குளம்பிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ParaHoxozoa
Ungulate
புதைப்படிவ காலம்:Paleocene-Recent,
Possible Late Cretaceous-Present
கழுதை (விலங்கு), Equus africanus
எசுப்பானிய மலையாடு (Capra pyrenaica)
உயிரியல் வகைப்பாடு e
தொகுதி:
வகுப்பு:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
Ungulata

Orders and Clades

குளம்புள்ள விலங்குகள், அங்குலேட்டா (விலங்கியல்:Ungulata, ஆங்கிலம்:Hoofed animals) குளம்புள்ள விலங்கினமான இவை, பாலூட்டி விலங்குகளிலே குதிரைச் சாதியைச் சேர்ந்த இனங்களாகிய குதிரை, கழுதை, வரிக்குதிரை ஆகியவையும், டாப்பிர் என்னும் நீர் யானையும், காண்டாமிருகமும் ஆகிய ஒற்றைக் குளம்புள்ள பாலூட்டிகளும் ஹிப்போப்பாட்டமஸ் என்னும் நீர்க் குதிரையும், பன்றியும், பெக்காரி என்னும் பன்றி போன்ற அமெரிக்க விலங்கும், ஒட்டகமும், லாமாவும், குறும்பன்றியும், மானும், ஒட்டகச் சிவிங்கியும், ஆடும், மாடும் ஆகிய இரட்டைக் குளம்புள்ள பாலூட்டிகளும் அடங்கும். முன்பு யானை, ஹைராக்ஸ் என்னும் பிராணிகளையும் அங்குலேட்டா என்றே சேர்த்திருந்தனர். இவற்றிலே விரல் நுனி முழுவதையும் மூடிக்கொண்டிருக்கும் மெய்யான குளம்பு இருப்பதில்லை. விரலின் மேற்புறத்தில் காணும் அகன்ற நகம்போன்ற உறுப்பே இருக்கிறது.

அங்குலேட்டா[தொகு]

அங்குலேட்டா என்னும் பெருங்கூட்டத்திலே பழைய புவியியற்காலங்களிலே வாழ்ந்த பலவகை உயிர்களும் சேரும். இப்போதுள்ளவையும் இல்லாதவையுமான இந்த உயிர்வகைகளெல்லாம் நெருங்கிய உறவுடைய பிராணிகளல்ல, பல்வேறு வரிசைகளாக பாகுபடுத்துவதற்கு உரியவை. ஏறக்குறைய ஒரே வகையான வாழ்க்கைப் பழக்கம் (Similarity of habit) உள்ள இவ்விலங்குகள் எல்லாம் ஒன்றையொன்று பெரிதும் ஒத்திருக்கும் வகையில் உறுப்பமைப்பிலும் மாறுபாடடைந்து வந்திருக்கின்றன. இது உறுப்பு ஒருங்கமைப்பு (Convergence of structure) என்னும் நிகழ்ச்சியாகும்.  

குளம்பிகள் தரையில் வாழ்வன, பெரும்பாலும் பெரிய உடலுள்ள பயிருண்ணும் பாலூட்டிகள், பயிர் பச்சைகளை உண்டு வாழ்பவையாதலாலும், புலாலுண் விலங்குகளை எதிர்த்துத் தம்மைக் காத்துக்கொள்ளத்தக்க அமைப்பில்லாதவையாதலாலும், அவ்வாழ்க்கைப் பண்புகளுக்கேற்ப இவற்றில் காணும் தகவமைப்புக்கள் மூன்று முக்கிய வழிகளில் சென்றிருக்கின்றன.

