தோழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புற ஒழுக்கத்தில் துணைநிற்பது நட்பு. அக ஒழுக்கத்தில் துணைநிற்பது தோழமை. பண்டைய தமிழ் இலக்கியங்கள் அகவாழ்க்கையில் தலைவனுக்குத் துணைநிற்பவனைப் பாங்கன் என்றும், தலைவிக்குத் துணைநிற்பவளைத் தோழி என்றும் வழங்குகின்றன. தோழி அகத்திணை வாயில்களில் ஒருவர். தலைவிக்கு அவளை வளர்த்த செவிலியின் மகள் தோழியாக இருப்பாள். [1]

களவொழுகத்தில் தோழியின் பங்கு [2][தொகு]

களவு-வாழ்க்கை என்பது திருமணத்துக்கு முன்னர் வாழும் வாழ்க்கை. இதில் தோழின் பங்கை 7 வகை எனவும், 32 வகை எனவும் தொல்காப்பியம் தொகுத்துக் காட்டுகிறது.

7 வகையான பேச்சு[தொகு]
 1. தலைவியிடம் தோன்றும் ஏழு வகையான வேறுபாடுகள் தலைவிக்கும் தலைவனுக்கும் உள்ள உறவைக் காட்டிக் கொடுத்துவிடும். அவை (1) உடலில் தோன்றும் மணம், (2) தோற்றத்தில் பொலிவு, (3) உணவு செல்லாமை, (4) மறைவாகச் செயல்படுதல், (5) தோழியை விட்டு விலகிச் செல்லுதல், (6) தோழியிடம் புதுமையாகப் பழகுதல், (7) புணர்ச்சியை எதிர்பார்க்கும் உணர்ச்சி வெளிப்படுதல் ஆகியவை அந்த ஏழு.
 2. மெய்யாகவும் பொய்யாகவும் பார்க்கும் பார்வை.
 3. அவனை அறியாதவள் போல நடித்தல்
 4. பொதுப்பட உலகியல் பேசுதல்
 5. விலக்க முடியாமல் அவனை விலக்கல்.
 6. அவனைப் பின்னர் வா என்று கூறுதல்
 7. அவனை ஏமாற்றிப் பித்தனாக்கல்
 8. முன்பே உள்ள உறவைக் கூறி அச்சுறுத்தல்
32 வகையான பேச்சு[தொகு]
அவனுக்கு உதவல்

வந்தவனிடம் மாயம் செய்தல், அவன் அவளைப் புணர்ந்த பின்னர் அவனை வணங்குதல், அவளிடம் அவள் போக்குக்கு உட்பட்டுப் பக்குவமாக நடந்துகொள்ளுதல், அவளுக்கு நல்லது செய்தல், அவள் விரும்பினால் உதவுதல், விரும்பாவிட்டால் அவனைப் பிரிந்து செல்ல வைத்தல், அவன் முயற்சிக்கு உதவுதல்,

புணர்ச்சிக்குப் பின்னர்
 • அவன் இன்னது செய்யவேண்டும் என ‘ஓம்படைக் கிளவி’ கூறுதல், ‘செங்கடு மொழி’யால் அவளிடம் உரையாடல், அவனுக்காக அவளை வற்புறுத்தல், அவன் வரும் வழியின் இடையூறுகளைப் பேசல், அவள் பெற்றோர் பாதுகாப்பில் இருப்பதை அவனுக்கு உரைத்தல். அவனது பிறப்பு சிறப்பு முதலானவற்றைத் தெளிவாக அறிந்துகொண்டு திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தல் முதலாவை அவன் அவளைப் புணர்ந்து சென்றபின் நிகழும்.
 • தாய் செவிலி செயலைத் தடுத்தல். (வெறியாட்டு, வேறொருவருக்குத் திருமணம், முதலானவை)

கொண்டுதலைக்கழிதல் நிகழும்போது தோழியின் பங்கு [3][தொகு]

களவு வாழ்க்கையின் ஒரு பகுதி கொண்டுதலைக் கழிதல். தலைவன் தலைவியைத் திருமணம் செய்துகொள்வதற்காகத் தன் ஊருக்கு அழைத்துச் செல்வான். இது தலைவியின் பெற்றோர் தலைவியைத் தலைவனுக்கு மணம் முடித்துத் தர இசையாதபோது நிகழும். இதில் தோழியின் பங்கு என்ன என்பதையும் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.

