உள்ளடக்கத்துக்குச் செல்

அதிகாரத்துவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அதிகாரத்துவம் (Bureaucracy) என்பது ஒரு அமைப்பில் செயல்பாட்டு நிர்வகிப்புக்கென இருக்கும் அமைப்புரீதியான கட்டமைப்பு, நடைமுறைகள், நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் இவற்றின் சேர்க்கை ஆகும்.[1] இது பொதுவாக பெரிய நிறுவனங்களில் நடைமுறையில் உள்ளது. இது பெரும்பாலும் அந்த அமைப்புக்குள்ளான அநேக அல்லது அனைத்து நிகழ்முறைகளையும் செயல்படுத்துவதற்கு வழிகாட்டும் நிர்ணயப்படுத்தப்பட்ட நடைமுறைகள் (பின்பற்றும் விதிகள்), அதிகாரங்களின் முறையான பகுப்பு, அதிகார அடுக்குவரிசை, மற்றும் தேவைகளை எதிர்நோக்கி செயல்திறனை மேம்படுத்த முற்படும் உறவுகள் ஆகியவற்றால் குறிக்கப்படும்.

மரபுவழியாக அதிகாரத்துவம் கொள்கையை உருவாக்குவதில்லை, மாறாக அதனை செயல்படுத்துகிறது. சட்டம், கொள்கை, மற்றும் கட்டுப்பாடுகள் பொதுவாக ஒரு தலைமையில் இருந்து உருவாகிறது. அவற்றை அமல்படுத்த அதிகாரத்துவத்தை அது உருவாக்குகிறது. நடைமுறையில், கொள்கையின் பொருள் விளக்கம் மற்றும் அமலாக்கம் போன்றவை பழக்கத்திலான செல்வாக்கிற்கு இட்டுச் செல்லக் கூடும், ஆனாலும் அது கட்டாயமல்ல. ஒரு அதிகாரத்துவம் தன்னை உருவாக்கும் தலைமைக்கு, அதாவது ஒரு அரசாங்க நிர்வாகி அல்லது இயக்குநர் குழுவிற்கு நேரடியாகப் பொறுப்பானதாகும். அதேபோல், அந்த தலைமை பொதுவாக வாக்காளர்கள், பங்குதாரர்கள், உறுப்பினர்கள் அல்லது அந்த அமைப்பால் பலனடையும் எவருக்கும் பொறுப்பானதாய் இருக்கிறது. நடைமுறையில், ஒரு தனிநபர் அரசாங்கம் போன்ற அமைப்புடன் தொடர்பு கொள்ள நேரடியாக அதன் தலைமையுடன் தொடர்பு கொள்ள முடிவதைக் காட்டிலும் அதிகாரத்துவம் என்கிற இடைமுகத்தின் வழியாகத் தான் தொடர்பு கொள்வதாய் இருக்கும். பொதுவாக, பெரிய அமைப்புகளாக இருந்தால் தனிநபருக்கும் தலைமைக்குமான இடைவெளியும் அதிகமாக இருக்கும். இது பின்விளைவாகவும் இருக்கலாம், அல்லது அத்தகைய வகையில் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டதாகவும் இருக்கலாம்.

வரையறை

[தொகு]

அதிகாரத்துவம் என்பது சமூகவியலிலும் அரசியல் அறிவியலிலும், நிர்வாக அமலாக்கம் மற்றும் சட்ட விதிகள் அமலாக்கங்கள் எவ்வாறு சமூகரீதியாய் ஒழுங்கமைக்கப்படுகின்றன என்பதைக் குறிக்கும் ஒரு கருத்தாக்கம் ஆகும். அதிகாரத்துவத்தின் எந்த வரையறைக்கும் நான்கு கட்டமைப்பு கருத்தாக்கங்கள் மையமாக உள்ளன:

  1. நிர்வாகத்தில் இருக்கும் மனிதர்கள் மற்றும் அலுவலகங்கள் இடையே நன்கு வரையறை செய்யப்பட்ட பகுப்பு,
  2. பணியமர்த்தப்பட்டு ஸ்திரமான தொடர்ந்த தொழில்வாழ்க்கையைக் கொண்ட மனிதவள அமைப்பு,
  3. அலுவலகங்கள் இடையே அதிகாரமும் அந்தஸ்தும் உரிய வகையில் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கும் வகையில் அமைந்த அதிகார அடுக்குவரிசை, மற்றும்
  4. அமைப்புரீதியான செயல்பாட்டாளர்களை தகவல் பாய்வு மற்றும் ஒத்துழைப்பு வகைகளில் இணைக்கும் முறைப்படியான மற்றும் பழக்கத்திலான வலைப்பின்னல்கள்.

அரசாங்கங்கள், ராணுவப் படைகள், பெருநிறுவனங்கள், அரசு சாரா அமைப்புகள் (NGO), அரசாங்கத்திடை அமைப்புகள் (IGO), மருத்துவமனைகள், நீதிமன்றங்கள், அமைச்சரகங்கள், சமூக மன்றங்கள், விளையாட்டு அமைப்புகள், தொழில்முறை கழகங்கள், மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றை அன்றாட வாழ்க்கையின் அதிகாரத்துவங்களுக்கு உதாரணமாய் கூறலாம்.

மூலங்கள்

[தொகு]

இந்த கருத்தாக்கம் குறைந்த பட்சம் தேசம் என்பதன் ஆரம்ப வடிவங்கள் இருந்த பழைய காலங்களில் இருந்து வருகிறது. “அதிகாரத்துவம்” (bureaucracy) என்கிற வார்த்தை “பீரோ” (bureau) என்கிற வார்த்தையில் இருந்து எழுந்ததாகும். இந்த பீரோ என்பதன் உண்மையான பிரெஞ்சு அர்த்தம் மேசை விரிப்புக்கு பயன்படும் துணியைக் குறிக்கிறது. மேற்கு ஐரோப்பாவில் 18 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் முதல் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த வார்த்தை ஒரு எழுதும் மேசையை மட்டும் குறிக்காமல் ஒரு அலுவலகத்தையே, அதாவது அலுவலர்கள் பணிபுரியும் பணியிடத்தையே குறித்த வார்த்தையாகும். அதிகாரத்துவம் என்கிற வார்த்தை முதன்முதலில் 1789 ஆம் ஆண்டில் பிரெஞ்சு புரட்சிக்கு முன்னதாக பயன்பாட்டுக்கு வந்தது. பின் அங்கிருந்து மற்ற நாடுகளுக்குத் துரிதமாய்ப் பரவியது.

வளர்ச்சி

[தொகு]

உண்மையில் அதிகாரத்துவவாதியின் ஆரம்ப உதாரணமாக எழுத்தர்களே அமைந்தனர். சுமரின் ஆரம்ப நகரங்களில் இவர்கள் தொழில்முறை நிபுணர்களாக எழுந்தனர். சுமேரிய எழுத்து வடிவங்கள் மிகவும் சிக்கலானவையாக இருக்கும் என்பதோடு, அவற்றைக் கையாள தங்கள் மொத்த வாழ்க்கையையும் இதற்கான பயிற்சியில் அர்ப்பணித்த சிறப்பு நிபுணர்களால் தான் முடிந்தது. இந்த எழுத்தர்கள் ஆவணங்களை பராமரிப்பதிலும், அரசர்களுக்கு கல்வெட்டுகள் செதுக்குவதிலும் ஏகபோக செல்வாக்கு செலுத்தியதால், இவர்களது கையில் கணிசமான அதிகார செல்வாக்கும் கிட்டியிருந்தது.

பெர்சியா போன்ற பிந்தைய பெரிய சாம்ராஜ்யங்களில், அரசாங்கம் விரிவடைந்து அதன் செயல்பாடுகளும் பெருகியதால் அதிகாரத்துவங்களும் துரிதமாய் விரிவுபட்டன. பெர்சிய சாம்ராஜ்யத்தில், மத்திய அரசாங்கம் நிர்வாக மாகாணங்களாய் பிரிக்கப்பட்டு அதற்கு சாட்ராப்புகள் தலைவர்களாய் இருந்தனர். மாகாணங்களை நிர்வகிப்பதற்கான சாட்ராப்புகள் ஷாவினால் நியமனம் செய்யப்பட்டனர். இது தவிர, ஒவ்வொரு மாகாணத்திலும் துருப்புகள் பணியமர்த்தப்படுவதை மேற்பார்வையிடுவதற்கும் ஆவணங்களைப் பராமரிப்பதற்கும் முறையே ஒரு பணித்தலைவரும் ராஜாங்க செயலரும் நியமிக்கப்பட்டனர். சாம்ராஜ்யத்தில் சுற்றுப் பயணம் செய்து அங்கங்கான நிலைமைகளை தகவல் தெரிவிப்பதற்காக ராஜாங்க சோதனை ஆய்வாளர்களையும் அசேமெனிட் மகா அரசர்கள் அனுப்பினர்.

பழமையான அனைத்து அதிகாரத்துவங்களிலும் மிகவும் நவீனமுற்றதாய் இருந்தது சீன அதிகாரத்துவம் ஆகும். தலைவர்கள் திறமையற்றவர்களாய் இருந்தபோதிலும் நல்ல ஆட்சியைக் கொடுப்பதற்கான நிர்வாகிகள் கொண்ட ஒரு ஸ்திரமான அமைப்பு அவசியப்படுவதை கன்ஃபூசியஸ் உணர்ந்தார். முதலில் கின் (Qin) வம்சாவளியில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது என்றாலும் கூடுதல் கன்ஃபூசிய வழிகளில் ஹான் (Han) வம்சாவளியில் தான் அறிமுகப்படுத்தப்பட்ட சீன அதிகாரத்துவம், தேர்வுகளின் ஒரு அமைப்பின் மூலமாக திறமையின் அடிப்படையில் அதிகாரத்துவ பதவிகளுக்கு ஆள் நியமனம் செய்யப்பட அழைப்பு விடுக்கிறது. சீனாவின் நெடிய வரலாற்றில் அதன் அதிகாரத்துவ தட்டின் அதிகாரம் தேய்ந்து கொண்டே வந்திருக்கிறது என்ற போதிலும், அரச மரபு தேர்வு அமைப்பு 1905 காலம் வரை நீடித்தது. நவீன சீனாவும் தனது அன்றாட பணிகளில் கணிசமான அளவு அதிகாரத்துவத்தை செயலாக்கியுள்ளது.

