உள்ளடக்கத்துக்குச் செல்

தி வே ஹோம் (2002 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி வே ஹோம்
இயக்கம்லீ ஜியோங்-ஹியாங்
தயாரிப்புஹுவாங் வூ-ஹியூன்
ஹுவாங் ஜே-வூ
கதைலீ ஜியோங்-ஹியாங்
இசைகிம் டே-ஹியங்
கிம் யங்-ஹீ
நடிப்புகிம் யுல்-பூன்
யூ செங்-ஹோ
ஒளிப்பதிவுயூன் ஹியங்-சிக்
படத்தொகுப்புகிம் ஜே-பும்
கிம் சங்-பும்
கலையகம்டியூப் பிக்சர்ஸ்
விநியோகம்சி.ஜே என்டெர்டெயின்மென்ட்
டியூப் என்டெர்டெயின்மென்ட்
வெளியீடுஏப்ரல் 5, 2002 (2002-04-05)
ஓட்டம்1 மணி 27 நிமிடங்கள்
நாடுதென் கொரியா
மொழிகொரிய மொழி
மொத்த வருவாய்ஐஅ$24,952,738[1]

தி வே ஹோம் (அங்குல்집으로; இலத்தீன்Jibeuro) 2002-ஆம் ஆண்டு லீ ஜியோங்-ஹியாங் என்ற இயக்குநரால் எழுதி இயக்கப்பட்ட திரைப்படமாகும். இப்படம் நகரவாசியான பேரன், தன் பாட்டியுடன் ஒரு குக்கிராமத்தில் வசிக்கும் அழகான வாழ்வைச் சித்தரிக்கிறது. இத்திரைப்படம் தென் கொரியாவின் 2002-ஆம் ஆண்டு மிக உயர்ந்த உள்நாட்டுப் பட வரிசையில் இரண்டாவது இடம் பெற்றது.

கதைச் சுருக்கம்

[தொகு]

நகரவாசியான பேரன் தன் பாட்டியுடன் விருப்பமின்றித் தங்குகிறான். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல தன் பாட்டியின் உண்மையான அன்பைப் புரிந்து கொள்கின்றான். கோடை விடுமுறை என்னும் குறுகிய காலத்தில் பாட்டி மற்றும் பேரனுக்கு இடையில் நடக்கும் ஓர் அன்புப் புரிதலே இக்கதைச் சித்திரத்தின் கதைச் சுருக்கம் ஆகும்.

கதை

[தொகு]

ஒரு கோடை விடுமுறையில் சங்-வூவை அவனது தாய், தன் அம்மா வீடான அவனது பாட்டி வீட்டில் விட்டு வருகிறாள். அது மலைப்பாதைகளுடன் கூடிய ஒரு குக்கிராமம். ஆனால் நகரத்தில் பிறந்து வளர்ந்த பேரன் சங்-வூ, அங்கு வேண்டாவெறுப்பாகத் தங்குகிறான். பாட்டி, அவன் விளையாட சில விளையாட்டுச் சாமான்களை தருகிறாள். அவை பிடிக்காமல் தன்னிடமிருந்த நிகழ்பட விளையாட்டுப் பொருளை எடுத்து நிகழ்பட ஆட்டம் விளையாடுகிறான். நாளடைவில் அது மின்கலன் திறனை இழந்து விடுகிறது. அதை மாற்றுவதற்குப் பாட்டியிடம் காசு கேட்கிறான். பாட்டியிடம் பணம் இல்லாததால் சைகையால் ஏதோ சொல்ல முற்பட, அதைப் புரிந்து கொள்ள முடியாத சங்-வூ கோபத்தில் பாட்டியைத் தள்ளிவிடுகிறான். சுவற்றில் பாட்டியின் கேலிச்சித்திரத்தை வரைந்து வைக்கிறான். எங்கு தேடியும் பணம் கிடைக்காததால், வெறுப்பில் பாட்டியின் செருப்பை எடுத்து ஒளித்து வைக்கிறான். ஆனால் பாட்டி அந்தத் தள்ளாத வயதிலும் செருப்பில்லாமல் தண்ணீர் எடுக்கச் செல்கிறாள்.

