உள்ளடக்கத்துக்குச் செல்

ஜிக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜிக்கி
ஜிக்கி 1940களின் இறுதியில்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்பி. ஜி. கிருஷ்ணவேணி
பிறப்பு(1935-11-03)3 நவம்பர் 1935
சென்னை
இறப்பு16 ஆகத்து 2004(2004-08-16) (அகவை 68)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இசை வடிவங்கள்கருநாடக இசை
தொழில்(கள்)திரைப்பட பின்னணி பாடகர்
இசைத்துறையில்1948 முதல் 2002

ஜிக்கி (Jikki, 3 நவம்பர் 1935 - 16 ஆகத்து 2004) என்று பரவலாக அறியப்பட்ட பிள்ளைவாள் கஜபதிநாயுடு கிருஷ்ணவேணி புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகியாவார். இவர் பாடிய பாடல்கள் பத்தாயிரத்திற்கும் அதிகமானவை. தமிழ்த் திரைப்படங்களில் மாத்திரமன்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் ஆகிய மொழிப்படங்களிலும் பாடியுள்ளார். 1943இல் பந்துலம்மா திரைப்படத்தில் நடிகையாகவும், பின்னணிப் பாடகியாகவும் அறிமுகமாகி 2002 வரை, கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் திரையுலகில் பாடியிருக்கிறார். எழுபது வயது நெருங்கும் சமயத்திலும் இவருக்குப் பாடல் வாய்ப்பு கிடைத்திருந்தது. இவர் பின்னணிப் பாடகர் ஏ. எம். ராஜாவின் மனைவியாவார்.

கலையுலக வாழ்வு

[தொகு]

ஜிக்கி தனது 6 ஆவது வயதிலேயே இசையார்வம் கொண்டிருந்தார். இவர் தனது 11 ஆவது வயதிலேயே இவரது தாய்மாமன் சிட்டிபாபுவின் முயற்சியினால் இசையமைப்பாளர் எஸ். வி. வெங்கட்ராமனின் இசையில், ஞானசௌந்தரி 1948 திரைப்படத்தில் பாலஞானசௌந்தரி பாடுவதான பல்லவி அருள்தாரும் தேவமாதாவே ஆதியே இன்ப ஜோதியே என்ற பாடலைப் பாடினார். தொடர்ந்து பந்துலம்மா, தியாகையா, கொல்லபாமா, மனதேசம் ஆகிய தெலுங்குப் படங்களில் வாய்ப்புக் கிடைத்தது. இப்படங்களின் பாடல்களைக் கேட்ட இசையமைப்பாளர் ஜி. ராமநாதன், ஜிக்கியின் 13வது வயதில், 1950இல் மொடேர்ன் தியேட்டர்சின் மந்திரி குமாரி திரைப்படத்தில் வாராய் நீ வாராய், உலவும் தென்றல் காற்றினிலே முதலிய டூயட் பாடல்களைத் திருச்சி லோகநாதனுடன் சேர்ந்து பாடவைத்தார். இப்படமும் பாடல்களும் பெற்ற வெற்றியானது 1950 - 1960 காலப்பகுதியில் ஜிக்கியின் பொற்காலத்தை உறுதி செய்தது. 1952இல் கே. வி. மகாதேவன் இசையமைத்த குமாரி படத்தில் தனது வருங்காலக் கணவரான ஏ. எம். ராஜாவுடன் ஜிக்கி முதன்முதலில் பாடினார். ராஜாவுடன் இணைந்து ஜிக்கி நூற்றுக்கணக்கான காதல் பாடல்களும், சோகப்பாடல்களும் பாடியுள்ளார். வட இந்திய நடிகரான ராஜ்கபூரின் சொந்தத் தயாரிப்பான ஆஹ இந்திப்படத்தின் தமிழ்ப்பதிப்பு அவன் என்பதில் ஜிக்கி ராஜாவுடன் சேர்ந்து பல இனிய பாடல்களைப் பாடினார். மேலும் பல்வேறு பின்னணிப் பாடகர், பாடகிகளுடனும் ஜிக்கி பாடினார்.

வாழ்க்கைச் சுருக்கம்

[தொகு]

ஜிக்கி ஆந்திராவின் சந்திரகிரியைப் பூர்வீகமாகக் கொண்ட கஜபதி நாயுடுவுக்கும், சென்னையைச் சேர்ந்த ராஜகாந்தம்மாவுக்கும் பிறந்த ஒன்பது பிள்ளைகளில் மூத்தவர். 1955இல் மகேஸ்வரி படத்தின் அழகு நிலாவின் பவனியிலே பாடலின் ஒத்திகை இடைவேளையின் போது, ஏ. எம். ராஜா தனது காதலை ஜிக்கியிடம் வெளியிட்டார்.[சான்று தேவை] 1958இல் பெற்றோர் ஆசியுடன் ஜிக்கி ஏ. எம். ராஜாவைத் திருமணம் செய்து கொண்டார்.

ஜிக்கியின் திரையிசைப் பாடல்களில் சில

[தொகு]
  • அருள்தாரும் தேவமாதாவே
  • ஆசைநிலா சென்றதே
  • காதல் வாழ்வில் நானே
  • கண் கான்பதற்குள் மனம் கனிந்து விடும்
  • மானைத் தேடி மச்சான் வரப் போறான் (நாடோடி மன்னன்)
  • என் இன்பம் எங்கே (நாடோடி மன்னன்)
  • மயக்கும் மாலைப்பொழுதே (குலேபகாவலி)
  • ஜீவிதமே சபலமோ
  • கிராமத்தின் இதயம் பேரன்பின் நிலையம்
  • கள்ளங்கபடம் தெரியாதவனே
  • காதல் வியாதி பொல்லாதது
  • ஊரெங்கும் தேடினேன்
  • துள்ளாத மனமும் துள்ளும்
  • நான் வாழ்ந்ததும் உன்னாலே
  • பச்சைக்கிளி பாடுது
  • அழகோடையில் நீந்தும் அன்னம்
  • நாடகமெல்லாம் கண்டேன்
  • பூவாமரமும் பூத்ததே
  • உள்ளம் ரெண்டும் ஒன்று*
  • இன்று நமதுள்ளமே*
  • கொக்கரக் கொக்கரக்கோச் சேவலே
  • சின்னப்பெண்ணான போதில
  • கண்களால் காதல்காவியம்
  • யாரடி நீ மோகினி
  • பேசும்யாழே பெண்மானே
  • அன்பே என்றன் முன்னாலே
  • மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ
  • காதலெனும் கோயில் (வட்டத்துக்குள் சதுரம் 1978)
  • ராத்திரி பூத்தது காட்டுரோஜா (தாயம் ஒண்ணு 1988)
  • நினைத்தது யாரோ (பாட்டுக்கொரு தலைவன்)
  • வண்ண வண்ண சொல்லெடுத்து (செந்தமிழ்ப் பாட்டு 1994)

உசாத்துணை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிக்கி&oldid=3706959" இலிருந்து மீள்விக்கப்பட்டது