விதித் சந்தோசு குச்ராத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விதித் குச்ராத்தி
Vidit Gujrathi
TataSteelChess2018-13.jpg
டாடா எஃகு சதுரங்கப் போட்டியில் விதித்
நாடுஇந்தியா
பிறப்பு1994 அக்டோபர் 24[1]
நாசிக், மகாராட்டிரம்
பட்டம்சதுரங்க கிராண்டு மாசுட்டர் (2013)
பிடே தரவுகோள்2727 (திசம்பர் 2021)
உச்சத் தரவுகோள்2723 (பிப்ரவரி 2018)
தரவரிசைஇல. 22 (திசம்பர் 2021)

விதித் சந்தோசு குச்ராத்தி (Vidit Gujrathi) ஓர் இந்திய சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார். இவர் 1994 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் நாள் பிறந்தார். 2013 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் இவர் கிராண்டு மாசுட்டர் என்ற தகுதியைப் பெற்றார். அப்போது அவருக்கு வயது 18 ஆண்டு 3 மாதங்களாகும். எலோ தரப்புள்ளிகள் 2700 என்ற மதிப்பீட்டைக் கடந்த நான்காவது இந்தியராக குச்ராத்தி கருதப்படுகிறார். 2018 சனவரியில் உச்சமாக 2718 என்ற தரப்புள்ளிகளைப் பெற்று முன்னேற்றம் கண்டிருந்தார். விசுவநாதன் ஆனந்து, பென்டலா அரிகிருட்டிணன் ஆகியோருக்கு அடுத்து அதிக எலோ தரப்புள்ளிகள் பெற்றுள்ள மூன்றாவது இந்திய சதுரங்க வீர்ர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

வாழ்க்கை[தொகு]

டாக்டர் சந்தோசு குச்ராத்தி மற்றும் டாக்டர் நிக்டா சந்தோசு குச்ராதி ஆகியோருக்கு நாசிக்கில் 1994 ஆம் ஆண்டு அக்டோபர் 24 அன்று விதித் குச்ராத்தி பிறந்தார். பிராவாசி கல்விச்சாலையில் தனது ஆரம்பகாலக் கல்வியை விதித் பெற்றார், மிகச் சிறு வயதிலேயே சதுரங்கம் விளையாடவும் பயிற்சி பெற்றார். 2006 ஆம் ஆண்டில் ஆசிய இளையோர் சதுரங்கப் பட்டப் போட்டியில் 12 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார், இதன்மூலம் பிடே மாசுட்டர் என்ற தகுதி இவருக்குக் கிடைத்தது[2].

2008 ஆம் ஆண்டு சென்னை நகரில் நடைபெற்ற 45 ஆவது வேலம்மாள் தேசிய ஏ சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியில் 13 புள்ளிகளுக்கு 7 புள்ளிகளைப் பெற்ற போது குச்ராதி ஓர் அனைத்துலக சதுரங்க மாசுட்டர் என்ற தகுதியை அடைந்தார்[3]. மேலும் இதே 2008 ஆம் ஆண்டில் உலக இளையோர் சதுரங்க சாம்பியன் பட்டப் பொட்டியில் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் வெற்றி பெற்று உலக இளையொர் சதுரங்க சாம்பியன் என்ற பட்டத்தையும் வென்றார், இப்பெருமையை ஈட்டிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையும் இவருக்குச் சொந்தமானது[4]. இப்போட்டியில் ஈட்டுவதற்கு சாத்தியமுள்ள 11 புள்ளிகளுக்கு இவர் 9 புள்ளிகளைப் பெற்று அனைத்துலக மாசுட்டர் என்ற பட்டத்திற்கான இறுதி நிலையை நிறைவு செய்தார்.

2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக இளையோர் சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியில் 16 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் 2 ஆவது இடத்தைப் பிடித்தார், இப்போட்டியில் சகநாட்டு சதுரங்க வீரரும் இறுதி வெற்றியாலருமான எசு.பி சேதுராமனுடன் சேர்ந்து 9 சமப்புள்ளிகளை ஈட்டினார்[5]. 2011 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக இளையோர் சதுரங்கப் போட்டியில் சாத்தியமுள்ள 11 புள்ளிகளுக்கு இவர் 8 புள்ளிகளைப் பெற்று கிராண்டு மாசுட்டர் பட்டத்திற்கான முதலாவது தகுதி நிலையை நிறைவு செய்தார்[6]. இதே ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற அனைத்துலக சதுரங்க சாம்பியன் போட்டியிலும் விதித் 11 புள்ளிகளுக்கு 8 புள்ளிகளைப் பெற்றார். போட்டியின் இறுதி வெற்றியாளர் சியாவுர் இரகுமானைக் காட்டிலும் போட்டி முடிவில் விதித் ஒரு புள்ளி பின் தங்கியிருந்தார்[7]. இப்போட்டியில் விதித் கிராண்டு மாசுட்டர் பட்டத்திற்கான இரண்டாவது தகுதி நிலையை நிறைவு செய்தார். 2012 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற கிராண்டு மாசுட்டர்கள் சதுரங்கப் போட்டியின் எட்டாவது சுற்றில் தனது கிராண்டு மாசுட்டர் பட்டத்திற்கான இறுதி தகுதி நிலையை விதித் குச்ராத்தி நிறைவு செய்தார்[8]

