பிளசண்ட் ஸ்டே விடுதி வழக்கு
ஜெ.ஜெயலலிதா | |
நாள் | 14 மே1998 1998-05-14) |
---|---|
அமைவிடம் | சென்னை |
பங்கேற்றோர் | ஜெ. ஜெயலலிதா, டி. எம். செல்வகணபதி |
தண்டனை | அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், ஊழல், குற்றவியல் சதி |
தீர்ப்பு | உயர் நீதிமன்றம்: அனைவருக்கும் எல்லா குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை விசாரணை நீதிமன்றம்: ஜெயலலிதா, செல்வகணபதி விடுதலை |
வழக்கு | 11 ஆண்டுகள் |
பிளசண்ட் ஸ்டே விடுதி வழக்கு என்பது 1991-96இல் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த ஜெ. ஜெயலலிதாவுக்கு எதிரான தொடுக்கப்பட்ட ஒரு பரபரப்பான வழக்கு ஆகும். ஜெயலலிதா மற்றும் அவரது அமைச்சரவை சகாவான டி. எம். செல்வகணபதி ஆகியோர், கொடைக்கானலில் உள்ள பிளெசண்ட் ஸ்டே விடுதியை விதிமுறைகளை மீறி ஏழு தளங்களை கட்ட அனுமதிக்க அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. 1996 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியை அடுத்து கருணாநிதி தலைமையிலான திமுக அரசாங்கம் பொறுப்பேற்ற போது இது தொடர்பாக வழக்கும், குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின்போது கீழ் நீதிமன்றத்தால் ஜெயலலிதா மற்றும் டி. எம். செல்வகணபதி ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கில் இந்த இருவருக்கும் மேலும் மூன்று பேருக்கும் ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பையடுத்து ஏற்பட்ட வன்முறையால் மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டதால் இந்த வழக்கு அரசியல் தாக்கங்களைக் கொண்டதாக ஆனது. இச்சமயம் மாநிலம் முழுவதும் ஏற்பட்ட வன்முறையின் விளைவாக ஐந்து பேருந்துகள் எரிக்கப்பட்டன, ஐம்பது பேருந்துகள் சேதமடைந்து 40 பேர் காயமடைந்தனர். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூன்று மாணவிகள் தர்மபுரியில் பேருந்தில் உயிருடன் எரிக்கப்பட்டனர் .[1] இந்த வழக்கில் மூன்று அதிமுக கட்சித் தொண்டர்கள் குற்றவாளிகள் என உறுதிப்படுத்தப்பட்டு, 2007 இல் மரண தண்டனை பெற்றனர், ஆனால் இத் தண்டனை பின்னர் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.[2] இந்த தீர்பின் காரணமாக 2001 தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட ஜெயலலிதா தகுதி நீக்கம் செய்யப்பட காரணமான இந்த வழக்கு அரசியல் தாக்கங்களைக் கொண்டிருந்தது. அந்தத் தேர்தலில் ஜெயலலிதாவின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டாலும், தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற பின்னர் அவர் முதல்வராக பதவியேற்றார். இதில் தலையிட்ட உச்சநீதிமன்றம் அவரை செப்டம்பர் 2001 இல் தகுதி நீக்கம் செய்தது, இதன் விளைவாக அவர் பதவி விலகினார். மேலும் வி.கே.சசிகலாவின் பரிந்துரைப்படி ஓ. பன்னீர்செல்வத்தை முதலமைச்சராக ஆக்கினார். ஜெ. ஜெயலலிதாவுக்கு பதவிப்பிரமாணம் செய்வித்த தமிழக ஆளுநர் பாத்திமா பீவி, ஆளுநர் பதவியில் இருந்து விலகுமாறு அறிவுறுத்தப்பட்டார், அவரும் தன் பதவி விலகல் கடிதத்தை இந்திய குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார்.
டான்சி நிலபேர வழக்கோடு, 2001 திசம்பர் 4, அன்று அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் சென்னை உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவையும் மற்ற நான்கு குற்றவாளிகளையும் விடுவித்தது. ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் 2003 நவம்பர் 24 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. 2002 மார்ச்சில் ஆண்டிபட்டி தொகுதியில் இருந்து 2002 தமிழக சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார்.
