உள்ளடக்கத்துக்குச் செல்

கஜேந்திர வரதப் பெருமாள் கோவில், கபிஸ்தலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற
திருக்கவித்தலம் கஜேந்திர வரதப் பெருமாள் திருக்கோவில்
பெயர்
புராண பெயர்(கள்):திருக்கவித்தலம்
பெயர்:திருக்கவித்தலம் கஜேந்திர வரதப் பெருமாள் திருக்கோவில்
அமைவிடம்
ஊர்:கபிஸ்தலம்
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:கஜேந்திர வரதர் (விஷ்ணு)
உற்சவர்:தாமோதர நாரயணன்
தாயார்:ரமாமணி வல்லி, பொற்றாமரையாள் (லட்சுமி)
உற்சவர் தாயார்:லோகநாயகி
தீர்த்தம்:கஜேந்திர புஸ்கரணி, கபிலதீர்த்தம்
மங்களாசாசனம்
பாடல் வகை:நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
மங்களாசாசனம் செய்தவர்கள்:திருமழிசை ஆழ்வார்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிட கட்டடக்கலை
கல்வெட்டுகள்:உண்டு

கஜேந்திர வரதப் பெருமாள் கோவில் (Gajendra Varadha Perumal Temple), தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்திலுள்ள, கபிஸ்தலம் என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்ணு கோவிலாகும். இக்கோவில் 108 திவ்யதேசங்களுள் ஒன்று. சோழ நாட்டு ஒன்பதாவது திருத்தலம்.[1]

அமைவிடம்

[தொகு]

இக்கோவில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கபிஸ்தலம் ஊரில், கும்பகோணம்-திருவையாறு சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமார் 15 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

கோவில்

[தொகு]
கோபுரம்

பரந்த வளாகத்தில் அமைந்துள்ள இக்கோவில், 5 அடுக்கு இராஜகோபுரம் கொண்டுள்ளது.[2]

மூலவர்

கஜேந்திர வரதப் பெருமாள். இவர் ஆதிமூலம் என்றும் அழைக்கப்படுகிறார். பெருமாள் இங்கு புஜங்க சயனத்தில் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறார்.

தாயார்

ரமாமணிவல்லி தாயார். இவருக்குப் பொற்றாமரையாள் என்ற பெயரும் உள்ளது.

விமானம்

ககனா க்ருத விமானம்.

தல விருட்சம்

மகிழம்பூ மரம்

தீர்த்தங்கள்

கஜேந்திர புஷ்கரணி தீர்த்தம், கபில தீர்த்தம்.

திருவிழா

ஆடி பௌர்ணமியன்று நடைபெறும் கஜேந்திர மோட்ச லீலை, வைகாசி விசாகத் தேர்த் திருவிழா, பிரம்மோற்சவம் ஆகியவை மூன்றும் இத்தலத்தில் நடைபெறும் முக்கிய திருவிழாக்கள்.

தல வரலாறு

[தொகு]

கபி என்றால் குரங்கு என்று பொருள். ஸ்ரீஆஞ்சநேயர் கடும் தவம் செய்து பெருமாளின் தரிசனம்பெற்றார் எனவே கபிஸ்தலம் என அழைக்க பட்டது. இந்திரஜ்யும்னன் என்ற அரசன் சிறந்த விஷ்ணு பக்தனாக விளங்கினான். ஒரு சமயம் அவன் விஷ்ணு வழிபாட்டில் தன்னை மறந்து ஆழ்ந்திருந்த போது அவனைக் காண துர்வாச முனிவர் வந்தார். அரசன் அவரது வருகையை உணரவே இல்லை. தன்னை அரசன் அவமதித்து விட்டதாகக் கோபம் கொண்ட முனிவர் ’முனிவர்களை மதிக்கத் தெரியாத நீ யானையாகப் பிறப்பாய்’ எனச் சாபம் கொடுத்து விட்டார். பின் தன்னை மன்னிக்கும்படி வேண்டிய அரசனிடம், ‘திருமால் மேல் பக்தி கொண்ட யானைகளுக்கு அரசனாகப் பிறந்து, திருமால் மூலமாக சாப விமோசனம் அடைவாய்’ என்று கூறினார்.