  1. கால்கள் நீளமாகிக்கொண்டும், விரல்கள் எண்ணிக்கையில் குறைந்துகொண்டும், பாதங்கள் முழுவதும் அதாவது முன்காலில் மணிக்கட்டு, உள்ளங்கை, விரல்கள் ஆகிய மூன்றும், பின்காலில் குதிக்கால், உள்ளங்கால், விரல்கள் ஆகிய மூன்றும் நிலத்தில் தோயாமல் பாதத்தின் பின்னடி வரவர மேலே தூக்கிக் கொண்டும், கால்கள் உள்வெளிப் பக்கங்களுக்குச் சுழன்று செல்லாமல் முன்பின்னாக மட்டுமே செல்லும் ஊசலியக்கம் மட்டும் அமையப்பெற்றும் வந்திருக்கின்றன. இவையெல்லாம் விரைவாகச் செல்வதற்கு ஏற்ற தகவமைப்புக்கள்.
  2. கடைவாய்ப்பற்கள் அரை வைப்பற்களாகப் பெரியனவாகவும், சதுரவடிவினவாகவும், முகடுகளும் வரம்புகளுமுள்ள மேற்பரப்பினவாகவும் அமைந்து வருகின்றன. உணவை மெல்லும்போது கீழ்த்தாடை பக்கவாட்டில் அசையக்கூடியதாகத்தாடை மூட்டு அமைந்து வருகிறது. இவையெல்லாம் தழையையும் கடினமான சிலிக்கா மிக்குள்ள புல்லையும் மேய்வதற்கு ஏற்ற தகவமைப்புக்கள்,
  3. முன்காலைப்(கை) பலவாறு இயக்குவதற்கு உதவும் தோள் வளையத்தைச் சேர்ந்த காறை எலும்பு அவ்வாறு இயங்காத முன்காலுள்ள இவற்றிற்கு வேண்டாமையின் அவ்வெலும்பு இவற்றில் வளராமல் மறைந்துவிடுதல்.  

வகைகள்[தொகு]

இந்த அங்குலேட்டாக் கூட்டங்களெல்லாம், வெவ்வேறு தனித்த வரிசைகளாக வைத்தெண்ணத்தக்கவை. மெய்யான குளம்புகளுள்ள குதிரையும் மாடும்கூடப் பாலூட்டி அடிக்கிளையிலிருந்தே வேறு வேறு கிளைகளாகத் தோன்றி வந்துள்ளன. பசுவானது, குதிரைக்கு எவ்வளவு நெருங்கியுள்ளதோ, அவ்வளவே புலிக்கும் நெருங்கியுள்ள தென்க. பசு, குதிரை ஆகிய இவ்விரண்டு விலங்குகளாலும் குறிக்கப்பெறும் இரண்டு குளம்பி வரிசைகளுள்ளும் உள்ள வேறுபாடுகளாவன

இரட்டைக் குளம்பிகள்[தொகு]

இரட்டைக் குளம்பிகள் (ஆர்ட்டியோடாக்ட்டிலா ) என்பது பன்றி, ஒட்டகம், குறும்பன்றி, அசைபோடு விலங்குகள் ஆகியவை அடங்கிய வரிசை. இவ்விலங்கு களில் கால்களின் மூன்றாம் நான்காம் விரல்கள் இரண்டும் சமமாக வளர்ந்திருக்கும். காலின் சமச்சீர்த்தளம் அவ்விரண்டு விரல்களுக்கும் இடையிற் செல்லும். முன் கடைவாய்ப்பற்களும் கடைவாய்ப்பற்களும் சாதாரணமாக வேறுபட்டிருக்கும். ஆனால் அவை மொட்டையான அல்லது கூர்மையான பல முகடுகள் உள்ள கூழை முகட்டுப்பற்கள் (Bunodont) அல்லது வளைவான முகடுகளுள்ள பிறைமுகட்டுப்பற்கள் (Selenodont), மார்பிலும் இடுப்பிலும் சேர்ந்து பத்தொன்பது முள் ளெலும்புகளுள்ளவை, இரைப்பையானது சிக்கலான மூன்று அல்லது நான்கு அறைகளாகப் பிரிந்த அமைப் புள்ளது. சீக்கம் (Caecum) என்னும் பெருங்குடல்வாய் வளர்ச்சி சிறிதாக இருக்கும். பால் சுரக்கும் தனங்கள் சிலவே தொடையிடுக்கில் (Inguinal) மடியாக இருக் கும் அல்லது பலவாகி வயிறு நெடுக (Abdominal) இருக்கும். தலையின் நெற்றியெலும்புகளிலிருந்து எலும்பு வளர்ச்சிகள் சாதாரணமாக வளர்ந்திருக்கும்.

ஒற்றைக்குளம்பிகள்[தொகு]

குதிரைக் குளம்பு

ஒற்றைக்குளம்பிகள் (பெரிஸ்ஸோடாக்ட்டிலா) என்பது டாப்பிர், காண்டாமிருகம், குதிரைகள் ஆகியவை அடங்கிய வரிசை. இவ்விலங்குகளில் மூன்றாம் விரலே பாதத்தின் நடுவில் அமைந்திருக்கும். அதுவே மிகப் பெரியது. காலின் சமச்சீர்த்தளம் அதன் நடுவே செல்லும். அதாவது அந்த நடுக்கோடு மூன்றாம் விரலை இரண்டு சமபாகங்களாக நீளவாட்டில் பகுக்கும், முன் கடைவாய்ப் பற்கள் கடைவாய்ப் பற்களையே ஒத்திருக்கும். அவற்றிலெல்லாம் முகடுகள் வரம்பு வரம்பாக அமைந்திருக்கும். அதனால் அவை வரப்பு முகட்டுப் பற்கள் (Lophodont) எனப்படும்.