இச் செயலால் நிகழவிருக்கும் துன்பங்களை எடுத்துரைத்தல், கொண்டுசெல் என ஒப்புதல் வழங்குதல், தலைவியை அனுப்பிவைத்தல், அனுப்பிய பின் வருந்துதல், தாயின் வருத்தம் கண்டு தலைவியை மீட்டுக்கொள்ளுதல், தாயைத் தேற்றுதல், - எனத் தோழியின் பங்கு அமையும்.

கற்பொழுக்கத்தில் தோழியின் பங்கு [4][தொகு]

கற்பு-வாழ்க்கை என்பது திருமணத்துக்குப் பின்னர் வாழும் கணவன் மனைவியரின் உறவு வாழ்க்கை. இதில் தோழியின் பங்கு இன்னது எனத் தொல்காப்பியத்தில் சொல்லப்படுபவை இவை.

பொருளீட்டி வந்த தலைவனைச் சிறப்பித்தல், முன்பு தலைவியைப் பிரிந்தபோது அவனைக் குறை கூறியதைச் சொல்லி வருந்துதல், தலைவனை மீட்டுக் கொடுத்த தெய்வத்துக்குக் கடன் செலுத்துதல், பொருளுடன் மீண்டதால் அவன் குற்றங்களை மறத்தல், அகத்துக்குள் அடங்காத அவன் ஒழுக்கத்தைப் பாராட்டல், தலைவியை அவனிடம் ஒப்படைத்தல், தலைவனிடம் வணக்கமாகப் பேசல், தலைவியை அழைத்துக்கொண்டு வெளியிடம் சென்று விளையாடுமாறு கூறுதல், புதல்வனைப் பிரிந்து தலைவனை நல்வழிப் படுத்தல், அவன் பிரிவால் இழந்த தலைவியின் அழகினை மீட்டுத் தா எனல், தலைவியைப் பிரிந்ததற்கு அவன் நாணும்போது பக்குவமாகப் பேசல், அவன் தலைவியைக் கைவிடேன் எனச் சூளுற்றதை (சத்தியம் செய்ததை) நினைவூட்டல், பெரியோர் (தலைவன்) ஒழுக்கம் பெரிது எனத் தலைவியைத் தேற்றல், தலைவியின் புலவியைத் தணித்தல், புலவி பெரிதாகி ஊடலாக மாறியபோது (உணர்ப்புவயின் வாரா ஊடல்) தலைவன் பக்கமாகப் பேசல், களவு ஒழுக்கத்தின்போது தலைவி நடந்துகொண்டதை அவளுக்கு நினைவூட்டல், பாணர் கூத்தர் விறலியர் முதலான வாயில்கள் தலைவன் பக்கம் பேசும்போது தலைவி பக்கமாகப் பேசல், தலைவியை விட்டு விலகிச் சென்ற தலைவனைக் கண்ணோட்டமின்றித் திட்டுதல், தலைவன் நெடுந்தொலைவு பிரியும் காலத்து மரபு இது என விளக்குதல் முதலானவை தோழியின் பங்கு.

அடிக்குறிப்பு[தொகு]

 1. தொல்காப்பியம், களவியல் 35
 2. தொல்காப்பியம், களவியல் 24
 3. தொல்காப்பியம், அகத்திணையியல் 42
 4. தொல்காப்பியம், கற்பியல் 9

காண்க[தொகு]

தொகு அகத்திணை மாந்தர்
அகத்திணைத் தலைவர்கள் தலைவன் | தலைவி | காமக்கிழத்தியர்
அகத்திணை வாயில்கள் தோழி | நற்றாய் | செவிலி | பார்ப்பான் | பாங்கன் | பாணன் | பாட்டி | இளையர் | விருந்தினர் | கூத்தர் | விறலியர் | அறிவர் | கண்டோர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோழி&oldid=1244745" இருந்து மீள்விக்கப்பட்டது