நவீன காலத்தில், குறிப்பாக தொழிற் புரட்சிக்குப் பிந்தைய காலத்தில், அரசாங்கங்கள் பெரிதாய் வளர்ச்சியடைந்ததை அடுத்து நவீன அதிகாரத்துவங்கள் எழுந்தன. ஒரு நூற்றாண்டு காலத்திற்கு முன்பு அதிகாரத்துவம் என்பது நேர்மறையான ஒன்றைக் குறித்தது என்பதை இன்று நினைத்துப் பார்ப்பது கூட கடினமாய் உள்ளது என்று டேவிட் ஆஸ்போர்ன் மற்றும் டெட் கேப்லெர் ஆகிய ஆசிரியர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ஒரு பாகங்கள்பொருத்தும் வரிசை ஒரு தொழிற்சாலைக்கு தரக் கூடிய அதே காரண காரிய விளக்கத்தை அரசாங்க வேலைக்கு அதிகாரத்துவம் கொண்டு வந்து தருகிறது. அதிகாரத்தின் அடுக்கு வரிசை மற்றும் செயல்பாட்டு நிபுணத்துவம் ஆகியவற்றால், பெரிய சிக்கலான பணிகள் திறம்படக் கையாளப்படுவதை அவை சாத்தியமாக்கின என்று அவர்கள் தெரிவித்தனர்.[2]

அரசுகள் மேலும் மேலும் வருவாய் பெருக்கத் துவங்கியதை அடுத்து, அதிகாரத்துவத்தில் மிகவும் வெறுக்கப்பட்ட பதவிகளான வரி வசூலிப்பாளர்கள் அதிகமாய் அவசியப்பட்டனர். அரசாங்கத்தின் செயல்பாடுகள் பெருகியதால் நிர்வாகிகளின் பாத்திரமும் அதிகரித்தது. இந்த விரிவாக்கத்துடன் இணைந்து, நிர்வாக அமைப்பில் பொதுவாக கூடவே வருவதான ஊழல் மற்றும் குடும்ப செல்வாக்கிற்கான அங்கீகாரமும் வந்தது. இது 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பல நாடுகளில் பெரிய அளவிலான அரசு சேவை சீர்திருத்தத்திற்கும் இட்டுச் சென்றது.

அதிகாரத்துவ முகமைகளின் வகைகள்

[தொகு]

பல்வேறு முகமைகளை ஒரு மேலாண்மை கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால் அவை இரண்டு வழிகளில் வகைப்படுவதைக் காணலாம்: செயலுறுத்துபவர்களின் நடவடிக்கைகள் கவனிக்கப் பெற முடிகிறதா இல்லையா என்பதன் மூலம் ஒரு வகை, அந்த நடவடிக்கைகளின் முடிவுகள் கவனிக்கப் பெற முடிகிறதா இல்லையா என்பதன் மூலம் இன்னொரு வகை. முதலாவது காரணி வேலையளவுகளைக் கையாளுகிறது, அல்லது அந்த முகமை அன்றாடம் என்ன செய்கிறது என்பதைக் கையாளுகிறது. இரண்டாவது காரணி விளைவுகளைக் கையாளுகிறது, அல்லது முகமை வேலையின் ஒட்டுமொத்த முடிவுகளைக் கையாளுகிறது. இந்த வேலையளவுகளும் விளைவுகளும் கவனிப்பதற்கு எளிதாக இருக்கிறதா அல்லது கடினமாக இருக்கிறதா என்பதைப் பொறுத்து உற்பத்தி, நடைமுறை, கைத்திறம், மற்றும் முகட்டுச் சுவர் ஆகிய நான்கு வகை முகமைகள் பிறக்கின்றன.[3].

  • உற்பத்தி அமைப்பு களில் வேலையளவுகளும் சரி விளைவுகளும் சரி கவனிக்கத்தக்கதாய் அமைந்திருக்கின்றன. சமூக பாதுகாப்பு நிர்வாகம், அஞ்சல் சேவை ஆகியவற்றை இதன் உதாரணங்களாய் கூறலாம். உற்பத்தி அமைப்புகளில் அலுவலர்களின் வேலையளவுகளை மேலாளர்கள் கணக்கிட முடியும். அத்துடன் வரிகளில் சேகரித்துள்ள தொகையின் அளவைக் கணக்கிட முடியும் என்பதோடு, தணிக்கை நடவடிக்கையின் அளவை அதிகரிப்பதன் மூலமாக எவ்வளவு கூடுதலாக வரித் தொகை வசூலிக்கப்பட முடியும் என்பதையும் துல்லியமாக மதிப்பிட முடியும்.
  • நடைமுறை அமைப்புகள் என்பவற்றில் வேலையளவுகளை கவனிக்க முடியும், ஆனால் விளைவுகள் தெளிவின்றியோ அல்லது கவனிக்கப்பட இயலா வண்ணமோ இருக்கும். தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாகம், அமைதிக்காலத்தின் போதான அமெரிக்க ராணுவப் படைகள் ஆகியவற்றை இதன் உதாரணங்களாகக் கூறலாம். தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாகம் (OSHA) சுகாதார ஆய்வாளர்களின் நடவடிக்கைகளைக் கவனிக்க முடியும். ஆனால் இந்த தனிப்பட்ட நடவடிக்கைகள் எவ்வாறு தொழிலகத்தின் மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துத்துகிறது என்பதை அளவிட முடியாது. அமைதிக்காலத்திலான ராணுவப் படைகளின் விடயத்தில், பயிற்சி மற்றும் இடநிறுத்தலின் அனைத்து அம்சங்களையும் கவனிக்க முடியும். ஆனால் இந்த நடவடிக்கைகள் எல்லாம் எவ்வாறு தாக்குதலைத் தவிர்க்கின்றன, அல்லது ஒரு வருங்கால (முன்கூட்டித் தெரியாத) மோதலுக்குத் தயாரிப்பு செய்கின்றன என்பதை அளவிட முடியாது.
  • கைத்திற அமைப்புகள் என்பவற்றில் வேலையளவுகள் கணக்கிடப்பட கடினமானதாய் அமையும், ஆனால் விளைவுகள் ஓரளவு மதிப்பிடத்தக்கதாய் அமையும். போர் சமயத்தில் ராணுவப் படைகளை இதற்கு உதாரணமாய்க் கூறலாம். இவர்கள் போர்ச் சூழலில் வேலை செய்கிறார்கள், என்றாலும் போரின் முடிவுகளை எளிதாக கணக்கிட முடியும்.
  • முகட்டுச் சுவர் அமைப்புகள் (Coping organizations) என்பனவற்றில் வேலையளவுகளும் சரி விளைவுகளும் சரி கவனிக்க முடிவதாய் இருக்காது. காவல் துறைகள், மற்றும் அமெரிக்காவின் வெளியுறவுத் துறை ஆகியவற்றை இதற்கான சிறந்த உதாரணங்களாய் கூறலாம். தூதரக அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் சிலரின் நடவடிக்கைகளை கவனிக்கவும் முடியாது. அளந்து பார்க்கவும் முடியாது. வெளிநாட்டுத் தலைவர்களுடனான ரகசிய பேச்சுவார்த்தைகள், வீதியில் இருக்கும் குடிமகன்களுடனான பேச்சு ஆகியவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம். அவற்றின் விளைவுகளும் தீர்மானிப்பதற்குக் கடினமானவையாய் இருக்கும். உதாரணமாக, அமெரிக்க நலன்கள் குறித்து வெளிநாட்டுக் கருத்துகள் மாறும். அதேபோல் ஒரு காவலரின் அடியால் எந்த அளவு சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்படுகிறது என்பதைக் கூறவியலாது.

ஒரு முகமையின் வகையானது, அதன் லட்சியம் நோக்கிய அணுகுமுறையிலும் (அதாவது எந்த மட்டத்திற்கு அதன் உறுப்பினர்கள் முகமையின் கூறப்படும் லட்சியத்திற்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களாய் இருக்கிறார்கள் என்பது) சட்டம் மற்றும் நடப்பு கொள்கையுடன் இணக்கம் கொண்டிருப்பதிலும் குறிப்பிடத்தக்க வித்தியாசங்களை உருவாக்குகிறது.

இந்த சித்தாந்தம் மீதான கண்ணோட்டங்கள்

[தொகு]

ஜூலை 1, 1790 அன்று எழுதிய ஒரு கடிதத்தில் ஜெர்மன் பரோன் வோன் கிரிம் அறிவித்தார்: “கட்டுப்பாடு குறித்த யோசனையால் நாம் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கிறோம், ஒரு பெரிய அரசில் அரசாங்கம் தலை கொடுக்க அவசியமில்லாத கணக்கற்ற விஷயங்கள் இருக்கின்றன என்பதை நமது கோரிக்கைகளின் தலைவர்கள் புரிந்து கொள்ள மறுக்கின்றனர்.” ழான் கிளாடே மேரி வின்செண்ட் டி கோர்னே (Jean Claude Marie Vincent de Gournay) சில சமயங்களில் சொல்வதுண்டு: “பிரான்சில் நமக்கு பாடாய்ப்படுத்தும் ஒரு நோய் உள்ளது. அதன் பெயர் அதிகாரத்துவ வெறி (பீரோமேனியா ).”

ஜூலை 15, 1765 அன்று எழுதிய இன்னொரு கடிதத்தில் பரோன் கிரிம் எழுதினார்: “பிரான்சில் சட்டங்களின் உண்மையான அர்த்தம் அதிகாரத்துவமாய் இருக்கிறது, இது குறித்து தான் மறைந்த மோன்ஸீர் டி கோர்னே (Monsieur de Gournay) பெரிய அளவில் குறை கூறி வந்தார்; இங்கு அலுவலகங்கள், குமாஸ்தாக்கள், செயலர்கள், ஆய்வாளர்கள் எல்லாம் பொது நலனுக்கு சேவை செய்வதற்காக நியமிக்கப்பட்டிருக்கவில்லை. உண்மையில் பொது நலன் தான் இத்தகைய அலுவலகங்கள் இருப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்டிருப்பதாய் தோன்றுகிறது.”[4]

இந்த மேற்கோள் தான் அதிகாரத்துவம் குறித்த பாரம்பரியமானதொரு சர்ச்சையைக் குறிப்பிடுகிறது. அதாவது சாதனங்களும் இலக்குகளும் திரிந்து போய் இறுதியில் சாதனங்களே இலக்குகளாய் மாறிப் போவது. பெரும் நன்மை என்பது தொலைந்து போகிறது; துணையாக, பொது நலனுக்குப் பதிலாக தனித்தனிப் பிரிவுகளின் நலன்கள் பதிலீடு செய்யப்படுகின்றது. இங்கு கூறப்படும் கருத்து என்னவென்றால், கட்டுப்பாட்டில் வைத்திராமல் விட்டால் அதிகாரத்துவம் சமுதாயத்திற்கு சேவை செய்வதைக் காட்டிலும் தனக்குத் தானே சேவை செய்து கொள்ளும் ஊழல் எந்திரமாக மாறிப் போகும் என்பது தான்.