ஒரு குளக்கரையில் இருந்த கூஹூ என்ற அரக்கன், குளத்தில் குளிக்க வருவோரையெல்லாம் காலைப் பிடித்து நீருக்குள் இழுப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தான். ஒரு நாள் அங்கு வந்த அகத்தியர் காலையும் நீருக்குள் இழுத்து, அவர் அவனை முதலையாக்கி சாபம் கொடுத்தார். மன்னிப்பு வேண்டி நின்ற அரக்கனுக்கு திருமால் மூலம் சாப விமோசனம் கிடைக்கும் எனக் கூறினார்.

வழக்கம் போல் ஒருநாள் யானைகளின் அரசனான கஜேந்திரன், விஷ்ணுவை வழிபட தாமரைப்பூ எடுப்பதற்கு அக்குளத்திற்குள் சென்றபோது, முதலையாக அங்கிருந்த அரக்கன் கஜேந்திரனின் ஒரு காலைக் கவ்விக்கொண்டான். காலை விடுவித்துக் கொள்ளமுடியாத கஜேந்திரன் திருமாலை ‘ஆதிமூலமே காப்பாற்று’ என்று அபயக்குரல் கொடுத்தது. திருமாலும் காட்சி தந்து முதலையைக் சக்ராயுதத்தால் கொன்று யானையைக் காப்பாற்றினார். முதலை, யானை இரண்டுமே சாபவிமோசனம் அடைந்தனர். இவ்வாறு யானைக்குத் திருமால் அருளிய தலமே கபிஸ்தலமாகும்.

ஆஞ்சனேயருக்கும் அருள் அளித்த தலம் இந்த கபிஸ்தலம் (கபி-தலம்). இத்தலம் கவித்தலம் என்றும் அழைக்கப்படுகிறது.

பஞ்சகிருஷ்ண தலங்கள்

[தொகு]

தமிழ்நாட்டிலுள்ள பஞ்சகிருஷ்ண தலங்களில் இத்தலமும் ஒன்று. ஏனைய நான்கு தலங்கள் திருக்கண்ணபுரம், திருக்கோவிலூர், திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை ஆகிய ஊர்களிலுள்ள பெருமாள் கோவில்கள் ஆகும்.

கோவில் அமைவிடம்
லோகநாதப் பெருமாள் கோவில் திருக்கண்ணங்குடி
கஜேந்திரவரதர் கோவில் கபிஸ்தலம்
நீலமேகபெருமாள் கோவில் திருக்கண்ணபுரம்
பக்தவக்ஷலபெருமாள் கோவில் திருக்கண்ணமங்கை
உலகளந்தபெருமாள் கோவில் திருக்கோவிலூர்

மங்களாசாசனம்

[தொகு]

திருமழிசை ஆழ்வார் இத்தலம் குறித்து ஒரே ஒரு பாசுரம் பாடியுள்ளார்.

கூற்றமும் சாரா கொடுவினையும் சாரா
    தீ மாற்றமும் சாரா வகை அறிந்தேன்
ஆற்றங்கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும்
    மாயன் உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு.
- நான்முகன் திருவந்தாதி

இங்கு கபிஸ்தலம் (கவித்தலம்) என்ற காவரிக்கரை திவ்வியதேசப் பெருமானையே “ஆற்றங்கரை கிடக்கும் கண்ணனை” என்று கூறுகிறார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 108 Vaishnavite Divya Desams: Divya desams in Pandya Nadu. எம். எஸ். ரமேஷ், திருமலை-திருப்பதி தேவஸ்தானம்.
  2. Tourist Guide to Tamil Nadu. Sura books.
  3. https://medium.com/@AmmU_MaanU/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-54-5a641b8cf06a

வெளி இணைப்புகள்

[தொகு]