உள்ளடக்கத்துக்குச் செல்

குகேஷ் தொம்மராஜு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(குகேஷ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
குகேஷ் தொம்மராஜு
Gukesh Dommaraju
2024 வேட்பாளர் சுற்றுப் போட்டியில் குகேசு
முழுப் பெயர்தொம்மராஜு குகேஷ்
நாடுஇந்தியா
பிறப்பு29 மே 2006 (2006-05-29) (அகவை 18)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பட்டம்கிராண்ட்மாசுட்டர் (2019)
பிடே தரவுகோள்2614 (திசம்பர் 2021)
உச்சத் தரவுகோள்2794 (அக்டோபர் 2024)
உச்சத் தரவரிசை5வது (அக்டோபர் 2024)
பதக்கத் தகவல்கள்

தொம்மராஜு குகேஷ் (Dommaraju Gukesh, பிறப்பு: 29 மே 2006) இந்திய சதுரங்கப் பேராதன் மற்றும் 18 ஆவது உலக சதுரங்க வாகையாளர் ஆவார். சதுரங்க மேதையான இவர், பேராதன் (கிராண்ட்மாஸ்டர்) பட்டத்திற்குத் தகுதி பெற்ற வரலாற்றில் மூன்றாவது-இளையவரும், 2700 என்ற சதுரங்க மதிப்பீட்டை எட்டிய மூன்றாவது-இளையவரும், 2750 மதிப்பீட்டை எட்டிய முதலாவது இளையவரும் ஆவார். குகேசு 2024 வேட்பாளர் போட்டியில் வென்று, உலக சதுரங்க வாகையாளர் பட்டத்திற்காகப் போட்டியிடும் இளைய போட்டியாளர் ஆனார்.[1] 18 ஆவது உலக சதுரங்க வாகையாளர் போட்டியில் திங் லிரேனை வென்று, வரலாற்றில் இளைய வயதில் உலக சதுரங்க வாகையாளர் ஆனார்.[2]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

குகேசு சென்னையில் 2006 மே 29 அன்று பிறந்தார். இவரது குடும்பம் ஆந்திரப் பிரதேசம், கோதாவரி வடிநிலப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். தந்தை ரஜனிகாந்த் ஒரு காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணரும், தாயார் பத்மா ஒரு நுண்ணுயிரியலாளரும் ஆவர்.[3] குகேசு தனது ஏழு வயதில் சதுரங்கம் விளையாடக் கற்றுக்கொண்டார்.[4] சென்னை மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் வித்தியாலயத்தில் படித்தார்.[5]

சதுரங்க வாழ்க்கை

[தொகு]

2015-2019

[தொகு]

குகேசு 2015 இல் 9-அகவைக்குட்பட்டோருக்கான ஆசியப் பள்ளிகளின் சதுரங்க வாகைப் போட்டியில் வென்றார்,[6] 2018 இல் 12 அகவைக்குட்பட்டோருக்கான உலக இளையோர் சதுரங்க வாகையை வென்றார்.[7] அத்துடன் 2018 ஆசிய இளையோர் வாகைப் போட்டிகளில், 12-இற்குட்பட்டோருக்கான தனிநபர் மின்வல்லு, விரைவுவல்லு, தனிநபர் மரபு வல்லு வடிவங்களில் ஐந்து தங்கப் பதக்கங்களையும் வென்றார்.[8] மார்ச் 2018 இல் 34-ஆவது கேப்பல்-லா-கிராண்டே திறந்த சுற்று பன்னாட்டு மாசுட்டர் பட்டத்திற்கான தேவைகளை நிறைவு செய்தார்.[9]

குகேசு 2019 சனவரி 15 அன்று 12 ஆண்டுகள், 7 மாதங்கள், 17 நாட்களில் வரலாற்றில் இரண்டாவது இளைய சதுரங்கப் பேராதன் ஆனார்.[10]

2021 சூனில், யூலியசு பேயர் சேலஞ்சர்சு சுற்றில், 19 இல் 14 புள்ளிகளைப் பெற்று வெற்றி பெற்றார்.[11]

ஆகத்து 2022 இல், குகேசு 44 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு போட்டியை 8/8 என்ற நேர்த்தியான மதிப்பெண்களுடன் தொடங்கினார், 8-ஆவது போட்டியில் இந்தியா-2 அணியை தரவரிசையில் நம்பர் 1 ஆன அமெரிக்காவைத் தோற்கடிக்க உதவினார். குகேசு 11 க்கு 9 மதிப்பெண்களுடன் முடித்து, 1-ஆவது பலகையில் தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.

செப்டெம்பர் 2022 இல், குகேசு முதற்தடவையாக 2700 என்ற தரவுகோளைத் (2726) தாண்டி,[12] இது வெய் யி, அலிரெசா பிரூஜா ஆகியோருக்குப் பிறகு 2700 தரவுகோளைக் கடந்த மூன்றாவது இளைய வீரராக ஆனார்.