ஒருநாள் பாட்டி சாப்பிட என்ன வேண்டுமெனக் கேட்க, சங்-வூ ஆங்கிலத்தில் சிக்கன் வேண்டுமெனக் கேட்கிறான். பாட்டிக்குத் தான் கூறியது புரியாததால் சைகையில் கோழி வேண்டுமெனப் புரியவைக்கிறான். பாட்டி கோழி வாங்கப் புறப்பட, மகிழ்ச்சியுடன் வழியனுப்புகிறான். பாட்டி, திரும்பி வீட்டிற்கு அடைமழையில் நனைந்து கொண்டே வருகிறாள். பசியில் சங்-வூ தூங்கி விட, பாட்டி தான் கொண்டு வந்த கோழியை சமைக்கத் துவங்குகிறாள். சாப்பிட பேரனை எழுப்ப, முழித்துப் பார்த்த சங்-வூ 'தான் கேட்டது பொறித்தக் கோழி, ஆனால் இது அவித்தக் கோழி' என்று அழுகிறான். இருந்தாலும், பசியில் சாப்பிடுகிறான். அடுத்த நாள் பாட்டிக்குக் காய்ச்சல் வருகிறது. இதையறிந்த சங்-வூ பாட்டிக்குக் கம்பளியைப் போர்த்தி விடுகிறான். மீதமிருக்கின்ற உணவை சாப்பிடக் கொடுக்கிறான். பாட்டி மேல் பேரனுக்கு சிறிய அன்பு பிறக்கிறது.

கிராமத்தில் அவன் வயதொத்த சிறுமி ஒருத்தியும், சீல்-இ என்ற வயல் வேலை செய்யும் கிராமத்துப் பையனும் அறிமுகமாகிறார்கள். முரட்டு மாடு ஒன்று மலைப்பாதையில் நடப்பவரைத் துரத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. இது சங்-வூவுக்கு கேளிக்கையாக அமைகிறது.

பாட்டி, சங்-வூவை ஒருநாள் சந்தைக்கு அழைத்துச் செல்கிறாள். தன் பூசணிகளை விற்று வந்த பணத்தில், பேரனுக்கு அவன் விரும்பியவற்றை வாங்கித் தருகிறாள். மேலும், அவன் இன்னொரு குழந்தை சாப்பிடும் காவிக்கண்டு வேண்டுமென்று கேட்கிறான். அது என்னவென்று தெரியாத பாட்டி, அந்த காவிக்கண்டின் காகிதத்தை எடுத்து அதே போல நிறைய காவிக்கண்டுகளை வாங்கித் தருகிறாள். பிறகு பேருந்தில் அவன் தோழர்களுடன் வீட்டிற்கு வழியனுப்பி வைக்கிறாள். பாட்டி வருகைக்காக சங்-வூ காத்திருக்கிறான். பேரனுக்கு செலவு செய்யக் காசு வேண்டுமென பேருந்தில் வராமல் பாட்டி மூட்டையை சுமந்து கொண்டு நடந்தே வருகிறாள்.

மறுநாள் சீல்-இ சுமையுடன் மலைப்பாதையில் நடப்பதைப் பார்த்த சங்-வூ, மாடு துரத்துகிறதென சீல்-இயை ஏமாற்ற சீல்-இ ஓடித் தடுமாறி விழுகிறான். கோபத்துடன் சீல்-இ சங்-வூவின் அருகில் வர, தன் பாட்டி தன் நெஞ்சில் கையை வைத்துச் சுற்றும் ஒருவித சைகையைச் செய்துவிட்டு சங்-வூ ஓடிவிடுகிறான். சீல்-இ, அதைக் கண்டு அமைதியாகிறான்.

