உள்ளடக்கத்துக்குச் செல்

திமில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திமில் = பஃறி = கட்டுமரம்

திமில் என்பது சங்க காலத் தமிழர் பயன்படுத்திய கடல் நீர் கலங்களுள் ஒன்றாகும். இதைப் பரதவர் மீன் பிடிப்பதற்காகவும் முத்து குளிப்பதற்காகவும் பயன்படுத்தினர். இக்கலத்தை ஓட்டியவர்கள் திமிலர்கள்.[1] திமிலை ஆற்று வெள்ளத்திலும் பயன்படுத்துவர்.[2]

திமிலர் மீன் பிடிக்கவும் முத்துக் குளிக்கவும் பயன்படுத்திய கடல் மிதவைக்குத் திமில் என்று பெயர் . உப்பு வணிகர்கள் ஆற்று வழியாக உள்நாட்டுப் பகுதிகளுக்குச் சென்று உப்பை விற்றுவிட்டு நெல்லை வாங்கிவரப் பயன்படுத்திய நீர்மிதவை பஃறி.[3][4] பஃறியை இக்காலத்தில் கட்டுமரம் என்பர்.

திமிலின் பயன்பாடு[தொகு]

இருப்பை(இலுப்பை) மலர் போன்ற மெல்லிய தலையையுடைய இறாமீன்களையும் கூட்டமாய்ச் சுற்றித்திரியும் மற்ற மீன்களையும் ஈர்வாள் போன்ற வாயையுடைய சுறாமீனையும் மற்றும் வலிமையுள்ள பிற மீன்களையும் பின்னி வரிந்த வலைகளைக் கொண்டு பரதவர் மீன் பிடிக்கும் படகான திமில் மேலேறிக் கொண்டு கடல் கடந்து செல்வர்.[5]

இந்தத் திமில்களைப் பரதவர் வலம்புரி சங்குகளைக் கடலின் அடியில் இருந்து எடுப்பதற்கும் சுறாமீன்களை வேட்டையாடுவதற்கும் பயன்படுத்தினர்.[6] வலம்புரி சங்கை எடுக்கும் போதே முத்துகளையும் பரதவ பெருமக்கள் கடலில் இருந்து இத்திமில் கொண்டு எடுத்ததாக எண்ணலாம்.

திமிலின் வகைகள்[தொகு]

கொடுந்திமில்[தொகு]

இந்தக் கொடுந்திமிலைக் கொண்டு பரதவர் பிடித்து வந்த மீனின் கொழுப்பாலாகிய நெய்யை வார்த்துக் கிளிஞ்சலில் ஏற்றிய சிறிய சுடர்விளக்கின் ஒளியிலே சங்கப்பாடல் உணர்த்தும் பொருளைக் கொண்டு [7] இப்படகுகளைப் பரதவர் காலை வேளையில் பயன்படுத்தினர் எனக் கொள்ள முடியும். கொடுந்திமில் என்னும் இப்பெயர் இதன் நிறை அதிகமாக இருக்கும் எனக் காட்டுகிறது.

திண்திமில்[தொகு]

இத்திண்திமிலை ஆழ்கடலில் இரவில் மீன் பிடிப்பதற்குப் பரதவர் பயன்படுத்தினர் எனத் தெரிகிறது. இத்திண்திமிலில் உள்ள விளக்கின் வெளிச்சத்திலும் பல் மீன் கூட்டம் (இது வானில் உள்ள விண்மீன்களைக் குறிக்கும்) காட்டிய இயற்கை வெளிச்சத்திலும் இரவு நேரத்தில் பரதவர் மீன் பிடிக்கச் செல்வர்.[8] மேலும் திண்திமில் என்னும் பெயரைக் கொண்டு இது நிறை குறைந்ததாகவும் வேகமாக செல்லக்கூடியதாகவும் இருந்ததாகத் தெரிகிறது.

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

 1. பரந்தோங்கு வரைப்பின் வன்கைத் திமிலர் கொழுமீன் குறைஇய துடிக்கண் துணியல் - மதுரைக்காஞ்சி - 320
 2. புனல் பொருது மெலிந்தார் திமில் விட, (பரிபாடல் 10) \வெய்ய திமிலின் விரை புனலோடு ஒய்வாரும், (பரிபாடல் 10)
 3. வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி
  நெல்லொடு வந்த வல்வாய்ப் பஃறி, (பட்டினப்பாலை 29-30)
 4. பல மரங்களை இணைத்துப் பற்றிக் கட்டப்பட்டது பஃறி.
 5. "மரல் மேற்கொண்டு மான் கணம் தகைமார்
  வெந்திறல் இளையவர் வேட்டு எழுந்தாங்கு, திமில் மேற்கொண்டு, திரைச் சுரம் நீந்தி," - நற்றிணை - 111
 6. இலங்கு இரும் பரப்பின் எறி சுறா நீக்கி,
  வலம்புரி மூழ்கிய வான் திமிற் பரதவர் - அகநானூறு - 350
 7. நெடுங்கடல் அலைத்த கொடுந்திமிற் பரதவர் கொழு மீன் கொள்ளை அழி மணல் குவைஇ, மீன் நெய் அட்டிக் கிளிஞ்சில் பொத்திய சிறு தீ விளக்கில் துஞ்சும், நறு மலர்ப் புன்னை ஓங்கிய, துறைவனொடு அன்னை - நற்றிணை - 175
 8. இனிப் புலம்பின்றே கானலும்; நளி கடல் திரைச் சுரம் உழந்த திண் திமில் விளக்கில் பல் மீன் கூட்டம் என்னையர்க் காட்டிய, எந்தையும் செல்லுமார் இரவே; அந்தில் - அகநானூறு 240
"https://ta.wikipedia.org/w/index.php?title=திமில்&oldid=3201154" இலிருந்து மீள்விக்கப்பட்டது