உள்ளடக்கத்துக்குச் செல்

குரு கிரந்த் சாகிப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒளியூட்டப்பட்ட குரு கிரந்த் பக்கம், இதில் குரு கோபிந்த் சிங்கின் நிசான் (மூல மந்திரம்) உள்ளது. டக்ட் ஸ்ரீ ஹர்மந்திர் சாகிப்பின் தொகுப்பு, பாட்னா

குரு கிரந்த் சாகிப் (பஞ்சாபி மொழி: ਗੁਰੂ ਗ੍ਰੰਥ ਸਾਹਿਬ, gurū granth sāhib ) அல்லது ஆதி கிரந்த் என்பது சீக்கியர்களின் புனித நூலாகும். மேலும் சீக்கியர்களுக்கான கடைசி வார்த்தைகளாகும் ஆகும்.[1] இது 1430 அங்கங்கள் (பக்கங்கள்) கொண்ட பெரிய நூலாகும். இந்நூலானது பொ.ஊ. 1469 முதல் 1708 ஆம் ஆண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்த சீக்கிய குருமார்களால் எழுதித் தொகுக்கப்பட்டதாகும்.[1] அது இறைப் பாடல்கள் அல்லது ஷபதுகளின் ஒரு தொகுப்பாகும். அவை கடவுளின் பண்புகளையும் [2] கடவுளின் பெயரை ஏன் தியானிக்க வேண்டும் என்பதையும் விவரிப்பவையாகும். சீக்கிய குருக்களில் பத்தாமவரான ஸ்ரீ குரு கோவிந்த் சிங் ஜி (1666–1708), அவருக்கு அடுத்த வழிகாட்டியாக ஆதி கிரந்த்தின் புனித உரையை நியமித்துச்சென்றார், இதன் மூலம் மனித குருக்களின் காலம் முடிவடைந்து புனித நூலின் உரை குரு கிரந்த் சாகிப் என நிலைக்கு உயர்த்தப்பட்டது.[3] அதிலிருந்து, அந்த நூலே சீக்கியர்களின் புனித நூலாக இருந்துவருகிறது. மேலும் பத்து சீக்கிய குருக்களின் வாழும் அவதாரமாகவும் அது கருதப்படுகிறது.[4] சீக்கியத்தில் பிரார்த்தனைக்கான மூலம் அல்லது வழிகாட்டியாக விளங்கும் குரு கிரந்த் சாகிப்பின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.

ஆதி கிரந்த் முதலில் ஐந்தாம் சீக்கிய குருவான குரு அர்ஜன் தேவ் (1563–1606) அவர்களால் தொகுக்கப்பட்டது, அது முதல் ஐந்து சீக்கிய குருக்கள் மற்றும் இந்து மற்றும் இஸ்லாமிய மார்க்கத்தவர்கள் உள்ளிட்ட பெரும் ஞானிகளிடமிருந்து தொகுக்கப்பட்டது.[2] சீக்கியர்களின் பத்தாம் குருவின் மறைவுக்குப் பின்னர், பல கையெழுத்துப் பிரதிகள் தயாரிக்கப்பட்டன, அவை பாபா தீப் சிங் அவர்களால் விநியோகிக்கப்பட்டன.

குர்முகி எழுத்துகளால் எழுதப்பட்டு, பெரும்பாலும் பண்டைய பஞ்சாபி மொழியிலும் ஆங்காங்கே ப்ராஜ், பஞ்சாபி, காடிபோலி (ஹிந்தி), சமஸ்கிருதம், வட்டாரக் கிளைமொழிகள் மற்றும் பெருஷிய மொழி ஆகியவற்றிலும் எழுதப்பட்ட இது பெரும்பாலும் சந்த் பாஷா என்னும் பொதுவான தலைப்பின் கீழ் வகைப்படுத்தப்படுகிறது.[5][6][7][8][9][10]

பொருளும் சீக்கியத்தில் இதன் பங்கும்

[தொகு]

சீக்கியர்கள் ஸ்ரீ குரு கிரந்த் சாகிப்பை, வர இருக்கும் அனைத்து தலைமுறை மனித இனத்திற்குமான ஓர் ஆன்மீக வழிகாட்டியாக் கருதுகின்றனர், மேலும் அது சீக்கிய மதத்தவர் ஒருவரின் வாழ்க்கை முறைக்கான வழிகாட்டியாக பிரதானமாகப் பங்கு வகிக்கிறது. சீக்கிய பக்தி வாழ்க்கையில் அதன் பங்கு இரண்டு தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டது. இந்த நூல் ஒரு தெய்வீக வெளிப்பாடாகும்[11] மற்றும் இந்த நூலுக்குள்ளே மதம் மற்றும் நெறிமுறைத் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில்கள் கிடைக்கும் என்பவையே அவ்விரண்டு தத்துவங்களாகும். அதன் இறைப் பாடல்களும் கற்பிதங்களும் குர்பானி அல்லது "குருவின் சொல்" மற்றும் சில நேரங்களில் துர் கி பானி அல்லது "கடவுளின் சொல்" என அழைக்கப்படுகின்றன. இவ்வாறு சீக்கிய இறையியலில், வெளிப்படுத்தப்பட்ட தெய்வீக சொல் குரு என்பதாகும்.[12]

சீக்கிய குருக்களல்லாத எண்ணற்ற புனிதர்களின் எழுத்துகள் ஸ்ரீ குரு கிரந்த் சாகிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன, அவர்களை மொத்தமாக பகத்துகள் "பக்தர்கள்" என்றும் அவர்களது எழுத்துகள் பகத் பானி "பக்தர்களின் சொல்" என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த ஞானிகள், இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள், செம்மார்கள் மற்றும் தீண்டத்தகாதவர்கள் உள்ளிட்ட வெவ்வேறு சமூக மற்றும் மத பின்புலங்களைச் சேர்ந்தவர்களாவர். ஸ்ரீ குரு கிரந்த் சாகிப் ஜியில் சீக்கிய குருக்கள் மற்றும் இந்து மதம் மற்றும் இஸ்லாமிய மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட பிற பெரிய ஞானிகள் (பகத்துகள்) ஆகிய இருசாராராலும் உருவாக்கப்பட்ட எழுத்துக்களைக் கொண்டிருந்தாலும், சீக்கிய குருக்களின் படைப்புகளுக்கும் ஸ்ரீ குரு கிரந்த் சாகிப்பில் உள்ள பகத்துகளின் படைப்புகளுக்கும் எந்த வேறுபாடும் இருப்பதில்லை. "குரு" மற்றும் "பகத்" ஆகிய இரண்டு தலைப்புகளையும் குழப்பிக்கொள்ளக்கூடாது. குரு கிரந்த் சாகிப் குருக்களின் பரம்பரையைச் சேர்ந்த ஆன்மாவாகவும் கடைசி வழிகாட்டியாகவும் விளங்குகிறது. தானே வாழும் குரு என எவராவது கூறினால் அவர் மதத்திற்குப் புறம்பானவராகக் கருதப்படுவார்.[13]

வரலாறு

[தொகு]
ஆதி கிரந்த் முதலில் தங்கக்கோவிலில் நிறுவப்பட்டது.

