கௌரி பார்வதி பாயி
உத்திரட்டாதி திருநாள் கவுரி பார்வதி பாயி | |||||
---|---|---|---|---|---|
திருவாங்கூரின் மகாராணி | |||||
![]() | |||||
ஆட்சி | 1815–1829 | ||||
முன்னிருந்தவர் | கௌரி லட்சுமி பாயி | ||||
பின்வந்தவர் | சுவாதித் திருநாள் ராம வர்மா | ||||
மனைவி | ராகவா வர்மா கோவில் தம்புரான் | ||||
வாரிசு(கள்) | இல்லை | ||||
| |||||
மரபு | வேனாடு சொரூபம் | ||||
அரச குலம் | குலசேகரா | ||||
சமயம் | இந்து சமயம் |
உத்திரட்டாதி திருநாள் கவுரி பார்வதி பாயி (1802-1853) இந்தியாவின் கேரள மாநிலத்தில்திருவாங்கூர் அரச பிரதிநிதியாக இருந்தவர்..[1] அவரது சகோதரி மகாராணி கவுரி லட்சுமி பாயிக்குப் பின் வந்த தனது ஆட்சியை அவரது மருமகனும் மகாராஜாவுமான சுவாதித் திருநாள் ராம வர்மா சார்பாக 14 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.[2] பின்னர் தனது ஆட்சியை 1829 இல் விட்டுக்கொடுத்தார்.[3]
ஆரம்ப வாழ்க்கை[தொகு]
மகாராணி கெளரி பார்வதி பாயி திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் ஆற்றிங்கல்லின் மூத்த ராணியான பரணித் திருநாள் என்பவருக்குப் பிறந்தார். 1815ஆம் ஆண்டில் இவரது மூத்த சகோதரி மகாராணி கௌரி லட்சுமி பாயி இறந்தபோது, இவருக்கு பதின்மூன்று வயதே நிரம்பியிருந்தது. குடும்பத்தில் ஒரே பெண்மணியாக, கெளரி பார்வதி பாயி தனது மருமகனும், ஆட்சியின் வாரிசுமான, மகாராஜா சுவாதி திருநாள் ராம வர்மனின் சார்பில் தனது மைத்துனர் சங்கனாச்சேரி குடும்பத்தைச் சேர்ந்த இராஜ ராஜ வர்மாவுடன் சேர்ந்து ஆட்சி செய்தார். இவருடைய கணவர், இராகவ வர்மன் கிளிமானூர் அரச குடும்பத்தை சேர்ந்தவராவார்.
அமைச்சரவை மாற்றங்கள்[தொகு]
மகாராணியின் முதல் நடவடிக்கையானது, புதிய திவான் என்கிற பிரதம மந்திரியை நியமிப்பதே ஆகும். ஏனென்றால் திவான் பத்மநாபன் இறந்துவிட்டார், அவருடைய துணைப் பொறுப்பாளரான பப்பு ராவ் மாநில விவகாரங்களை கவனித்து வந்தார். 1815 ஆம் ஆண்டில் பிராமணரான சங்கு அன்னாவி பிள்ளை என்பவர் திவானாக நியமிக்கப்பட்டார்.[4] ஆனால் அவரால் கடினமான நிர்வாகத்தை கையாள முடியாததால் இரண்டு மாதங்களுக்குள் அகற்றப்பட்டார். பின்னர் திருவாங்கூர் மாவட்ட நீதிபதி ராமன் மேனன், என்பவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இருப்பினும், திவான் ராமன் மேனனுக்கும் பிரிட்டிஷாருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் எழுந்தன, எனவே ராமன் மேனன் 1817 ஆம் ஆண்டில் ஒரு கீழமை அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார், மேலும் அவர் அப்பணியிலிருந்து முற்றிலும் ஓய்வு பெற விரும்பினார். 20ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற இந்திய இராஜதந்திரியும், வேங்கலில் குடும்பத்தின் மூதாதையுருமான கிருஷ்ண மேனனின் பெரிய தாத்தாவாக இருந்தவர் திவான் ராமன் மேனன். 1817 செப்டம்பரில் அவர் பிரிட்டிஷாருடன் நெருக்கமாக இருந்தபோது, ரெட்டி ராவ் என்ற துணைத் தூதர் திவானாக நியமிக்கப்பட்டார்.[5]
முக்கிய நடவடிக்கைகள்[தொகு]
மகாராணி கௌரி பார்வதி பாயி தனது மருமகனின் சார்பில் ஆட்சி செய்த போது தனது மாநிலத்தில் பல சீர்திருத்தங்களை நிறுவினார். முக்கிய சீர்திருத்தங்களில் ஒரு சில:
- 1817 ஆம் ஆண்டில் ராணி கௌரி பார்வதி பாயி நவீன கல்வியை கற்பிக்க முன்னேற்பாடுகளை செய்தார்.
- இந்து மத விழாக்களுடன் தொடர்புடைய கிறிஸ்தவ சபைகளை விடுவித்தார். அவர்கள் மதச் சடங்குகளுக்காக ஞாயிற்றுக்கிழமைகளில் வேலைக்கு வருவதிலிருந்தும் விடுவிக்கப்பட்டனர்.
