பேசர்
பேசர் | |
---|---|
![]() | |
ஆண் கேப் சிட்டுகள், நமீபியா | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வரிசை: | பசாரிபார்மிசு |
குடும்பம்: | தொல்லுலகச் சிட்டு |
பேரினம்: | பசார் ப்ரிஸ்ஸன், 1760 |
வேறு பெயர்கள் | |
பைர்கிடா குவியெர், 1817 |
பேசர் (Passer) என்பது சிட்டுகளின் பேரினம் ஆகும். இவை உண்மையான சிட்டுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தப் பேரினத்தில் சிட்டுக்குருவி மற்றும் ஐரோவாசிய மரச் சிட்டு ஆகியவை உள்ளன. இவை இரண்டுமே உலகில் காணப்படும் மிகவும் பொதுவான பறவைகளுள் சில ஆகும். இவை விதைகளைச் சாப்பிடுவதற்கென தடிமனான அலகுகள் கொண்ட சிறிய பறவைகள் ஆகும். பெரும்பாலும் சாம்பல் அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும். தொல்லுலகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவை. இப்பேரினத்தில் உள்ள சில இனங்கள் உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
வகைப்பாட்டியல்[தொகு]
இப்பேரினம் பிரெஞ்சு விலங்கியலாளரான மாதுரின் ஜாக்குவசு பிரிசனால் 1760 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.[1][2] இப்பேரினத்தின் மாதிரி இனமாக சிட்டுக்குருவி (Passer domesticus) இறுதியாக வகைப்படுத்தப்பட்டது.[2][3] பேசர் என்ற இலத்தீன் சொல்லுக்கு சிட்டு என்று பெயர்.[4]
உண்மையான சிட்டுகள் என்று அழைக்கப்படும் பேசர் பேரினத்திற்கும், இதை உள்ளடக்கிய குடும்பமான தொல்லுலகச் சிட்டுகள் என அழைக்கப்படும் பேசரிடே குடும்பத்தில் உள்ள மற்ற பேரினங்கள் மற்றும் இக்குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்கள் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட பரிணாம உறவுகளை, பறவை மரபியலை ஆய்வு செய்யும் அர்னைசு-வில்லேனா மற்றும் பிறர் ஆய்வு செய்தனர். 2001ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட அந்த ஆய்வின்படி இப்பேரினமானது ஆப்பிரிக்காவில் தோன்றியது. ஆப்பிரிக்காவின் கேப் சிட்டு இப்பேரினத்தின் அடிப்படையான இனம் என தெரிவிக்கப்பட்டது. சிட்டுக்குருவி மற்றும் பிற பாலியார்க்டிக் கருப்பு-பிப் சிட்டுகள் போன்றவை தெற்கு மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து தோன்றியிருக்கலாம் என கருதப்படுகிறது.[5][6]
இனங்கள்[தொகு]
உலகப் பறவைகளின் உசாநூலால் இப்பேரினத்தின் கீழ் அடையாளப்படுத்தப்பட்டுள்ள உயிரினங்கள் பின்வருமாறு:[7]
படம் | சாதாரண பெயர் | அறிவியல் பெயர் | வாழுமிடம் |
---|---|---|---|
![]() |
சாக்சவுல் சிட்டு | Passer ammodendri | நடு ஆசியா |
![]() |
சிட்டுக்குருவி | Passer domesticus | மத்திய கிழக்கு, ஐரோவாசியா மற்றும் வட ஆப்பிரிக்காவின் பகுதிகள். ஆர்க்டிக்கை ஒட்டிய வட அமெரிக்கா. தெற்கு தென்னமெரிக்கா, தெற்கு ஆப்பிரிக்கா, கிழக்கு ஆஸ்திரேலியா நியூசிலாந்து மற்றும் ஹவாய் ஆகிய இடங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. |
![]() |
இத்தாலியச் சிட்டு | Passer italiae | வடக்கு மற்றும் நடு இத்தாலி, கோர்சிகா, மற்றும் பிரான்சின் சிறு பகுதிகள், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா மற்றும் சுலோவேனியா |
