காவல்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(காவல் துறை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

காவல்துறை (Police) (பண்டைய கிரேக்க மொழி:πολιτεία[1]) என்பது ஒரு மாகாணத்தில் சட்டத்தை செயல்படுத்தவும், சட்ட ஒழுங்கை காக்கவும், உடமைகளைப் பாதுகாக்கவும் அமைக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். இவற்றின் அதிகார வரம்பிற்கு ஏற்றார்போல குறிப்பிட்ட எல்லைகள் வரை செயல்படும். குற்றவியல் சட்டத்தை அமல்படுத்தல், குற்றவிசாரணை புரிதல், பொதுமக்களைப் பாதுகாத்தல், கூட்டத்தைக் கட்டுப்படுத்தல் போன்ற பணிகளும் இத்துறையால் செய்யப்படும். இவ்வமைப்பின் அதிகார வரம்பு நாட்டுக்கு நாடு வேறுபடும். பொதுவாக தேசிய எல்லை, மாநில எல்லை, மற்றும் சர்வதேச அளவிலும் என்று வகைப்படுத்திப் பிரிக்கலாம்.

உபகரணங்கள்[தொகு]

ஆயுதங்கள்[தொகு]

பல சட்ட அதிகாரங்களில், காவல் துறைக்கு கைத்துப்பாக்கி, சிறியரக துப்பாக்கிகள் போன்ற எந்திர ஆயுதங்கள் வைத்துக்கொள்ள உரிமை வழங்கப்படுகிறது. எந்திர ஆயுதங்கள் தவிர லத்தி, குறுந்தடி, கண்ணீர் குண்டு போன்றவைகளும் அனுமதிக்கப்படுகிறது. சிறப்பு காவல்துறை அமைப்புகளுக்கு பெரியரக எந்திர துப்பாக்கிகளும் நவீன கருவிகளும் வழங்கப்படுகிறது.

தகவல் தொடர்புகள்[தொகு]

பல நாடுகளில் காவல் துறை படைகளுக்கு கம்பியில்லாத் தொலைத்தொடர்பு கருவிகளும், விசில், ஒளிவிளக்குகள் போன்ற உபகரணங்ககள் மூலம் தகவல் பரிமாற்றம் நிகழ்கிறது.

வாகனங்கள்[தொகு]

காவல் துறை அமைப்பின் இலச்சினை பொருத்திய நான்குசக்கர ஊர்திகள் முதல் இருசக்கர வாகனங்கள் வரை பயன்படுத்தப்படுகிறது. இவற்றின் மூலம் வழக்கமான பாதுகாப்பு ரோந்துகள் மற்றும் அவசரக் கால ரோந்துகள் நடைபெறும்.

உலக நாடுகளில் காவல் துறை[தொகு]

பொதுவாக கூட்டாட்சி அமைப்புள்ள நாடுகளில், பல அடுக்குகளில் காவல் துறை செயல்படும். இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகளில் காவல் துறை அதிகாரம் பரவலாக்கப்பட்டு, மாநிலங்களிடம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சிலி, இஸ்ரேல், பிலிப்பைன்ஸ், பிரான்ஸ், ஆஸ்திரியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் ஒருங்கிணைந்த அதிகாரம் அமைப்பாகவுள்ளது[2]. பல சர்வதேச நாடுகள் ஒன்று சேர்ந்து பன்னாட்டுக் காவலகம் என்ற அமைப்பையும் உருவாக்கி, நாடுகளுக்கிடையேயான உதவிகளைப் பரிமாறிக்கொள்கிறது.

இந்தியா[தொகு]

காவல் துறைச் சீர்திருத்தங்கள்[தொகு]

இந்திரா காந்தி அரசின் நெருக்கடி நிலை ஆட்சியின்போது நாடெங்கும் நடந்த காவல் துறை அத்துமீறல்கள் அம்பலமானதும், பின்னர் அமைந்த ஜனதா ஆட்சி தேசியக் காவல் ஆணையத்தை நியமித்தது. காவல் துறையைச் சீர்திருத்தவும் புதிய காவல் சட்டம் கொண்டுவரவும் இந்த ஆணையம் கோரப்பட்டது. அடுத்த இரண்டு வருடங்களில் இந்த ஆணையம் வெவ்வேறு தலைப்புகளில் விரிவான, ஆழமான எட்டு அறிக்கைகளை அரசுக்குக் கொடுத்தது. ஆனால், 1980ல் மீண்டும் இந்திரா காந்தி ஆட்சிக்கு வந்ததும், ஆணையம் காலாவதியாயிற்று. 16 வருடங்கள் கழித்து 1996-ல் முன்னாள் காவல் துறைத் தலைவர்கள் பிரகாஷ் சிங், என்.கே. சிங் இருவரும் “இந்த அறிக்கைகளை அரசு செயல்படுத்த உத்தரவிட வேண்டும்” என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இரண்டு வருடங்கள் கழித்து காவல் அதிகாரி ரிபெய்ரோ தலைமையில் ஒரு குழுவை அமைத்தது நீதிமன்றம். அது அறிக்கை கொடுத்தது. மறுபடியும் 2000-ல் பத்மநாபய்யா குழு அமைக்கப்பட்டது. அடுத்து 2006-ல் சொலி சொராப்ஜி குழு அமைக்கப்பட்டது. எல்லாக் குழுக்களும், அறிக்கைகளும் பரிந்துரைகளும் கொடுத்தன. [3]

உச்ச நீதிமன்றத்தின் ஏழு கட்டளைகள்[தொகு]