- தாழ்த்தப்பட்ட சாதியினர் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களை அணிவதிலிருந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டது. இதை அவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்று தங்களை அலங்கரித்து கொண்டனர். நாயர் போன்ற உயர் சாதியினர் தங்க ஆபரணங்களை பயன்படுத்துவதற்காக அதியார பணத்தை செலுத்திய பின்னர் பெற்றுக் கொள்வது அகற்றப்பட்டது.[6]
- மகாராணி தனது இராச்சியத்திலுள்ள அனைவரையும் தங்கள் வீடுகளின் மேல் ஓடுகள் வேய்வதற்கு அனுமதித்தார். கேரளாவின் சூழலில் இது ஒரு முக்கியமான அறிவிப்பாக இருந்தது. சோமரைன் போன்ற சக்திவாய்ந்த அரசர், மற்றும் கொச்சி இராச்சியத்தின் அரசர் போன்ற பேரரசர்கள கூட தங்கள் அரண்மனையில் இதை அனுமதிக்கவில்லை.
- சில வகையான வீடுகளை பயன்படுத்துவதிலிருந்த அடிப்படை கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டன. அது வரை நாயர் என அழைக்கப்படுபவர்களே தங்கள் குடியிருப்புக்களை நாலுகெட்டு கொண்ட வீட்டினை கட்டிக்கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதற்கான வரிகள் முற்றிலும் அகற்றப்பட்டு, அனைத்து சமுதாயத்தினரும் இந்தவகை கட்டிடங்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டனர். இதேபோல், யானைகளிலும், யானை, வண்டிகளிலும் பயணம் செய்ய உரிமை தரப்பட்டது.
- ''காபி'' சாகுபடி முதல் முறையாக திருவாங்கூர் பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது.[7]
- அவரது சகோதரி மகாராணி கவுரி லட்சுமி பாயியின் ஆட்சி முடிவில் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது, இது அவருக்கு ஒரு பெரிய சாதனையாகும்.
- திருவாங்கூரில் கிருத்துவ திருச்சபையை மகாராணி அனுமதித்தார், மேலும் அவருடைய மாநிலத்தில் தேவாலயங்களை கட்டியெழுப்பவும் அனுமதிதார்.[8]
- வேலு தம்பி தளவாயின்[9] கிளர்ச்சியைத் தொடர்ந்து, திருவாங்கூர் படையைச் சேர்ந்த ஏழு நூறு வீரர்கள் அரண்மனையைக் காப்பாற்ற ஏற்பாடு செய்யப்பட்டது
ஆட்சியின் முடிவு[தொகு]
1829 ஆம் ஆண்டு மகாராஜா சுவாதி திருநாள் பதினாறு வயதை அடைந்தபோது அவரது அத்தையான, மகாராணி, ஆட்சியை கைவிட்டு, முழு அதிகாரத்துடன் அவருக்கு ஆட்சியதிகாரம் அளிக்க முடிவு செய்தார். அதன்படி, 1829 ஆம் ஆண்டில் மகாராஜா சுவாதி திருநாள் முடிசூட்டிக் கொண்டார்.
முழுப் பட்டம்[தொகு]
ஸ்ரீ பத்மநாப சேவினி வஞ்சி தர்ம வர்திணி ராஜ ராஜேஸ்வரி மகாராணி உத்திரட்டாதி திருநாள் கௌரி பார்வதி பாயி, அட்டிங்கல் இளைய தம்புரான், திருவாங்கூர் பிரதேச மஹாராணி.
குடும்பம்[தொகு]
மகாராணி கௌரி பார்வதி பாயி மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். அவரது முதல் கணவர் கிளிமானூர் அரச குடும்பத்தின் ராகவா வர்மாவின் இறப்புக்குப் பிறகு மீண்டும் ஒரு திருமணம் நடைபெற்றது. 1824 ஆம் ஆண்டில் அவரும் மீண்டும் மரணமடைந்ததால் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார், ஆனால் இந்த மூன்று திருமணங்களாலும் குழந்தைகள் இல்லை. கௌரி லட்சுமி பாயின் மரணத்திற்குப் பின் தனது மருமகனையும் மருமகளையும் தன் சொந்தக் குழந்தைகளாகவே பார்த்துக் கொண்டார். 1853 இல் மகாராணி இறந்தார்.
குறிப்புகள்[தொகு]
- ↑ http://www.swathithirunal.in/relatives/Gauri%20Parvathi%20Bayi.htm
- ↑ http://gopalakri.blogspot.com/search?updated-max=2012-12-10T04:32:00-08:00&max-results=50&reverse-paginate=true&start=3&by-date=false
- ↑ https://en.numista.com/catalogue/pieces49044.html
- ↑ https://pazhayathu.blogspot.com/2014/06/dewans-of-travancore-arumukham-pillai.html
- ↑ Nagam Aiya, Pg 464
- ↑ https://keralapscadda.blogspot.com/2017/05/important-travancore-kings-kerala.html
- ↑ https://pscmagic.blogspot.com/2017/02/travancore.html[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ https://pazhayathu.blogspot.com/2013/10/maharani-gowri-parvati-bayi.html
- ↑ http://m2sp.blogspot.com/2007/06/velu-thambi-dalava.html
- V. Nagam Aiya. Travancore State Manual, Volume I.