எசுப்பானியச் சிட்டு | Passer hispaniolensis | மத்திய தரைக்கடல் பகுதி, மகரோனேசியா மற்றும் தென் மேற்கு மற்றும் நடு ஆசியா | |
![]() |
சிந்துச் சிட்டு | Passer pyrrhonotus | சிந்து சமவெளிப் பகுதி |
![]() |
சோமாலியச் சிட்டு | Passer castanopterus | வடக்கு சோமாலியா, சீபூத்தீ, எத்தியோப்பியா மற்றும் கென்யா. |
இலவங்கச் சிட்டு | Passer cinnamomeus | தென்கிழக்கு திபெத், பூடான், சிக்கிம், நேபாளம், உத்தரகாண்ட், மற்றும் இமாச்சலப் பிரதேசம் முதல் காஷ்மீர் மற்றும் ஆப்கானிஸ்தானில் நூரிசுதான் வரை | |
![]() |
ஆலிவ்-முதுகுச் சிட்டு | Passer flaveolus | மியான்மார் முதல் நடு வியட்நாம் மற்றும் தெற்கே மலேசியத் தீபகற்பத்தின் மேற்குப் பகுதி வரை |
![]() |
சாக்கடல் சிட்டு | Passer moabiticus | மத்திய கிழக்கு மற்றும் மற்றொரு தொகை மேற்கு ஆப்கானிஸ்தான் முதல் கிழக்கு ஈரான் வரை வாழ்கிறது |
![]() |
இயாகோ சிட்டு | Passer iagoensis | கேப் வர்டி தீவுக்கூட்டம் |
![]() |
பெரிய சிட்டு | Passer motitensis | தெற்கு ஆப்பிரிக்கா |
சோகோட்ரா சிட்டு | Passer insularis | சோகோட்ரா, சம்கா மற்றும் தர்சா தீவுகள் | |
அப்தல்குரிச் சிட்டு | Passer hemileucus | சோகோட்ரா தீவுக் கூட்டத்தின் அப்தல்குரித் தீவு | |
![]() |
கென்யச் சிட்டு | Passer rufocinctus | கென்யா மற்றும் தான்சானியா |
![]() |
செல்லியின் சிட்டு | Passer shelleyi | கிழக்கு ஆப்பிரிக்காவில் தெற்கு சூடான், தெற்கு எத்தியோப்பியா, மற்றும் வடமேற்கு சோமாலியாவில் இருந்து வடக்கு உகாண்டா மற்றும் வடமேற்கு கென்யா வரை |
கோர்டோபன் சிட்டு | Passer cordofanicus | தெற்கு சூடான் மற்றும் சாட் | |
![]() |
கேப் சிட்டு | Passer melanurus | அங்கோலாவின் நடு கடற்கரை முதல் கிழக்கு தென் ஆப்பிரிக்கா மற்றும் சுவாசிலாந்து வரை |
![]() |
வடக்கு சாம்பல்-தலைச் சிட்டு | Passer griseus | வெப்பமண்டல ஆப்பிரிக்கா |
![]() |
சுவைன்சனின் சிட்டு | Passer swainsonii | வடகிழக்கு ஆப்பிரிக்கா |
![]() |
கிளியலகுச் சிட்டு | Passer gongonensis | கிழக்கு ஆப்பிரிக்கா |
![]() |
சுவாகிலிச் சிட்டு | Passer suahelicus | தெற்கு கென்யா மற்றும் தான்சானியா |
![]() |
தெற்கு சாம்பல்-தலைச் சிட்டு | Passer diffusus | அங்கோலா மற்றும் ஜாம்பியா முதல் தெற்கே தென்னாப்பிரிக்கா வரை |
![]() |
பாலைவனச் சிட்டு | Passer simplex | வடக்கு ஆப்பிரிக்காவின் சகாரா பாலைவனம் |
![]() |
ஆசிய பாலைவனச் சிட்டு | Passer zarudnyi | உஸ்பெகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் |
![]() |
ஐரோவாசிய மரச் சிட்டு | Passer montanus | மிதமான ஐரோவாசியா மற்றும் தென் கிழக்கு ஆசியா. சார்டினியா, கிழக்கு இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், மைக்ரோனேசியா, ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ், ஐக்கிய அமெரிக்காவின் மிசூரி, இலினொய் மற்றும் அயோவா ஆகிய இடங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. |
![]() |
சூடானியத் தங்கச் சிட்டு | Passer luteus | துணை-சகாரா ஆப்பிரிக்கா |
![]() |
அரேபியத் தங்கச் சிட்டு | Passer euchlorus | தென்மேற்கு அரேபியா, மற்றும் சோமாலியா மற்றும் சீபூத்தீயின் கடற்கரை |
