உள்ளடக்கத்துக்குச் செல்

மயிலாடுதுறை கருவாட்டுச் சந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மயிலாடுதுறை கருவாட்டுச் சந்தை என்பது தமிழ்நாட்டின், நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள ஒரு கருவாட்டுச் சந்தையாகும். இது தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட முதலாவது கருவாட்டுச் சந்தை ஆகும். இது துவக்கப்பட்டு நூற்றாண்டுக்கு மேலாகிறது.

இந்தக் கருவாட்டுச் சந்தை கடற்கரையிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரம் தள்ளி இருக்கிறது. இது அனைத்து மீனவர்களுக்கும் பொது வான ஒரு இடமாகவும் வெளியூர் வியாபாரிகள் எளிதில் வந்துபோகும் இடமாகவும் இருக்கிறது. இந்தச் சந்தை மயிலாடுதுறை தொடர்வண்டி நிலையத்துக்கு பக்கத்திலே உள்ள சித்தர்காடு என்னும் இடத்தில் வாரத்தில் ஒருநாள் ஞாயிற்றுக் கிழமை கூடுகிறது. அன்று சுமார் ஐயாயிரம் பேர் இந்தச் சந்தைக்கு வருகின்றனர்; சுமார் ஐந்து லட்ச ரூபாய்க்கு வணிகம் நடக்கிறது. சந்தை ஞாயிறு அன்றுதான் என்றாலும் சனிக்கிழமை பின்னிரவு இரண்டு மணிக்கே வியாபாரம் தொடங்கி விடும். இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கருவாட்டு வியாபாரிகள் இங்கு வியாபாரத்துக்கு வருகிறார்கள். கோவை, கரூர், திருச்சி, தஞ்சாவூர், சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கருவாட்டுக் கொள்முதலுக்காக இங்கு குவிகிறார்கள். இரவு இரண்டு மணிக்குத் தொடங்கி அதிகாலை ஆறு மணிக்குள் மொத்த வியாபாரத்தை முடித்துக் கொண்டு பெரிய வியாபாரிகள் புறப்பட்டுவிடுகின்றனர். அதன்பிறகு சிறு வியாபாரிகள் காலை ஐந்து மணிக்கு கடை விரித்து பத்து மணிவரையும், இதற்குப் பிறகு சில்லறை வியாபாரம் மாலை வரை நடக்கிறது. [1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. கரு. முத்து (14 சூலை 2017). "மவுசு குறையாத மயிலாடுதுறை கருவாட்டுச் சந்தை". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 14 சூலை 2017.