சீக்கியத்தை நிறுவியவரான குரு நாணக் தேவ் அவர்களின் உரைகளை எழுதும் பணி அவரது வாழும் காலத்திலேயே தொடங்கியது.[14] சீக்கியத்தின் இரண்டாம் குருவான குரு அங்காட், குரு நாணக் தேவின் பாடல்கள் மற்றும் சொற்பொழிவுகளின் கைப்பிரதியைப் பெற்றார். அவர் தனது தொகுப்புகள் அறுபத்து மூன்றையும் அதில் சேர்த்துள்ளார். மூன்றாம் குருவான குரு அமர் தாஸ், பல கையெழுத்துப் பிரதிகளைத் தயாரித்தார், அவற்றில் அவரது 974 தொகுப்புகளும் சேர்க்கப்பட்டன மேலும் பல்வேறு பகத்துகளின் எழுத்துகளும் சேர்க்கப்பட்டன. இந்த கையெழுத்துப் பிரதிகள் கோவிந்த்வால் போத்தீஸ் என அழைக்கப்படுகின்றன. அவை குரு அமர் தாசின் செய்தியைக் குறிப்பிடுகின்றன, மேலும் பகத் பானி ஏன் சேர்க்கப்பட்டது மற்றும் குரு நாணக்கால் பகத்துகள் எவ்வாறு கவரப்பட்டனர் என்பது பற்றிய செய்திகளையும் வழங்குகிறது.[14]

நான்காம் குருவும் இறைப் பாடல்களை இயற்றியுள்ளார். ஐந்தாம் குருவான குரு அர்ஜன் தேவ், அவருக்கு முந்தைய குருக்களின் பானியை (தெய்வீக சொல்) ஒருங்கிணைக்கவும் பிழையான பாடல்கள் இடையிலிருப்பதைத் தடுக்கவும் பொ.ஊ. 1599 இன் முற்பகுதியில் ஆதி கிரந்த்தைத் தொகுக்கத் தொடங்கினார். அது குரு நாணக் தேவ் அவர்களால் உருவாக்கப்பட்ட திட்டத்தின் படி செயல்படுத்தப்பட்டது.[14] டவரிக் குரு கால்சா, அவர் இவ்வாறு எவரும் இதைச் செய்ய முடியுமா எனக் கேட்கும் ஒரு ஹுக்கம்னமா (அதிகாரப்பூர்வ ஆணை) வழங்கியதாகக் குறிப்பிடுகிறார், நடப்பிலுள்ள புனித வெளிப்படுத்தலின் அங்கீகரிப்பை உறுதிப்படுத்துவதற்காக, அனைத்து மூலங்களும் உள்ளடக்கமும் மறுஆய்வு செய்யப்பட்டன.[14][15]

இறுதியாகத் தயாரிக்கப்பட்ட தொகுதி, பாய் குர்தாஸ் அவர்களால் எழுதப்பட்டது: அவரது பணி நேரடியாக குரு அர்ஜன் தேவ் அவர்களின் மேற்பார்வையின் கீழ் நிகழ்ந்தது. முதல் ஐந்து சீக்கிய குருக்கள் மற்றும் பதினைந்து பகத்துகள், பதினேழு பாத்துகள் ("பார்துகள்" அல்லது பாரம்பரிய தொகுப்பாளர்கள்) மற்றும் குரு நாணக் அவர்களின் வாழ்நாள் தோழரான பாய் மர்தான போன்ற பிற நான்கு நபர்கள் ஆகியோரின் தொகுப்புகளும் அதில் சேர்க்கப்பட்டது. ஆதி கிரந்த் தொகுப்புப் பணி முடிவதற்கு ஐந்து ஆண்டுகள் ஆனது, மேலும் பிரபலமாக தங்கக் கோவில் என அழைக்கப்படும் ஹர்மந்திர் சாகிப்பில் ("கடவுளின் இல்லம்") 1604 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 அன்று அது பாபா புத்தாவை முதல் கிரந்தியாகக் கொண்டமைந்தது.[15] முதலில் வெளிவந்த தொகுதியானது தற்போது கர்த்தார்பூரில் உள்ளது, மேலும் அதில் குரு அர்ஜன் தேவ் அவர்களின் கையெழுத்தும் உள்ளது.[16]

வரைபடத்தை குரு கிரந்த சாஹிப் பல்வேறு ஆசிரியர்கள் பிறந்த இடங்களில் விவரிக்கிறது

இந்த முதன்மை படியானது முதலில் குரு ஹர்கோபிந்த் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது, அவர் ஆறாம் குருவாவார். ஆனால் அது அவரது பேரன்களில் ஒருவரான தீர் மாலால் என்பவனால் திருடப்பட்டது, அவன் குரு என்ற அந்தஸ்துக்குக்காக அவ்வாறு செய்தான். சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின்னர், ஒன்பதாம் குருவான தேக் பஹதூர் அவர்களின் ஆணையின் பேரில் சீக்கியர்கள் அதை வலுக்கட்டாயமாக மிகுந்த சிரத்தையுடன் மீட்டெடுத்தனர். இந்த முதன்மை பிரதியானது முறையற்ற வகையில் சமூகத்திடமிருந்து கைப்பற்றப்பட்டது எனினும், அதைத் திருப்பி வழங்கியது என்பது, ஆதி கிரந்த்தின் எந்த நகலும் மற்றொன்றை விட தெய்வீகமானதில்லை என்ற செய்தியைக் குறிக்கிறது. மிகுந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, ஆதி கிரந்தின் இந்த நகல் ("கர்த்தார்பூர் போத்தி" என அழைக்கப்படுவது) வைசாக்கி விழாவின் போது கர்த்தார்பூரில் தீர் மால் அவர்களின் வம்சாவழியினரால் காட்சிக்கு வைக்கப்படுகிறது.

ஆதி கிரந்த்தின் இறுதி திருத்தம் குரு கோபிந்த் சிங் அவர்களால் செய்யப்பட்டது, அதற்கு பாய் மனி சிங் எழுதுபவராக சேவையாற்றினார், அது டல்வாண்டி சாபோவில் (பின்னர் டம்டமா சாகிப் என பெயர் மாற்றப்பட்டது) மேற்கொள்ளப்பட்டது. குரு கோபிந்த் சிங், குரு தேக் பஹதூர் அவர்களால் இயற்றப்பட்ட பாடல்களையும் சேர்த்தார்[17], ஆனால் அவரது பாடல்களைச் சேர்க்கவில்லை. அதில் குரு கோபிந்த் சிங் "அக்காண்ட் பாத்தை" (குரு கிரந்த் சாகிப்பின் தொடர்ச்சியான ஒப்புவிப்பு) பயன்படுத்தியிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.[18] டல்வாண்டி சாபோவிலிருந்து, குரு கோபிந்த் சிங் தக்காணத்திற்குச் சென்றார். குரு கோபிந்த் சிங் நாண்டெட்டில் இருக்கும் போது, அவர் இயற்றிய இறுதித் திருத்தப் பதிப்பை, சீக்கியர்களின் குருவாக 1708 ஆம் ஆண்டு நிறுவினார்.

குரு கிரந்த் சிங் சாகிப்பிலுள்ள பாடல்கள் ராகங்கள் அல்லது சாஸ்திரீய சங்கீத பாடல்கள் என்ற பிரிவின் கீழ் வகைப்படுத்தப்படுகின்றன. அவற்றின் காலத்தினடிப்படையிலான வரிசையமைப்பானது பத்து குருக்களின் வரிசையை அடிப்படையாகக் கொண்டிருக்காமல் ராகங்களின் அடிப்படையில் அமைந்திருந்தது. ஆதி கிரந்த்தில், சீக்கியர்கள் ஸ்ரீ குரு கிரந்த் சாகிப்பின் எந்த குறிப்பிட்ட பிரதியையும் குருவாகக் குறிப்பிட்டு வலியுறுத்தவில்லை.