பின்னணி
[தொகு]ஜெ. ஜெயலலிதா 1991-96,2001,2002–06 மற்றும் 2011–14, 2015-2016 வரையிலான பல்வேறு காலக்கட்டங்களில் ஆறு முறை தமிழக முதல்வராக இருந்தவர்.
1991 ஏப்ரலில் மிட்டல் என்பவர் கொடைக்கானலில் ப்ளெசண்ட் ஸ்டே என்ற பெயரில் ஒரு விடுதியை இரண்டு தளங்களாக கட்ட அனுமதி பெற்றார். 1992 சனவரியில், ஏழு தளங்களாக விடுதியைக் கட்ட அனுமதி கோரி திருத்தப்பட்ட திட்டத்தை அவர் சமர்ப்பித்தார். அவரது மனுவை கொடைக்கானல் நகரியம் நிராகரித்து. இதையடுத்து அவர் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு முடிவுக்காக காத்திருக்காமல், அவர் விடுதியை நான்கு மாடிகளாகக் கட்டத் தொடங்கினார். விதிமுறை மீறி கட்டப்பட்ட விடுதியை எதிர்த்து பழனிமலை பாதுகாப்பு கவுன்சில், சென்னை உயர் நீதிமன்றத்தில் 1997 இல் வழக்குத் தொடர்ந்தது. வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்துவந்தது. விடுதி மற்றும் பழனிமலை பாதுகாப்பு கவுன்சில் இடையே நடந்த சட்டப் போராட்டத்தில் பழனிமலை பாதுகாப்பு கவுன்சில் வென்றது. இதற்கிடையில் 1994 மே 13, அன்று, ஜெயலலிதா அரசாங்கம் Ms. No.126 என்ற அரசாணையை வெளியிட்டது. இந்த அரசாணை மூலம் மிட்டலுக்கு விதிமுறைகளை மீறி இரண்டு தளங்களுக்கு மேல் கூடுதலாக இன்னம் ஐந்து தளங்களாக மொத்தம் ஏழு தளங்களை கட்ட அனுமதியளிக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்கு பிறகு வந்த புதிய அரசானது இந்த விதிவிலக்கு முறைகேடு குறித்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, உள்ளாட்சித் துறை அமைச்சர் செல்வகணபதி, நகராட்சித்துறை செயலாளரும் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான எச். எம். பாண்டே ஆகியோர் சட்டத்திற்குப் புறம்பாக அனுமதி அளித்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும் விடுதி நிர்வாகிகள் மிட்டல், பாளை சண்முகம் ஆகியோர் என இந்த வழக்கில் ஐந்துபேர் குற்றம் சாட்டப்பட்டனர். அக்காலக்கட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர்வழங்கல் செயலாளராக இருந்த பி. சி. சிரியாக் இந்த கட்டுமானத்துக்கு அனுமதியளிக்க அனுமதிக்கவில்லை என்றும், அவருக்கு பதிலாக பாண்டே நியமிக்கப்பட்டார் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. 1994 திசம்பர் 6, அன்று, அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட அரசாணையானது 1994 மே 13 மே முதல் நடைமுறைக்கு வரும் வகையில் GO, Ms. No.317 என்ற மற்றொரு உத்தரவு நிறைவேற்றியது, இது இந்த விடுதி கட்டிடத்தை கட்டுப்பாட்டு விதிகளிலிருந்து காத்தது. 1994 மார்ச் 31, அன்று, தரைதளம் மற்றும் முதல் தளங்களைத் தவிர வேறு எந்த தளத்தையும் பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தால் மிட்டலுக்கு உத்தரவிட்டப்பட்டது. அவர் மேல் முறையீடுக்குச் சென்றபோது 1994 மே 13, இல் அரசாணை ரத்து செய்யப்பட்டது.[3]
தனி நீதிமன்றம்
[தொகு]இராதாகிருஷ்ணன் என்ற சிறப்பு நீதிபதி முன்நிலையில் இந்த வழக்கு சென்னை தனி நீதிமன்றத்தில் நடைபெற்றது. ஜெயலலிதா மீதான இந்த ஊழல் வழக்குகளுக்கான மூத்த சிறப்பு அரசு தலைமை வழக்கறிஞர் என். நடராஜன் தலைமையில் அரசு தரப்பு வழக்கறிஞர் குழுவில் அரசு சிறப்பு வழக்கறிஞர்களான எஸ். ராமசாமி மற்றும் கே. இ. வெங்கடராமன், சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆர். கருணாகரன் மற்றும் வழக்கறிஞர் சுந்தர் மோகன் ஆகியோரால் இருந்தனர். சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் தலையீடு