2006-ல் உச்ச நீதிமன்றம் ஏழு கட்டளைகளை அறிவித்து அவற்றை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது.[3] அவை

  1. மாநிலப் பாதுகாப்பு ஆணையம் அமைத்து, அரசு காவல் துறை மீது செல்வாக்கும் நிர்ப்பந்தமும் செலுத்தாமல் பார்க்க வேண்டும்.
  2. தலைமைப் பதவியான டி.ஜி.பி. நியமனம் வெளிப்படையானதாகவும் பதவிக் காலம் குறைந்தபட்சம் இரு வருடங்களாகவும் இருக்க வேண்டும்.
  3. எல்லா உயர் அதிகாரிகளும், காவல் நிலைய அதிகாரிகளும் குறைந்தது இரு வருடம் பொறுப்பில் இருக்க வேண்டும்.
  4. சட்டம் - ஒழுங்கு பொறுப்பையும் குற்றப் புலனாய்வுப் பொறுப்பையும் தனித் தனிப் பிரிவுகளாக்க வேண்டும்.
  5. காவலர்கள் அனைவரின் நியமனம், இட மாற்றம், பதவி உயர்வு, இதர நடவடிக்கைகள் அனைத்தையும் சுயேச்சையான காவல் நிர்வாக வாரியம் அமைத்து மேற்கொள்ள வேண்டும்.
  6. காவலர்கள் யார் மீதான புகார்களானாலும், அவற்றை விசாரித்து நடவடிக்கை எடுக்க மாநில, மாவட்ட அளவிலான புகார் ஆணையங்களை ஏற்படுத்த வேண்டும்.
  7. மாநில அரசுகளைப் போலவே மத்திய அரசு கீழ் இருக்கும் காவல் பிரிவுகளுக்கும் சுயேச்சையான தேசியப் பாதுகாப்பு ஆணையம் அமைக்க வேண்டும் - இந்த ஒவ்வொரு கட்டளையையும் எப்படிச் செயல்படுத்த வேண்டும், யாரை உறுப்பினராக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் ஓரளவு விரிவாகவே சொல்லியிருக்கிறது.

ஒரு வருடம் கழித்து நிலைமை என்னவென்று நீதிமன்றம் கேட்டால், பல மாநிலங்கள் பதிலே தரவில்லை. சில அரசுகள் அவகாசம் கேட்டன. சில அரசுகள் சொன்னபடி செய்துவிட்டதாக, சில அரசாணைகளை வெளியிட்டன. நீதிமன்ற உத்தரவை அவமதித்ததற்காக குஜராத், தமிழகம், பஞ்சாப், மகாராஷ்டிரம், கர்நாடகம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநில அரசுகள் மீது மனுதாரர் பிரகாஷ் சிங் வழக்குத் தொடுத்தார். தொடர்ந்து, அரசுகள் கால அவகாசம் கேட்டன. 2008-ல் நீதிமன்றம் மாநில அரசுகள் செய்த நடவடிக்கை என்ன என்று ஆராய கண்காணிப்புக் குழுவை நியமித்தது. கடைசியாக, 2013 ஆம் ஆண்டு மே மாதம் உச்ச நீதிமன்றம் வழக்குகளை விசாரித்தது. எந்தெந்த மாநிலங்கள் எந்த அளவுக்குத் தன் ஏழு கட்டளைகளைச் செயல்படுத்தியுள்ளன என்பதையும், தன் தீர்ப்புக்குப் பின்னர் போடப்பட்ட சட்டங்கள் செல்லுமா என்றும் நீதிமன்றம் விசாரித்துவருகிறது.[3]

இலங்கை[தொகு]

இலங்கையில் முதன்முதலில் கொழும்பு நகரின் பாதுகாப்பிற்கென 1866 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3 ஆந் திகதி ஒல்லாந்தரால் காவல்துறை ஆரம்பிக்கப்பட்டது. இது 1866 முதல் 1972 வரை சிலோன் காவற்படை என அழைக்கப்பட்டுப் பின்னர் 1972 இல் உருவான குடியரசு யாப்பின் பிரகாரம் இலங்கைக் காவல்துறை எனப் பெயர் மாற்ற்ம் செய்யப்பட்டது. தற்போது 60000 இற்கு மேற்பட்டோர் இலங்கையின் காவல்துறையில் கடமையாற்றுகின்றனர். அத்தோடு 2000 இற்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் நாடெங்கும் பரந்து காணப்படுகின்றன. இலங்கைக் காவல்துறையின் அதியுயர் பதவியான பொலிஸ்மா அதிபர் பதவியை தற்போது என். கே. இளங்கக்கோன் வகிக்கின்றார்.

இலங்கையில் அவசர காவல்துறை அழைப்புத் தொலைபேசி எண் 119 ஆகும். மின்னஞ்சல் முகவரி telligp@police.lk என்பதாகும். இலங்கையின் காவல்துறையின் இணையத்தள முகவரி www.police.lk ஆகும்.

இவற்றையும் பார்க்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. πόλις, Henry George Liddell, Robert Scott, A Greek-English Lexicon, on Perseus Digital Library
  2. Das, Dilip K., Otwin Marenin (2000). Challenges of Policing Democracies: A World Perspective. Routledge. பக். 17. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9057005581. https://archive.org/details/challengesofpoli0000unse. 
  3. 3.0 3.1 3.2 {{cite news | title = காவல் துறைக்கு விடுதலை வருமா? | newspaper = தி இந்து | date = 30 அக்டோபர் 2013 | url = [1]


"https://ta.wikipedia.org/w/index.php?title=காவல்துறை&oldid=3787045" இலிருந்து மீள்விக்கப்பட்டது