உள்ளடக்கத்துக்குச் செல்

காசோலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கனடா நாட்டுக் காசோலை

காசோலை (Cheque அல்லது check) என்பது வங்கி, வணிகத்தில் பயன்படும் ஒரு அச்சிடப்பட்ட, எழுதப்பட்ட படிவம் ஆகும். இதன் மூலம் காசோலையில் குறிப்பிட்டுள்ள நபருக்கு வங்கி தனது கணக்கில் இருந்து பணத்தைத் தர வேண்டும் என, அவ்வங்கியில் ஏற்கனவே பணம் இட்டுவைத்துள்ள நபர் கூறுவதாகும். இது பணவோலை, காசேடு, பணவேடு என்று அழைக்கப்படுகிறது. check என்ற ஆங்கிலச் சொல்லுக்கு 'தகுத்தல் தடுப்பு' என்பது பொருள். ஒரு வங்கியில் நாம் நம் கணக்கில் போட்டு வைக்கும் பணத்தை அந்த வங்கி தனது வங்கி வணிகத்திற்கு பயன்படுத்திக் கொண்டிருக்கும். அப்படிப் பயன்படுத்துவதைத் தடுக்க நாம் வழங்கும் பத்திரமே 'காசோலை' ஆகும். காசோலையில் கணட பணத்தின் அளவுக்கு நமது வங்கிக் கணக்கில் இருக்கும் இருப்பை வங்கியாளர் பயன்படுத்த முடியாது. ஏனெனில் காசோலைத் தொகையை நமக்கோ நம்மால் காசோலையில் குறிக்கப்பட்டவருக்கோ தந்து விட வேண்டும். இப்படி வங்கியை நாம் வழங்கும் காசோலைத் தடுப்பதால் தடுப்பு எனப் பொருள்படும் check அல்லது cheque என காசோலை அழைக்கப்படுகிறது. காசோலை ஒரு முக்கியமான செலாவணிக்கருவி ஆகும். காசோலை பாதுகாப்பான மற்றும் வசதியான பணப்பரிமாற்றம் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. இது குறைவான ஆபத்து உள்ள, இழப்பினைக் குறைக்க வல்ல பரிமாற்றம் ஆகும்.

வரலாறு[தொகு]

பண்டைய ரோமனியர்கள் கி.பி முதலாம் நூற்றாண்டில் 'பிரீஸ்கிரிப்சன்' என்றழைக்கப்பட்ட ஒரு காசோலைப் படிவத்தைப் பயன்படுத்தினார்கள்.[1] என நம்பபடுகிறது.

இந்தியாவில் மௌரியர் காலத்தில் கி.மு. 321 முதல் 185 கி.பி வரை "அதிஷா" எனப்படும் ஒரு முறை பணப்பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்டது. இதன் மூலம் வங்கியாளருக்கு குறிப்பிட்ட பணத்தை மூன்றாம் நபர் ஒருவருக்கு கொடுக்க கடிதம் மூலம் ஆணையிடப்பட்டது. புத்தர் காலத்தில், இந்த முறை கணிசமான அளவில் பயன்படுத்தப் பட்டதாகக் குறிப்புகள் கூறுகின்றன. பெரிய நகரங்களில் வணிகர்கள் ஒருவர் மற்றவர்க்கு பணப் பரிமாற்றம் செய்ய இந்தக் கடன் கடித முறையே பயன்பட்டது. மேலும் கடன் உறுதிப் பத்திர முறையும் இருந்ததாக எண்ணற்ற குறிப்புகள் காணப்படுகின்றன.[2]

கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் பாரசீகத்தின் (தற்போதைய ஈரான்) பல பகுதிகளில் சக் (chak - பெர்சிய மொழியில் چک.) எனப்படும் சொல் பணப்பரிமாற்றம் தொடர்பான முறைகள் புழக்கத்தில் இருந்து வந்துள்ளது. பிற்கால இசுலாமி அரபு ஆவணத்தில் இந்த வார்த்தை sakkஅல்லது صک என்ற சொல்லைப் பயன்படுத்தியதாகக் குறிப்புகள் உள்ளன. ஒன்பதாம் நூற்றாண்டில் கலீபா 'ஹருன் அல் ரஷீது' காலம் வரை இசுலாமிய வணிகத்தில் சக் முறையில் காசோலைகள் வழங்குவது நடைமுறையில் இருந்தது.[3]

கி.பி 12-14 ஆம் நூற்றாண்டில் 'நைட்ஸ் டெம்ப்ளர்' என்பவர் புனித இடமாகிய எருசலேம் நகருக்கு புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக அல்லது ஐரோப்பாவிற்கு வெளியே பயணம் செய்ய காசோலை முறையை அறிமுகம் செய்தார்.[4] புனிதப் பயணம் மேற்கொள்பவர் ஒரு இடத்தில் பணத்தைச் செலுத்திவிட்டு, அவர்கள் சென்று சேரவேண்டிய இடத்திற்குச் சென்றதும் குறிப்பிட்ட சங்கேத மொழியில் எழுதப்பட்ட ஒரு வரைவோலை யைக் காட்டி பணத்தைப் பெற்றனர்.