காரணமாக இந்த சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் விசாரணை அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) தாக்கல் செய்யப்பட்டது என்று நீதிபதி குறிப்பிட்டார். இதனால் விடுதி நிர்வாகத்திற்கு சாதகம் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இருப்பினும் விடுதி நிர்வாகத்திற்கு ஆதரவாக அரசாணையை நிறைவேற்றியதில் சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகளுக்கு எந்தவொரு ஆதாயமும் இருப்பதாக நிரூபிக்கப்படவில்லை. இந்த வழக்கைப் பற்றிய விவரங்களை அறிந்த பாண்டே, கோப்பை நேரடியாக ஜெயலலிதாவுக்கு செலவாகனபதி வழியாக அனுப்பி தலைமைச் செயலக நடைமுறைகளை பின்பற்றவில்லை என்று அது சுட்டிக்காட்டியது. 2000 பெப்ரவரி 2 அன்று, ஐந்து பேரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர் மற்றும் ஜெயலலிதாவுக்கு ஓராண்டு கடும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது மற்றும் அரசு ஊழியரின் குற்றவியல் சதி, குற்றவியல் முறைகேடு குற்றச்சாட்டில் ₹ 2,000 அபராதம் விதிக்கப்பட்டது. நீதிபதி தனது உத்தரவில், "ஜெயலலிதா, செல்வகணபதி மற்றும் பாண்டே ஆகியோர் ராகேஷ் மற்றும் பழனி ஆகியோருக்கு ஆதரவாக குற்றவியல் முறைகேடு செய்தார்கள் என்பதற்கு நியாயமான சந்தேகத்திற்கும் அப்பாற்பட்ட போதுமான சூழ்நிலை ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன, மேலும் அனைவரும் குற்றச் சதித்திட்டத்தில் ஈடுபட்டவர்கள். எனவே ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 13 (2) இன் கீழ் குறைந்தபட்ச தண்டனையை விதிக்க நான் விரும்புகிறேன்." [3] 2000 பெப்ரவரி 9, அன்று, ஜெயலலிதாவின் மேல்முறையீட்டின் பேரில் சென்னை உயர் நீதிமன்றம் தண்டனையை தற்காலிகமாக நிறுத்திவைத்தது.
பின்விளைவுகள்
[தொகு]இந்த தீர்ப்பால் ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் கோபமடைந்தனர், இது மாநிலம் முழுவதும் போராட்டங்களுக்கும் வன்முறைகளுக்கும் வழிவகுத்தது, அதிமுக கட்சிக்காரர்களால் பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.[4] இரண்டு அதிமுகவினர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த வன்முறையால் ஐந்து பேருந்துகள் எரிக்கப்பட்டன, ஐம்பது பேருந்துகள் சேதமடைந்து 40 பேர் காயமடைந்தனர். மாநில தலைநகர் சென்னையில் பெரும் வன்முறைகள் நடந்தன. அங்கு அரசின் 22 மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் சேதமடைந்தன. இதனால் 27 பேர் காயமடைந்தனர். மாநில பேருந்து போக்குவரத்து 24 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் 400 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இதில் சென்னையில் இருந்து மட்டும் 317 பேர் கைது செய்யப்பட்டனர்.[5]
இதில் உச்சபட்ச வன்முறையாக தருமபுரி பேருந்து எரிப்பு நடந்தது. இதில் மூன்று மாணவிகள் கொல்லப்பட்டனர். 2000 பெப்ரவரி 2, அன்று, கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எழுபது மாணவர்கள் இரண்டு பேருந்துகளில் கல்வி சுற்றுப்பயணத்தை முடித்து திரும்பி வந்துகொண்டிருந்தனர். அவர்கள் வந்த பேருந்து கும்பலால் தடுத்து நிறுத்தப்பட்டது. அவர்கள் மாணவர்களைத் பேருந்திலிருந்து இறங்கும்படி கட்டாயப்படுத்தினர். மாணவர்கள் அனைவரும் பேருந்திலிருந்து வெளியே வருவதற்கு முன் பெட்ரோல் குண்டை வீசி, பேருந்துக்கு தீ வைத்தனர். இதில் இருந்த சென்னையைச் சேர்ந்த ஹேமலதா, விருத்தாச்சலத்தைச் சேர்ந்த வி காயத்ரி, நாமக்கலைச் சேர்ந்த கோகிலவாணி என மூன்று மாணவிகள் எரித்து கொல்லப்பட்டனர், மேலும் மாணவர்கள் 16 பேர் காயமுற்றனர்.