இந்தியாவின் உச்சநீதிமன்றம், வரலாற்று ரீதியான மற்றும் சட்ட ரீதியான காரணங்களுக்காக, குரு கிரந்த் சாகிப் ஒரு 'சட்டப்பூர்வ நபராகக்' கருதப்பட வேண்டும் எனக் கூறியுள்ளது: "பத்தாம் குருவிற்குப் பின்னர் கிரந்த் குருவின் இடத்தைப் பெற்றுள்ளது. குரு கிரந்த் சாகிப் ஒரு சட்டப்பூர்வமான நபராகக் கருதப்படுவதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை." என்ற கருத்தை நீதிமன்றம், சொத்து விவகாரத்தின் சூழலின் அடிப்படையில் தெரிவித்தது.

ஆதி கிரந்த் குரு கிரந்த் சாகிப்பாக உயர்ந்தது

[தொகு]

பொ.ஊ. 1708 ஆம் ஆண்டு சீக்கியர்களின் பத்தாம் குருவான குரு கோபிந்த் சிங் அவர்களால் ஆதி கிரந்த் "சீக்கியர்களின் குரு" என நிர்ணயிக்கப்பட்டது. குரு கோபிந் சிங் ஆதி கிரந்த்தை சீக்கியத்தின் குருவாக நியமித்த இந்த நிகழ்வு பாட் வாஹியில் (ஒரு கவிஞரின் ஆவணம்) கண்ணால் பார்த்த சாட்சியான நர்பத் சிங் அவர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது.[19] அவர் குருவின் மன்றத்தில் ஒரு கவிஞராக இருந்தவர். பத்தாம் குரு வழங்கிய அறிவிப்புக்கு சான்றளிக்கக் கூடிய பல வகையான ஆவணங்கள் உள்ளன.

இதனால், சில வழக்கத்திற்கு மாறான நிகழ்வுகள் ஏற்பட்ட நிலையிலும், சீக்கியர்கள் குரு கிரந்த் சாகிப்பைத் தங்கள் நிலைபேறுடைய குருவாக பெரும்பாலும் ஏற்றுக்கொள்கின்றனர். 1708 ஆம் ஆண்டு அக்டோபர் தினத்திலிருந்து இதுவே சீக்கியர்களின் புரிதலும் நம்பிக்கையுமாக உள்ளது.

குருவின் கட்டளைகள்

[தொகு]

Punjabi: "ਸੱਬ ਸਿੱਖਣ ਕੋ ਹੁਕਮ ਹੈ ਗੁਰੂ ਮਾਨਯੋ ਗ੍ਰੰਥ"
எழுத்துப்பெயர்ப்பு: "சப் சிகன் கோ ஹுகம் ஹை குரு மான்யோ க்ரந்த்"
தமிழ்: "சீக்கியர்களனைவரும் கிரந்தத்தை குருவாக ஏற்கக் கடவர்."

- Guru Gobind Singh, October, 1708, Nanded

குரு கோபிந்த் சிங்கின் நெருங்கிய நண்பரும் ரேஹத்-நாமாவின் ஆசிரியருமான ப்ரஹ்லாத் சிங் குருவின் கட்டளைகளைப் பதிவு செய்துள்ளார், அவர் "நிலைபேறுடைய எங்கள் கடவுளின் ஆணையின் பேரில் பாந்த் [சீக்கியம்] உருவானது: இதன்படி அனைத்து சீக்கியர்களும் கிரந்த்தை தங்கள் குருவாக ஏற்று கீழ்படிய வேண்டும்". (ரேஹத்-நாமா, பாய் ப்ரஹ்லாத் சிங்)[20] அதே போல் குரு கோபிந்த் சிங்கின் மற்றொரு நண்பரான சௌப்பா சிங், அவரது ரேஹத்-நாமாவில் இந்தக் கட்டளையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

தொகுப்பு

[தொகு]

சீக்கிய குருக்கள் தங்கள் புனித இலக்கியத்தை எழுதுவதற்காக ஒரு புதிய எழுத்து முறையை உருவாக்கினார்கள், அது குர்முக்கி எனப்பட்டது.[21] அந்த எழுத்து முறையின் உண்மையான தோற்றம் எது என்று தெரியவில்லை எனினும்,[22] குரு நாணக் காலத்தில் அது தொடக்க நிலையில் இருந்ததாக நம்பப்படுகிறது. சீக்கிய மரபுப்படி, குரு அங்காட் அந்த எழுத்து முறையைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது,[21] மேலும் அவரே அதை சீக்கியர்களிடையே பரப்பியவர் என்றும் நம்பப்படுகிறது. அது முற்கால சீக்கிய கைப்பிரதியான மஹ்மான் ப்ரக்காஷில்', அந்த எழுத்துமுறை குரு நாணக் அவர்களின் ஆலோசனையின் பேரில் அதை உருவாக்கியவரின் ஆயுட்காலத்திலேயே குரு அங்காட் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.[23] குர்முக்கி என்ற சொல்லை "குருவின் திருவாயிலிருந்து" என மொழிபெயர்க்கலாம். அந்த எழுத்துமுறை தோன்றிய காலத்திலிருந்து சீக்கிய இலக்கியங்களை எழுதவே பயன்படுத்தப்பட்டுவந்தது. சீக்கியர்கள் குருமுக்கி மொழி இலக்கியங்களுக்கு உயரிய புனிதத் தன்மை இருப்பதாகக் கருதுகின்றனர்.[24] குருமுக்கி மொழி எழுத்து முறையே இந்திய மாநிலமான பஞ்சாபின் அதிகாரப்பூர்வ மொழியுமாகும்.

குரு கிரந்த் சாகிப் ஆயிரத்து நானூற்று முப்பது பக்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, அவை சீக்கிய மரபில் அங்கங்கள் (உறுப்புகள்) எனப்படுகின்றன. அதை வெவ்வேறு மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்:[25]

  1. அறிமுகப் பிரிவில் மூல் மந்த்ரா, ஜப்ஜி மற்றும் சோஹிலா ஆகியவை உள்ளன, அவை குரு நாணக்கால் இயற்றப்பட்டவை ஆகும்
  2. சீக்கிய பகத்துகளுக்கு அடுத்ததாக வந்த சீக்கிய குருக்களின் படைப்புகள் ராகங்கள் அல்லது இசைக் குறிப்புகளின் வரிசைப் படி சேகரிக்கப்பட்டன (கீழே காண்க).
  3. குரு தேக் பஹதூரின் படைப்புகள்

செய்யுள்கள் வெவ்வேறு ராகங்களில் அமைந்த அவற்றின் இசை அமைப்புகளின் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன.[26] ராகம் என்பது இசைக் கலைஞர்கள் இசைப்பதற்கான ஓர் அடிப்படையை அமைக்கும் ஒரு வரையறுக்கப்பட்ட ஸ்கேல் அல்லது மோடை அடிப்படையாகக் கொண்டமைந்த இசைக் கூறுகளின் ஒரு வரிசையாகும். ராகங்கள் என்பவை நாள் மற்றும் ஆண்டின் பல்வேறு மனநிலை மற்றும் காலங்களுடன் தொடர்புடையவையாக உள்ளன.[26] சீக்கிய மரபிலுள்ள மொத்த ராகங்களின் எண்ணிக்கை முப்பத்தொன்றாகும், அவை பதினான்கு ராகங்கள் மற்றும் பதினேழு ராகினிகள் (குறைவான முக்கியத்துவமுடையவை அல்லது குறைவாக வரையறுக்கப்பட்ட ராகங்கள்) என பிரிக்கப்பட்டுள்ளன. ராகப் பிரிவுக்குள், பாடல்கள் சீக்கிய குருக்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய சீக்கிய பகத்துகளின் வரிசையின் படி அமைக்கப்பட்டுள்ளன.

