப்படைக் குளம்பிகள் குடும்பத்தைச் சேர்ந்த ஓர் ஆவினம். அக்குடும்ப இனங்களிலேயே மிகப்பெரிய உடலளவைக் கொண்டது கடமா ஆகும். இவ்விலங்கு கடமா, காட்டுப்பசு, காட்டா, மரை, கட்டேணி, காட்டுபோத்து என்று பல பெயர்களில் அறியப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசியப் பகுதியில் கடமாவில் நான்கு உள்சிற்றினங்கள் (sub-species) இருப்பதாக அறியப்பட்டுள்ளது. கடமாவின் மூதாதைய இனம் ஆசியக் கண்டத்தில் சுமார் 20 மில்லியன் வருடங்களுக்கு முன்பு தோன்றியதாக அறியப்பட்டுள்ளது.[2] இது பீகாரின் மாநில விலங்காகும்.

சங்க இலக்கியத்தில் கடமா[தொகு]

  • கடமா தொலைச்சிய கானுறை வேங்கை (நாலடி, 300)
  • மரையின் ஆண். மரையான் கதழ்விடை (மலைபடு. 331)

உடலமைப்பு[தொகு]

பெரும்பாலான விலங்குகளில் ஆண் விலங்குகள் பெரியதாய் அழகாய் இருப்பதைப் போன்று கடமா எருதுகள் பசுக்களைக் காட்டிலும் உடலமைப்பில் பெரியவை. வயதுவந்த எருது சுமார் 600 முதல் 1000 கிலோ எடையும் 1.6 முதல் 1.9 மீட்டர் உயரமும் இருக்கும். பசுக்கள் எடையளவில், ஆணின் எடையில் நான்கில் ஒரு பங்கே இருக்கும். இருபால் விலங்குகளின் வால் நீளம் அண்ணளவாக (ஏறக்குறைய) 70 முதல் 100 செ.மீ வரை இருக்கும். இது வயதையும் உடலையும் பொறுத்து மாறுபடும். இவ்விலங்குகளின் உடல் மேற்தோல் அடர்த்தியான பளுப்பு நிறமயிர்களால் ஆனது. அசைதாடை கீழ்க் கடைவாயிலிருந்து முன்னங்கால்கள் வரை நீண்டு இருக்கும். எருதுகளின் முதுகுப்பகுதில் உள்ள திமில்கள் பசுக்களைவிடப் பெரியதாக இருக்கும். இருபால் விலங்குகளுக்கும் அகன்ற கொம்புகள் உண்டு. கொம்புகளின் அடித்தளம் மஞ்சள் நிறமாகவும் கூர்மையான கொம்பு முனைகள் கருப்பு நிறத்திலும் காணப்படும். அதிக அளவாக கொம்புகள் சுமார் 80 செ.மீ நீளம் வரை வளரும்.[3]

பரவல்[தொகு]

இவ்விலங்குகள் வெப்பமண்டலக் காடுகளில் வாழ்பவையாகும். வங்கதேசம், பூட்டான், கம்போடியா, சீனா, இந்தியா, தைவான், மலேசியா, மியான்மர், நேப்பாளம், தாய்லாந்து, வியட்னாம் போன்ற நாடுகளில் இவ்விலங்கு வாழ்ந்துவருகிறது.[3] கடமாவின் நான்கு உள்சிற்றினங்களும் அவற்றின் பரவலும் கீழ்காணும் சட்டத்தில் (அட்டவணை) கொடுக்கப்பட்டுள்ளது.

உள்சிற்றினங்களின் பரவல்
உள்சிற்றினம் பரவல்
Bos gaurus gaurus இந்தியா மற்றும் நேப்பாளம்
Bos gaurus readei மியான்மர் மற்றும் இந்திய-சீனப் பகுதிகள்
Bos gaurus hubbacki தாய்லாந்தின் இசுத்துமசு கராவுக்குத் தெற்குப் பகுதிகள் மற்றும் மேற்கு மலேசியா
Bos gaurus grangeri
இந்தியக் காட்டெருமை(Bos gaurus gaurus)

சூழியல்[தொகு]

கடமா ஒரு பகலாடும் விலங்காகும். இவை காலையிலும் மாலையிலும் மிகவும் சுறுசுறுப்புடன் இரை தேடும். வெயில் நிறைந்த பகல் நேரங்களைப் பெரும்பாலும் மரநிழலில் ஓய்வெடுத்துக் கழிக்கும். தற்சமயம் இவ்விலங்கு வாழும் காடுகளில் மனிதர்களால் ஏற்படும் தொல்லைகளைத் தவிர்ப்பதற்கு இரவு நேரங்களில் இரை தேடுகின்றது. இவ்விலங்கின் இருப்புக்கு நீர் இன்றியமையாததாக இருந்தாலும் நீர் எருமைகளைப் போல இவை நீரில் புரளுவதில்லை. கடமா மந்தைகளில் 2 முதல் 40 மாடுகள் வரை இருக்கும். ஒரு மந்தையை மூத்த பெண் ஒன்று தலைமையேற்று நடத்திச் செல்லும். மந்தையின் ஒரு விலங்கு எச்சரிப்பு ஒலி எழுப்பினால் அனைத்து விலங்குகளும் கணப்பொழுதில் காட்டுக்குள் ஓடி மறைந்துவிடும்.