இன்னொரு நாள், சங்-வூ தன் தோழியுடன் விளையாட அனைத்து பொம்மைகளையும் எடுத்துக் கொண்டு கிளம்புகிறான். பாட்டி எதையோ காகிதத்தில் சுற்றி அவன் கையில் கொடுக்கிறாள். போகும் வழியில் சீல்-இ மாடு வருகிறதென சங்-வூவை எச்சரிக்க, அவன் ஏமாற்றுகிறான் என சங்-வூ நினைக்கிறான். ஆனால், உண்மையிலேயே மாடு துரத்தி வர தடுமாறி விழுகிறான். மாட்டிடமிருந்து சங்-வூவை சீல்-இ காப்பாற்ற, அவனிடம் மன்னிப்புக் கேட்கிறான் சங்-வூ. ஏற்கனவே கேட்டுவிட்டாயே என்று சீல்-இ புன்னகைக்க, பாட்டியின் அந்த சைகைக்கு "மன்னித்து விடு" என்ற அர்த்தத்தை புரிந்து கொள்கிறான் சங்-வூ. காயத்துடன் வீடு திரும்பும் வழியில், பாட்டி கொடுத்த காகிதத்தைப் பிரித்துப் பார்க்கிறான். அதில், அவனுடைய பழைய நிகழ்பட ஆட்டக் கருவியும், அதனுடன் மின்கலன் வாங்குவதற்கான பணமும் இருக்கிறது. சங்-வூ, பாட்டியின் அன்பை நினைத்துக் கண் கலங்குகிறான்.

வீட்டில் சங்-வூவின் அம்மாவிடமிருந்து அவனை நாளை அழைத்துச் செல்வதற்கான கடிதம் வந்திருந்தது. இனிமேல் பாட்டியைப் பார்க்க முடியாது என்பதால், அன்றிரவு தனக்குக் கடிதம் அனுப்புவதற்காக பாட்டிக்கு இரு சொற்கள் மட்டும் எழுதக் கற்றுக்கொடுக்கிறான். நடுங்கும் விரல்களால் எழுத முடியாமல் பாட்டியும் அழுகிறாள்.

மறுநாள், பாட்டியைப் பிரிந்து அம்மாவுடன் சோகத்தோடு கிளம்புகிறான் சங்-வூ. போகும் முன், சில அட்டைகளைப் பாட்டியிடம் கொடுத்துவிட்டுச் செல்கிறான். அவன் போன பின்பு, பாட்டி அந்த அட்டைகளைப் பார்க்கிறாள். அதில் கடிதம் அனுப்புவதற்காக "உடல் நலமில்லாமல் இருக்கின்றேன்" என்றும், "உன் இன்மையை உணர்கின்றேன்" என்றும் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது. இறுதியாக, பாட்டி கவலையுடன் தன் வீட்டை நோக்கி அந்த மலைப்பாதையில் தன்னந்தனியே நடந்துச் செல்கிறாள்.

நடிகர்கள்

[தொகு]
  • பாட்டியாக நடித்தவர் - கிம் யுல்-பூன்.
  • சங்-வூ(பேரன்)வாக நடித்தவர் - யூ சேங்-ஹோ.
  • சங்-வூவின் தாயாக நடித்தவர் - டோங் ஹியோ-ஹீ.
  • சீல்-இ (வயல்வேலை செய்யும் கிராமத்துப் பையன்)ஆக நடித்தவர் - மின் கியுங்-ஹியூன்.

படப்பிடிப்புத் தளம்

[தொகு]

தி வே ஹோம் திரைப்படத்தின் படப்பிடிப்பானது, தென் கொரியாவிலுள்ள வடக்கு ஜியோங்சங் மாகாணம் ஜீடோங்மா பகுதியில் படமாக்கப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Way Home (2002)". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் 26 April 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_வே_ஹோம்_(2002_திரைப்படம்)&oldid=3905442" இலிருந்து மீள்விக்கப்பட்டது