![]() |
கஷ்கொட்டைச் சிட்டு | Passer eminibey | சூடானின் தர்பர் முதல் தான்சானியா வரை |
தற்போதைய வாழும் இனங்கள் தவிர, ஆரம்ப மியோசீன் காலம் முதல் வாழ்ந்த சந்தேகத்திற்கிடமான தொல்லுயிர் எச்சங்கள்[8] மற்றும் நடு பிலெய்ஸ்டோசீன் கால Passer predomesticus ஆகியவையும் இப்பேரினத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
விளக்கம்[தொகு]
இப்பேரினத்தில் உள்ள சிட்டுகள் குண்டாக, சிறிய உருவத்துடன் இருக்கும் பழுப்பு அல்லது சாம்பல் வண்ண பறவைகள் ஆகும். இவை பெரும்பாலும் கருப்பு, மஞ்சள் அல்லது வெள்ளை வண்ண அடையாளங்களுடன் காணப்படும். இவை பொதுவாக 10 முதல் 20 சென்டிமீட்டர் நீளம் இருக்கும். 11.4 சென்டிமீட்டர் நீளம் மற்றும் 13.4 கிராம் எடையுடைய கஷ்கொட்டைச் சிட்டு முதல் 18 சென்டிமீட்டர் நீளம் மற்றும் 42 கிராம் எடையுள்ள கிளியலகுச் சிட்டு வரை இவை பல்வேறுபட்ட அளவுகளில் காணப்படுகின்றன.[9][10] இவை வலிமையான, கட்டையான, குட்டையான, கூம்பு வடிவ அலகுகளைக் கொண்டுள்ளன. இவை வளைந்த மேல் அலகையும் மற்றும் நாயமற்ற நுனிகளையும் கொண்டுள்ளன.[11] பேரினத்தில் உள்ள அனைத்து சிட்டுக்களும் சிட்டுக்குருவியின் அழைப்பைப் போன்று அழைப்பை ஏற்படுத்தக்கூடியவை. மேலும் சிட்டுக்குருவி தவிர, சில சிட்டுகள் விரிவான பாடல்களை போன்ற ஒலியை எழுப்பக் கூடியவையாக உள்ளன.
பரவல்[தொகு]
இப்பேரினத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு ஐரோவாசியாவின் வெப்பமான காலநிலை கொண்ட திறந்தவெளி பகுதிகளில் இயற்கையாகவே காணப்படுகின்றன. பரிணாமவியல் ஆய்வுகளின்படி இந்தப் பேரினமானது ஆப்பிரிக்காவில் உருவாகியது.[5] இப்பேரினத்தின் பல்வேறு இனங்கள் மனித வாழ்விடங்களில் வாழ தகவமைந்துள்ளன. இதன்காரணமாக, முக்கியமாக சிட்டுக்குருவி, மனிதர்களுடன் அதன் நெருங்கிய உறவு காரணமாக, தன் பூர்விக இடமான மத்திய கிழக்கைத் தாண்டி, தன் ஐரோவாசியப் பரவலை தாண்டி பல்வேறு இடங்களில் தற்போது பரவியுள்ளது.[12] சிட்டுக்குருவியானது அதன் இயற்கை வாழ்விடங்களை தாண்டி, இயற்கையாக பரவிய இடங்கள் தவிர, அமெரிக்காக்கள், சகாரா கீழமை ஆபிரிக்கா, மற்றும் ஆத்திரேலியா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்பேரினத்தின் மற்றொரு உயிரினமான ஐரோவாசிய மரச் சிட்டானது மனிதர்களால் சிறிய அளவில் புதிய இடங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்சிட்டுகள் ஆத்திரேலியா, ஐக்கிய அமெரிக்காவின் மிசூரி மற்றும் இலினொய் ஆகிய இடங்களிலும் தற்போது காணப்படுகின்றன.[12]
நடத்தை[தொகு]
இப்பேரினத்தில் உள்ள சிட்டுகள் ஒழுங்கற்ற கூடுகளை அமைக்கின்றன. உயிரினங்கள் மற்றும் கூடு அமைக்கும் இடம் கிடைக்கக்கூடிய தன்மை ஆகியவற்றைப் பொருத்து இவை புதர் அல்லது மரம், கட்டடம் அல்லது கூரை ஆகியவற்றில் இயற்கையாக அமைந்துள்ள பொந்து, செங்கால் நாரை போன்ற பறவைகள் அமைத்த கூட்டின் எஞ்சிய பகுதிகள் ஆகியவற்றில் கூட்டை அமைக்கும். இவை ஒரே தடவையில் 8 முட்டைகள் வரை இடக்கூடியவை. இரண்டு பெற்றோரும் முட்டைகளை அடைகாக்கும். 12 முதல் 14 நாட்களில் முட்டைகளிலிருந்து குஞ்சுகள் பொரிக்கும். 14 முதல் 24 நாட்களில் குஞ்சுகள் கூட்டைவிட்டுப் பறக்க ஆரம்பிக்கும்.