[6] பேருந்து எரியும் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டு மறுநாள் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன.[7] இந்த சம்பவம் மாணவர் சமூகத்தினர் மத்தியியல் கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை ஒரு வாரம் மூடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது, மேலும் மாநிலம் முழுவதும் மாணவர்கள் அமைதி ஊர்வலங்கள் மற்றும் எதிர்ப்பு பேரணிகளை நடத்தினர்.[8] இந்தச் செயலில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று அதிமுக நபர்களுக்கு, உயர் நீதிமன்றம் 2007 திசம்பர் 5 அன்று மரண தண்டனை விதித்தது. இது கீழ் நீதிமன்ற உத்தரவை உறுதிப்படுத்தியது ஆகும். அதிமுகவின் 25 நபர்களுக்கு குறைந்தபட்ச தண்டணையாக ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.[9]
1996 நாடாளுமன்றத் தேர்தலின் போது திமுகவுடன் கூட்டணி வைத்திருந்த தமிழ் மாநில காங்கிரசு, எதிர்வரும் இடைத்தேர்தல்களில் அதிமுகவை ஆதரித்த நேரத்தில் இந்த தீர்ப்பு வந்தது. இது அதிமுகவின் திட்டமிட்ட வேலை என்று திமுக குற்றம் சாட்டியது, அதே நேரத்தில் அதிமுக சிபிஐ விசாரணையை கோரியது.[5]
குறிப்புகள்
[தொகு]- ↑ "HOTEL CASE VERDICT: AIADMK volunteers go berserk". The Hindu. 3 February 2000. பார்க்கப்பட்ட நாள் 8 July 2018.
- ↑ "Dharmapuri bus burning: SC commutes death sentence to life imprisonment". பிசினஸ் ஸ்டாண்டர்ட். 11 March 2016. பார்க்கப்பட்ட நாள் 8 July 2018.
- ↑ 3.0 3.1 The conviction of Jayalalitha. 17. Frontline. 3 March 2000. http://www.frontline.in/static/html/fl1704/17040380.htm. பார்த்த நாள்: 1 January 2014.
- ↑ "HOTEL CASE VERDICT: AIADMK volunteers go berserk". The Hindu. 2000-02-03 இம் மூலத்தில் இருந்து 4 September 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/5jXX8MV2I?url=http://www.hindu.com/2000/02/03/stories/04032231.htm. பார்த்த நாள்: 31 October 2015.
- ↑ 5.0 5.1 "Jayalalitha convicted, supporters go on rampage". India Abroad. 11 February 2000 இம் மூலத்தில் இருந்து 28 March 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150328134356/http://www.highbeam.com/doc/1P1-79276989.html. பார்த்த நாள்: 1 November 2015.
- ↑ "3 burnt alive" இம் மூலத்தில் இருந்து 2009-09-04 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/5jXX7yBMw?url=http://www.hinduonnet.com/2000/02/03/stories/01030005.htm. பார்த்த நாள்: 2009-08-08.
- ↑ "Sun TV news editor deposes in bus-burning trial" இம் மூலத்தில் இருந்து 23 பிப்ரவரி 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060223221505/http://www.hindu.com/2005/06/22/stories/2005062206970500.htm. பார்த்த நாள்: 31 October 2015.
- ↑ "Schools and colleges ordered shut in Tamil Nadu". Archived from the original on 4 September 2009. பார்க்கப்பட்ட நாள் 31 October 2015.
- ↑ "High court upholds death penalty to 3 AIADMK men" இம் மூலத்தில் இருந்து 17 November 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181117072425/https://www.highbeam.com/doc/1P3-1393966791.html. பார்த்த நாள்: 1 November 2015.