அதிலுள்ள பல்வேறு ராகங்கள், அவற்றின் வரிசையின்படி: ராகஸ்ரீ, மாஞ்ச், கௌரி, அசா, குஜ்ரி, தேவநகரி, பீஹகாரா, வதாஹன்ஸ், சோரத், ஷனஸ்ரீ, ஜயித்ஸ்ரீ, தோடி, பைராரி, திலாங், சுஹி, பிலவால், கோண்ட் (காண்ட்), ராம்கலி, நுத்-நாராயண், மாலி-கௌரா, மாரு, துக்காரி, கேதாரா, பைரவ் (பாயிரோ), பசந்த், சாரங், மலார், கான்ரா, கல்யான், ப்ரபாத்தி மற்றும் ஜைஜவந்தி. மேலும் வார்களின் இருபத்திரண்டு பாடல்களும் உள்ளன (பாரம்பரிய பாடல்கள்). இவற்றில் ஒன்பது பாடல்களுக்கு பிரத்யேக மெட்டுக்கள் உள்ளன, மேலும் மீதமுள்ளவை எந்த மெட்டிலும் பாடப்படுவன.[26]

சீக்கியர்களிடையே இதன் புனிதம்

[தொகு]
குரு ஹர் ராஜின் கையெழுத்தில் மூல மந்திரம்

சீக்கியர்கள் குரு கிரந்த் சாகிப்பில் உள்ள உரையின் மொத்த புனிதத் தன்மையையும் உணர்கின்றனர். குரு கிரந்த் சாகிப்பிலுள்ள சீக்கிய குருக்களின் எழுத்துகள் எதையும் எவரும் மாற்றவோ திருத்தவோ முடியாது. வாக்கியங்கள், சொற்கள், கட்டமைப்புகள், இலக்கணம் போன்ற எல்லாமே இதில் அடங்கும். குருக்களும் இந்த மொத்த புனிதத் தன்மையைப் போற்றுகின்றனர். குரு ஹர் ராய் அவரது மூத்த மகன் ராம் ராய் குரு நாணக்கின் பாடலின் ஒரு சொல்லை மாற்றியதற்காக அவனை தன் மகனல்ல என ஒதுக்கிவைத்துவிட்டார்.[27] முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்புக்கு குர்பானியின் விளக்கமளிக்க குரு ஹர் ராயினால் ராம் ராய் டெல்லிக்கு அனுப்பப்பட்டார். பேரரசரை மகிழ்விப்பதற்காக அவர் குரு நாணக்கின் பாடலிலுள்ள சொற்களை மாற்றிப் பாடினார். அந்த விஷயம் குருவுக்குத் தெரிவிக்கப்பட்டது, அவரது மகனின் செயலினால் மனம் கசந்து அவனை விலக்கிவைத்தார். பின்னர் வயதான காலத்தில், குரு கோபிந்த் சிங் ராம் ராயை மன்னித்தார்.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

குரு கிரந்த் சாகிப்பின் மொழிபெயர்ப்புகள் உள்ளன. இருப்பினும், அதிலுள்ள செய்தியை முழுமையாகப் புரிந்துகொள்ளவும் போற்றவும் சீக்கிய குருக்களால் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட குர்முக்கி மொழியைக் கற்பது அவசியம் என சீக்கியர்கள் நம்புகின்றனர். அதன் மொழிபெயர்ப்புகள் குரு கிரந்த் சாகிப்பின் தொடக்க நிலை புரிதலை மட்டுமே வழங்கக்கூடும். குரு கிரந்த் சாகிப்பை முழுமையாகப் புரிந்து கொள்ளவும் உணர்ந்து அனுபவிக்கவும் சீக்கியர்கள் குர்முக்கி மொழியைக் கற்றுக்கொள்ள ஊக்குவிக்கப்படுகின்றனர்.

ஒப்புவித்தல்

[தொகு]
ஒரு கிரந்த்தி குரு கிரந்த் சாகிப்பிலிருந்து ஒப்புவிக்கிறார்

குரு கிரந்த் சாகிப் எப்போதும் குருத்வாராவின் மையத்தில் டாக்த் (ஆசனம்) என்னும் ஓர் உயர்ந்த பீடத்தில் வைக்கப்பட்டிருக்கும். குரு கிரந்த் சாகிப்புக்கு உயர்ந்த மரியாதையும் மதிப்பும் வழங்கப்படுகிறது. சீக்கியர்கள் குரு கிரந்த்தின் முன்னிலையில் அவர்களின் தலையை மூடி காலணிகளை அகற்றிவிட்டே இருப்பார்கள். அதன் முன்பு வரும் முன்னர், அவர்கள் குளித்துவிட்டே வருவார்கள், மேலும் குரு கிரந்திற்கு வணக்கமும் செலுத்துவார்கள். குரு கிரந்த்தை கழுவாத கைகளினால் தொடுவதோ அல்லது தரையில் வைப்பதோ மரியாதையின்மையாகக் கருதப்படுவதால் அது வழக்கமாக தலையின் மீது வைத்தே கொண்டு செல்லப்படும்.[28]

எந்த குருதுவாராவிலும் குரு கிரந்த் சாகிப்பே எப்போதும் மையமாக இருக்கும். அதை மிகுந்த மரியாதைக்குரிய அனைத்து முறைகளையும் கொண்டு மதிக்கின்றனர், அது சீக்கிய குருக்களின் பாரம்பரியமாகக் கருதப்படுகிறது, மேலும் அது ஒரு உயர்ந்த பீடத்தில் வைக்கப்படும் அதைப் படிப்பவர்கள் தரையில் அமர்வர். அது சாரின் (ஒரு வகை விசிறி) மூலமாக காற்று வீசச் செய்யப்படுகிறது, அது நுண்ணிய பொருளால் ஆனதாகும் மேலும் ஒரு துணியால் மூடப்பட்டே இருக்கும். மரியாதையின் அடையாளமாக பக்தர்கள் குருவின் முன்பு வணங்குகின்றனர்.

