வேலுத்தம்பி தளவாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வேலாயுதன் செண்பகராமன் தம்பி (1765–1809) திருவிதாங்கூர் நாட்டில் மகராஜா பலராம வர்மா குலசேகரப் பெருமாள் மன்னராக வீற்றிருந்த காலத்தில் தளவாய் அல்லது முதன்மை அமைச்சராக இருந்தவர். வேலுத்தம்பி என அறியப்பட்ட இவர் ஒரு தமிழர் ஆவார். பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தை எதிர்த்துப் போரிட்டவர்.

ஆரம்ப கால வரலாறு[தொகு]

வேலாயுதன் செண்பகராமன் தம்பி 1765ம் ஆண்டு விடைத் திங்கள் 16ம் நாள் அன்றைய திருவிதாங்கூர் நாட்டில் ( இன்றைய தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ) நாகர்கோவிலுக்கு அருகே உள்ள கல்குளம் - தலக்குளம் என்னும் ஊரில் பிறந்தவர். இவரது பெற்றோர்கள் திரு குஞ்சு மயிற்றி பிள்ளை, திருமதி வள்ளியம்மை பிள்ளை தங்கச்சி. பிள்ளை சாதியில் தோன்றிய இவர் ஆரம்பகாலங்களில் அரசுக் காரியக்காரராகப் மாவேலிக்கரையில் பணியாற்றியவர். இவரது முழுப்பெயர் இடப்பிரபு குலோதுங்க கதிர்குலத்து முளப்படை அரசரான இறையாண்ட தாளக்குளத்து வலிய வீட்டில் தம்பி செண்பகராமன் வேலாயுதன் ஆகும்.

சுதந்திரப் போரில்[தொகு]

திருவாங்கூர் அரசின் திவானாக இருந்த இவர், கொச்சியில் அமைச்சராக இருந்த பலியாத்தச்சன் ஆதரவுடன் கொல்லத்தை அடுத்த குந்தாராவில் (திருவனந்தபுரத்திற்கும் ஆல்வாயிக்கும் இடையில் உள்ள ஊர்) தமது முகாமை அமைத்து, ஆல்வாயில் இருந்த ஆங்கிலேய அதிகாரிகளைக் கொன்று அவர்களது ஆக்ரமிப்புகளை அகற்றினார்.

குந்தாரா பிரகடனம்[தொகு]

பின்னர், திருவாங்கூர் மக்களுக்கு வெளியிட்ட பகிரங்க அறிக்கையில்,நம் நாட்டிற்கு வியாபாரத்திற்கு வந்தோர் நாடாள முயல்வதையும் அரசு நிர்வாகத்தில் தலையிடுவதையும் கடுமையாக சாடியிருந்தார்.அந்நியரை இந்த மண்ணிலிருந்து வெளியேற்ற ஆங்கிலேயருடன் போரிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் குறிப்பிட்டார். 1809 ஜனவர் 11 இல் குந்தாராவில் இருந்து வெளியிடப்பட்ட இவ்வறிக்கை ’குந்தாரா பிரகடனம்’ எனப் பிரசித்தி பெற்றது.

திருவாங்கூர் மன்னனின் அமைதி ஒப்பந்தமும் விளைவும்[தொகு]

கர்னல் லீஜர் தலைமையில் வந்த ஆங்கிலேயப் படை உதயகிரி மற்றும் பத்மநாபபுரம் கோட்டையை வெற்றி கொண்டு பாப்னாம்கோடு என்ற ஊருக்கு வந்தது. அச்சத்தில் திருவாங்கூர் மன்னன் பிரிட்டிஷ் கம்பெனியுடன் அமைதி ஒப்பந்தம் செய்து அடிபணிந்தார். இதன் விளைவாக தளவாய் வேலுத்தம்பியைக் கைது செய்ய திருவாங்கூர் மன்னரே உத்தரவிட்டார்.

இதனை அறிந்த வேலுத்தம்பி தமது சகோதரர் பாப்புத் தம்பியுடன் தப்பி மன்னாட்டியிலுள்ள கோவில் பூசாரி வீட்டில் தஞ்சமடைந்தனர்.இதற்கு மேல் போராட முடியாது ஆங்கிலேயரிடம் கைதாக நேரும் என்று உணர்ந்த வேலுத்தம்பி சகோதரரிடம் தன்னைக் கொல்ல வேண்டினார். அவர் மறுக்கவே கத்தியால் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டார். ஆங்கிலேயரால் அவரது உடல் கண்ணன் மூலா என்ற ஊரின் முச்சந்தியில் தொங்கவிடப்பட்டது.

சிலை[தொகு]

தளவாய் வேலுத்தம்பியின் சிலை கேரள அரசின் தலைமைச் செயலக வளாகத்தில் உள்ளது.

உதவிநூல்[தொகு]

சுதந்திரப் போராட்ட வரலாறும் தியாகசீலர்களும்; வி.வி.வி.ஆனந்தம்; கங்கை புத்தகநிலையம்; பக்கம் 80, 81

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேலுத்தம்பி_தளவாய்&oldid=2066551" இருந்து மீள்விக்கப்பட்டது