உள்ளடக்கத்துக்குச் செல்

சாயி சுப்புலட்சுமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலைக்கள்ளன் திரைப்படத்தில் சாயி சுப்புலட்சுமி

சாயி - சுப்புலட்சுமி என அழைக்கப்படும் சாயியும் சுப்புலட்சுமியும் இந்திய நடனக் கலைஞர்களாவர். பரதநாட்டியம், கதக் மற்றும் நாட்டுப்புற நடனங்கள் ஆடுவதில் தேர்ச்சி பெற்ற இந்த இரட்டையர் மேடைகளிலும் திரைப்படங்களிலும் நடனம் ஆடி வந்தார்கள். இருவரும் ஒருங்கிணைந்து ஆடுவது இவர்களின் சிறப்பம்சமாகும்.

குடும்பம்[தொகு]

சாயி, சுப்புலட்சுமி இருவரும் பெரியதொரு கலைக் குடும்பத்தில் பிறந்தார்கள். மதராஸ் சகோதரிகள் எனப் புகழ்பெற்ற கருநாடக இசைப் பாடகியரான பி. ஏ. ராஜாமணி, பி. ஏ. பெரியநாயகி ஆகியோரின் தாயாரான பண்ருட்டி ஆதிலட்சுமி அம்மாளின் வழியில் வந்தவர்கள். சபாபதி திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகை ஆர். பத்மா சாயியின் மாமியார் ஆவார்.

நடனப் பயிற்சி[தொகு]

முத்துசாமிப் பிள்ளை ஒரு நட்டுவாங்கக் கலைஞர். 1938 ஆம் ஆண்டு முதல் பல திரைப்படங்களுக்கு நடன ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இன்பவல்லி என்ற திரைப்படத்துக்காக அவர் நடிகை பி. எஸ். சரோஜாவுக்கு நடனப் பயிற்சி அளித்து வந்தார். அப்போது, அத்திரைப்படத்தில் பாடுவதற்காக வந்திருந்த பி. ஏ. பெரியநாயகி தனது குடும்பத்தைச் சேர்ந்த சாயி, சுப்புலட்சுமி இருவருக்கும் நடனப் பயிற்சி அளிக்குமாறு முத்துசாமி பிள்ளையிடம் கோரிக்கை விடுத்தார். முத்துசாமி பிள்ளை அதனை ஒப்புக்கொண்டார். இரு பெண்களுக்கும் தனியாகப் பயிற்சி கொடுப்பதற்காக அவர்களது வீட்டிலேயே தங்கினார். அப்போது சாயிக்கு சுமார் 5 வயது. சுப்புலட்சுமி அவரை விட 3 வயது பெரியவர். ஆசிரியர் இவர்கள் இருவரையும் குமாரி கமலாவின் நடன நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் சென்று காண்பிப்பார். சில சமயம் கூட்டம் அதிகமாக இருந்தால் இருவரையும் தமது தோளில் தூக்கி வைத்துக் காண்பிப்பார்.

இரு பெண்களும் மிகக் கடுமையான பயிற்சி மேற்கொண்டனர். காலையில் 3 மணி நேரமும், மாலையில் 3, 4 மணி நேரமும் பயிற்சி நடக்கும். இந்தப் பயிற்சி 7 வருடங்கள் நடைபெற்றது. ஆயினும் ஆசிரியர் 7 வருடங்களும் தொடர்ந்து பயிற்சி அளிக்கவில்லை. இடையிடையே அவர் திரைப்படங்களுக்கு நட்டுவாங்கம் செய்யப் போவதோடு வருடம் ஒரு தடவை விடுமுறையில் குற்றாலம் செல்வார். ஊரில் இருக்கும் போதெல்லாம் பயிற்சி அளிப்பார்.

பிற்காலத்தில் இவர்களுக்கு கோபி கிருஷ்ணா என்ற வட இந்திய நடனக் கலைஞர் கதக் நடனத்தில் பயிற்சி அளித்தார்.

அரங்கேற்றமும் திரைப்பட அறிமுகமும்[தொகு]

இவர்களது அரங்கேற்றம் 1953 செப்டம்பர் 14 விஜயதசமி நாளில் சென்னை ஆர். ஆர். சபா மண்டபத்தில் ராஜா சர் எம். ஏ. முத்தையா செட்டியார் தலைமையில் நடைபெற்றது.