அக்டோபர் 2022 இல், ஏம்செஸ் விரைவு வல்லுப் போட்டியில் உலக வாகையாளரான மாக்னசு மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய இளைய வீரர் ஆனார்.[13]

பெப்ரவரி 2023 இல், குகேசு தியூசல்டார்ஃபில் நடந்த WR மாசுட்டர்சு போட்டியின் முதல் பதிப்பில் பங்கேற்று, 5½/9 புள்ளிகளுடன், லெவன் அரோனியன், இயன் நெப்போம்னியாச்சியுடன் முதல் இடத்தைப் பிடித்தார். சமன்முறியில் அரோனியனுக்கு அடுத்தபடியாக குகேசு வந்தார்.

ஆகத்து 2023 தரவரிசைப் பட்டியலில், குகேசு 2750 மதிப்பீட்டை எட்டிய இளம் வீரர் ஆனார்.[14]

குகேசு சதுரங்க உலகக் கோப்பை 2023 சுற்றில் பங்கேற்று, மாக்னசு கார்ல்சனிடம் தோல்வியடைவதற்கு முன்னர் காலிறுதிக்கு வந்தார்.[15]

செப்டம்பர் 2023 தரவரிசைப் பட்டியலில், குகேசு அதிகாரப்பூர்வமாக விசுவநாதன் ஆனந்தைமுந்தி முதலிடத்தில் உள்ள இந்திய வீரராக இருந்தார்.[16][17]

திசம்பர் 2023 இல், 2023 பிடே சர்க்கியூட் சுற்றின் முடிவில் குகேசு 2024 உலக வாகையாளருக்கான வேட்பாளர் போட்டிக்குத் தகுதி பெற்றார்.[18] குகேசு சர்க்யூட்டில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார், ஆனால் வெற்றியாளரான பாபியானோ கருவானா ஏற்கனவே 2023 உலகக் கோப்பையின் மூலம் வேட்பாளர் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தார்.[19] குகேசு பாபி ஃபிஷர், மாக்னசு கார்ல்சன் ஆகியோருக்குப் பிறகு, வேட்பாளர் போட்டியில் விளையாடிய மூன்றாவது இளைய வீரர் ஆனார்.[20][21]

2024 வேட்பாளர் சுற்றில் "குகேசு எதிர் பிரூசா".

சனவரி 2024 இல், குகேஷ் 2024 டாட்டா ஸ்டீல் சதுரங்கப் போட்டியில் பங்கேற்று, 13 ஆட்டங்களில் (6 வெற்றி, 5 டிரா, 2 தோல்வி) 8.5 புள்ளிகளைப் பெற்று 4-வது இடத்தைப் பிடித்தார். 12-ஆவது சுற்றில், ர. பிரக்ஞானந்தாவுக்கு எதிராக வெற்றிபெறும் நிலையைப் பெற்றார், ஆனால் மூன்று முறை மீண்டும் மீண்டும் தவறு செய்தார். சமன்முறிகளில் குகேசு அரையிறுதியில் அனிஷ் கிரியைத் தோற்கடித்தார், ஆனால் இறுதிப் போட்டியில் வெய் யியிடம் தோற்றார்.[22]

2024 உலக சதுரங்க வாகையாளர் போட்டி

[தொகு]