குரு கிரந்த் சாகிப் கிரந்தியின் மூலம் பார்த்துக்கொள்ளப்படுகிறது. குரு கிரந்த்தை ஒப்புவித்தலுக்கும் சீக்கிய பிரார்த்தனையை நடத்துவதற்கும் அவரே பொறுப்பாவார். குரு கிரந்த்தின் கவனிப்பாளராகவும் கிரந்தியே செயல்படுகிறார், மேலும் இதை வேறு எவரும் செய்யக்கூடாது. வெப்பம், தூசி, மாசுக்கள் போன்றவற்றினைத் தடுப்பதற்காக அது பட்டுத் துணியால் மூடிவைக்கப்பட்டுள்ளது, அந்தத் துணி ரமாலா என அழைக்கப்படும். அது மீண்டும் எடுக்கப்படும் வரை ஒரு ரமலாவின் கீழ் அஞ்சி சாகிப்பின் மீது வைக்கப்பட்டிருக்கும்.[28]

அச்சிடுதல்

[தொகு]

அமிர்தசரசைச் சேர்ந்த சீக்கியர்களின் அதிகாரப்பூர்வ மத அமைப்பினால் குரு கிரந்த் சாகிப் அச்சிடப்படுகிறது. குரு கிரந்த் சாகிப்பை உலகளவில் அச்சிடுவதற்கான பதிப்பக நிறுவனமும் அதுவே ஆகும். அச்சு நகல்களை உருவாக்கும் போது மிகுந்த கவனத்துடன் கையாளப்படுகிறது, மேலும் அச்சிடும் பணியின் போது, கண்டிப்பான நடத்தை நெறிகள் பின்பற்றப்படுகின்றன.[29]

இருபதாம் நூற்றாண்டுக்கு முன்பு, குரு கிரந்த் சாகிப்பின் கையெழுத்து பிரதிகள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. குரு கிரந்த் சாகிப்பின் முதலில் அச்சிடப்பட்ட நகல் 1864 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து, குரு கிரந்த் சாகிப்பில் நிலைத்தரமாக 1430 பக்கங்கள் இருந்தன.

தற்போது ஸ்ரீ குரு கிரந்த சாகிப் ஜி, அமிர்தசரசில் உள்ள குருத்வாரா ராம்சரின் கீழ்தளத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அச்சகங்களில் அச்சிடப்படுகிறது; அச்சுப் பணியின் போது, பயனின்றி போகும் உரை உள்ள காகிதங்கள் கோயிந்த்வாலில் தகனம் செய்யப்படுகின்றன.[30] இருப்பினும், ஸ்ரீ குரு கிரந்த் சாகிப்பின் அங்கீகரிக்கப்படாத பதிப்புகளும் அச்சிடப்பட்டுள்ளன.

சேதமடைந்த பிரதிகள்

[தொகு]

பயன்படுத்த முடியாத அளவுக்கு மிகவும் சேதமடைந்த புனித நூலான குரு கிரந்த் சாகிப்பின் பிரதிகள் ஏதேனும் இருப்பின் அவையும் அச்சிடப்பட்ட உரையைக் கொண்டுள்ள தாள்கள் ஏதேனும் இருப்பின் அவையும் இறந்தவரைச் செய்வது போலவே மரியாதையுடன் தகனம் செய்யப்படுகின்றன. அவ்வாறு எரிப்பது அகன் பேத் என அழைக்கப்படுகிறது. (இதே போன்ற காரணங்களுக்காகவே, யூதர்களும் சேதமடைந்த தார புத்தகங்களை எரித்து மனிதர்களுக்கு செய்வதைப் போலவே அவற்றுக்கு இறுதிச் சடங்குகளை நடத்துவர். இஸ்லாமியர்களும் படிக்க முடியாத திருக் குரானின் பக்கங்களை இவ்வாறே செய்கின்றனர்.[சான்று தேவை])

குரு கிரந்த் சாகிப் கையெழுத்துப் பிரதிகளின் டிஜிட்டலாக்கம்

[தொகு]

பஞ்சாப் டிஜிட்டல் நூலகம் (PDL) நாணக்ஷாஹி அறக்கட்டளையுடன் இணைந்து பல நூற்றாண்டு பழமை வாய்ந்த கையெழுத்துப் பிரதிகளின் டிஜிட்டலாக்கப் பணியை 2003 ஆம் ஆண்டு தொடங்கியது. பஞ்சாபின் உயரிய பாரம்பரிய புதையல்களை எளிதில் அணுகுவதற்காக அவற்றைப் பாதுகாப்பதற்காக இவ்வாறு டிஜிட்டலாக்கம் செய்வதற்கான தனது முயற்சியை PDL அமைப்பு வெளிப்படுத்தியுள்ளது. நீண்ட காலமாக இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புதையல்கள் இழப்பு அல்லது சேதமடையும் அச்சுறுத்தலுக்குட்பட்டிருந்தது. இப்போது, பஞ்சாப் டிஜிட்டல் நூலகம் அவற்றை அவற்றின் அசல் வடிவத்தில், அவற்றின் அசல் வண்ணம், படங்கள் மற்றும் தரத்துடன் கூடிய வகையில் டிஜிட்டல் முறையில் பாதுகாக்க முயற்சிக்கிறது, அதே நேரத்தில் அவற்றை நாம் அணுகும் மற்றும் பயன்படுத்தும் முறையை மாற்றுகிறது. இது ஒரு நூலகத்தின் பங்கையும் அதன் நோக்கத்தையும் மறுவரையறை செய்கிறது. ஆற்றல் மிக்க தேடல் மற்றும் உலாவல் வசதிகளுடன் கல்வியாளர்களும் பொதுமக்களும் ஆன்லைன் டிஜிட்டல் நூலகத்தை எளிதில் அணுக முடியும். வரலாற்றின் இந்த டிஜிட்டலாக்கம் விலை மதிப்பற்ற நேரத்தையும் பணத்தையும் சேமிக்கும் அதே நேரத்தில் ஆராய்ச்சி, கல்வி மற்றும் விழிப்புணர்வுக்கும் உறுதியளிக்கிறது.

ஸ்ரீ குரு கிரந்த் சாகிப் பற்றி சீக்கியர்களல்லாதவர்களின் கருத்துகள்

[தொகு]

குருவின் கற்பிதங்களின் நம்பகத்தன்மையைப் பற்றி மாக்ஸ் ஆர்த்தர் மக்கலிஃபே இவ்வாறு எழுதுகிறார்:

சீக்கிய மதம் அதன் சமயக் கொள்கைகளில் பெரும்பாலான பிற இறையியல் அமைப்புகளிலிருந்து வேறுபடுகிறது. உலகறிந்த பல மிகப் பெரும் ஆசிரியர்கள் தங்கள் வரி ஒன்றையும் அதில் விட்டுச்செல்லவில்லை, அதிலிருந்து நாம் பாரம்பரியமாகக் கற்பிக்கப்பட்ட அல்லது இரண்டாம் நிலை தகவலை மட்டுமே பெறக்கூடும். பித்தாகோரஸ் அவரது சமயக் கொள்கைகளை எழுதியிருந்தால், அவரது படைப்புகள் நமக்கு வந்திருக்காது. ப்ளேட்டோ மற்றும் க்ஸெனோஃபோன் ஆகியோரின் எழுத்துகளிலிருந்தே நாம் சாக்ரட்டீஸின் கருத்துகளை அறிகிறோம். புத்தர் தனது போதனைகள் எதனையும் எழுத்து வடிவில் விட்டுச்செல்லவில்லை. ஐரோப்பியர்களிடையே கன்ஃபியூசியஸ் எனப் பிரபலமான குங்ஃபூ-ட்ஸே, அவரது நெறிமுறை அல்லது சமூக அமைப்பைப் பற்றி விரிவாக விளக்கும் எந்த ஆவணங்களையும் விட்டுச்செல்லவில்லை. கிறிஸ்தவத்தை உருவாக்கியவர் எழுத்துவடிவில் அவரது தத்துவங்கள் எதனையும் விட்டுச்செல்லவில்லை, மத்தேயு, லூக்காஸ் மற்றும் யோவான் அவர்களைப் பொறுத்தமட்டில், நாம் புனித போதனைகளை நம்பக்கடமைப்பட்டுள்ளோம். அரேபிய தீர்க்கதரிசி குரானின் அதிகாரங்களை எழுத்துவடிவில் வழங்கவும் இல்லை. அவை அவரது சீடர்கள் அல்லது தொண்டர்களால் எழுதப்பட்டன அல்லது தொகுக்கப்பட்டன. ஆனால், சீக்கிய குருக்களின் எழுத்துகள் பாதுகாக்கப்பட்டுள்ளன, மேலும் அவை முதன் முறையாக என்ன கற்றுக்கொடுக்கப்பட்டது என்பதை நாம் அறியமுடியும்.