மேலும் இவற்றின் சிகரம் மிக உயரமாகவும், சிகரமும் வேரும் சேருமிடமாகிய கழுத்து, பற்குழிக்குள்ளே ஆழ்ந்துமிருக்கும். ஆதலால் இது ஆழ்பல் (Hypsodont) எனப்படும். மார்பிலும் இடுப்பிலும் சேர்ந்து இருபத்து மூன்று முள்ளெலும்புகள் இருக்கும். இரைப்பை எளிதான அமைப்புள்ளது. ஒரே அறையுள்ளது, சீக்கம் பெரியது. பித்தப்பை இருப்பதில்லை. தனங்கள் தொடையிடுக்கில் இருக்கும். நெற்றியெலும்புகளில் வளர்ச்சிகள் இருப்பதில்லை.

ஒற்றுமைகள்[தொகு]

இவ்விரண்டு வரிசைகளிலும் காணும் ஒற்றுமைகளில் சில வருமாறு: இவையெல்லாம் தரையில் வாழ்வன. முழு அடியும் நிலத்தில் பொருந்தாதவை. விரல்களைக் குளம்பு மூடியிருக்கும். வேலை செய்யக்கூடியனவான விரல்கள் நாலுக்கு மேல் ஒரு காலில் என்றும் இருப்பதில்லை. இக்காலத்து விலங்குகளில் முழுமுதிர்ச்சியுள்ளவையில் காறையெலும்பு இருப்பதில்லை. மூளையில் மடிப்புக்கள் நன்றாக உண்டாகியிருக்கும்.

ஆர்ட்டியோடாக்ட்டிலா வரிசையில் சூயினா,தைலோப் போடா, திராகுலினா, பெக்கோரா என்று நான்கு துணை வரிசைகள் உண்டு. இவை நான்கையும் இணைக்கும் அமைப்புக்களுள்ள பாசில் விலங்குகள் உண்டு.

சூயினா[தொகு]

ஹிப்போப்பாட்டமஸ், பன்றி, பெக்காரி ஆகியவை அடங்கியது. மூன்றாம் நான்காம் விரல்களுக்குரிய உள்ளங்கை, உள்ளங்கால் எலும்புகள் முற்றிலும் நன்றாகச் சேரவில்லை. பெருங்குழாய் எலும்பாக (Cannon bone) அவை இன்னும் ஆகவில்லை.

ஹிப்போப்பாட்டமஸ் என்னும் நீர்க் குதிரை மிகப் பெரிய ஆப்பிரிக்க விலங்கு. பகலில் ஆற்றிலும் ஏரியிலும் நீரில் நீந்தியும் அழுந்தியும் பெரும்பாலும் மறைந்து வாழும். இரவில் நிலத்தின்மேல் வந்து புல்லும் தழையும் மேயும், தோல் மிகத் தடித்தது. மயிர் மிகக் கொஞ்சமே. முன்முகம், தலை, கழுத்து, வால் ஆகியவற்றில் மட்டும் உண்டு. ஒவ்வொரு காலிலும் நான்கு விரல்கள் உண்டு. அவை நாலும் நிலத்தைத் தொடும். முன்பற்களுக்கு வேர் இல்லை. அவை வளர்ந்து கொண்டே இருக்கும். வளைவான பெரிய கோரப்பற்களும் அப்படியே, இரைப்பையில் மூன்று அறைகள் உண்டு,  சீக்கம் இல்லை.