காரல் மார்க்ஸ்

[தொகு]

காரல் மார்க்ஸ் மற்றும் பிரடரிக் ஏங்கல்ஸ் எழுதிய வரலாற்று சடவாத தத்துவம் என்னும் படைப்பில், அதிகாரத்துவத்தின் வரலாற்று மூலம் மதம், அரசு உருவாக்கம், வணிகம், மற்றும் தொழில்நுட்பம் ஆகிய நான்கு ஆதாரங்களில் இருப்பதாய் கூறப்படுகிறது.

இவ்வாறாக, ஆரம்ப அதிகாரத்துவங்களில் மதக் குருமார்கள், பல்வேறு சடங்குகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் மற்றும் வல்லுநர்கள், சட்ட ஒழுங்கை பாதுகாப்பதற்கென சிறப்பாக நியமிக்கப்பட்டுள்ள ராணுவ அலுவலர்கள் ஆகியோரின் குடிகள் இருந்தன. சுமார் 10,000 வருடங்களுக்கு முன்பாக மனித குலம், ஆதிகால சமதர்ம சமுதாயங்களில் இருந்து சமூக வர்க்கங்கள் மற்றும் சொத்துரிமைகளாக பிரிவடைந்த நாகரிக சமுதாயமாக மாறிய வரலாற்று உருமாற்றம் நிகழ்ந்தது. இந்த உருமாற்றத்தில், சமுதாயத்தில் இருந்து தனியாய் பிரிந்து அமைந்த ஒரு அரசு எந்திரத்தில் அதிகாரம் பெருகிய முறையில் மையம் கொள்ளச் செய்யப்பட்டு, அதன் மூலம் அதிகாரம் அமலாக்கப்பட்டது. இந்த அரசு சட்டங்களை வடிவமைத்து அவற்றை அமலாக்குகிறது. இதனால் இந்த செயல்பாடுகளை செயலுறுத்துவதற்கு அதிகாரமையங்களுக்கும் வழிவகை செய்கிறது. இவ்வாறாக, அரசு மக்களுக்கு இடையிலான மோதல்களில் மத்தியஸ்தம் செய்வதோடு அந்த மோதல்களை ஏற்றுக் கொள்ளத்தக்க எல்லைகளுக்குள்ளும் பராமரிக்கிறது. பிராந்திய எல்லையின் பாதுகாப்பையும் அது ஒழுங்கமைக்கிறது. மிக முக்கியமாக, சாதாரண மக்கள் ஆயுதங்களை வைத்திருப்பதற்கு மற்றும் பயன்படுத்துவதற்கான உரிமை பெருகிய முறையில் கட்டுப்படுத்தப்படுகிறது. நாகரிக சமுதாயத்தில், மற்றவர்களை வேலை செய்ய நிர்ப்பந்திப்பது என்பது பெருகிய முறையில் அரசு அதிகாரிகளுக்கு மட்டுமே சட்டரீதியான உரிமையுடையதாய் ஆகிறது.[5]

ஆனால் வர்த்தகம் மற்றும் வியாபாரத்தின் வளர்ச்சி அதிகாரத்துவத்திற்கு ஒரு புதிய தனித்துவமான பரிணாமத்தை சேர்க்கிறது. பரிவர்த்தனைகளின் கணக்குகளைப் பராமரிப்பது, பரிசீலிப்பது மற்றும் பதிவு செய்வது ஆகியவையும் அத்துடன் வியாபாரம் தொடர்பான சட்ட விதிகளை அமலாக்குவதும் அதற்கு அவசியமாகிறது. வள ஆதாரங்கள் பெருகிய முறையில் சந்தை விலைகளால் பகிர்வு செய்யப்படுகிறது என்றால், அதற்கு கணக்கு பராமரிப்பு, நிர்வாகம் மற்றும் கணக்கீடு, சட்ட நிர்ணயங்களுக்கான இணக்கம் ஆகியவை கொண்ட விரிவான மற்றும் சிக்கலான அமைப்புகள் அவசியமாகிறது. இதன் அர்த்தம் இறுதியாக என்னவாகிறது என்றால், அரசாங்க நிர்வாகத்தில் சம்பந்தப்பட்ட வேலையின் அளவை வர்த்தக நிர்வாகத்தில் அடங்கிய வேலையின் மொத்த அளவு விஞ்சி விடுகிறது. நவீன முதலாளித்துவ சமுதாயத்தில், துறைசார் தொழிலாளர்களின் பகுப்பின் படி நிர்வாக தொழிலாளர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டுப் பார்த்தால், அரசாங்க அதிகாரத்துவத்தைக் காட்டிலும் தனியார் துறை அதிகாரத்துவம் பெரியதாய் இருப்பதைக் காண முடியும். இன்றைய காலங்களில் பெரும் நிர்வாக செயல்பாடுகளைக் கொண்டிருக்கும் சில பெரிய நிறுவனங்கள் மொத்த நாடுகளின் தேசிய வருவாயை விடவும் அதிகமான விற்றுமுதலைக் கொண்டுள்ளன.

எந்திரமயமாக்கத்தால் ஆட்களுக்குப் பதில் எந்திரங்கள் நியமிக்கப்பட்டாலும் கூட, அப்போதும் எந்திரங்களை வடிவமைக்க, கட்டுப்படுத்த, மேற்பார்வையிட மற்றும் கையாள மனிதர்கள் அவசியமாய் இருக்கின்றனர். தேர்ந்தெடுக்கப்படும் தொழில்நுட்பங்கள் ஒவ்வொருவருக்கும் சிறந்ததாய் இருக்கும் என்று சொல்ல முடியாது. மாறாக ஒரு குறிப்பிட்ட வர்க்கத்திற்கு வருவாய் உருவாக்கித் தருவதாகவோ அல்லது அவர்களது அதிகாரத்தைப் பாதுகாத்துத் தருவதாகவோ இருக்கலாம். இந்த வகை அதிகாரத்துவம் இப்போது தொழில்நுட்ப-அதிகாரத்துவம் (technocracy) என்றும் பல சமயங்களில் அழைக்கப்படுவதுண்டு. இது தனது அதிகாரத்தை சிறப்பு தொழில்நுட்ப அறிவின் மீதான கட்டுப்பாடு அல்லது அதிமுக்கிய தகவல்கள் மீதான கட்டுப்பாடு ஆகியவற்றின் மீது கொண்டுள்ளது.

மார்க்சின் தத்துவத்தில், அதிகாரத்துவம் அபூர்வமாகத் தான் தானே புதிய செல்வத்தை உருவாக்குகிறது. மாறாக அது பொதுவாக செல்வத்தின் உற்பத்தி, விநியோகம் மற்றும் நுகர்வினைக் கட்டுப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் மற்றும் நிர்வகிக்கவும் செய்கிறது. ஒரு சமூக தட்டாக அதிகாரத்துவம் தனது வருவாயை எதிலிருந்து எடுத்துக் கொள்கிறது என்றால் மனித உழைப்பின் சமூக உபரியில் இருந்து ஒரு பாகத்தை எடுத்துக் கொள்கிறது. கட்டணங்கள், வரிகள், சுங்கங்கள், திறை, உரிமம் போன்றவை மூலம் சட்டரீதியாக அதிகாரத்துவம் செல்வத்தை பறித்துக் கொள்கிறது.

எனவே அதிகாரத்துவம் என்பது எப்போதும் சமூகத்திற்கான ஒரு செலவு தான். அது சமூக ஒழுங்கிற்கு வழிவகுக்கும் வரை, சட்ட விதிகளை அமலாக்குவதன் மூலம் அதனைப் பாதுகாக்கும் வரை அந்த செலவு ஏற்றுக் கொள்ளத்தக்கதாய் இருக்கிறது. எப்படியிருந்தாலும் இந்த செலவின் அளவு குறித்து எப்போதும் தொடர்ந்த மோதல்கள் இருந்து வந்திருக்கின்றன. ஏனென்றால் இது வருவாய் பகிர்ந்தளிப்பில் பெரும் விளைவுகள் கொண்டிருக்கிறது. எல்லா உற்பத்தியாளர்களுமே தாங்கள் உற்பத்தி செய்வதற்கு ஆகும் நிர்வாகச் செலவுகளைக் குறைக்கவும் அதன் மூலம் பெறும் வருவாய் அதிகப்பட்சமாய் அமைவதற்குமே முயற்சி செய்வார்கள். பொதுவாக, வலிமையான பொருளாதார வளர்ச்சியின் சகாப்தங்களில் அதிகாரத்துவங்கள் பெருகுகின்றன. பொருளாதார வளர்ச்சி சரியும்போது, அதிகாரத்துவ செலவுகளை வெட்ட ஒரு போராட்டம் வெடிக்கிறது.[சான்று தேவை]

அதிகாரத்துவம் என்னும் ஒரு சமூக தட்டு தனித்துவமானதொரு ஆளும் வர்க்கமாக ஆக இயலுமா இயலாதா என்பது பெருமளவில், நிலவும் சொத்துடைமை உறவுகள் மற்றும் செல்வத்தின் உற்பத்தி வழிமுறை ஆகியவற்றைச் சார்ந்ததாய் உள்ளது. முதலாளித்துவ சமூகத்தில், பொதுவாக அரசுக்கென்று ஒரு சுதந்திரமான பொருளாதார அடித்தளம் இல்லாதிருக்கிறது. அது பல நடவடிக்கைகளையும் கடன் வாங்கி மேற்கொள்கிறது என்பதோடு வருவாய் ஆதாரமாக வரிகளை விதிப்பதையே பெரிதும் சார்ந்துள்ளது. எனவே அதன் அதிகாரம் உற்பத்தி சாதனங்களின் தனியார் உரிமையாளர்கள் சகித்துக் கொள்ளக் கூடிய செலவுகளால் வரம்புபட்டுள்ளது.[சான்று தேவை] ஆயினும், உற்பத்தி சாதனங்களை அரசே சொந்தப்படுத்திக் கொண்டு அதனை ராணுவ அதிகாரம் மூலம் பாதுகாத்திருந்தால், அரசு அதிகாரத்துவம் இன்னும் மிக கூடுதலாய் சக்திவாய்ந்ததாய் இருக்கும். அத்துடன் அது ஒரு ஆளும் வர்க்கமாக அல்லது அதிகார மேற்குடியாகவும் செயல்பட முடியும். ஏனெனில், அந்த சந்தர்ப்பத்தில், இது புதிய செல்வத்தின் ஆதாரங்களை நேரடியாக கட்டுப்படுத்துவதோடு, சமூக உற்பத்திப்பொருளை நிர்வகிக்க அல்லது விநியோகிக்கவும் செய்கிறது. இது தான் அதிகாரத்துவ கூட்டாண்மையின் மார்க்சிய தத்துவங்கள் விவாதிக்கும் பொருள் ஆகும்.

