உள்ளடக்கத்துக்குச் செல்

2004 காளப்பட்டி வன்முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2004 காளப்பட்டி வன்முறை (2004 Kalapatti violence) என்பது 2004, மே, 16 அன்று தமிழ்நாட்டின், காளப்பட்டி கிராமத்தில் ஆதிக்க சாதி கிராம மக்களால் தலித்துகளுக்கு எதிராக நிகழ்த்தபட்ட வன்முறையைக் குறிக்கிறது. சுமார் 100 தலித் வீடுகளானது 200 கிராமவாசிகளைக் கொண்ட கும்பலால் எரிக்கப்பட்டன. தலித் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நிகழ்த்தப்பட்டதாகவும், தப்பிக்க முயன்ற தலித்துகள் தாக்கப்பட்டதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன. இந்தத் தாக்குதல்கள் சுமார் 2 மணி நேரம் நீடித்தது. இந்த வன்முறையில் 14 பேர் பலத்த காயமடைந்தனர், இதில் ஒருவரின் கை வெட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

கிராமத்தில் உள்ள தலித்துகள் 2004 இந்திய மக்களவைத் தேர்தலைப் புறக்கணித்ததைத் தொடர்ந்து பதட்டங்கள் தொடங்கியதாகக் கூறப்படுகிறது, ஏனெனில் அவர்களின் சில மனக் குறைகள் கண்டுகொள்ளப்படாமல் இருந்தன. பாஜக பொதுச் செயலாளர் அந்தக் கிராமத்திற்குச் சென்றபோது தலித்துகள் அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருந்ததால், அது ஆதிக்க சாதி கிராம மக்களையும், பாரதிய ஜனதா கட்சியினரையும் கோபப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. டாக்டர். அம்பேத்கரின் பிறந்தநாளைக் கொண்டாட சுவரொட்டி ஒட்டிக்கொண்டிருந்த தலித் இளைஞருக்கு எதிரான தாக்குதல் மற்றும் ஆட்டோ ரிக்சாவில் தலித் இளைஞர்களுக்கும் ஆதிக்க சாதியினருக்கும் இடையே தகராறு போன்றவை மற்ற சம்பவங்களிலும் இதில் அடங்கும்.

பொதுத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்கு பிறகு தலித்துகள் மீதான தாக்குதல்கள் தொடங்கின. பாஜக வேட்பாளரின் தோல்விக்கு தலித்துகள் மீது குற்றம் சாட்டி தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது என ஐக்கிய அமெரிக்க மாநிலங்களின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் பணியகத்தின் குறிப்பானது தெரிவித்தது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் இந்திய பொதுவுடமைக் கட்சியின் தலைவர்கள் வன்முறைக்கு பாஜக மீது குற்றம் சாட்டினர்.

பின்னணி

[தொகு]

காளப்பட்டி கிராமம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கிராமத்தில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக பலம் வாய்ந்த கவுண்டர் சாதியின் 2,000 குடும்பங்களை உள்ளடக்கிய கிராமம். தலித் மக்கள் வாழும் பகுதியில் அருந்ததியர் சாதியைச் சேர்ந்த 250 குடும்பங்களும் பறையர் சாதியைச் சேர்ந்த 10 குடும்பங்களும் போயர் சாதியைச் சேர்ந்த 150 குடும்பங்களும் இருந்தன.[1]

சாதி பாகுபாடு

[தொகு]

வன்கொடுமைக்கு எதிரான உலக அமைப்பின் கூற்றின்படி, கிராமத்தில் உள்ள தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆதிக்க சாதியினர் வாழும் தெருக்களில் நடக்க அனுமதிக்கப்படவில்லை. கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. தலித்துகளுக்கு எதிராக சாதிய அவதூறுகள் மற்றும் மிரட்டல்கள் அடிக்கடி செய்யப்பட்டன. மேலும் அவர்கள் தங்கள் தாழ் நிலையைக் குறிக்கும் விதமாக பொது இடங்களில் தலையைக் குனிந்து கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. தலித் பெண்கள் அடிக்கடி பாலியல் வன்கொடுமைக்கும், துன்புறுத்தலுக்கும் ஆளாகினர். தலித்துகளுக்கு தேனீர் கடைகளில் இரட்டைக் குவளை முறை பயன்பாட்டில் இருந்தது.[1][2][3][4]

தேர்தல் புறக்கணிப்பு

[தொகு]

