44 ஆவது சதுரங்க ஒலிம்பியாடுக்கான இந்திய அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

44 ஆவது சதுரங்க ஒலிம்பியாடுக்கான இந்திய அணி (Indian Squad for 44th Chess Olympiad) இந்தியாவின் அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பால் அறிவிக்கப்பட்டது.[1] போட்டியை நடத்தும் நாடு என்பதால் இந்தியா முதன்முறையாக திறந்த பிரிவு மற்றும் பெண்கள் பிரிவு என இரண்டு பிரிவுகளிலும் தலா இரண்டு அணிகளை களமிறக்குவதற்கு தகுதி பெற்றுள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இப்போட்டி நடைபெற உள்ளது.

சதுரங்க ஒலிம்பியாடு 1927- ஆம் ஆண்டு பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பினால் தொடங்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டுக்கான பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் 44 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு போட்டி முதன்முறையாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரம் சென்னையில் நடைபெறுகிறது. சுமார் 186 நாடுகளைச் சேர்ந்த பல கிராண்டுமாசுட்டர்கள் உட்பட 2000 போட்டியாளர்கள் இப்போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர். 44-ஆவது சதுரங்க ஒலிம்பியாடு போட்டிகள் 28-7-2022 முதல் 10-8-2022 வரை நடைபெறும் என திட்டமிடப்பட்டுள்ளது. இப்போட்டி தமிழ்நாட்டில் நடத்தப்படுவதன் வாயிலாக, மாநிலத்தின் பண்பாடு, பாரம்பரியம், விருந்தோம்பல், சுற்றுலா மற்றும் பல சிறப்பம்சங்கள் உலக அளவில் பேசுபொருளாகும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. முன்னதாக கொரோனா காரணமாக 2021-ஆம் ஆண்டு இணைய வழியில் நடந்த 43 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில் இந்தியாவும்-உருசியாவும் கோப்பையை பகிர்ந்து கொண்டன.

இந்திய அணி[தொகு]

முதல் அணி[தொகு]

2020 சதுரங்க ஒலிம்பியாடு போட்டியில் இந்தியாவை தங்கப் பதக்கத்திற்கு அழைத்துச் சென்ற விதித் சந்தோசு குச்ராத்தி, பலமுறை சதுரங்கப் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய பெண்டலா அரிகிருட்டிணன், சென்னையைச் சேர்ந்த கிருட்டிணன் சசிகிரண் 19 வயதான அர்ச்சூன் எரிகாய்சி மற்றும் எசு.எல்.நாராயணன் ஆகியோருடன் இணைந்து திறந்த பிரிவில் இந்தியாவின் முதல் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

வரிசை எண்

பெயர்

பிடே புள்ளிகள்

1 விதித் சந்தோசு குச்ராத்தி 2723
2 பெண்டலா அரிகிருட்டிணன் 2705
3 அர்ச்சூன் எரிகாய்சி 2675
4 எசு. எல். நாராயணன் 2662
5 கிருட்டிணன் சசிகிரண் 2651

இரண்டாவது அணி[தொகு]

இரண்டாவது அணியில் ர. பிரக்ஞானந்தா, நிகால் சரின், டி குகேசு மற்றும் இரவுனக் சத்வானி, பி. அதிபன் உள்ளிட்ட இளம் சதுரங்க வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

வரிசை எண்

பெயர்

பிடே புள்ளிகள்

1 டி குகேசு 2659
2 நிகால் சரின் 2646
3 ர. பிரக்ஞானந்தா 2642
4 இரவுனக் சத்வானி 2619
5 பி. அதிபன் 2616

பெண்கள் அணி[தொகு]

முதல் அணி[தொகு]

இந்திய மகளிர் அணியில் கோனேரு அம்பி, உலகின் 10 ஆவது இடத்தில் உள்ள அரிகா துரோணவள்ளி, தானியா சாச்தேவு, வைசாலி இரமேசுபாபு மற்றும் பக்தி குல்கர்ணி ஆகியோர் முதல் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

வரிசை எண்

பெயர்

பிடே புள்ளிகள்

1 கோனேரு அம்பி 2586
2 அரிகா துரோணவள்ளி 2517
3 வைசாலி இரமேசுபாபு 2403
4 தானியா சாச்தேவு 2399
5 பக்தி குல்கர்ணி 2370

இரண்டாவது அணி[தொகு]

பெண்கள் பிரிவின் இரண்டாவது அணியில் சௌமியா சுவாமிநாதன், மேரி ஆன் கோமசு மற்றும் பத்மினி ரௌட் வந்திகா அகர்வால் மற்றும் திவ்யா தேசுமுக் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

வரிசை எண்

பெயர்

பிடே புள்ளிகள்

1 வந்திகா அகர்வால் 2371
2 சௌமியா சுவாமிநாதன் 2358
3 மேரி ஆன் கோமசு 2349
4 பத்மினி ரௌட் 2348
5 திவ்யா தேசுமுக் 2317

இந்திய அணி இளைஞர்கள் மற்றும் அனுபவத்தின் கலவையாக உள்ளது. ஒலிம்பியாடில் இரண்டு அணிகளை களமிறக்கும் வாய்ப்பு பல இளம் இந்தியத் திறமையாளர்களுக்கு தங்கள் ஆட்டத்தை மிகப்பெரிய கட்டத்தில் வெளிப்படுத்துவதற்கான கதவைத் திறக்கிறது. அணிகள் வலுவாகவும், அனுபவம் மற்றும் இளம் திறமையாளர்களின் நல்ல கலவையாகவும் இருக்கின்றன என்று அனைத்திந்திய சதுரங்கக் கூட்டமைப்பின் செயலர் பாரத் சிங் சவுகான் கூறியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "AICF announces biggest-ever Indian squad for 44th Chess Olympiad". www.4psnews.com. பார்க்கப்பட்ட நாள் 2022-05-21.