ஒரு வருடத்துக்குள்ளாகவே விருது பெற்ற மலைக்கள்ளன் திரைப்படத்தில் நடனமாட இவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்தது. அத் திரைப்படம் 6 மொழிகளில் தயாரித்து வெளியிடப்பட்டதால் இவர்களுக்கு அதன் பின்னர் அதிக வாய்ப்புகள் வந்தன. நடனமாடியதுடன், தாங்கள் நடனமாடிய திரைப்படங்களில் சிறு பாத்திரங்களில் நடித்துமுள்ளார்கள்.

பரத நாட்டிய மேடை நிகழ்ச்சிகள்[தொகு]

திரைப்படங்களில் ஆடியதுடன் மேடைகளிலும் பரத நாட்டியம் ஆடி வந்தார்கள். சிவாஜி கணேசன் சென்னை தியாகராய நகரில் அன்னை இல்லம் என்ற தமது இல்லத்தைக் கட்டி குடிபுகுந்தபோது நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் இவர்களது நடனம் சிறப்பம்சமாக இடம்பெற்றது.

நடன பாணி[தொகு]

கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் இவர்களை பம்பர சகோதரிகள் எனப் பாராட்டியுள்ளார். பம்பரம் போல சுழன்றாடுவதில் அதிக வேகம், நேர்த்தி, வளைந்து கொடுக்கும் தன்மை, துள்ளும் கால்கள் எனத் தங்கள் திறமையைக் காண்பிப்பார்கள். இவற்றுடன் இருவரும் ஒருங்கிணைந்து அச்சொட்டாக ஒருவரின் அசைவு போலவே மற்றவரும் செய்வது தனித்துவமான இவர்களது பாணியாகும்.

பரத நாட்டியத்தில் அரைமண்டி, முழுமண்டி என இரு நிலைகள் உண்டு. இவற்றைச் செய்ய கால் முட்டிகளை மடக்கி விரிப்பதும், இடுப்பை வளைப்பதும் அவசியமாகும். இந்த இரட்டையர் இவற்றை மிக வேகமாகச் செய்வதில் வல்லவர்கள். இவர்களது ஆட்டத்தைப் பார்ப்பது ஒரு கண்கொள்ளாக் காட்சியாகும்.

நடன ஆசிரியர்[தொகு]

1960 களின் பின்னர் இந்திய, தமிழ்த் திரைப்படங்களின் உத்தி மாற்றத்திற்குள்ளானது. இவர்களின் பாணி நடனங்கள் திரைப்படங்களில் சேர்க்கப்படவில்லை. சுப்புலட்சுமி மாணவர்களுக்கு நடனம் பயிற்றுவித்து வந்தார். அவரின் இந்த சேவைக்காக தமிழ் நாடு அரசு இயல், இசை, நாடக மன்றம் இவருக்கு 2000 ஆம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கியது.

குடும்ப வாழ்க்கை[தொகு]

நடிகை ஆர். பத்மாவின் மகன் வி. எஸ். சாந்தாராம் என்பவரை சாயி திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தார். மார்புப் புற்றுநோய் காரணமாக சாயி 2010 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் மரணமடைந்தார்.

திரைப்பட பட்டியல்[தொகு]

இது ஒரு நிறைவற்ற பட்டியல். இதை நிறைவு செய்ய நீங்கள் விக்கிபீடியாவுக்கு உதவ முடியும்.