நோபல் பரிசு பெற்ற பேர்ல் பக், குரு கிரந்த் சாகிப்பின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பைப் பெறும் போது பின்வரும் கருத்தைக் கூறுகிறார்:

.... நான் மிகப் பெரும் மதங்களின் புனித உரைகளைப் படித்திருக்கிறேன், ஆனால் இந்தத் தொகுதிகளில் உள்ளதைப் போல இதயத்திற்கும் மனதிற்கும் இவ்வளவு அமைதியையும் சக்தியையும் தரும் அம்சத்தை நான் வேறெங்கும் கண்டதில்லை. அவை நீளமாக இருப்பினும், சுருக்கமாக உள்ளன, மேலும் மனித இதயத்தை எளிதில் தொடுமளவுக்கு பரந்துவிரிந்துள்ளன, மிகவும் மரியாதைக்குரிய கடவுள் என்ற கருத்திலிருந்து, மனித உடலின் அங்கீகரிப்பு மற்றும் உண்மையில் அதன் நடைமுறைத் தேவைகள் பற்றிய வலியுறுத்தல் வரையிலான பல கருத்துகள் அதிலுள்ளன. இந்த நூல் உரைகள் பற்றிய வித்தியாசமான நவீன கருத்தும் உள்ளது, அவை மிகவும் சமீபத்தில் கிட்டத்தட்ட 16 ஆம் நூற்றாண்டு அளவிலேயே தொகுக்கப்பட்டவை, அது உலகம் சுற்றுபவர்கள், நாம் அனைவரும் கற்பனையான கோடுகளால் மட்டுமே பிரிக்கப்பட்டுள்ளோம், ஒரே உலகில் தான் வழுகிறோம் எனக் கண்டறிந்த காலமாகும். அப்போது தோன்றிய இவை ஒப்பீட்டில் நவீனமானவை என்பதை நான் அறியும் வரை அது எனக்கு ஒரு புதிராகவே இருந்தது. இந்த மூன்று தொகுதிகளில் நான் உணரும் இந்த ஆற்றல் மூலமே இந்த ஒருமைப்பாட்டின் உணர்வாக இருக்கலாம். அவை எந்த மதத்தைச் சேர்ந்தவருடனும், மதம் எதையும் சேராதவருடனும் பேசுகின்றன. அவை மனிதரின் இதயத்துக்காகவும் தேடல் உள்ளவர்களின் மனதுக்காகவும் பேசுகின்றன. ...
    • (தடித்த எழுத்திலுள்ளவை கோபால் சிங் எழுதிய குரு கிரந்த் சாகிப்பின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கான முன்னுரையிலிருந்து, 1960 சேர்க்கப்பட்டவை)

குரு கிரந்த் சாகிப்பின் செய்தி

[தொகு]

அதன் முக்கியமான செய்திகளில் சிலவற்றை பின்வருமாறு சுருக்கமாக் கூறலாம்: -

  1. உலகிலுள்ள அனைத்து மக்களும் சமமானவர்களே
  2. பெண்கள் ஆண்களுக்குச் சமமானவர்கள்
  3. அனைவருக்கும் ஒரே கடவுளே
  4. உண்மையே பேசுங்கள் உண்மையுடன் வாழுங்கள்
  5. ஐந்து தீமைகளையும் கட்டுப்படுத்துங்கள்
  6. கடவுளின் கட்டளைக்குட்பட்டு வாழுங்கள் (ஒரே கடவுளின் ஆணை)
  7. எளிமை, கருணை, இரக்கம், அன்பு போன்ற நல்ல குணங்களைக் கொண்டிருங்கள்

கவனமும் நெறிமுறையும்

[தொகு]

தனிப்பட்ட நடத்தை

[தொகு]

ஏதேனும் சேவை அல்லது சேவா செய்யும் ஒருவர் பின்வரும் விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் :

  • தலையை எப்போதும் மூடியே வைத்திருக்க வேண்டும்.
  • குருவின் அறைக்கு வெளியே காலணிகளையும் காலுறைகளையும் களைந்துவிட்டு விட வேண்டும்.
  • சுத்தம் தொடர்பான தனிப்பட்ட சுத்தத்திற்கான நெறிமுறைகளை கவனமாகப் பின்பற்ற வேண்டும்
  • சாப்பிடுவது அல்லது அருந்துவது சேவையின் போது கண்டிப்பாகத் தவிர்க்கப்படுகிறது.
  • குருவின் சேவையில் இருக்கும் போது முழுமையான அமைதி கடைப்பிடிக்கப்படுகிறது.
  • அங்கே உள்ளவர்களிடம் மரியாதையுடன் கூடிய மனப்பாங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.சேவாவில் ஈடுபடும் போது பாரபட்சம் பார்க்கக்கூடாது.

சூழல்

[தொகு]
  • அறையை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்
  • குருவை மூடி வைக்கப் பயன்படுத்தும் துணிகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் மேலும் அவற்றை தினமும் மாற்ற வேண்டும். சிலர் அலங்கரிக்கப்பட்ட துணியைப் பயன்படுத்துகின்றனர், ஆனால் அது அவசியமில்லை.
  • குரு கிரந்த் எப்போதும் மாஞ்சி சாகிப்பின் (கைகளால் செய்யப்பட்ட சிறிய அரியணை போன்ற மெத்தை) மீதே வைக்கப்படும்.
  • குரு கிரந்த் சாகிப்பிற்கு மேலே ஒரு கூரை எப்போதும் இருக்கும்.
  • குரு கிரந்த்திற்கு அருகில் ஒரு சிறிய மேடையில் சார் சாகிப் (குரு கிரந்த் சாகிப்பிற்கு மேலே காற்று வீசுவதற்காக செயற்கை இழைகளைக் கற்றையாகச் செய்து உருவாக்கப்பட்டது) வைக்கப்படுகிறது, அது காரா ப்ரசாத் (புனித பிரசாதம்) மற்றும் வழங்கப்படும் பிறவற்றை வைப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

பயணத்தில்

[தொகு]

குரு கிரந்த் சாகிப் ஜி பயணத்தில் இருக்கும் போது பின்வரும் விஷயங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன:

  • குரு கிரந்த் சாகிப் ஜி பயணத்தில் இருக்கும் போது முன்பாக ஐந்து சீக்கியர்கள் செல்வார்கள்
  • மற்றொரு சீக்கியர் சார் சாகிப் சேவாவில் ஈடுபடுவார்
  • ஸ்ரீ குரு கிரந்த் சாகிப் ஜியைக் கொண்டு செல்லும் பிரதான சீக்கியர், அவரது தலையின் மீது சுத்தமான ரமல்லாவை விரித்து பின்னர் கவனமாகவும் மரியாதையுடனும் அதன் மீது ஸ்ரீ குரு கிரந்த் சாகிப் ஜியை வைக்க வேண்டும். ஸ்ரீ குரு கிரந்த் சாகிப்பின் தோற்றம் முழுவதும் எப்போதுமே "மறைக்கப்பட்டிருக்கும்" வகையில், எப்போதும் ஸ்ரீ குரு கிரந்த் சாகிப் சிறிய ரமல்லாவினால் மூடப்பட்டே இருக்கும். ஸ்ரீ குரு கிரந்த் சாகிப் ஜியைக் கொண்டு செல்பவர் "கேஷி இஷ்னான்" செய்திருக்க வேண்டும், அதாவது கூந்தலைக் கழுவி வைத்திருக்க வேண்டும் (இது அவசியம் இல்லை எனினும், குரு சாகிப்புக்கு ஒரு மரியாதையாக இது கடைப்பிடிக்கப்படுகிறது)
  • அப்போதும் "வாஹேகுரு" ஒப்புவிக்கப்பட வேண்டும்.