இப்பேரினத்தில் உள்ள சிட்டுகள் பொதுவாக தரையில் இரை தேடும் விதை உண்ணிகள் ஆகும். எனினும், குறிப்பாக முட்டையிடும் காலத்தில், இவை சிறிய அளவு பூச்சிகளையும் உண்ணும். சில சிட்டுகள், உதாரணமாக சிட்டுக்குருவி மற்றும் வடக்கு சாம்பல்-தலைச்சிட்டு ஆகியவை நகரங்களில் எஞ்சிய உணவுகளை தேடி அலையக் கூடியவை. இவை கிட்டத்தட்ட அனைத்துண்ணிகள் என அழைக்கும் அளவிற்கு உள்ளன.[13] இப்பேரினத்தின் பெரும்பாலான சிட்டுகள் கூடி வாழும் தன்மை கொண்டவை. கணிசமான அளவிற்கு மந்தைகளை உருவாக்கக் கூடியவை.[9]
உசாத்துணை[தொகு]
- ↑ Mathurin Jacques Brisson (1760) (in French, Latin). Ornithologie, ou, Méthode contenant la division des oiseaux en ordres, sections, genres, especes & leurs variétés. Volume 1. Paris: Jean-Baptiste Bauche. பக். 36, Pl. 1 fig. 6. https://biodiversitylibrary.org/page/36010434.
- ↑ 2.0 2.1 Ernst Mayr; Greenway, James C. Jr, தொகுப்பாசிரியர்கள் (1962). Check-list of birds of the world. Volume 15. Cambridge, Massachusetts: Museum of Comparative Zoology. பக். 8. https://biodiversitylibrary.org/page/14485381.
- ↑ George Robert Gray (1840). A List of the Genera of Birds : with an Indication of the Typical Species of Each Genus. London: R. and J.E. Taylor. பக். 46. https://biodiversitylibrary.org/page/13668963.
- ↑ Jobling, James A. (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London, United Kingdom: Christopher Helm. பக். 294. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4081-2501-4. https://archive.org/details/Helm_Dictionary_of_Scientific_Bird_Names_by_James_A._Jobling.
- ↑ 5.0 5.1 Allende, Luise M.; Rubio, Isabel; Ruiz del Valle, Valentin; Guillén, Jesus; Martínez-Laso, Jorge; Lowy, Ernesto; Varela, Pilar; Zamora, Jorge et al. (2001). "The Old World sparrows (genus Passer) phylogeography and their relative abundance of nuclear mtDNA pseudogenes". Journal of Molecular Evolution 53 (2): 144–154. doi:10.1007/s002390010202. பப்மெட்:11479685. Archived from the original on 21 July 2011. https://web.archive.org/web/20110721034443/http://chopo.pntic.mec.es/~biolmol/publicaciones/Passer.pdf.
- ↑ Arnaiz-Villena, A; Gómez-Prieto P; Ruiz-de-Valle V (2009). "Phylogeography of finches and sparrows". Animal Genetics. Nova Science Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-60741-844-3. Archived from the original on 2012-09-02. https://web.archive.org/web/20120902141846/https://www.novapublishers.com/catalog/downloadOA.php?order=1&access=true&osCsid=f7d95dd4e10269d6823050c20fe2bf4e. பார்த்த நாள்: 2014-12-05.
- ↑ Summers-Smith, J. D.; Bonan, A. (2017). "Family Passeridae (Old World Sparrows)". in del Hoyo, J., Elliott, A., Sargatal, J., Christie, D.A.; de Juana, E.. Handbook of the Birds of the World Alive. Barcelona: Lynx Editions. http://www.hbw.com/node/52371.
- ↑ Mlíkovský 2002, ப. 247
- ↑ 9.0 9.1 Clement, Harris & Davis 1993, ப. 442
- ↑ Bledsoe, A. H.; Payne, R. B. (1991). Forshaw, Joseph. ed. Encyclopaedia of Animals: Birds. London: Merehurst Press. பக். 222. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-85391-186-6.
- ↑ Groschupf, Kathleen (2001). "Old World Sparrows". in Elphick, Chris; Dunning, Jr., John B.; Sibley, David. The Sibley Guide to Bird Life and Behaviour. London: Christopher Helm. பக். 562–564. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7136-6250-4.
- ↑ 12.0 12.1 Summers-Smith, J. D. (1990). "Changes in distribution and habitat utilisation by members of the genus Passer". in Pinowski, J.; and Summers-Smith, J. D.. Granivorous birds in the agricultural landscape. Warszawa: Pánstwowe Wydawnictom Naukowe. பக். 11–29. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-83-01-08460-8.
- ↑ Summers-Smith 1988, ப. 253–255