சூயடீ பன்றி கிழக்கு அர்த்தகோளத்துக்குரியவை. முன் முகம் (Snout) அசையக்கூடியது. மூக்குத் தொளைகள் முகத்தின் முனையில் இருக்கும். கால்கள் மெல்லியவை, நான்கு விரல்கள் நன்றாக வளர்ந்திருக்கும்; எனினும் இரண்டாம் ஐந்தாம் விரல்கள் நடக்கும்போது நிலத்தில் படிவதில்லை. முன்பற்களுக்கு வேர் உண்டு. மேல்தாடையிலுள்ள கோரப்பல் பக்கம் நோக்கியாவது மேல்னோக்கியாவது வளைந்து வளரும். இரைப்பை எளிதானதே எனினும் அதன் இதய (Cardiac) பாகம் ஒரு பைபோலச் சிறு பைகளுடன் அமைந்திருக்கும். சீக்கம் உண்டு. சூஸ் (பன்றி) பாபிரூசா, பாக்கோக் கீரஸ் என்பவை முக்கிய சாதிகள்.

அமெரிக்காவில் வாழும் பெக்காரி என்னும் சிறு விலங்குகள் பன்றிபோன்றவை, முன்காலில் நான்கு விரலும் பின்காலில் மூன்று விரலும் உள்ளவை, இரைப்பை சிக்கலானது.

துணைவரிசை[தொகு]

துணைவரிசை தைலோப்போடா, ஒட்டகக் குடும்பம் அடங்கியது, கிழக்கர்த்தகோளத்தில் ஒட்டகங்களும், அமெரிக்காவில் லாமாக்களும் உண்டு. கால்கள் நீண்டவை. விரல்களின் முனைகளில் குளம்பு முற்றிலும் மூடியிராது. குறைவாக இருக்கும். இவ்விலங்குகள் விரல்களின் நடு எலும்புகளைச் சூழ்ந்துள்ள தோல்மெத்தையை ஊன்றி நடக்கும். தொடையெலும்பு மிக நீண்டு நேராக இருக்கும். முழங்கால் மிகத் தாழ்ந்திருக்கும், இரைப்பை மிகச் சிக்கலானது. ரூமென் என்னும் முதற்

பகுதியிலே, சுரப்பித் திசுவாலான நீரறைகள் (Water cells) என்னும் பகுதிகள் இருக்கின்றன. இந்தக் குடும்பத்துப் பாலூட்டிகளின் சிவப்பு ரத்த அணு நீள்வட்ட வடிவாக இருக்கும். மற்றப்பாலூட்டிகளில் அது வட்டமாக இருக்கும். காமிலஸ் என்பது ஒட்டகம். ஆக்கீனியா என்பது லாமா, அல்ப்பாக்கா முதலிய வகைகளை யுட்கொண்டது.

திராகுலினா என்பவை மிகச்சிறிய விலங்குகள், காலில் நான்கு விரல்களும் வளர்ந்திருக்கும். ஆனால் பக்க விரல்கள் சிறியவை. இந்தோ மலேயா, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் வாழ்வன. ஆப்பிரிக்காவில் உள்ளது. நீரிலும் சேற்றிலும் வாழும் சிறு பிராணி,

பெக்கோரா என்பவை மெய்யான அசைபோடும் விலங்குகள். மான், ஒட்டகச்சிவிங்கி, மாடு, ஆடு ஆகியவை அடங்கியது (பார்க்க: பெக்கோரா).

பெரிஸ்ஸோடாக்ட்டிலா வரிசையில் டாப்பிர் குடும்பம் (நீர் யானை), குதிரைக் குடும்பம் (குதிரை, கழுதை, வரிக்குதிரை), காண்டாமிருகக் குடும்பம் (காண்டாமிருகம்) ஆகிய மூன்று குடும்பங்கள் இக்காலத்தில் உண்டு.

மேற்கோள்கள்[தொகு]

  1. Cooper et al. 2014
  2. Welker, F; Collins, MJ; Thomas, JA; Wadsley, M; Brace, S; Cappellini, E; Turvey, ST; Reguero, M et al. (18 March 2015). "Ancient proteins resolve the evolutionary history of Darwin's South American ungulates". Nature 522 (7554): 81–84. doi:10.1038/nature14249. பப்மெட்:25799987. Bibcode: 2015Natur.522...81W. http://www.nature.com/nature/journal/vaop/ncurrent/pdf/nature14249.pdf. பார்த்த நாள்: 27 April 2015. 
  3. BURGER, Benjamin J., THE SYSTEMATIC POSITION OF THE SABER-TOOTHED AND HORNED GIANTS OF THE EOCENE: THE UINTATHERES (ORDER DINOCERATA), Utah State University Uintah Basin Campus, Vernal, UT, United States of America, 84078, SVP 2015

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குளம்பிகள்&oldid=2948866" இலிருந்து மீள்விக்கப்பட்டது