2004 இந்தியப் பொதுத் தேர்தலின் போது, கிராமத்தில் உள்ள தலித்துகள், தங்களின் பல பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இருப்பதால், தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்தனர். தலித் சமூகத்தினரின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக, பல ஆண்டு கோரிக்கையாக உள்ள கிராமத்தின் பொதுக் கோவிலுக்குள் தாங்களை நுழைய அனுமதிக்க வேண்டும் என்பது ஆகும். அப்பகுதியில் உள்ள தலித்துகள் மீது கணிசமான செல்வாக்கை செலுத்திய மாநில அரசோ அல்லது சங்க பரிவாரங்களோ இந்த விசயத்தில் எதுவும் செய்யாமல் இருந்தன. அதனால், தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவெடுத்து அதன் வழியாக தலித் மக்கள் தங்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கிராமத்திற்குச் சென்றபோது, தலித்துகள் அவர்களை கண்டுகொள்ளாமல் இருந்தது பாஜக தொண்டர்களை கோபப்படுத்தியது. தலித் சமூகத்தின் தேர்தல் புறக்கணிப்பு முடிவை உள்ளூர் ஆதிக்க சாதியினரும் எதிர்த்தனர். தேர்தலில் பாஜக வேட்பாளர் சி. பி. இராதாகிருஷ்ணன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கே. சுப்பராயனிடம் தோல்வியடைந்தார். கவுண்டர் சமூகத்தை சேர்ந்த சுப்பராயனும் கிராமத்துக்கு பிரச்சாரம் செய்யவோ, மக்களின் குறைகளைக் கேட்கவோ வரவில்லை.[4][5]

வன்முறைக்கு முந்தைய நிகழ்வுகள்

[தொகு]

மே 14 அன்று டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் சுவரொட்டி ஒட்டிக் கொண்டிருந்த தலித் இளைஞர் ஒருவர் கவுண்டர் சாதியைச் சேர்ந்த சிலரால் தாக்கப்பட்டார். மே 15 அன்று ஆட்டோ ரிக்சாவில் கவுண்டர்கள் குழுவுடன் பயணித்த தலித் இளைஞர்கள் குழு, தலித் இளைஞர்கள் ஆதிக்க சாதியினர் முன்னிலையில் மகிழ்ச்சியாக இருந்ததால், அவர்களை இழிவான வார்த்தைகளில் திட்டியதாகவும், ரிக்சாவில் இருந்து இறங்கியதும் அவர்களில் ஒருவரை அறைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிகழ்வு குறித்து கோவில்பாளையம் காவல்நிலையத்தில் தலித் இளைஞர்கள் புகார் அளித்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் சாதிரீதியாக தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியதாக புகாரில் குறிப்பிட்டதை கைவிடுமாறு கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் தலித் இளைஞர்கள் எல்லாவற்றையும் புகாரில் சேர்த்தனர். ஆனால் காவல் துறையினர் புகாரை பதிவு செய்யவில்லை.[1][2] இந்த நிகழ்வே தாக்குதலுக்கு உடனடி காரணம் என்று நம்பப்பட்டாலும், சில தலித் அமைப்புகளின் தீவிர நிலைப்பாட்டின் காரணமாகவும், கிராமத்தில் உள்ள தலித்துகளின் வளர்ச்சி குறித்த அச்சம் இதற்கு அடிப்படைக் காரணம் என்று கருதப்படுகிறது.[4][6]

தாக்குதல்கள்

[தொகு]

2004, மே, 16 அன்று காளப்பட்டி கிராமத்தில் உள்ள புது காலனி, சாஸ்திரி நகர் ஆகிய தலித் மக்கள் வாழும் பகுதிகளில் வாள்கள், கம்பிகள் மற்றும் பிற ஆயுதங்களுடன் 200 ஆதிக்க சாதி கிராம மக்கள், தேர்தல் நடந்த பதினைந்து நாட்களுக்குள் தாக்குதல் நடத்தினர். சுமார் 100 வீடுகளை சூறையாடியதோடு, வீட்டு உபயோகப் பொருட்களையும் தொலைக்காட்சிப் பெட்டிகளையும் சேதப்படுத்தினர். தலித் மக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக ஓடியபோது, அரிவாள், இரும்பு கம்பிகள், நீண்ட தடிகள், கத்திகள் போன்றவற்றால் தாக்கப்பட்டனர். இரண்டு மணி நேரம் நீடித்த இந்த தாக்குதல்களில் 75 வயது முதியவர் உட்பட 14 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும், தாக்குதல் நடத்தியவர்கள் அவர்களை அவதூறான வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது.[4] இதில் மாட்டுக்கொட்டகைகள், இருசக்கர மோட்டார் வாகனங்கள், தலித் கோவில்கள் போன்றவற்றிற்கு தீ வைத்தனர். மேலும் தாக்குதலின் போது ஒருவரின் கை வெட்டப்பட்டது.[5] 100 வீடுகள் முற்றாக எரிந்து தரைமட்டமாக்கப்பட்டதாகவும், தாக்குதல் நடத்தியவர்களில் சிலர் தலித் பெண்களைத் துன்புறுத்தியதாகவும், வீடுகளில் இருந்த நகை, பணம் போன்றவை கொள்ளையடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.[1][7][8][9][10][11][12]