மார்க்ஸே இந்த சாத்தியம் குறித்து விரிவாய் எழுதவில்லை என்பதால், மார்க்சியவாதிகள் இடையே பெரும் சர்ச்சைக்குரியதொரு விவாதப் பொருளாய் இது இருந்து வந்திருக்கிறது. வள ஆதாரங்களில் அரசாங்க அதிகாரிகளால் செய்யப்படும் நிர்வாக ஒதுக்கீடும், அத்துடன் சந்தை ஒதுக்கீடும் சேர்ந்து எந்த மட்டத்திற்கு ஒரு சுதந்திரமான, சமநீதியான, மற்றும் வளமையான சமுதாயத்தை உருவாக்குவது என்னும் சமூக இலக்கினை சாதிக்க முடியும் என்பது தான் இந்த விவாதங்களில் விவாதிக்கப்படும் மையமான அமைப்பு பிரச்சினையாக இருக்கிறது. எந்த முடிவுகள் யாரால் எந்த மட்டத்தில் எடுக்கப்பட்டால் அது ஆதாரவளங்களின் மிகச் சரியான ஒதுக்கீட்டில் விளையும்? இந்த கேள்வி பொருளாதாரப் பிரச்சினையாக மட்டுமன்றி அதே அளவுக்கு அரசியல் மற்றும் அறநெறிப் பிரச்சினையாகவும் இருக்கிறது.

மார்க்சிய சோசலிசத் தத்துவத்தின் மையமாக இருப்பது தொழிலாளர்கள் தங்களை சுய நிர்வாகம் செய்து கொள்வது என்கிற சிந்தனை ஆகும். மனிதர்களிடையே உள்ள அறநெறியும் சுய ஒழுங்கும் அதிகாரத்துவ கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டை அவசியமில்லாமல் ஆக்கும். அத்துடன் சமூகத்தில் உழைப்பின் பகுப்பும் அதிரடியான வகையில் மறுஒழுங்கமைவுறும் என்று இந்த சிந்தனை கருதுகிறது. நலன்களிடையே உண்டாகும் மோதல்களில் சட்டங்களின் அடிப்படையில் மத்தியஸ்தம் செய்வதற்கு அதிகாரத்துவங்கள் எழுகின்றன. ஆனால் அந்த நலன்களின் மோதல்களே காணாமல் போனால் (ஏனென்றால் வளங்கள் நேரடியாக ஒரு நேர்மையான வழியில் பகிர்ந்தளிக்கப்படுகின்றன) அதிகாரத்துவங்களும் அவசியமின்றி ஆகும்.

ஆயினும், மார்க்சின் விமர்சகர்கள் இந்த வகையான சோசலிசத்தின் சாத்தியம் குறித்து சந்தேகம் கொள்கின்றனர். நிர்வாகம் மற்றும் சட்ட விதிகளுக்கான தேவை தொடர்கின்றது. அதேபோல் மக்களுக்கும் சமுதாய நலனுக்கு மேலாக தம்முடைய சொந்த நலனை இருத்தும் இயல்பும் இருக்கிறது என்பதைக் கொண்டு அவர்கள் இந்த சந்தேகம் எழுப்புகின்றனர். அதாவது, சுய நலனும் சமுதாய நலனும் ஒருபோதும் ஒன்றிணைந்து செல்ல முடியாது. அவை எப்போதும் எப்படியேனும் குறிப்பிடத்தக்க அளவில் விலகியே செல்லும் என்பது அவர்களின் வாதம்.

மேக்ஸ் வேபர்

[தொகு]

அதிகாரத்துவம் என்கிற வார்த்தையை அதன் சமூக அறிவியல் அர்த்தத்தில் மிகவும் செல்வாக்குள்ள வகையில் பயன்படுத்தியவர்களில் ஒருவராக மேக்ஸ் வேபரைக் குறிப்பிடலாம். சமூகத்தின் அதிகாரமயமாக்கல் குறித்த தனது ஆய்வின் மூலம் அவர் புகழ்பெற்றார். நவீன பொது நிர்வாகத் துறையின் பல அம்சங்களும் அவருக்குக் குறிப்புகள் கொண்டிருக்கின்றன. 1864 ஆம் ஆண்டில் வேபர் பிறப்பதற்கு முன்னால், 1818 மற்றும் 1860 ஆம் ஆண்டுகளுக்கு இடையிலான பல்வேறு ஆண்டுகளில் இருந்த ஒரு செவ்வியல் வகை வேபரிய அரசு நிர்வாக சேவை என்று அழைக்கப்படுகிறது.

அதிகாரத்துவத்தின் லட்சிய வகையை வேபர் நேர்மறையான வகையில் விவரித்தார். இதற்கு முன்பிருந்த மாற்று வடிவங்களைக் காட்டிலும் இது பகுத்தறிவுற்றதாகவும் திறம்பட்டதாகவும் இருந்ததாய் அவர் கருதினார். முன்னர் இருந்தவற்றை ஆள்கவர்ச்சி ஆதிக்கம் மற்றும் பாரம்பரிய ஆதிக்கம் என அவர் குணநலம் காட்டினார். அவரது சொற்பிரயோகத்தின் படி, அதிகாரத்துவம் சட்ட ஆதிக்கத்தின் ஒரு பாகமாகும். ஆயினும், ஒரு தனிநபர் விஷயத்தில் முடிவெடுக்க நேருவதாய் அமையும் போது அதிகாரத்துவம் திறனற்றதாய் ஆகிறது என்பதையும் அவர் வலியுறுத்திக் கூறினார்.

வேபரின் கூற்றுப்படி, மனிதாபிமானம் அற்ற தன்மை, நிர்வாக சாதனங்களின் குவிப்பு, ச்மூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மீதான ஒரு சமநிலைப்படுத்தும் விளைவு, மற்றும் நடைமுறையில் அழிக்கமுடியாததாக இருக்கும் ஒரு அதிகார அமைப்பை செயலுறுத்துதல் ஆகியவை உட்பட்ட குணங்களை நவீன அதிகாரத்துவம் கொண்டிருக்கிறது.

வேபரின் அதிகாரத்துவம் மீதான பகுப்பாய்வு பின்வரும் விடயங்களை ஆராய்கிறது:

  • அதிகாரத்துவ நிகழ்முறைக்கான வரலாற்று மற்றும் நிர்வாக காரணங்கள் (குறிப்பாக மேற்கத்திய நாகரிகத்தில்)
  • அதிகாரத்துவ அமைப்புகளின் செயல்பாட்டின் மீது சட்ட ஆட்சியின் தாக்கம்
  • அதிகாரத்துவ அதிகாரிகள் ஒரு அந்தஸ்து பெற்ற குழுவாக தனிநபர் நோக்குநிலையுறுவது மற்றும் தொழில்சார்ந்த அவர்களது அந்தஸ்து
  • நவீன உலகில் அதிகாரத்துவத்தின் மிக முக்கிய குணநலன்களும் பின்விளைவுகளும்

ஒரு அதிகாரத்துவ அமைப்பு பின்வரும் ஏழு கோட்பாடுகளால் ஆட்சி செய்யப்படுகிறது:

  1. அதிகாரப்பூர்வ வணிகம் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது
  2. பின்வரும் விதிகளுக்கு கடுமையாக உடன்பட்டு அதிகாரப்பூர்வ வணிகம் நடத்தப்படுகிறது:
    1. சில வகை வேலைகளை செய்யும் அலுவலரின் கடமையில் மனிதாபிமான தகுதிவகையின் கீழ் எல்லை நிர்ணயிக்கப்படுகிறது
    2. ஒரு அலுவலருக்கு தனக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளைச் செய்வதற்கு அவசியமான அதிகாரம் வழங்கப்படுகிறது
    3. பலாத்காரத்தை பயன்படுத்துவதற்கான சாதனங்கள் கடுமையாக வரையறைப்படுத்தப்பட்டுள்ளன; அத்துடன் அவற்றின் பயன்பாடுகளும் கடுமையாக வரையறை செய்யப்பட்டுள்ளன
  3. ஒவ்வொரு அலுவலரின் கடமைகளும் அதிகாரமும் அதிகாரத்தின் உயர் அடுக்குவரிசையின் ஒரு பாகமாகும். இவ்வரிசையில் மேலுள்ளவர்களுக்கு கண்காணிக்கும் உரிமையும் கீழ் உள்ளவர்களுக்கு அவர்களிடம் மேல்முறையீடு செய்யத்தக்க உரிமையும் இருக்கும்.
  4. அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளைச் செய்வதற்கான வள ஆதாரங்களை சொந்தமாய்க் கொண்டிருக்க வேண்டியதில்லை. அதே சமயத்தில் அவர்கள் இந்த ஆதாரங்களின் பயன்பாட்டிற்கு கணக்கு கூற வேண்டிய பொறுப்பு கொண்டிருக்கிறார்கள்
  5. அலுவலக மற்றும் தனிப்பட்ட வேலை மற்றும் வருவாய் கடுமையாய்ப் பிரித்துப் பார்க்கப்படுகின்றன
  6. அலுவலகங்கள் அவற்றில் பொறுப்பு வகிப்பவர்களால் கையகப்படுத்தப்பட முடியாது (வாரிசாகவோ, விற்கப்படவோ முடியாது)
  7. அலுவலக வணிகம் எழுத்து மூலமான ஆவணங்களின் அடிப்படையில் நடத்தப்படுகின்றது