கவனத்தில் கொள்ள வேண்டிய பிற விஷயங்கள்

[தொகு]
  • குருவை விட உயரமான இடத்தில் எவரும் அமரக்கூடாது.

குரு கிரந்த் சாகிப் வோர்ல்டு யுனிவெர்சிட்டி

[தொகு]

குரு சாகிப் வோர்ல்டு யுனிவெர்சிட்டி 2009 ஆம் ஆண்டு ஜூலையில் தொடங்கப்படுவதாக முடிவு செய்யப்பட்டது. ஸ்ரீ குரு கிரந்த் சாகிப் நான்காம் நூற்றாண்டு நினைவு அறக்கட்டளை மாநாட்டில் இது குறித்து முடிவு செய்யப்பட்டது. அந்த மாநாட்டிற்கு பஞ்சாப் முதல்வர் பரக்காஷ் சிங் பதால் தலைமை வகித்தார். இதை அறிவித்த முதல்வருக்கான ஊடக ஆலோசகரான திரு ஹர்ச்சந்த்ரன் பாயின்ஸ், குரு கிரந்த் சாகிப்பின் விரிவான கல்வி தொடர்பான பணிகள் மட்டுமின்றி, வெவ்வேறு மதங்களைப் பற்றிய ஒப்பீட்டியல் கல்வியுடன், நானோ-தொழில்நுட்பம், உயிர்த்தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிக மேலாண்மை போன்ற பின் நவீனத்துவக் கல்வியில் பங்கேற்பதிலும் அந்தப் பல்கலைக்கழகம் கவனம் செலுத்தும் எனக் கூறினார். இந்தக் கல்வித் திட்டங்கள் அடுத்த ஆண்டின் கல்வி ஆண்டுத் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறினார்.

பின்னர் அந்தப் பல்கலைக்கழகம் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் அடிப்படை அறிவியல்கள், மேலாண்மை, சமூகவியல், கலைகள், மொழிகள், பொறியியல், கட்டடக்கலை, சட்டம் மற்றும் சமூக நீதி போன்றவற்றுக்கான வசதிகளையும் கொண்டிருக்கும் எனவும் கூறினார். அதற்கான வளாகம் கட்டும் பணியின் மூலம் அதன் பணி விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர்க் கூறினார்.

பிற பல்கலைக்கழகங்கள்

[தொகு]

பட்டியாலாவில் உள்ள பஞ்சாபி யுனிவெர்சிட்டி குரு கிரந்த் சாகிப்பில் பல கல்வித்திட்டங்களை வழங்கும் துறையை நிறுவியுள்ளது. 1962 ஆம் ஆண்டில் இத்துறை நிறுவப்பட்டது. சீக்கியம் புனித வெளிப்படுத்தல் நம்பிக்கையினடிப்படையில் அமைந்த ஒரு மதமாகும், மேலும் இது போன்ற ஒரு துறை சீக்கியம் மற்றும் சீக்கிய புனித இலக்கியங்களைப் பற்றி ஆராய்ச்சிகளைச் செய்ய உருவாக்கப்பட்டது.[31] சீக்கியத்தை ஒரு கல்வித் திட்டமாகப் படித்து சீக்கிய ஆய்வுத் துறையில் பணிபுரியும் மாணவர்களுக்கு ஆதார தகவல்களை வழங்குவதே இந்தத் துறையின் நோக்கமாகும். சீக்கிய இறையியல் மற்றும் சீக்கியத் தத்துவம் ஆகியவையே இதன் முக்கிய ஆராய்ச்சிப் பகுதிகளாகும்[31]

குரு கிரந்த் சாகிப்பைப் பற்றிய மேம்பட்ட கல்வியிலான ஆன்லைன் கல்வித் திட்டங்கள் தொடர்பான பணியை அந்தப் பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது. இந்த கல்வித் திட்டங்கள் சர்வதேச அளவில் சீக்கிய பக்தி இலக்கியத்தில் கல்விப் புலமை பெற விரும்பும் எந்த மாணவருக்கும் கிடைக்கும். கல்வித்திட்ட தேர்வுத் தாள்களை "பஞ்சாபி மொழி, இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தின் முன்னேற்றத்திற்கான மேம்பாட்டு மையம்" வடிவமைக்கும்.[32]