இனவெறி தொடர்பான ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளரின் 2005 ஆண்டு அறிக்கையின்படி, ஆதிக்க சாதி கிராம மக்கள் தலித்துகளை தரையில் தள்ளி, அவர்களை இழிவான சாதிச் சொற்களைப் பயன்படுத்தி திட்டி மிதித்துள்ளனர். தலித் பெண்களின் புடவைகள் உருவப்பட்டன. இன்னொரு சந்தர்ப்பத்தில், 8 மாத கைக்குழந்தை சுவரில் தூக்கி எறியப்பட்டது, 75 வயது முதியவர் தாக்கப்பட்டார், ஒரு நடுத்தர வயதுப் பெண் தன் மகனைக் காக்க முயன்றபோது தலையில் தாக்கப்படார். கிட்டத்தட்ட 100 வீடுகள் எரிக்கப்பட்டன. மேலும் தலித்துகளின் கால்நடைகளும் கொல்லப்பட்டன.[13][14] [10]

தாக்கப்பட்ட இடங்களில் ஆதித்தமிழர் விடுதலை முன்னணியின் அலுவலகங்களும் அடங்கும். பி. ஆர். அம்பேத்கரின் ஒளிப்படம் எரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மக்கள் கண்காணிப்பகம்-தமிழ்நாடு, சிவில் உரிமைகளுக்கான மக்கள் பேராயத்துக்கான தமிழ்நாடு பிரிவு மற்றும் தலித் மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற பல உண்மை கண்டறியும் குழுக்களின் அறிக்கைகளின்படி பல்கலைக்கழக, பள்ளி மாற்று சான்றிதழ்கள் மற்றும் நிலப் பட்டாக்கள் இதில் எரிக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களின் அறிக்கையின்படி, தாக்குதல் நடத்தியவர்கள் தலித் மக்களுக்கு சொந்தமான கால்நடைகளை கூட விட்டு வைக்கவில்லை.[4]

காளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பல தலித் மக்கள் தாக்குதலுக்கு பயந்து பக்கத்து கிராமங்களுக்கு தப்பிச் சென்றனர். தலித் மக்களுக்கான நிவாரணப் பணிகளுக்காக அரசு ₹ 20 லட்சம் ஒதுக்கியது. ஆனால் உடனடி இழப்பீடாக ₹ 2,42,000 மட்டுமே வழங்கப்பட்டது. இருந்த போதிலும், தலித்துகள் எரிக்கப்பட்ட பொருட்களை மறைக்க காவல்துறையினரால் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், அட்டூழியங்களின் அளவைக் குறைக்க முயற்சிப்பததாகவும் செய்திகள் வந்தன.[1]

கைதுகள்

[தொகு]

54 பேரை காவல் துறையினர் கைது செய்து, அவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கிராமத்தில் இருந்து வெறும் 7 கிலோமீட்டர் தொலைவில்தான் காவல் நிலையம் உள்ளது. ஆனால் தாக்குதல் நடந்த 2.5 மணி நேரத்திற்குப் பிறகுதான் காவல் துறையினர் நிகழ்விடத்திற்கு வந்ததாக ஆய்வுக் குழுக்கள் கூறினர். ஆனால் சில தலித் இளைஞர்கள் தாக்கிய கும்பல் நிகழ்விடத்தில் இருந்தபோதே காவல்துறையில் புகார் அளித்தனர்.[4]

விசாரணைகள்

[தொகு]

அமெரிக்க ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் பணியகம், தங்கள் வேட்பாளரின் தோல்விக்கு ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் தலித்துகள் மீது பழி சுமத்தியதால் இந்த வன்முறை நடந்ததாகக் கூறப்படுகிறது என அறிவித்தது.[12][15]