ஒரு அதிகாரத்துவ அலுவலர்:

  • தனிநபராய் சுதந்திரமானவராய் இருப்பதோடு அவரது பதவிக்கு நடத்தையின் அடிப்படையில் நியமிக்கப்படுகிறார்
  • உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட விதிகளின் படி தனக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார், இவரது விசுவாசம் தனது அதிகாரப்பூர்வ கடமைகளை நேர்மையாக செயல்படுத்துவதில் தான் இருக்கிறது
  • நியமனமும் வேலை இடமும் அவரது தொழில்நுட்ப தகுதிகளைப் பொறுத்து அமையும்
  • நிர்வாகப் பணி என்பது முழு நேர வேலை ஆகும்
  • வேலைக்கு மாதா மாதம் ஊதியம் வழங்கப்படும் என்பதோடு ஆயுள்கால தொழில் வாழ்க்கையில் முன்னேற்ற வாய்ப்புகளும் வழங்கப்படும்

ஒரு அலுவலர் தனது மதிப்பீட்டையும் திறமைகளையும் பயன்படுத்த வேண்டும். ஆனால் அவரது கடமை இவற்றை ஒரு உயர் அதிகாரிக்கு வழிகாட்டுவதற்கு அளிப்பதே ஆகும். இறுதியாக அவர் தனக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளை பாரபட்சமின்றி நிறைவேற்றுவதற்கே கடமைப்பட்டவராகிறார். தன்னுடைய தனிமனித மதிப்பீடு அலுவலக கடமைகளுக்கு எதிரானதாய் அமையுமானால் அதனை அவர் தியாகம் செய்தாக வேண்டும்.

வேபரின் பணி பலரால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கிறது. ராபர்ட் மிசெல்ஸ் எழுதிய சிலவராட்சியின் இரும்புச் சட்டம் (Iron Law of Oligarchy) அதற்கான உதாரணங்களில் ஒன்று.

விமர்சனம்

மேக்ஸ் வேபர் அவரே குறிப்பிட்டது போல, உண்மையான அதிகாரத்துவம் அவரது லட்சிய வகை மாதிரியைக் காட்டிலும் குறைந்த திறம்பட்டதாகவே இருக்கும். வேபரின் ஏழு கோட்பாடுகளில் ஒவ்வொன்றும் சீரழிவுறலாம்:[சான்று தேவை]

  • போட்டி உணர்வுகள் தெளிவின்றியும் சட்டத்தின் நோக்கத்திற்குப் புறம்பாகவும் போகலாம். சில சமயங்களில் ஒரு முடிவின் விளைவைக் காட்டிலும் அந்த முடிவே முக்கியமானதாய்க் கருதப்படக் கூடும்;
  • குடும்ப ஆட்சி, ஊழல், அரசியல் மோதல்கள் மற்றும் இன்னும் பல சீரழிவுகளும் மனிதாபிமானம் குறித்த விதிகளுக்குப் புறம்பாக அமையக் கூடும். அத்துடன் திறமைகளின் அடிப்படையில் அல்லாமல் சிலவராட்சியின் அடிப்படையில் அமைந்த பணிநியமனம் மற்றும் பணிஉயர்வு அமைப்பையும் இது உருவாக்கக் கூடும்;

சீரழிவுறாத ஒரு அதிகாரத்துவத்திலும் கூட சில பொதுவான பிரச்சினைகள் இருக்கும்:

  • ரொம்பவும் பிரத்யேகமுறச் செய்வது. இதனால் தனிநபர் அலுவலர்களுக்கு தங்களின் நடவடிக்கைகளின் பெரிய அளவிலான பின்விளைவுகள் குறித்து தெரியாமல் போகும்
  • நடைமுறைகளின் இறுகிய தன்மையும் மந்த தன்மையும், சில வழக்கத்திற்கு மாறான சந்தர்ப்பங்களை சந்திக்கும் போது முடிவெடுப்பதை மிக மெதுவாக எடுப்பது அல்லது முடிவெடுப்பதையே சாத்தியமில்லாததாக்குவது, அத்துடன் இதேபோல் பழைய நடைமுறைகளை புதிய சூழல்களுக்கு தகவமைவு செய்தல், மாற்றம், பரிணாமம் ஆகியவற்றை தாமதப்படுத்துவது;
  • குழு சிந்தனை நிகழ்வு - ஆர்வக்கோளாறு, விசுவாசம் மற்றும் விமர்சனப் பார்வை இல்லாதது ஆகியவை எல்லாம் அமைப்பை மாறுவதற்கு வழியில்லாமலும், தனது சொந்த தவறுகள் மற்றும் வரம்புகளை உணரவிடாமலும் செய்யும்;
  • உடன்படா கருத்துகளை அலட்சியப்படுத்துவது
  • செய்வதா வேண்டாமா என்கிற குழப்பமானதொரு நிகழ்வு - அதிகாரத்துவம் மேலும் மேலும் விதிகளையும் நடைமுறைகளையும் உருவாக்கிக் கொண்டே செல்கிறது; அவற்றின் சிக்கல் பெரிதாகிறது ஒத்துழைப்பு தேய்கிறது, இதனால் முரண்பாடான மற்றும் சுழல் விதிகள் உருவாக வழிவகை நிகழ்கிறது. “விரிவடையும் அதிகாரத்துவத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அதிகாரத்துவம் விரிவடைகிறது” என்று இது விவரிக்கப்படுவதுண்டு.
  • எல்லாமே சட்டத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று கூறி அதிகாரத்துவம் மக்களை தங்கள் பொதுப் புத்தியை பயன்படுத்த அனுமதிக்காமல் செய்கிறது.

இதனால் மிகச் சாதாரணமான உதாரணங்களில் அதிகாரத்துவம் தனிநபர் மனித உயிர்களை உயிரற்ற சடப் பொருள்களாய் நடத்துவதைக் காண முடியும். இந்த நிகழ்முறையை பல தத்துவ ஞானிகள் மற்றும் எழுத்தாளர்கள் (ஆல்டோஸ் ஹக்ஸ்லி, ஜார்ஜ் ஓர்வெல், ஹனா ஆரெண்ட்) விமர்சித்திருக்கின்றனர்.

மைக்கேல் குரோஸியர்

[தொகு]

திறம்பட்ட இலட்சிய அதிகாரத்துவம் குறித்து வேபரின் (1922) கருத்து மீதான மறுஆய்வாக அதிகாரத்துவ நிகழ்வு[6] (The Bureaucratic Phenomenon) (1964) என்னும் புத்தகத்தை மைக்கேல் குரோஸியர் எழுதினார். வேபர் அதிகாரத்துவத்தை திறம்பட்ட, பகுத்தறிவான ஒரு அமைப்பை நோக்கிய போக்கின் இறுதி வெளிப்பாடாக சித்தரித்திருந்த நிலையில், குரோஸியர் பின்வருவனவற்றைத் தூண்டும் ஒரு அமைப்பு வடிவமாக அதிகாரத்துவத்தை ஆய்வு செய்தார்:

“....மந்தம், ஆழ்ந்த யோசனை, வழக்க நடை, நடைமுறைகளின் சிக்கல் மற்றும் தாங்கள் திருப்தி செய்ய வேண்டிய தேவைகளுக்கு அதிகாரத்துவ அமைப்பின் அதிருப்தியான மறுமொழிகள்” (குரோஸியர், 1964, ப 3)

அதிகாரத்துவங்கள் பெரும்பாலும் செயலிழந்து போவது ஏன் என்பதைப் புரிந்து கொள்வதற்கு அதிகாரத்துவ அமைப்புகளின் குறிப்பாக ஏராளமான கலாச்சார ரீதியான உதாரணங்களை அவர் ஆய்வு செய்தார்.

அதிகாரத்துவம் என்கிற வார்த்தை பல்வேறு வித்தியாசமான வழிகளில் பயன்படுத்தப்படுவதை திறனாய்வு செய்த பிறகு, அவர் அந்த வார்த்தையை எந்த பொருளில் பயன்படுத்துகிறார் என்பதை அவர் பின்வருமாறு விவரிக்கிறார்:

“ஒரு அதிகாரத்துவ அமைப்பு என்பது தனது தவறுகளில் இருந்து கற்றுக் கொண்டு தனது நடத்தையைத் திருத்திக் கொள்ள முடியாத ஒரு அமைப்பு ஆகும்” (குரோஸியர், 1964, ப 187)

மேலும் கூறுகிறார்:

“...இது தன் தவறுகளில் இருந்து திருத்திக் கொள்ளாத அமைப்பு மட்டும் அல்ல; நெருக்கடிகள் இல்லாமல், தொழில்துறை சமூகத்தின் துரித பரிணாமம் கட்டாயமானதாய் ஆக்கும் உருமாற்றங்களுக்கு சரிசெய்து கொள்ள முடியாத அளவுக்கு ரொம்பவும் இறுகியதும் ஆகும்.” (குரோஸியர், 1964, ப 198)

நிஜ நிகழ்வு ஆய்வுகளில் இருந்தான தனது பகுப்பாய்வில் இருந்து, அதிகாரத்துவ செயலிழப்பு குறித்த ஒரு தத்துவத்தை அவர் உருவாக்குகிறார். பின்னர் அதனை மற்ற அமைப்புகளுக்கும் விரிவுபடுத்தினார். என்றாலும் கூட, தனது தத்துவத்திற்கான நிஜ நிகழ்வுகளாக அவர் எடுத்துக் கொண்ட இரண்டுமே பிரான்சு நாட்டில் தான் அமைந்திருந்தன: “குமாஸ்தா வேலை முகமை” மற்றும் “தொழிலக ஏகபோகம்” ஆகிய இந்த இரண்டு உதாரணங்களையும் தான் பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்ததால் மட்டும் குரோஸியர் தெரிவு செய்யவில்லை. மாறாக ஒரு லட்சிய அதிகாரத்துவம் குறித்த வேபரிய கருத்தை ஒட்டிய ஸ்தாபனங்களை உருவாக்கும் மட்டத்திற்கு பிரான்சு சமூக ரீதியாகவும் கலாச்சாரரீதியாகவும் வளர்ந்திருந்ததாலும் தான் என்று அவர் கூறுகிறார்.