துருக்கியில் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக இளையோர் சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியில் விதித் குச்ராத்தி வெண்கலப் பதக்கத்தை வென்றார்[9][10]. இதே ஆண்டு ஐதராபாத்தில் நடைபெற்ற அனைத்துலக கிராண்டு மாசுட்டர்கள் சதுரங்கப் போட்டியில் இவருக்கு மூன்றாவது இடம் கிடைத்தது. பரிசுத்தொகையாக 1.5 இலட்சம் ரூபாயும் இவருக்குக் கிடைத்தது[11].

காமன்வெல்த் சதுரங்க சாம்பியன் போட்டி உள்பட 2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளிலும் வெற்றியாளர்களின் பட்டியலில் முதல் பத்து இடங்களில் ஒரு இடம் விதித்திற்கு கிடைத்தபடியே இருந்தது. அனுப் தேசுமுக், ரோக்டிம் பந்தோபத்யாய், போன்ற அனைத்துலக சதுரங்க மாசுட்டர்களும் கிராண்டு மாசுட்டர் அலோன் கிரீன்பெல்டும் இவருக்கு பயிற்சியாளர்களாக நின்று பயிற்றுவித்தனர்[12]. முன்னதாக கிராண்டு மாசுட்டர் அபிகித் குந்தேவும் சில காலம் இவருக்கு பயிற்சியளித்துள்ளார். 2013 ஆம் ஆண்டு குச்ராத்தி எலோ தரப்புள்ளிகள் 2700 என்ற மதிப்பீட்டை ஈட்டினார். அரிகிருட்டிணன் என்ற மற்றொரு இந்திய சதுரங்க வீரருடன் விதித்தை ஒப்பிட்டு அவருக்கு இணையான வீர்ர் இவரென்று அபிகித் குந்தே புகழ்ந்துள்ளார்[9].

மேற்கோள்கள்[தொகு]

 1. "About me section on his website". 9 டிசம்பர் 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 24 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
 2. "Asian Youth championship 2006 U12". 15 December 2013 அன்று பார்க்கப்பட்டது.
 3. "Velammal 45th National A Chess Championship, 2008". 15 December 2013 அன்று பார்க்கப்பட்டது.
 4. Manuel Aaron (31 October 2013). "India dominates World Youth championships". Archived from the original on 27 டிசம்பர் 2008. https://web.archive.org/web/20081227202607/http://www.hindu.com/2008/10/31/stories/2008103162871900.htm. பார்த்த நாள்: 2 December 2013. 
 5. "World Youth Chess Championships 2009 Final Standings". Organiser. 2 December 2013 அன்று பார்க்கப்பட்டது.
 6. "World Junior Chess Championship 2011". 16 December 2013 அன்று பார்க்கப்பட்டது.
 7. "Nagpur International Open 2012". 16 December 2013 அன்று பார்க்கப்பட்டது.
 8. "Four Indians in seven-way lead; Gujrathi is GM". Hindu. 12 December 2013. http://www.thehindu.com/todays-paper/tp-sports/four-indians-in-sevenway-lead-gujrathi-is-gm/article4190042.ece. பார்த்த நாள்: 9 December 2013. 
 9. 9.0 9.1 "Historic World Junior Chess bronze for Vidit Gujrathi". Times of India. 27 September 2013. Archived from the original on 30 செப்டம்பர் 2013. https://web.archive.org/web/20130930213139/http://articles.timesofindia.indiatimes.com/2013-09-27/chess/42458709_1_world-junior-chess-vidit-gujrathi-cori-jorge. பார்த்த நாள்: 9 December 2013. 
 10. "India’s Vidit Gujarathi wins bronze at World Junior Chess". First Post. 27 September 2013. http://www.firstpost.com/sports/indias-vidit-gujarathi-wins-bronze-in-world-junior-chess-1136901.html. பார்த்த நாள்: 9 December 2013. 
 11. "Sethuraman and Varun take titles". Hindu. 4 December 2013. http://www.thehindu.com/sport/other-sports/sethuraman-and-varun-take-titles/article5418829.ece. பார்த்த நாள்: 9 December 2013. 
 12. "Winning is a habit for whizkid Vidit". Hindu. 17 September 2009. http://www.thehindu.com/sport/other-sports/winning-is-a-habit-for-whizkid-vidit/article4588.ece. பார்த்த நாள்: 9 December 2013. 

புற இணைப்புகள்[தொகு]