உள்ளடக்கத்துக்குச் செல்

எலோ தரவுகோள் முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அர்பத் எலோ, எலோ தரவுகோள் முறையைக் கண்டறிந்தவர்

எலோ தரவுகோள் முறை (Elo rating system) சதுரங்கம் போன்ற போட்டியாளர்-எதிர்-போட்டியாளர் பங்கேற்கும் விளையாட்டுக்களில் விளையாட்டாளர்களின் ஒப்பு நோக்கத்தக்க திறன் நிலைகளை கணக்கிடுவதற்கான முறையாகும். இந்த முறையை உருவாக்கிய அங்கேரியில் பிறந்த அமெரிக்க இயற்பியல் பேராசிரியர் அர்பத் எலோ பெயரிலேயே இது குறிப்பிடப்படுகிறது.

சதுரங்க விளையாட்டில் தரவரிசை நிர்ணயிக்க எலோ முறை உருவாக்கப்பட்டாலும் தற்காலத்தில் இது மற்ற பல விளையாட்டுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. பல போட்டியாளர்கள் பங்கேற்கும் நிகழ்பட ஆட்டங்களிலும்,[1] அணி விளையாட்டுக்களான காற்பந்தாட்டம், அமெரிக்க கல்லூரி காற்பந்து, கூடைப்பந்தாட்டம், பெரும் கூட்டிணைவு அடிப்பந்தாட்டம் போன்றவற்றிலும் தரவரிசைப் படுத்தும் முறையாக எலோ முறை பயன்படுத்தப்படுகிறது.

இரு விளையாட்டாளர்களின் தரவுகோள்களுக்கிடையேயான வேறுபாடு அவர்களுக்கிடையே நடக்கும் ஆட்டத்தின் முடிவை முன்கூட்டியே முடிவுற உதவுகிறது. சமநிலையில் உள்ள போட்டியாளர்களுக்கிடையேயான ஆட்டங்களில் இருவருமே இணையான ஆட்டங்களில் வெல்ல (ஒவ்வொருவருக்கும் 50% வெற்றி) வாய்ப்புண்டு. எதிராளியை விட 100 புள்ளிகள் கூடுதலாக உள்ள போட்டியாளர் வெல்ல 64% வாய்ப்பும் 200 புள்ளிகள் கூடுதலாக உள்ளவர் வெல்ல 76% வாய்ப்பும் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. [2]

ஓர் விளையாட்டாளரின் எலோ தரவுகோள் ஓர் எண்ணால் குறிக்கப்படுகிறது. தரப்பட்டியலில் உள்ள விளையாட்டாளர்களுடன் பெறும் வெற்றி/தோல்விகளைப் பொறுத்து விளையாட்டாளரின் தரவுகோள் எண் கூடியும் குறைந்தும் வரும். ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் வெற்றி பெற்ற போட்டியாளர் தோல்வியடைந்தவரிடமிருந்து புள்ளிகளை பெறுவர். எவ்வளவு புள்ளிகள் பெறுவார்கள் அல்லது இழப்பார்கள் என்பது இருவரது தரவுகோள்களுக்கிடையே உள்ள வேறுபாட்டைச் சார்ந்திருக்கும். உயர்ந்த எண் பெற்றுள்ள விளையாட்டாளருக்கும் குறைந்த நிலையில் உள்ள விளையாட்டாளருக்கும் நடக்கும் ஆட்டத்தொடரில் உயர்ந்த நிலையில் இருப்பவர் கூடுதல் வெற்றிகளைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கூடிய எண்ணுள்ளவர் வென்றால் ஒருசிலப் புள்ளிகளே தோல்வியடைந்தவரிடமிருந்து பெறுவார். ஆனால் குறைந்த எண்ணில் உள்ள விளையாட்டாளர் வென்றால் மிகுந்த புள்ளிகளை தோல்வியடைந்தவரிடமிருந்து பெறுவார். ஆட்டம் சமநிலையில் முடிந்தாலும் குறைந்த எண்ணில் உள்ள விளையாட்டாளருக்கு சில புள்ளிகள் உயர்நிலை விளையாட்டாளரிடமிருந்து மாற்றப்படும்.

மேற்சான்றுகள்

[தொகு]
  1. Wood, Ben. "Enemydown uses Elo in its Counterstrike:Source Multilplayer Ladders". TWNA Group. Archived from the original on 2009-06-12. பார்க்கப்பட்ட நாள் 2013-11-06.
  2. சதுரங்கத்தில், ஒரு வெற்றி ஒரு புள்ளியையும் சமநிலை ½ புள்ளியையும் தருகின்றது. எடுத்துக்காட்டாக, ஓர் எட்டு-ஆட்ட போட்டியில், ஓர் போட்டியாளருக்கு மூன்று வெற்றிகளும் மூன்று சமநிலைகளும் இரு தோல்விகளும் கிடைத்தால் அவருக்கு 8க்கு 4½ (56.25%) புள்ளிகள் கிடைக்கின்றன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலோ_தரவுகோள்_முறை&oldid=3546098" இலிருந்து மீள்விக்கப்பட்டது