ஏறக்குறைய எல்லா இறுதிவிளைவும் மனித சலனத்திற்கு அப்பாற்பட்ட சில முன்வகுத்த விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளின் படி முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருக்கிற நிலைமைகளில், மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கைகளில் கொஞ்சம் கட்டுப்பாட்டை கொண்டிருக்க வேண்டுமானால் இறுதிவிளைவுகள் ஏற்கனவே தெரிந்திராத “நிச்சயமற்ற மண்டலங்களை” அவர்கள் சுரண்டியாக வேண்டும் என்கிற சிந்தனையில் இருந்து அவருடைய தத்துவம் அமைந்திருக்கிறது.

உண்மையில் ஸ்தாபன உறவுகள் என்பதே அதில் இருப்பவர்களுக்கு இடையே ஆடப்படும் தொடர்ச்சியான உத்திரீதியான விளையாட்டுகள் தான். அதில் இருப்பவர்கள் பாரபட்சத்திற்கு இடமிருந்தால் ஒன்று அதனை தங்களது நலன்களுக்காக சுரண்டிக் கொள்ள முயல்கிறார்கள். அல்லது மற்றவர்களுக்கு அனுகூலம் கிட்டி விடாமல் தடுக்க முயல்கிறார்கள் என்று அவர் கூறுகிறார்.

“ஒவ்வொரு குழுவும் தன்னால் முடிந்த திசையில் அப்பகுதியை பாதுகாக்கவும் பெரிதாக்கவும் முயல்கிறது; மற்ற குழுக்கள் மீதான தனது சார்பு நிலையைக் குறைக்க முயல்கிறது; அந்த சார்புநிலை ஒரு பாதுகாப்பு கவசமாய் இருக்கும் மட்டத்திற்கு மட்டும் அதனை ஏற்றுக் கொள்கிறது.....அடிபணிவதைத் தவிர வேறுவழியில்லை என்றால் பின்வாங்கிக் கொள்கிறது” (குரோஸியர், 1964, ப 156)

இதன் விளைவு இலக்குகள் எல்லாம் திசைமாறிப் போவதோடு ஸ்தாபனம் உள்முகமான அதிகாரப் போட்டிகளிலேயே சிக்கிக் கொள்கிறது. இவ்வாறு, பகுத்தறிவான மனித சலனத்திற்கு அப்பாற்பட்ட ஒரு திறம்பட்ட அமைப்பை வடிவமைக்க முயன்றால் அதன் விளைவு புதிரான வகையில் அதற்கு நேர் எதிரான ஒரு சூழலை உருவாக்குகிறது என்பது உண்மை என்று குரோஸியர் வாதிடுகிறார்.

ஸ்தாபனத்தின் அதிகாரத்துவ அமைப்பில் மையப்படுத்தல் மற்றும் மனித சலனத்திற்கு ஆட்படாமை ஆகியவற்றில் இருந்து எழும் சற்று ஸ்திரமான புலப்படும் வட்டங்களின் தொடர்ச்சியை பிரதானமாகக் காணலாம்.” (குரோஸியர், 1964, ப 193)

தான் ஆய்வு செய்த அமைப்புகளில் கண்ட நான்கு இத்தகைய ‘புலப்படும் வட்டங்களை’ அவர் காட்டுகிறார்.

  • மனித சலனத்திற்கு அப்பாற்பட்ட விதிகளின் உருவாக்கம்

விவேகமுற்ற, சமத்துவமுற்ற வகையில் இருக்கும் முயற்சியில், அதிகாரத்துவங்கள் எல்லா சாத்தியமான நிகழ்வுகளையும் குறித்து யோசிக்கும் அருவமான மனிதசலனமற்ற விதிகளை உருவாக்க முயற்சி செய்கின்றன. போட்டித் தேர்வுகளின் உதாரணத்தை குரோஸியர் காட்டுகிறார். தேர்வுகளில் தேறி விட்டால், பதவி உயர்வு என்பது வெறுமனே பணி மூப்பு மற்றும் பணியிட மோதல் தவிர்ப்பு குறித்த ஒரு விஷயமாக ஆகி விடுகிறது. அதன் விளைவு, அடுக்குவரிசை உறவுகள் முக்கியத்துவம் குறைந்து போய் அல்லது முற்றிலுமாய் காணாமல் போய், அதிகாரத்துவத்தின் உயர்ந்த நிலைகள் கீழ் நிலைகளை ஆளுவதற்கான அதிகாரத்தை பெருமளவு இழந்து விடுகின்றன.

  • முடிவுகளின் மையமாக்கம்

முடிவு மேற்கொள்வதில் மனித சலனம் இருக்கக் கூடாது என்று ஒருவர் விரும்பினால், அம்முடிவுகளால் பாதிக்கப்படுவோரின் செல்வாக்கில் இருந்து அம்முடிவுகளை மேற்கொள்பவர்கள் பாதுகாப்பாக பிரிந்திருப்பதை உறுதி செய்வது அவசியமாகும். இதன் விளைவு என்னவாகிறது என்றால், பிரச்சினைகள் குறித்து எந்த நேரடியான அறிவும் இல்லாதவர்கள் மூலம் அவை தீர்க்கப்படுவதாகிறது. எனவே அதற்குப் பதிலாய் உள்முக அரசியல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

  • தட்டுகளின் தனிமைப்படல் மற்றும் தட்டுகளுக்குள்ளான குழு அழுத்தம்

மேலதிகாரிகள் இடையே பாரபட்சத்தை செலுத்துவதற்கான சாத்தியத்தை குறைப்பதாலும், கீழ் பணிபுரிபவர்களிடம் இருந்து பேரம் பேசும் வாய்ப்புகளை அகற்றுவதாலும், தனித்தனி தீவுகளாய் அமையும் தட்டுகள் கொண்ட ஒரு ஸ்தாபனமாக அது முடிகிறது. அந்த தட்டுக்குள்ளாக இருக்கும் கருத்து சமத்துவம் மட்டும் தான் அமைப்பின் மற்ற பாகங்களில் இருந்து ஒரு தனிநபருக்கான ஒரே பாதுகாப்பாக இருப்பதோடு, குழுக்களுக்கும் தங்களது சொந்த களத்தின் மீதான கொஞ்சம் கட்டுப்பாட்டை அது அளிக்கிறது. விளைவு, தனிநபர் நம்பிக்கைகளுக்கோ அல்லது ஸ்தாபனத்தின் பரந்த இலக்குகளுக்கோ மதிப்பில்லாமல் குறிப்பிட்ட தட்டின் வலிமையான குழு அழுத்தங்களுக்கு தான் பணிய வேண்டியதிருக்கும்.

  • இணை அதிகார உறவுகளின் உருவாக்கம்

தொடர்ந்து மனித சலனமற்ற விதிகளை உருவாக்கினாலும் முடிவுகள் மேற்கொள்வதில் முற்போக்கான மையப்படுத்தலை சேர்த்தாலும், ஒவ்வொரு இறுதிமுடிவுக்கும் கணக்கு சொல்வது என்பது சாத்தியமில்லாதது. இதன்விளைவாக எஞ்சிய நிச்சயமற்ற மண்டலங்களைக் கட்டுப்படுத்தும் தனிநபர்கள் அல்லது குழுக்கள் ஒரு கணிசமான அதிகாரத்தை செலுத்த முடிகிறது. இது சாதாரணமாய் கட்டுப்பாட்டுடன் சமத்துவடன் இயங்கும் ஒரு ஸ்தாபனத்தில், குறிப்பிட்ட சூழ்நிலைகளில் சில குழுக்கள் அல்லது தனிநபர்களுக்கு மிதமிஞ்சிய அதிகாரத்தை அளித்து இணை அதிகார கட்டுமானங்களை உருவாக்க இட்டுச் செல்கிறது. மீண்டும் இது, அமைப்பின் ஒட்டுமொத்த இலக்குகளுக்கு அப்பாற்பட்ட காரணிகளின் அடிப்படையில் முடிவுகள் மேற்கொள்ளப்படுவதற்கு இட்டுச் செல்லும்.

அமெரிக்க பயன்பாடு

[தொகு]

உட்ரோ வில்சன் ஒரு கல்வியிட ரீதியான கட்டுரையில் பின்வருமாறு எழுதினார்:[7]

அமெரிக்காவில் நிர்வாகம் என்பது எல்லா புள்ளிகளிலும் பொதுக் கருத்துக்கு காது கொடுப்பதாய் இருக்க வேண்டும். முழுமையாய் பயிற்றுவிக்கப்பட்ட அலுவலர்கள் கொண்ட அங்கம் நல்ல நடத்தையுடன் நடந்து கொள்ள வேண்டும், எப்படியாயினும் அது ஒரு எளிமையான தொழில் அவசியம். நல்ல நடத்தை என்றால் எது? அரசாங்கத்தின் கொள்கைக்கு நிலையான, உள்ளப்பூர்வமான விசுவாசத்தை அவர்கள் வழங்குவது தான் நல்ல நடத்தை என்று கூறப்படுவதில் அடங்கியுள்ளது. இந்த கொள்கையில் உத்தியோகவாதத்தின் எந்த சுவடும் இல்லை. இது நிரந்த அதிகாரிகளின் உருவாக்கம் அல்ல, மாறாக பொதுமக்கள் கருத்துக்கான பொறுப்பை நேரடியாகவும் தவிர்க்கவியலாமலும் கொண்டிருக்கும் கண்ணியவான்களின் உருவாக்கம். அரசின் மொத்த சேவையும் அதன் மக்களின், தலைவர்களின் மற்றும் சாமானியர்களின் பொது அரசியல் வாழ்வில் இருந்து அகற்றப்படும் இடத்தில் தான் அதிகாரத்துவம் இருக்க முடியும். அதன் நோக்கங்கள், இலக்குகள், கொள்கை, நிர்ணயங்கள் ஆகியவையும் அதிகாரத்துவ வகையினதாகத் தான் இருந்தாக வேண்டியிருக்கும்.