தேர்தலைப் புறக்கணித்ததற்காக பாஜகவின் அப்போதைய பொதுச் செயலாளரான சி. பி. இராதாகிருஷ்ணன் "பின்னர் அவர்களை பார்த்துக்கொள்ளுவோம்" என்று மிரட்டியதாக உள்ளூர் கிராம மக்கள் குற்றம் சாட்டினர். வன்முறைக்குப் பிறகு கிராமத்துக்குச் சென்ற தலித் தலைவர் தொல். திருமாவளவன் வன்முறைக்கு பாரதீய ஜனதா கட்சிதான் காரணம் என்று குற்றம் சாட்டினார். இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் இந்திய பொதுவுடமைக் கட்சி உறுப்பினர்களும் பாஜகவை குற்றம் சாட்டினர். மேலும் குற்றத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.[4]

இந்துத்துவா சக்திகள் அருந்ததிய இளைஞர்களை பயன்படுத்தி கோவைக்கு உள்ளேயும் வெளியேயும் தாக்குதல்களிலும், வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வந்தனர். பாரதிய ஜனதா கட்சி தனது இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள முயற்சித்த தேர்தலை தலித்துகள் புறக்கணித்ததால், அருந்ததியர்களின் மீதான தனது பிடியை தொடர்ந்து இழந்து வரும் சங்கப் பரிவாரத்தின் ஏமாற்றத்தையே இந்த நிகழ்வு காட்டுவதாக தலித் தலைவர்கள் தெரிவித்தனர்.[4]

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "India: India: 200 upper caste members attack a Dalit locality in South India and burn 100 houses / June 15, 2004 / Urgent Interventions / ESCR / OMCT". World Organisation Against Torture. 15 June 2004. Archived from the original on 22 அக்டோபர் 2020. பார்க்கப்பட்ட நாள் 19 நவம்பர் 2021.
  2. 2.0 2.1 "Attack on Dalits settlement in the Kalapatti Village, Coimbatore District, Tamil Nadu by upper caste - Report by the fact finding team of Asian Human Rights Commission" (PDF).
  3. "200 upper caste members attack a Dalit locality in South India and burn 100 houses: Police fail to offer protection and subsequently try to suppress evidence" (PDF). OMCT.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 4.7 விஸ்வநாதன், எஸ். (2 ஜூலை 2004). "சகியாமை மற்றும் எதிர்ப்பு". பிரண்ட்லைன் - தி இந்து (in ஆங்கிலம்). {{cite web}}: Check date values in: |date= (help)
  5. 5.0 5.1 "தேர்தல் வேண்டாம் என்று சொல்ல முடியுமா?". தி நியூ இந்தியன் எக்சுபிரசு: p. 1. 22 மார்ச்சு 2009. https://www.newindianexpress.com/magazine/2009/mar/22/can-we-really-say-no-to-polls-34918.html. 
  6. "Victims, still". Frontline - The Hindu (in ஆங்கிலம்). 29 December 2006.
  7. Research Directorate, Immigration and Refugee Board of Canada, Ottawa (13 December 2005). "India: Castes for Tamils living in the State of Tamil Nadu; whether Tamils belong to a specific caste; whether they are related to the untouchables (Harijans or Dalits); whether they face any problems with other castes or with the authorities because they belong to a particular caste (2003 - December 2005)". RefWorld - அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம். Canada: Immigration and Refugee Board of Canada.
  8. "INDIA: Brutal attack on Dalits settlement in the Kalapatti Village, Coimbatore District, Tamil Nadu by upper caste". Asian Human Rights Commission (in அமெரிக்க ஆங்கிலம்). 27 May 2004.
  9. "Hidden Apartheid: Caste Discrimination against India's "Untouchables": VIII. Article 5: Eliminate caste-based discrimination in the enjoyment of Fundamental Rights". Human Rights Watch. பார்க்கப்பட்ட நாள் 2020-06-21.
  10. 10.0 10.1 HRW 2007.
  11. Sadangi 2008.
  12. 12.0 12.1 "India - Bureau of Democracy, Human Rights, and Labor". U.S. Department of State. 28 பிப்ரவரி 2005. {{cite web}}: Check date values in: |date= (help)
  13. "United Nations Commission on Human Rights - Report by the Special Rapporteur on contemporary forms of racism, racial discrimination, xenophobia and related intolerance" (PDF). Human Rights Documents. 17 March 2005.
  14. "Human Rights Documents". ap.ohchr.org. பார்க்கப்பட்ட நாள் 2020-06-21.
  15. CRHRP 2004.

நூல் பட்டியல்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=2004_காளப்பட்டி_வன்முறை&oldid=3937874" இலிருந்து மீள்விக்கப்பட்டது