இனப்பெருக்க காலத்தில் எருதுகள் மந்தைகளில் இருந்து விலகி தனித்து புணர்வதற்காக பசுக்களைத் தேடிச்செல்லும். பெரும்பாலும் பெரிய உடலைக் கொண்ட எருதையே பசுக்கள் இனப்பெருக்கம் செய்யத் தேர்ந்தெடுக்கின்றன. புணரும்போது எருதுகள் ஒரு தனி மாதிரியான ஒலியை எழுப்புகின்றன. அவ்வொலி சுமார் 1.6 கி.மீ தொலைவு வரை கேட்கக்கூடியதாக இருக்கும்.

இவை புல், செடிகள் மற்றும் பழங்களை உணவாக உட்கொள்ளும். இவற்றின் இயற்கை எதிரிகள் புலி, சிறுத்தை, செந்நாய் போன்ற கொண்றுண்ணிகள் ஆகும்.

இனப்பெருக்கம்[தொகு]

கடமாவின் சூல்கொள்ளல் காலம் சுமார் 275 நாட்கள் ஆகும். தாய் கடமா பெரும்பாலும் ஒரு கன்றையோ, மிக அரிதாக இரண்டு கன்றுகளையோ ஈன்றெடுக்கும். கன்று ஏழு முதல் ஒன்பது மாதங்கள் வரை தாயின் அரவணைப்பில் இருக்கும். இரண்டு அல்லது மூன்று வயதாகும் போது இளங்கன்றுகள் இனப்பெருக்க முதிர்ச்சி அடைகின்றன. கடமாக்களின் வாழ்நாள் சுமார் 30 வயது வரை இருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் நடந்தாலும், திசம்பர் முதல் சூன் வரையிலான காலத்திலேயே அதிக அளவிலான இனப்பெருக்கம் நடக்கிறது.

காப்புநிலை[தொகு]

இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் (1972) கடமாவை முதல் காப்பு அட்டவணையில் சேர்த்துள்ளது. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பு கடமாவை அழிவாய்ப்பு உள்ள விலங்காக அறிவித்துள்ளது. இந்தியாவில் கடமா 15 மாநிலங்களில் 101 காப்பகங்களில் வாழ்கிறது. இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 7.12 சதவீத நிலத்தில் கடமாவின் இயற்கை உயிர்த்தொகை உள்ளது. கடமாவின் வாழ்வுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பவை வாழிடச் சீரழிப்பும் வேட்டையாடப்படுதலும் கால்நடைகளிடம் இருந்து பரவும் கோமாரி போன்ற நோய்களும் ஆகும்.[4]

படியெடுப்புமுறை இனப்பெருக்கம்[தொகு]

2001-ஆம் ஆண்டு அமெரிக்காவின் அயோவா மாகாணத்தின் சியாக்சு மையத்தில் உள்ள மரபியல் ஆய்வகத்தில் கடமாவின் கன்று ஒன்று படியெடுப்பு முறையில் ஒரு பசுவின் மூலம் ஈன்றெடுக்கப்பட்டது. ஆனால் அக்கன்று பிறந்து 48 மணிநேரத்தில் தீராத வயிற்றுப்போக்கால் உயிரிழந்தது.[5]

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bos gaurus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2008). Database entry includes a brief justification of why this species is of vulnerable.
  2. Gentry, A. W. 1978. Bovidae. In Evolution of African mammals. Vincent J. Maglio and H.B.S. Cooke (Eds.). Havard Univ. Press, Cambridge, MA.
  3. 3.0 3.1 http://www.ultimateungulate.com/Artiodactyla/Bos_frontalis.html
  4. Sankar, K., Qureshi, Q., Pasha, M.K.S. and Areendran, G. 2000. Ecology of gaur Bos gaurus in Pench Tiger Reserve, Madhya Pradesh. Final Report. Wildlife Institute of India, Dehra Dun.
  5. http://archives.cnn.com/2001/NATURE/01/12/cloned.gaur/

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடமா&oldid=2242968" இருந்து மீள்விக்கப்பட்டது