மலேசிய விலங்கியல் பூங்கா
மலேசிய விலங்கியல் பூங்கா | |
---|---|
மலேசிய விலங்கியல் பூங்கா 2011 | |
3°12′35″N 101°45′28″E / 3.20972°N 101.75778°E | |
திறக்கப்பட்ட தேதி | 14 நவம்பர் 1963 |
அமைவிடம் | உலு கிள்ளான், சிலாங்கூர், மலேசியா |
நிலப்பரப்பளவு | 110 ஏக்கர்கள் (45 ha) |
விலங்குகளின் எண்ணிக்கை | 5137 |
உயிரினங்களின் எண்ணிக்கை | 459 |
ஆண்டு பார்வையாளர்கள் | >1,000,000 |
உறுப்புத்துவங்கள் | ISO 9001:2008, SEAZA |
முக்கிய கண்காட்சிகள் | 16 முக்கிய காட்சிகள் |
வலைத்தளம் | www |
மலேசிய விலங்கியல் பூங்கா (மலாய்: Zoo Negara; ஆங்கிலம்: National Zoo) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தின் கோம்பாக் மாவட்டம் உலு கிளாங்கில் 110 ஏக்கர் (45 எக்டர்) நிலப்பரப்பில் அமைந்துள்ள ஓர் உயிரியல் பூங்கா ஆகும்.[1]
இதனை 14 நவம்பர் 1963-இல் மலேசியாவின் முதல் மலேசியப் பிரதமர், துங்கு அப்துல் ரகுமான் திறந்து வைத்தார். இந்தப் பூங்காவை மலேசிய விலங்கியல் கழகம் (Malaysian Zoological Society) எனும் அரசு சாரா அமைப்பு நிர்வகித்து வருகிறது. இப்பூங்காவிற்குத் தேவையான நிதி பார்வையாளர் கட்டணம், கொடையாளர்கள், மற்றும் விளம்பரதாரர்களின் மூலமாகக் கிடைக்கப் பெறுகிறது.[2]
இங்கு 459 வகையான இன வகைகளைச் சேர்ந்த 5137 விலங்குகள் உள்ளன. 90 விழுக்காட்டு விலங்குகள் அவற்றின் வாழுமிடச் சூழலுக்கு ஏற்ப பாதுகாக்கப் படுகின்றன. சூலை 2007-இல், MS ISO 9001:2008 தரச் சான்றிதழை பெற்றது. மேலும் தென்கிழக்கு ஆசிய உயிரியல் பூங்காக்கள் சங்கத்தின் (South East Asian Zoos Association) உறுப்பினராகவும் உள்ளது.
வரலாறு
[தொகு]1957-ஆம் ஆண்டில், மலாயா விவசாய தோட்டக்கலை சங்கம் (Malayan Agri-Horticultural Association) ஒரு சிறிய உயிரியல் பூங்காவை கோலாலம்பூரில் திறந்தது. அந்த உயிரியல் பூங்கா உருவாக்கப்பட்ட பிறகு, ஒரு தரமான விலங்கியல் பூங்காவை உருவாக்க வேண்டும் எனும் திட்டம் பரவலானது. அந்த வகையில் மலேசிய மத்திய அரசாங்கம் கோலாலம்பூர் உலு கிள்ளான் (Ulu Klang) பகுதியில் ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்தது.
1960-களில், உலு கிள்ளான் வளர்ச்சி அடையாத பசுமை நிறைந்த பகுதியாக இருந்தது. 1963-இல், மலாயாவின் (இப்போது மலேசியா) முதல் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் (Tunku Abdul Rahman) மலேசிய விலங்கியல் பூங்காவை பொதுமக்களுக்கு திறந்து வைத்தார்.
காட்டில் ஒரு விலங்கியல் பூங்கா
[தொகு]மலேசிய விலங்கியல் பூங்கா உருவாக்கப்பட்ட காட்டுப் பகுதியில், பசுமையான தாவரங்கள் நிறைந்து இருந்தன. அதன் காரணமாக மலேசிய விலங்கியல் பூங்காவிற்கு காட்டில் ஒரு விலங்கியல் பூங்கா (Zoo in the Jungle) என்று பெயர் வைக்கக்கப்பட்டது.
1966 நவம்பர் 14-ஆம் தேதி திறக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த விலங்கியல் பூங்கா அதன் மில்லியனாவது பார்வையாளர் வருகையைப் பெற்றது. அதன் பின்னர் 1986-ஆம் ஆண்டில், ஆண்டுக்கு 1 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்தது.
பெருகிவரும் நகர்ப்புற மக்கள்தொகை
[தொகு]1970-களின் பிற்பகுதி வரையில், கோலாலம்பூர் மாநகரின் பொருளாதார வளர்ச்சியின் காரணமாக விரைவான மக்கள்தொகை பெருக்கம் ஏற்படும் வரை, இந்த விலங்கியல் பூங்கா அடர்ந்த வெப்பமண்டல காடுகளால் சூழப்பட்டு இருந்தது.
அருகில் உள்ள உலு கிள்ளான் பகுதியில், பெருகிவரும் நகர்ப்புற மக்கள்தொகைக்கு இடமளிக்கும் வகையில் பெரிய அளவிலான குடியிருப்புகள் உருவாக்கப் பட்டன. அந்தக் கட்டத்தில் இந்த விலங்கியல் பூங்காவும் அதன் காட்டுச் சூழலை சன்னம் சன்னமாக இழக்கத் தொடங்கியது.
வேறு இடத்திற்கு மாற்றும் திட்டம்
[தொகு]1990-களின் பிற்பகுதியிலும்; 2000-களின் முற்பகுதியிலும்; இந்த விலங்கியல் பூங்காவை சிலாங்கூர் மாநிலத்தில் வேறு ஓர் இடத்திற்கு மாற்றும் திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.
இருப்பினும், விலங்கியல் பூங்காவின் பெரிய அளவிலான நிலத்தைப் பயன்படுத்திக் கொள்ள சில வீடுமனை கட்டுமான நிறுவனங்கள் முயற்சி செய்வதாகவும் சர்ச்சைகள் உருவாகின. அத்துடன் விலங்கியல் பூங்காவை வேறு இடத்திற்கு மாற்றும் திட்டங்கள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பையும் பெறவில்லை.
அரசாங்கத்தின் தீர்க்கமான முடிவு
[தொகு]இந்தக் கட்டத்தில் மலேசிய இயற்கை வளங்கள், பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சு; சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் ஆதரவுடன், விலங்கியல் பூங்காவை வேறு இடத்திற்கு மாற்றும் திட்டத்தை முழுமையாக நிராகரித்து விட்டது. இதன்வழி மலேசிய விலங்கியல் பூங்கா அதே இடத்தில் இன்றும் பழைய நிலையிலேயே பெருமை கொள்கிறது.
மேலும் காண்க
[தொகு]மலேசியத் தேசியப் பூங்காக்களின் பட்டியல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Zoo Negara". Tourism Malaysia. பார்க்கப்பட்ட நாள் 25 May 2014.
- ↑ "Zoo Negara - About Us". www.zoonegaramalaysia.my. Archived from the original on 2021-03-08. பார்க்கப்பட்ட நாள் 2018-05-29.