2024 ஏப்ரலில், குகேசு கனடா, தொராண்டோவில் நடைபெற்ற 2024 உலக வாகையாளருக்கான வேட்பாளர் சுற்றில் பங்கேற்றார்.[23] குகேஷ், சக நாட்டு வீரர்களான ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, விதித் குசராத்தி ஆகியோருக்கு எதிராகக் கறுப்புக் காய்களுடனும், அலிரேசா பிரூச்சாவுடன் வெள்ளைக் காய்களுடனும், நிசாத் அபாசோவுடன் வெள்ளைக் காய்களுடனும் விளையாடி வெற்றி பெற்றார்.[24] பிரூச்சாவுடன் கறுப்புக் காய்களுடன் விளையாடியதே அவரது ஒரே இழப்பு. இது அவருக்கு 5 வெற்றிகள், 1 தோல்வி, 8 சமன்களைக் கொடுத்து, 9/14 என்ற மதிப்பெண்ணுடன், சுற்றை வென்றார். இதன் மூலம், 2024 நவம்பரில் நடந்த உலக வாகையாளர் போட்டியில் நடப்பு வாகையாளர் திங் லிரேனுடன் மோதுவதற்குத் தகுதி பெற்றார். உலக சதுரங்க வாகையாளர் போட்டியில் விளையாடிய இளைய வீரர் இவர் ஆவார்.[1] 2024 ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில், குகேஷ் டிங் லிரேனை வெற்றி கொண்டு உலக சதுரங்க வாகையாளர் போட்டியில் 7.5-6.5 என்ற புள்ளிகளுக்கு வெற்றி பெற்று 18வது உலக சதுரங்க வாகையாளர் ஆனார்.[25]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Candidates Chess: Gukesh becomes youngest winner, to challenge for world title". The Economic Times. 2024-04-22. https://economictimes.indiatimes.com/news/sports/candidates-chess-gukesh-becomes-youngest-winner-to-challenge-for-world-title/articleshow/109485704.cms. 
  2. "Gukesh Youngest Ever To Win Candidates Tournament, Tan Wins Women's By 1.5 Points". hindustan times (in அமெரிக்க ஆங்கிலம்). 12 திசம்பர் 2024. பார்க்கப்பட்ட நாள் 12 திசம்பர் 2024.
  3. Prasad RS (2019-01-16). "My achievement hasn't yet sunk in: Gukesh". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2019-03-18.
  4. Lokpria Vasudevan (2019-01-17). "D Gukesh: Grit and determination personify India's youngest Grandmaster". India Today. பார்க்கப்பட்ட நாள் 2019-03-18.
  5. "Velammal students win gold at World Cadet Chess championship 2018". Chennai Plus. 2018-12-09. Archived from the original on 27 March 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-03-18.
  6. Shubham Kumthekar; Priyadarshan Banjan (2018). "Gukesh D: The story behind a budding talent" இம் மூலத்தில் இருந்து 16 April 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190416062735/http://www.iiflwmumbaichess.com/index.php?option=com_content&view=article&id=134:gukesh%20d-the-story-behind-a-budding-talent&catid=8:news-event&Itemid=130. பார்த்த நாள்: 2018-12-09. 
  7. "Chess: India's Gukesh, Savitha Shri bag gold medals in U-12 World Cadets Championship". 2018-11-16. https://scroll.in/field/902419/chess-indias-gukesh-savitha-shri-bag-gold-medals-in-u-12-world-cadets-championship. பார்த்த நாள்: 2018-12-09. 
  8. Prasad RS (2018-03-13). "Gukesh wins 5 gold medals in Asian Youth Chess Championship". https://timesofindia.indiatimes.com/sports/chess/gukesh-wins-5-gold-medals-in-asian-youth-chess-championship/articleshow/63687428.cms. பார்த்த நாள்: 2018-12-09. 
  9. Prasad RS (2018-03-13). "Gukesh making all the right moves". https://timesofindia.indiatimes.com/sports/chess/gukesh-making-all-the-right-moves/articleshow/63289164.cms. பார்த்த நாள்: 2018-12-09. 
  10. Shah, Sagar (2019-01-15). "Gukesh becomes second youngest GM in history". ChessBase. https://en.chessbase.com/post/gukesh-becomes-second-youngest-gm-in-history. பார்த்த நாள்: 2019-01-15. 
  11. Rao, Rakesh (14 June 2021). "Gritty Gukesh wins Gelfand Challenge". The Hindu. https://www.thehindu.com/sport/other-sports/gritty-gukesh-wins-gelfand-challenge/article34815917.ece. 
  12. [https://ratings.fide.com/profile/46616543/chart Gukesh D, Rating Progress Chart, பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு
  13. "Gukesh D vs. Carlsen, Magnus | Aimchess Rapid | Prelims 2022". chess24.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-16.
  14. Gukesh Breaks Record: Youngest Player To Cross 2750 Rating, chess.com, July 21, 2023.
  15. "2023 Chess WC Q/Fs: Pragg takes Erigaisi to tie-breaks; Gukesh, Vidit out". ESPN.com (in ஆங்கிலம்). 2023-08-16. பார்க்கப்பட்ட நாள் 2023-08-16.
  16. Menon, Anirudh (September 1, 2023). "37 years - How the world changed as Anand stayed constant on top of Indian chess". ஈஎஸ்பிஎன்.
  17. Watson, Leon (September 1, 2023). "Gukesh Ends Anand's 37-Year Reign As India's Official Number 1". Chess.com.
  18. "Gukesh confirms his Candidates spot". ஹிந்துஸ்தான் டைம்ஸ் (in ஆங்கிலம்). 2023-12-30. பார்க்கப்பட்ட நாள் 2024-01-15.
  19. "FIDE World Championship Cycle". International Chess Federation (FIDE) (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-01-15.
  20. Gukesh confirms his Candidates spot, ஹிந்துஸ்தான் டைம்ஸ், December 31, 2023
  21. Who will win the 2024 Candidates Tournament?, Chessbase, 24 March, 2024
  22. Rao, Rakesh (2024-01-29). "TATA Steel Chess 2024: Gukesh finishes joint second in Masters, Mendonca wins Challenger". Sportstar (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-01-31.
  23. Magnus Predictions, chess.com, April 18, 2024
  24. Gukesh Youngest Ever Candidates Winner, Tan Takes Women's By 1.5 Points, chess.com, April 18, 2024
  25. Bureau, The Hindu (2024-12-08). "World Chess championship 2024 Game 11 LIVE updates: Gukesh and Ding Liren will try to break jinx of continuous draws" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/sport/other-sports/gukesh-vs-ding-world-chess-championship-2024-game-11-live-score/article68961469.ece. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குகேஷ்_தொம்மராஜு&oldid=4165191" இலிருந்து மீள்விக்கப்பட்டது