அதிகாரத்துவத்திற்கு வெகுஜன வெறுப்பு இருப்பதை பொதுவான அகராதி வரையறைகள் பிரதிபலிக்கின்றன. அமெரிக்கன் ஹெரிட்டேஜ் அகராதி இந்த வார்த்தைக்கு இரண்டு மரபுவழியான வரையறைகளை அளித்த பின்பு, மூன்றாவதும் கடைசியானதுமான வரையறையின் ஒரு பகுதியை பின்வருமாறு அளிக்கிறது: “எண்ணிலடங்கா அலுவலகங்கள் மற்றும் நெகிழ்வற்ற செயல்பாட்டு விதிகளின் படி செயல்படுவது- எந்த அதிகாரமற்ற நிர்வாகம்”. வெப்ஸ்டரின் நியூ வேர்ல்டு டிக்‌ஷனரி ஆஃப் அமெரிக்கன் லாங்வேஜ் அகராதியில் இந்த வார்த்தைக்கான வரையறையின் ஒரு பகுதி பின்வருமாறு கூறப்படுகிறது: “அதிகாரத்துவம் என்பது அரசாங்க உத்தியோகவாதம் அல்லது நெகிழ்வற்ற நடைமுறைச் சுற்று.” ரோஜட்’ஸ் வார்த்தைக் களஞ்சியம் அதிகாரத்துவம் என்னும் வார்த்தைக்கு ஒத்த பொருள் வார்த்தைகளாக “உத்தியோகவாதம்”, “உத்தியோகதன்மை”, மற்றும் “சிவப்பு நாடா” ஆகிய வார்த்தைகளை அளிக்கிறது.

அமெரிக்காவின் அறிவியல் புனைவு எழுத்தாளரான ஜெரி பூர்னெல் ஒரு தத்துவத்தைக் குறிப்பிடுகிறார். இதனை “பூர்னெலின் அதிகாரத்துவ இரும்பு விதி ” என்று அவர் கூறுகிறார். அது கூறுகிறது:

“எந்த அதிகாரத்துவத்திலும், அதிகாரத்துவத்தின் நலனுக்கு அர்ப்பணித்துக் கொள்ளும் மனிதர்கள் தான் எப்போது மேலும் மேலும் கட்டுப்பாட்டினைப் பெறுகிறார்கள். அதிகாரத்துவம் செய்யக் கடமைப்பட்டுள்ள இலக்குகளுக்கு தங்களை அர்ப்பணிக்கும் மனிதர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் செல்வாக்கு இழக்கிறார்கள். சிலசமயங்களில் மொத்தமாய் அதிலிருந்து அகற்றப்படுகிறார்கள்.”

இந்த போக்கு பின்வரும் விளைவை உருவாக்கும் நோக்கம் கொண்டுள்ளது:

“...எந்த அதிகாரத்துவ அமைப்பிலும் இரண்டு வகையான மனிதர்கள் இருப்பார்கள்: அமைப்பின் உண்மையான இலக்குகளை முன்னெடுக்க வேலை பார்ப்பவர்கள்; அமைப்புக்காகவென வேலை பார்ப்பவர்கள். உதாரணமாக கல்வித்துறையில் பார்த்தால், குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க உழைக்கிற தியாகம் செய்கிற ஆசிரியர்கள் இருப்பார்கள்; இன்னொரு பக்கம் ரொம்பவும் போட்டித்திறன் குறைந்த ஒரு ஆசிரியரையும் கூட பாதுகாக்க உழைக்கும் சங்க பிரதிநிதிகளும் இருப்பார்கள். இரும்பு விதி சொல்வது என்னவென்றால், எல்லா சந்தர்ப்பங்களிலும் இந்த இரண்டாவது வகை மனிதர்கள் தான் அமைப்பின் கட்டுப்பாட்டைக் கையில் கொண்டிருப்பார்கள்; அவர்கள் தான் எப்போதும் அந்த அமைப்பு செயல்படுவதற்கான விதிகளை எழுதுவார்கள்.

ஆஸ்திரியப் பள்ளி பகுப்பாய்வு

[தொகு]

அதிகாரத்துவம் குறித்த ஆஸ்திரியப் பள்ளி பொருளாதாரம் மீதான அதன் கவனக்குவிப்பை பிரதிபலிக்கிறது; அத்துடன் அதிகாரத்துவ மேலாண்மைக்கும் லாப மேலாண்மைக்கும் இடையிலான வேறுபாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.[8]

நடப்பு கல்வியிட விவாதங்கள்

[தொகு]

தேர்ந்தெடுத்த அலுவலர்கள் எந்த அளவுக்கு தங்களின் அதிகாரத்துவ முகவர்களைக் கட்டுப்படுத்த முடியும் என்பதில் நவீன கல்வியிட ஆராய்ச்சிகள் விவாதம் செய்கின்றன. தேர்ந்தெடுத்த அலுவலர்களைக் காட்டிலும் அதிகாரத்துவ தட்டினருக்கு தாங்கள் என்ன செய்கிறோம் என்ன செய்து கொண்டிருந்திருக்க வேண்டும் என்பதில் கூடுதல் விவரம் இருக்கிறது என்பதால் பொதுமக்கள் நலன்களுக்கு எதிரான கொள்கைகளையும் கட்டுப்பாடுகளையும் அமலாக்கும் திறனை அதிகாரத்துவத்தினர் கொண்டிருக்கலாம். அமெரிக்க பொருளில் இந்த கவலைகள் எல்லாம் "நாடாளுமன்ற கைதுறப்பு" கருதுகோள்களுக்கு, அதாவது நாடாளுமன்றம் பொதுக் கொள்கை மீதான தனது அதிகாரத்தை நியமனம் செய்யப்பட்ட அதிகாரத்துவ தட்டினரிடம் கைதுறந்து விட்டது என்பதான கருத்துக்கு, இட்டுச் சென்றது.

தியோடார் லோவி இந்த விவாதத்தை துவக்கி வைத்தார். 1979 ஆம் ஆண்டு வெளிவந்த புத்தகம் ஒன்றின் முடிவில் அமெரிக்க நாடாளுமன்றம் அதிகாரத்துவ முகமைகளை திறம்பட மேற்பார்வையிடுவதில்லை என்று அவர் கூறியிருந்தார். அதற்குப் பதிலாக, கொள்கைகள் எல்லாம், ஒருபக்கம் தங்களின் நலன்கருதி ஈடுபடும் குழுக்கள், இன்னொரு பக்கம் நியமனம் செய்யப்பட்ட அதிகாரத்துவத்தினர், மூன்றாவது பக்கத்தில் நாடாளுமன்ற துணைக்குழுக்கள் (இவை ஒட்டுமொத்தமாக நாடாளுமன்றம் கொண்டிருப்பதைக் காட்டிலும் தீவிரமயப்பட்ட கருத்துகளையே அநேகமாய் கொண்டிருக்கும் என்கிறார் லோவி) கொண்ட "இரும்பு முக்கோணங்களால்" மேற்கொள்ளப்படுகின்றன.[9] 1979 முதலாக இந்த நலன் குழுக்கள் ஒரு பெரிய பாத்திரத்தை ஆற்றியிருப்பதாகக் கருதப்படுகிறது, இப்போது இவை அதிகாரத்துவத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், நாடாளுமன்றத்தில் புழங்கும் பணத்தையும் பாதிக்கிறது. "இரும்பு முக்கோணங்கள்" சிந்தனை அதன் பின் "இரும்பு அறுங்கோணங்களாய்" பரிணாமமுற்று பின் ஒரு "உள்ளீடற்ற கோளமாக" பரிணாமமுற்றுள்ளது.

சட்டமன்றங்கள், நலன் குழுக்கள், அதிகாரத்துவத்தினர், மற்றும் பொது மக்கள் ஆகியோரிடையேயான உறவுகள் ஒன்றின் மீது ஒன்று விளைவுகள் கொண்டிருக்கின்றன. இந்த துண்டுகளில் ஒன்று இல்லை என்றாலும் மொத்த கட்டமைப்பும் மொத்தமாய் மாறும். இந்த உறவு "ம்யு" (mu) என அல்லது ஒரு துண்டு ஒட்டுமொத்த நிகழ்முறையையும் விவரிக்க முடியும் அல்லது கட்டுப்படுத்த முடியும் என்கிற வகையில் கருதப்படுகிறது. பொதுமக்கள் சட்டமன்றங்களுக்கு வாக்களிக்கிறார்கள், நலன் குழுக்கள் தகவல்களை வழங்குகின்றன, ஆனால் சட்டமன்றமும் அதிகாரத்துவவாதிகளும் கூட நலன் குழுக்கள் மீதும் பொதுமக்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். மொத்த அமைப்பும் ஒன்றையொன்று சார்ந்ததாய் உள்ளது.

வில்லியம் நிஸ்கானெனின் ஆரம்பகால (1971) ‘நிதிநிலை-அதிகப்பட்சமாக்கல்’ மாதிரி லோவியின் கூற்றுகளுக்கு கூடுதல்சேர்க்கையாய் அமைந்தது; லோவி மேற்பார்வை செய்வதில் நாடாளுமன்றம் (பொதுவாக சட்டமன்றங்கள்) தவறின என்று கூறினார்; பகுத்தறிவான அதிகாரத்துவ தட்டு எப்போதும் எல்லா இடத்திலும் தங்களது நிதிநிலையை அதிகப்பட்சமாக்க தலைப்படும். இதன்மூலம் அரசின் வளர்ச்சிக்கு வலிமையான பங்களிப்பை அளிக்கும் என்று நிஸ்கானென் வாதிட்டார். ஜனாதிபதி ரீகனின் கீழான அமெரிக்க பொருளாதார ஆலோசகர்களின் குழுவில் பணியாற்றும் மட்டத்திற்கு நிஸ்கானென் சென்றார். உலக அளவில் பொதுச் செலவினங்களில் குறைப்புகளுக்கும் 1980கள் மற்றும் ’90களில் தனியார்மயமாக்கம் அறிமுகப்படுத்துவதற்குமான நகர்வுக்கு ஒரு வலிமையான அச்சாணியை அவரது மாதிரி வழங்கியது.[சான்று தேவை]