ஆண்டு திரைப்படம் மொழி பாடல் நடன ஆசிரியர் இசையமைப்பாளர் பாடியவர்/கள்
1954 மலைக்கள்ளன் தமிழ் நீலி மகன் நீ அல்லவோ
ஓ அம்ம, ஓ ஐயா
முத்துசாமி பிள்ளை எஸ். எம். சுப்பையா நாயுடு பி. ஏ. பெரியநாயகி
1954 அக்கி ராமுடு தெலுங்கு ராரா யசோதா நந்தனா முத்துசாமி பிள்ளை எஸ். எம். சுப்பையா நாயுடு பி. ஏ. பெரியநாயகி
1954 ரத்தக்கண்ணீர் தமிழ் கதவைச் சாத்தடி முத்துசாமி பிள்ளை சி. எஸ். ஜெயராமன் எம். எல். வசந்தகுமாரி
1955 ஆசாத் இந்தி அப்ளம் சப்ளம் ஹீராலால் சி. ராமச்சந்திரா லதா மங்கேஷ்கர் & உஷா மங்கேஷ்கர்
1955 டாக்டர் சாவித்திரி தமிழ் நாயகர் பட்சமடி முத்துசாமி பிள்ளை ஜி. ராமநாதன் பி. ஏ. பெரியநாயகி & ஏ. பி. கோமளா
1956 அலிபாபாவும் நாற்பது திருடர்களும் தமிழ் நாம ஆடுவதும் பாடுவதும் கே. என். தண்டாயுதபாணி பிள்ளை & ஏ. கே. சோப்ரா எஸ். தட்சிணாமூர்த்தி சுவர்ணலதா & கே. ஜமுனாராணி
1956 சோரி சோரி இந்தி மன் பவன் கீ கார் கே. என். தண்டாயுதபாணி பிள்ளை & கோபி கிருஷ்ணா சங்கர் ஜெய்கிஷன் லதா மங்கேஷ்கர் & ஆஷா போஸ்லே
1956 தாய்க்குப்பின் தாரம் தமிழ் நாடு செழித்திட டி. சி. தங்கராஜ் கே. வி. மகாதேவன் எம். எல். வசந்தகுமாரி
1957 கற்புக்கரசி தமிழ் விழியோடு விளையாடும் பி. எஸ். கோபாலகிருஷ்ணன் ஜி. ராமநாதன் எம். எல். வசந்தகுமாரி & பி. லீலா
1957 மக்களைப்பெற்ற மகராசி தமிழ் மல்லியக்கா மல்லியக்கா எங்கேடி போறே ஹீராலால் & பி. வி. பலராம் கே. வி. மகாதேவன் ஜிக்கி, கே. ஜமுனாராணி & ஏ. ஜி. ரத்னமாலா
1957 சாரதா இந்தி ஜோரு கா குலாம் ஹீராலால் & சத்யநாராயணா சி. ராமச்சந்திரா ஆஷா போஸ்லே & சம்சாத் பேகம்
1958 மாங்கல்ய பாக்கியம் தமிழ் நெஞ்சத்திலே அச்சம் சின்னி & சம்பத் ஜி. ராமநாதன் எம். எல். வசந்தகுமாரி & பி. லீலா
1958 பெரிய கோவில் தமிழ் ஆத்தாடி தள்ளாத தாத்தாவை பி. எஸ். கோபாலகிருஷ்ணன் கே. வி. மகாதேவன் கே. ஜமுனாராணி & எல். ஆர். ஈஸ்வரி
1959 கண் திறந்தது தமிழ் பணம் காசு படைச்சாலே முத்துசாமி பிள்ளை & ஜெயராமன் டி. ஆர். ராஜகோபாலன் பி. சுசீலா & எஸ். ஜானகி
1959 பிரெசிடென்ட் பஞ்சாட்சரம் தமிழ் ஒளி படைத்த கண்ணினாய் முத்துசாமி பிள்ளை ஜி. ராமநாதன் எம். எல். வசந்தகுமாரி & (ராதா) ஜெயலட்சுமி
1959 சிவகங்கைச் சீமை தமிழ் முத்து புகழ் படைத்து கே. என். தண்டாயுதபாணி பிள்ளை விஸ்வநாதன்-ராமமூர்த்தி எஸ். வரலட்சுமி & (ராதா) ஜெயலட்சுமி
1961 சதி சுலோச்சனா தெலுங்கு ஜெய் ஜெய் ஜெய் டி. வி. ராஜு
1963 அறிவாளி தமிழ் வாழிய நீடூழி பி. எஸ். கோபாலகிருஷ்ணன் எஸ். வி. வெங்கட்ராமன் (ராதா) ஜெயலட்சுமி & பி. லீலா
1963 பரோசா இந்தி தத்கா ஹோ தில் தத்கா கோபி கிருஷ்ணா ரவி லதா மங்கேஷ்கர் & ஆஷா போஸ்லே

உசாத்துணைகள்[தொகு]

  • "Sayee and Subbulakshmi's Film-industry Relatives". Cinema Nritya Gharana. Archived from the original on 10 June 2017.
  • "Muthuswami Pillai's Star Students". Cinema Nritya Gharana. Archived from the original on 10 June 2017.
  • "Jhanak Jhanak Payal Baaje (1955)". Archived from the original on 7 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 11 ஜூன் 2017. {{cite web}}: Check date values in: |access-date= and |archivedate= (help)
  • "Dances on the Footpath". Richard S. 24 October 2008. Archived from the original on 10 ஜூன் 2017. பார்க்கப்பட்ட நாள் 11 ஜூன் 2017. {{cite web}}: Check date values in: |access-date= and |archivedate= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாயி_சுப்புலட்சுமி&oldid=3426270" இலிருந்து மீள்விக்கப்பட்டது