குறிப்புதவிகள்

[தொகு]
  1. 1.0 1.1 Keene, Michael (2003). Online Worksheets. Nelson Thornes. p. 38. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 074877159X.
  2. 2.0 2.1 Penney, Sue. Sikhism. Heinemann. p. 14. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0435304704.
  3. Partridge, Christopher Hugh (2005). Introduction to World Religions. p. 223.
  4. Kashmir, Singh. "SRI GURU GRANTH SAHIB — A JURISTIC PERSON". {{{booktitle}}}, Global Sikh Studies. 2008-04-01 அன்று அணுகப்பட்டது..[தொடர்பிழந்த இணைப்பு]
  5. ரிலிஜியன் அண்ட் நேஷனலிசம் இன் இண்டியா - ஹார்னிக் டியோல். வெளியீடு ரௌட்லெட்ஜ், 2000. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-20108-X, 9780415201087. பக்கம் 22. "குறிப்பிடத்தக்கதாகும் திருக்குரான் உருது மொழியில் எழுதப்படவில்லை, அதே போல் இந்து இலக்கியங்களும் இந்தியில் எழுதப்படவில்லை, இந்நிலையில் சீக்கிய புனித நூலான ஆதி கிரந்த்தில் உள்ள பாடல்கள் பல்வேறு மொழிகளில் உள்ளன, அவை அனைத்தையும் சேர்த்து சண்ட் பாஷா எனும் மொழி பிரிவின் கீழே சேர்க்கின்றனர்."
  6. த மேக்கிங் ஆஃப் சிக் ஸ்க்ரிப்ச்சர் - குரிண்டர் சிங் மன். வெளியீடு - ஆக்ஸ்ஃபோர்டு யுனிவெர்சிட்டி ப்ரஸ் US, 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-513024-3, 9780195130249 பக்கம் 5. "ஆதி கிரந்த்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பாடல்களின் மொழி "சண்ட் பாஷா" என அழைக்கப்பட்டுவந்துள்ளது, அது வட இந்தியாவின் இடைக்கால ஞானம்பெற்ற கவிஞர்களின் ஒரு வகை பொதுக் கலப்பு மொழியாகும். ஆனால் நூலின் பரந்துபட்ட நபர்களின் பங்களிப்பின் காரணமாக வட்டார மொழிகள் பல இதில் கலந்துபட்டுள்ளன."
  7. ஹிஸ்டரி ஆஃப் பஞ்சாபி லிட்ரேச்சர் - சுரீந்தர் சிங் கோலி. பக்கம் 48. வெளியீடு - நேஷனல் புக், 1993. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7116-141-3, 9788171161416. "சண்ட் பாஷாவில் (ஞானி - மொழி) எழுதப்பட்டுள்ள குருவின் பாடல்களை நாம் படிக்கும் போது, 16 ஆம் நூற்றாண்டின் இந்திய ஞானியின் படைப்பு போல் தோன்றுகிறது".
  8. இண்ட்ரடக்ஷன்: குரு கிரந்த் சாகிப். "குரு கிரந்த் சாகிப் குருமுக்கி மொழியில் எழுதப்பட்டது. பெரும்பாலும் சண்ட் பாஷா என அழைக்கப்படும் இந்த மொழியானது கிட்டத்தட்ட பஞ்சாபியைப் போலவே இருக்கும். இது வட மற்றும் வடமேற்கு இந்தியா முழுவதும் புரிந்துகொள்ளப்படும் மொழியாகும், மேலும் அது உலகம் சுற்றும் புனித மகான்களிடையே மிகவும் பிரபலமான மொழியுமாகும். பெருசிய மொழியும் சில உள்ளூர் வட்டார மொழிகளும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. பல பாடல்கள் எழுதியவரின் தாய்மொழி அல்லது அவர்களின் இடத்திலிருந்த மொழி ஆகியவற்றைப் பொறுத்து, வெவ்வேறு மொழிகள் மற்றும் வட்டார மொழிகளின் சொற்களைக் கொண்டுள்ளன."
  9. சாங்ஸ் ஆஃப் த செயிண்ட்ஸ் ஃப்ரம் தி ஆதி கிரந்த் - நிர்மல் தாஸ். வெளியீடு - SUNY ப்ரஸ், 2000. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7914-4683-2, 9780791446836. பக்கம் 13. "ஆதி கிரந்தின் பாடல்களை மொழிபெயர்க்கும் முயற்சிக்கு ஒரு மொழி தெரிந்தால் மட்டும் போதாது, அதில் பல மொழிகளும் வட்டார மொழி வேறுபாடுகளும் இடம்பெறும், அதற்காகவும் பணிபுரிய வேண்டியிருக்கும். ஞானிகள் பயன்படுத்திய மொழிகளில், சமஸ்கிருதம்; வட்டார ப்ரக்ரித்ஸ்; மேற்கத்திய, கிழக்கத்திய மற்றும் தெற்கத்திய அப்பாஃப்ராம்சா மற்றும் சஹஸ்க்ருத் ஆகியவையும் அடங்கும். குறிப்பாக, அதில் சண்ட் பாஷா, மராத்தி, பழைய இந்தி, மட்த்ஹிய மற்றும் லெஹ்ந்தி பஞ்சாபி, ஸ்கெட்லேண்ட் பெருஷிய மொழி ஆகியவற்றை அதிகமாகக் காணலாம். பர்பி மர்வாரி, பாங்க்ரு, டக்னி, மல்வாய் மற்றும் அவாதி போன்ற பல வட்டார மொழிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன."
  10. சிக்கிசம் . த குரு கிரந்த் சாகிப் (GGS) - ஹர்ஜிந்தர் சிங். "சஹஸ்க்ருத்தி என்றழைக்கப்படும் மொழியிலும் சண்ட் பாஷாவிலும் இயற்றப்பட்ட பாடல்களும் குரு கிரந்த் சாகிப்பில் உள்ளன, மேலும் அதில் பெருஷியம் மற்றும் சமஸ்கிருத மொழி சொற்களும் அதிகம் காணப்படுகின்றன."
  11. Ganeri, Anit (2003). Guru Granth Sahib and Sikhism. Black Rabbit Books. p. 2023. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1583402454.
  12. foley- Garces, Kathleen (2005). Death and Religion in a changing World. M.E Sharpe. p. 180.
  13. Deol, Harnik (2000). Religion and Nationalism in India. Routledge. p. 62. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 041520108X.
  14. 14.0 14.1 14.2 14.3 Singh, Roopinder (04-09-2004). "The Word of faith". The tribune. பார்க்கப்பட்ட நாள் 2008-04-04. {{cite web}}: Check date values in: |date= (help)
  15. 15.0 15.1 Singh, Sangat (1995). The Sikhs in History. Singh Brothers. pp. 33. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0964755505.
  16. "Original Text". http://timesofindia.indiatimes.com/articleshow/831765.cms. பார்த்த நாள்: 2008-01-21. 
  17. Keene, Michael (2002). New Steps in Religious Education. Nelson thomes. pp. 38. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0748764585.
  18. Singh, Sangat (1995). The Sikhs in History. Singh Brothers. pp. 74. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0964755505.
  19. Singh, Gurbachan (1998). The Sikhs : Faith, Philosophy and Folks. Roli & Janssen. pp. 55. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7436-037-9. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)
  20. Singh, Ganda (1996). Perspectives on The Sikh Tradition. Singh Brothers, Amritsar (India). pp. 224. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7205-178-6. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)
  21. 21.0 21.1 Hoiberg, Dale (2000). Students' Britannica India. Popular Prakashan. p. 207. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0852297602. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)
  22. Duggal, Kartar Singh (1998). Philosophy and Faith of Sikhism. Himalayan Institute Press. p. 14. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0893891096.
  23. Gupta, Hari Ram (2000). History of the Sikhs Vol.1; The Sikh Gurus, 1469-1708. Munshiram Manoharlal Publishers (P) Ltd. p. 114. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8121502764.
  24. Mann, Gurinder Singh (2001). The making of Sikh Scripture. Oxford University Press. p. 5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0195130243.
  25. Nayar, Kamala Elizabeth (2007). The Socially Involved Renunciate: Guru Nanak's Discourse to the Nath. p. 60. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0791472132. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)
  26. 26.0 26.1 26.2 Brown, Kerry (1999). Sikh Art and Literature. Routledge. p. 200. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0415202884.
  27. Bains, K.S. "A tribute to Bal Guru". The Tribune. http://www.tribuneindia.com/2006/20060326/society.htm#2. 
  28. 28.0 28.1 Fowler, Jeaneane (1997). World Religions:An Introduction for Students. Sussex Academic Press. pp. 354–357. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1898723486.
  29. "Sikh holy book flown to Canada". 2004-04-03. http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/3597073.stm. பார்த்த நாள்: 2010-01-05. 
  30. எலீனோர் நெஸ்பிட், "சிக்கிசம்: அ வெரி ஷாட் இண்ட்ரடக்ஷன்", பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-280601-7, ஆக்ஸ்ஃபோர்டு யுனிவெர்சிட்டி ப்ரஸ், ப. 40-41
  31. 31.0 31.1 "Guru Granth Sahib Research Department". Archived from the original on 2010-04-05.
  32. வேர்சிட்டி ப்ளான்ஸ் ஆன்லைன் கோர்ஸ்

மேலும் படிக்க

[தொகு]
  • டாக்டர் கோபால் சிங்கிங் M.A Ph.D., அவர்கள் எழுதிய ஸ்ரீ குரு கிரந்த் சாகிப் (ஆங்கிலப் பதிப்பு), 1960 இல் வோர்ல்ட் புக் செண்ட்டரில் வெளியிடப்பட்டது

புற இணைப்புகள்

[தொகு]

வீடியோக்கள்

[தொகு]

ஆடியோ

[தொகு]

உரை

[தொகு]

மற்றவை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரு_கிரந்த்_சாகிப்&oldid=3777368" இலிருந்து மீள்விக்கப்பட்டது