உள்ளடக்கத்துக்குச் செல்

கொக்கிப்புழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொக்கிப்புழு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனங்கள்

N. americanus
A. duodenale

கொக்கிப்புழு (Hook worm) என்பது மனிதருக்கு பெரும் தீங்கிழைக்கும் புழுக்களின் இனங்களில் ஒன்றாகும். மனிதனுக்கும், விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் தீங்கு செய்யும் பலவிதப் புழுக்கள் தரையிலும் நீரிலும் உள்ளன. இவற்றுள் மனித உடலில் மட்டும் சுமார் 50 வகையான புழுக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவற்றில் பெரும் தீங்கு விளைவிப்பது கொக்கிப் புழுக்களும் அவற்றைச் சார்ந்த இனப் புழுக்களுமே ஆகும். இப்புழு தன் வாயிலுள்ள கொக்கி வடிவிலான பற்களால் எளிதாகக் குடலின் உட்சுவரைக் கடித்துக் கொண்டிருப்பதால் இவை கொக்கிப்புழுக்கள் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன.

வாழ்க்கை முறை[தொகு]

கொக்கிப் புழுக்கள் எளிதாக மனிதனைத் தொற்றுகின்றன. இப்புழுவின் முட்டைகள் மலத்தோடு கலந்து வெளிவருகின்றன. தரை ஈரத்தில் இவை ஓரிரு நாட்களில் குஞ்சு பொரிக்கின்றன. குடம்பி எனப்படும் புழுக்குஞ்சு மூன்று அல்லது நான்கு மாதங்கள் வரை உயிரோடு இருக்கும். அவை மனித உடலைத் தொட்டவுடன் தோலைக் குடைந்துகொண்டு உடலினிலுள் செல்கின்றன. அதன் பின் குருதிச் சுற்றோட்டத்தொகுதி மூலம் வலப்பக்க இதயத்தை அடைகின்றன. அங்கிருந்து சுவாசப்பைக்குப் போய் பின் சமிபாட்டுத் தொகுதியில் உள்ள களம் வழியாக எளிதாக இரைப்பைக்குள் இறங்குகின்றன. பின் அங்கிருந்து நகர்ந்து எளிதாக முன் சிறுகுடல், பின் சிறுகுடலில் சென்று தங்குகின்றன. அங்கு இரத்தத்தை உறிஞ்சிக் குடித்து வளர்கின்றன.

வாழ்க்கை வட்டம்[தொகு]

கொக்கிப்புழுவின் வாழ்க்கை வட்டம் (உயிரியல்)

கொக்கிப்புழுக்கள் 18°C ஐ விட அதிகமான வெப்பநிலை கொண்ட இடங்களிலேயே வாழும். அவற்றின் வாழ்க்கை வட்டத்தை படத்தில் பார்க்கலாம். குடல் பகுதியில் சென்று தங்கும் கொக்கிப் புழுக்கள் நன்றாக வளரத்தொடங்குகின்றன. வளர்ந்த ஆண் பெண் புழுக்கள் சேர்ந்து இனப்பெருக்க செயல்முறையில் ஈடுபடுவதன் மூலம், பெண்களில் முட்டை கருக்கட்டலுக்கு உட்படும். பின்னர் கருக்கட்டப்பட்ட முட்டைகள் பெண்ணினால் குடலில் வெளியேற்றப்படும். ஒரு நாளுக்கு ஒரு பெண் புழு 25,000 முதல் 35,000 முட்டைகள் வரை இடும். அந்த முட்டைகள் மலத்துடன் மனித உடலில் இருந்து வெளியேறும். முட்டைகள் பொரித்து வெளியேறும் குடம்பிகள் மண்ணில் இருக்கும். அவை மனிதரின் தோலினூடாக உடலினுள் செல்லும். சாதாரணமாக கொக்கிப் புழுக்களின் ஆயுள் காலம் 5 அல்லது ஆறு ஆண்டு காலமாகும்.

நோய்த் தாக்குதல்[தொகு]

கொக்கிப் புழுக்கள் நம் குடலிலேயே குடியிருந்துகொண்டு இரத்தத்தை உறிஞ்சுவதன் மூலம், தமது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தையும் உறிஞ்சி விடுகின்றன. இதன் மூலம் சத்து இழப்பு ஏற்படுகிறது. உழைக்கும் திறன் குறைகிறது. மனத்தளர்வு உண்டாகிறாது. மந்த நிலை உருவாகிறாது. இதன் விளைவாக குருதிச்சோகை போன்ற நோய்கள் ஏற்பட ஏதுவாகிறது. கொக்கிப்புழுக்கள் இரத்தத்தை உறிஞ்சி வழிந்தோடச் செய்கின்றன. கொக்கிப் புழுக்கள் தம் கொக்கிவடிவிலான பற்களால் குடலின் உட்சுவரைக் கடித்துக் கொண்டு வாழ்வதால் இவை இடம் மாறிச் சென்ற போதும் முந்தைய இடத்தில் இரத்தம் வழிந்து கொண்டே இருக்கும். இதனால் ஏற்படும் இரத்தப்போக்கு காரணமாக உடலுக்கு வேண்டிய இரத்தம் குறைகிறது. உடல் வலிமை இழக்கிறது. இதனால் இதயத் துடிப்பு அதிகரித்து, கண்கள் வெளுத்து, சோகைநோய் உண்டாகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்[தொகு]

நாம் விழிப்புடன் இருந்தால் கொக்கிப் புழுக்கள் நம்மைத் தொற்றாத வண்ணம் காத்துக் கொள்ளலாம்.

  • கண்ட கண்ட இடங்களில் மலம் கழிக்கக் கூடாது.
  • அவ்வாறு மலங்கழித்தபின் குளங்குட்டைகளில் கால் கழுவுதல் கூடாது. இத்தகைய இடங்களில் தான் கொக்கிப் புழுக்களின் குஞ்சுகளான குடம்பி செழித்து வளரும்.
  • அப்படியே மலங்கழித்தவுடன் அதன் மீது மண்ணைப் போட்டு மூடிவிட வேண்டும்,
  • காலணி இன்றி நடக்கக் கூடாது. இதனால் கொக்கிப்புழுக்களின் குஞ்சுகள் உடலில் தொற்ற வழியில்லாமல் போய்விடும்.
  • சுகாதாரத்தை உரிய வழிகளில் பேணாமையால் சில நாடுகளில் முக்கியமாக இந்தியாவில் 100 -க்கு 80 பேர்கள் கொக்கிப் புழுத் தொல்லைக்கு ஆளாகிறார்கள்.

உசாத்துணை[தொகு]

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொக்கிப்புழு&oldid=2186138" இலிருந்து மீள்விக்கப்பட்டது