நாகேசுவரர் கோயில், பேகூர்

ஆள்கூறுகள்: 12°52′36″N 77°37′36″E / 12.87674°N 77.62671°E / 12.87674; 77.62671
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாகேசுவரர் கோயில்
இந்து கோயில்
பேகூரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க நாகநாதேசுவரர் கோவில்
பேகூரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க நாகநாதேசுவரர் கோவில்
நாடு India
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்பெங்களூரு நகர மாவட்டம்
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாககன்னடம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)

நாகேசுவரர் கோயில் வளாகம் (Nageshvara Temple, நாகநாதேசுவரர் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பெங்களூர் நகர்ப்புற மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரமான பேகூரில் அமைந்துள்ள கோயிலாகும். இந்த ஊர் ஒரு காலத்தில் வேப்பூர் என்றும், கெலேலே என்றும் அழைக்கபட்டது கல்வெட்டுகளின் வழியாக அறியப்படுகிறது (மேலைக் கங்க மன்னர் துர்வினிதனின் மொல்லஅல்லி நிவந்தக் கல்வெட்டில் கி.பி. 580-625). கோயில் வளாகத்தில் உள்ள இரண்டு சிற்றாலயங்களான நாகேசுவரர் மற்றும் நாகேசுவரசுவாமி ஆகிய கோயில்கள் மேலைக் கங்க மரபின் மன்னர்களான முதலாம் நீதிமார்கன் (இரிகங்க நீதிமார்கன், 843-870 என்றும் அழைக்கப்படுகிறார்) மற்றும் இரண்டாம் எரேயப்பா நீதிமார்கன் (இரண்டாம் இரிகங்க நீதிமார்கன் 90-7- 921 என்றும் அழைக்கப்படுகிறார்.) ஆட்சியின்போது கட்டப்பட்டன. வளாகத்தில் மீதமுள்ள கோவில்கள் பிற்காலத்தில் சோழர் ஆட்சிக்காலத்தில் கட்டபட்டவை என்று கருதப்படுகின்றன. [1] இங்கு உள்ள கி.பி. 890 ஆண்டைய பழங்கன்னட கல்வெட்டில், " பெங்களூர் போர்" (நவீன பெங்களூர் நகரம்) குறிப்பிடபட்டுள்ளது. கோவில் வளாகத்தில் காணப்படும் இக்கல்வெட்டுச் செய்தியை கல்வெட்டாய்வாளர் ஆர். நரசிம்மச்சார் கண்டுபிடித்தார். இந்தக் கல்வெட்டு "எபிகிராஃபியா கர்னாட்டிகா" (தொகுதி 10 பிற்சேர்கையில்) இல் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூர் என்ற இடம் இருந்ததற்கான பழைய சான்று இதுவாகும். [2]

கோயில் அமைப்பு[தொகு]

பேகூர், நாகேசுவரர் கோயிலில் உள்ள நந்தி மண்டபம்
பேகூர், நாகேசுவரர் கோவிலில் உள்ள நடுகல் ( வீரக்கல் ).

நாகேசுவரர் கோயிலில் மூலவர் ஒரு எளிய சதுர கருவறையில் ( கர்ப்பக்கிருகம் ) உள்ளார். கருவறைக்கு முன்புறம் ஒரு முன்மண்டபம் ( அந்தரளம் ) உள்ளது. இதற்கு முன்புறம் ஒரு மகாமண்டபம் அல்லது நவரங்கா ) உள்ளது. மகாமண்டபத்திற்கு முன்புறம் ஒரு திறந்த மண்டபம் (அக்ரா-மண்டபம்) உள்ளது. இந்த திறந்த மண்டபத்திற்கான நுழைவாயிலுக்கு தென்மேற்கு மற்றும் வடமேற்கு மூலைகளில் கந்தணி அமைந்த படிகள் வழியாக செல்லவேண்டும். [3] திறந்த மண்டபமானது சமமற்ற ஆறு தூண்களைக் கொண்டுள்ளது. இதில் நந்தி சிலை வெளிப்புற அடுக்கில் (நான்கு தூண்களுக்கு இடையில் ) "தாமரை மேடையில்" ( பத்ம-பீடம் ) வைக்கப்பட்டுள்ளது. வெள்ளைக் கற்களாலான தூண்கள் எளிய வடிவமைப்பில் உள்ளன. கோயிலின் பல பகுதிகளில் உள்ள, திறந்த மற்றும் மூடிய மண்டபங்கள் போன்றவை பிற்காலத்தில் புதுப்பிக்கப்பட்டதாகத் தெரிகிறது. கருவறையில் ஒரு இலிங்கம் உள்ளது. [3]

மகாமண்டபத்தின் ( நவரங்கா ) விதானமானது மேலைக் கங்கர்களின் கலைப் பாணியைக் கொண்டுள்ளது. கோயிலில் அட்டதிக்பாகர்களின் சிலைகள் உள்ளன. இதில் நான்கு கை உமா-மகேசுவரரின் (சிவனும் அவர் மனைவி பார்வதியும் ) சிலை உள்ளது. மகா மண்டபத்தின் முன்னுள்ள திறந்த மண்டபத்தின் மேற்கூரையில் மையத்தில் சிவனும், பார்வதியும் அமர்ந்திருக்கும் புடைப்புச் சிற்பம் உள்ளது. மண்டபத்தில் மகிசாசுரமர்த்தினி, தனித்துவமான இரு கைகள் உடைய பிள்ளையார், காலபைரவர் ஆகியவர்களின் சிற்பங்கள் உள்ளன. வாயிலின் புடைப்பு நிலையில் தாமரைகள் கொண்ட சுழல்களில் பூத கணங்கள் கொண்ட கொடியின் செதுக்கு வேலைப்பாடுகள் உள்ளன. வாயிலின் உச்சியில் மையத்தில் கஜலட்சுமியின் உருவம் உள்ளது. [3]

மேலைக் கங்கர்களின் இன்னொரு கட்டுமானமான நாகேசுவரசுவாமி கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது கருவறை சதுரமாக அமைந்துள்ளது. அதற்கு முன்னால் ஒரு முன்மண்டபமும், அதற்கும் முன்னால் ஒரு திறந்த மண்டபமாக, முக மண்டபம் என்று அழைக்கப்படும் ஒரு தனி மண்டபம் உள்ளது. இந்த மண்டபம் எட்டு தூண்களைக் கொண்டு உள்ளது. முகமண்டபத்தில் நந்தியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது அது நந்தி மண்டபமாகவும் உள்ளது. கோயில் நுழைவாயிலின் அடிப்பகுதி கங்கை - யமுனை உருவங்கள் பணிப் பெண்களுடன் செதுக்கபட்டுள்ளன. இது சாளுக்கிய - இராஷ்டிரகூடர்களின் கலை தாக்கமாகத் தெரிகிறது. [4]

குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  • Sarma, I.K. (1992). Temples of the Gangas of Karnataka. New Delhi: Archaeological Survey of India. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-560686-8. 
  • "Alphabetical List of Monuments - Karnataka -Bangalore, Bangalore Circle, Karnataka". Archaeological Survey of India, Government of India. Indira Gandhi National Center for the Arts. பார்க்கப்பட்ட நாள் 15 July 2012.