இந்த கூற்றுகளுக்கு மறுமொழியாக இரண்டு விதமான தத்துவங்கள் எழுந்துள்ளன. முதலாவது அதிகாரத்துவ ஊக்குவிப்புகளில் கவனம் கொள்கிறது; நிஸ்கானெனின் ஒட்டுமொத்தவகை அணுகுமுறை பல்வேறு பன்முக சித்தாந்தவாதிகளிடம் இருந்து விமர்சனத்தைப் பெற்றது. அலுவலர்களின் உத்வேகங்கள் நிஸ்கானென் அனுமதித்ததை விடவும் அதிகமாக மக்கள் நலன் நோக்கியதாகத் தான் இருப்பதாக அவர்கள் வாதிட்டனர். (பாட்ரிக் டன்லீவி முன்வைத்த) அதிகாரத்துவ வடிவ மாதிரியும் நிஸ்கானென் தத்துவத்திற்கு எதிராய் வாதிடுகிறது. விவேகமுள்ள அதிகாரத்தட்டு தங்கள் சொந்த முகமையின் செயல்பாடுகளுக்கு செலவிடக் கூடிய அல்லது ஒப்பந்ததாரர்களுக்கு அல்லது சக்திவாய்ந்த நலன் குழுக்களுக்கு வழங்கக் கூடிய (அப்போது தான் ஆதாயங்கள் மூத்த அதிகாரிகளுக்குத் திரும்பிக் கிடைக்கும்) வழங்கக் கூடிய நிதிநிலை பாகத்தை மட்டும் தான் அதிகப்பட்சமாக்கும். உதாரணமாக, விவேகமுள்ள அதிகாரிகளுக்கு பெரும் நலநிதித் தொகைகளை மில்லியன்கணக்கான ஏழை மக்களுக்கு கொடுப்பதால் எந்த ஆதாயமும் கிட்டாது, ஏனெனில் அதிகாரத் தட்டின் சொந்த பயன்பாட்டு சாதனங்கள் மேம்படப் போவதில்லை. இதனால் அதிகாரத் தட்டினர் காவல் படைகள் மற்றும் பாதுகாப்புப் படைகள் போன்ற துறைகளில் தான் நிதிநிலையை அதிகரிப்பர் என்று எதிர்பார்க்கலாமே தவிர, நலநிதி அரசாங்க செலவினங்களில் அதிகரிப்பு இருக்கும் என எதிர்பார்க்க முடியாது.

இரண்டாவது வகை மறுமொழிகள் லோவியின் கூற்றுகளில் கவனம் குவிக்கின்றன. சட்டமன்றங்கள் (குறிப்பாக அமெரிக்க நாடாளுமன்றம்) அதிகாரத் தட்டினரை கட்டுப்படுத்த முடியுமா என அவை கேள்வி எழுப்புகின்றன. இந்த அனுபவரீதியான ஆய்வு ஒரு இயல்பான கவலையால் ஊக்குவிக்கப்படுகிறது: நாம் ஒரு ஜனநாயகத்தில் வாழ்வதாக நம்புவோமாயின், நியமனம் செய்த அதிகாரிகள் தேர்ந்தெடுத்த பொது ஊழியர்களின் நலன்களுக்கு விரோதமாக செயல்பட முடியாது என்பதே உண்மையாக இருக்க வேண்டும். (இந்த கூற்றே விவாதத்திற்குரியது; நாம் தேர்ந்தெடுத்த ஊழியர்களை முழுமையாக நம்பியிருந்தால், அரசியல்சட்ட சோதனைகளுக்கும் சமநிலைக்கும் அவ்வளவு நேரத்தை நாம் செலவிட்டிருக்கப் போவதில்லை.[10])

இந்த இரண்டாவது கிளைக்குள்ளாக, தேர்ந்தெடுத்த ஊழியர்கள் அதிகாரத்துவ செயல்விளைவுகளைக் கட்டுப்படுத்தும் சூழ்நிலைகளை விவாதிக்கும் ஏராளமான ஆய்வுகளை கல்வியாளர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வுகள் பொதுப்படையாக எல்லா இடங்களிலான நிகழ்வுகளையும் அலசுகின்றன என்றாலும் அநேகமானவை அமெரிக்க நிகழ்வுகளை அலசுகின்றன.[11][12] சட்டமன்றங்கள் பயன்படுத்தக் கூடிய ஏராளமான கண்காணிப்பு சாதனங்கள் இருக்கின்றன என்றும் அவற்றில் பல தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் இந்த ஆய்வுகள் வாதிடுகின்றன. இந்த கண்காணிப்பு எந்திரவகைகள் “காவல் ரோந்துகள்” (செயலூக்கத்துடன் தணிக்கை செய்யும் முகமைகள், தவறான நடத்தையைக் கூர்மையாய் கண்காணிக்கும்) மற்றும் “நெருப்பு அலாரங்கள்” (வெளிப்படையான நிர்வாக நடைமுறைகளை அதிகாரத் தட்டிடம் வழங்குவதன் மூலம், எதிர்மறை பாதிப்புக்குள்ளாகும் குழுக்கள் அதிகாரத்துவ கோளாறுகளைக் கண்டறிந்து அதனை சட்டமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவருவது எளிதாகும்) என இரண்டு வகைகளாய் வகைப்படுத்தப்படுகின்றன.[13]

சுய-நலன் கொண்ட அதிகாரத்துவம் மற்றும் பொதுப் பொருட்கள் உற்பத்தி மீதான அதன் விளைவு குறித்த ஒரு மூன்றாவது கருத்தாக்கம் ஃபைசல் லஃடிப் சவுத்ரி மூலம் முன்வைக்கப்படுகிறது. கொள்கை உருவாக்கத்தில் ஈடுபடும் உயர்நிலை அதிகாரத்துவவாதிகளின் சுயநல நடத்தை மீது மட்டும் தான் நிஸ்கானென் மற்றும் டன்லீவி ஆகியோரின் பிரதான கவனக் குவிப்பு இருந்தது. இதற்கு மாறாக, சவுத்ரி 1997 ஆம் ஆண்டில் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகானாமிக்ஸ் கல்விநிலையத்தில் தான் சமர்ப்பித்த ஆய்வறிக்கையில், கீழ் நிலை அரசு ஊழியர்களின் பிரதியுபகார எதிர்பார்ப்பு நடத்தை பொதுத்துறை உற்பத்திப் பொருட்களின் உற்பத்தி செலவை எவ்வாறு அதிகப்படுத்துகிறது என்பதிற்கு கவனத்தைக் கொண்டு வந்தார்.[14] பிரதியுபகாரம் எதிர்நோக்கும் அதிகாரத்துவம் குறித்த சவுத்ரியின் மாதிரி பொதுமக்களின் பணம் பொதுவாக அரசு ஊழியர்களால் நேரடியாக சுரண்டப்படும் நிர்வாக ஊழலின் விடயத்தை படம்பிடித்துக் காட்டுகிறது.

மேலும் பார்க்க

[தொகு]
  • அதிகாரத்துவவாதி
  • அரசியல்
  • அறியப்படாத குடிமகன் (கவிதை)

குறிப்புதவிகள்

[தொகு]
  1. "Bureaucracy - Definition and More from the Free Merriam-Webster Dictionary". Merriam-webster.com. பார்க்கப்பட்ட நாள் 2013-05-26.
  2. ஓஸ்போர்ன், டேவிட் மற்றும் கேப்லர், டெட். அரசாங்கத்தின் மறுகண்டறிவு : தொழில்முனைவு ஆர்வம் எவ்வாறு பொதுத் துறையை மாற்றியமைக்கிறது. ப்ளூம். பிப்ரவரி, 1993. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-452-26942-3
  3. வில்சன், ஜேம்ஸ் Q. அதிகாரத்துவம். பேசிக் புக்ஸ், 1989. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-465-00785-6
  4. Baron de Grimm and Diderot, Correspondence littéraire, philosophique et critique, 1753-69 , 1813 பதிப்பு, தொகுதி. 4, ப. 146 & 508 - மேற்கோள் காட்டப்பட்டது மார்ட்டின் அல்ப்ரோ, அதிகாரத்துவம் . லண்டன்: பால் மால் பிரஸ், 1970, ப. 16
  5. பிரடரிக் ஏங்கல்ஸ்; குடும்பம், தனிச் சொத்து மற்றும் அரசின் தோற்றங்கள் . Marxists.org
  6. குரோஸியர், M. (1964). அதிகாரத்துவ நிகழ்வு (M. குரோஸியர், Trans.). லண்டன்: டேவிஸ்டோக் பப்ளிகேஷன்ஸ்.
  7. வில்சன், உட்ரோ. நிர்வாகக் கல்வி. அரசியல் அறிவியல் காலாண்டிதழ், தொகுதி. 2, எண். 2 (ஜூன்., 1887), பக். 197-222
  8. von Mises, Ludwig (1962) [1944]. Bureaucracy (PDF). பார்க்கப்பட்ட நாள் 2006-11-10.
  9. லோவி. 1979. தாராளவாதத்தின் முடிவு. நியூயார்க்: W. W. நார்டான் & கம்பெனி.
  10. ஸ்கோல்ஸ் மற்றும் உட். 1988. IRS அமைப்பை கட்டுப்படுத்துவது: முதல்வர்கள், கோட்பாடுகள், மற்றும் பொது நிர்வாகம். அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் பொலிடிக்கல் சயின்ஸ் 42 (ஜனவரி): 141-162.
  11. ஹ்யூபர் மற்றும் ஷிபான். 2002. திட்டமிட்ட பாகுபாடு: அதிகாரத்துவ தன்னாட்சியின் ஸ்தாபன அடித்தளங்கள். கேம்ப்ரிட்ஜ்: கேம்ப்ரிட்ஜ் யுனிவர்சிட்டி பிரஸ்.
  12. ராம்ஸெயர் மற்றும் ரோஸன்ப்ளுத். 1993. ஜப்பானின் அரசியல் சந்தை. கேம்பிரிட்ஜ்: ஹார்வர்டு யுனிவர்சிட்டி பிரஸ்.
  13. மெக்கபின்ஸ் மற்றும் ஸ்வார்ட்ஸ். 1984. நாடாளுமன்ற மேற்பார்வை அலட்சியப்படுத்தப்பட்ட்து: காவல் ரோந்துகள் Vs நெருப்பு அலாரங்கள். அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் பொலிடிக்கல் சயின்ஸ் 28: 16-79.
  14. Chowdhury, Faizul Latif (2006). Corrupt Bureaucracy and Privatization of Tax Enforcement.

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதிகாரத்துவம்&oldid=3939425" இலிருந்து மீள்விக்கப்பட்டது