13 ஆம் நூற்றாண்டில் வெனிசு நகரில் வெளிநாடுகளுக்கிடையேயான வணிகத்திற்கு பெருமளவு தங்கம் அல்லது வெள்ளி பரிமாற்றம் செய்து கொள்வதற்குப் பதிலியாக "வங்கி வழிப் பட்டியல்"(Bill of exchange)' என்ற முறையைப் பயன்படுத்தினர். இதுவே பின்னர் ஐரோப்பிய நாடுகளிலும் பரவியது.

16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் டச்சுக் குடியரசில் தான் மக்கள் பெருமளவில் தனது பணத்தைப் பாதுகாக்க 'காசாளர்' என்பரிடம் இட்டு வைப்பினைத் தொடங்கினார்கள். இதற்காக காசாளர்கள் ஒரு குறிப்பிட்ட பணத்தைப் பெற்றுக் கொண்டனர். பணத்தை பாதுகாப்பது மட்டுமின்றி பணம் இட்டு வைத்த நபர் தன் கையால் எழுதிக் கொடுத்த ஆணைக்கான பணத்தையும் அவ்வாணை கொண்டு வருபவருக்கு வழங்கும் பணியினையும் இக்காசாளர்கள் செய்தனர். இந்த முறை பின்னர் இங்கிலாந்து மற்றும் உலகெங்கும் பரவியது.[5]

காசோலையில் காணப்படும் விபரங்கள்[தொகு]

பிரித்தானியா நடைமுறையில் உள்ள மாதிரிக் காசோலை
 1. பெறுபவர், நாம் பணம் முன்பே இட்டுவைத்துள்ள வங்கி அல்லது நிதிநிறுவனம்
 2. பணம் பெறும் நபர் அல்லது நிறுவனம்.
 3. காசோலை வழங்கப்படும் நாள்
 4. தொகை
 5. காசோலை வழங்கும் நபர்
 6. காசோலை வழங்குபவரின் கையெழுத்து
 7. கணக்கு குறித்த குறியீட்டு எண்கள்

காசோலை வகைகள்[தொகு]

 1. ஆணைக் காசோலை
 2. குறுக்குக் கோடிட்ட காசோலை
 3. வெற்றுக் காசோலை
 4. முன் தேதியிட்ட காசோலை
 5. பின் தேதியிட்ட காசோலை
 6. நாளான காசோலை
 7. காவிக் காசோலை
 8. கட்டளைக் காசோலை
 9. பெறுவோன் கணக்கு மட்டுமுள்ள காசோலை
 10. பிரயாணிகள் காசோலை

கோடிட்ட காசோலை[தொகு]

காசோலையில் கண்டுள்ள பணத்தை எவரிடமும் கையில் தராமல், வங்கியில் உள்ள ஏதாவது ஒரு கணக்கிலேயே வரவு வைக்கவேண்டும் என்று காசோலை எழுதுகிறவர் நினைத்தால், காசோலையின் மீது இரண்டு நேர்க்கோடுகளை இழுத்துவிடுவர். இக்கோடுகள் பெரும்பாலும் எழுத்துகளை மறைக்காமல் இருக்கவெண்டும். எனவே இக்கோடுகளை காசோலையின் இடதுபுறம் மேல் பாகத்தில் மூலையில் இடம்பெறும். இதுவே கோடிட்ட காசோலை எனப்படும்.

இக்கோடிட்ட காசோலை தவறவிட்டாலும் இதில் கண்ட தொகையைத் தனியே எவரும் கள்ளக் கையெழுத்திட்டு வாங்கிக்கொண்டு போய்விட முடியாது. இக்க்காசோலையின் பணம் ஏதாவது ஒரு கணக்கிலேயே வரவு வைக்கப்படும். ஆதலால், காசோலை காணமற் போனாலும், எவர் கையில் கிடைத்தது என்பதைக் கண்டுபிடிக்க முடியும்.

காசோலையைக் குறுக்குக்கோடிடல்[தொகு]

காசோலையைக் குறுக்குக்கோடிடுவதில் இரண்டு வகையுண்டு.

 1. சாதாரணக் குறுக்குக்கோடிடல்
 2. சிறப்புக் குறுக்குக்கோடிடல்

சாதாரணக் கோடிடல் என்பது இயல்பாகக் கோடிடல் ஆகும். இவ்வகையில் இரண்டு கோடுகளை மட்டுமே இடுவர். சிறப்புக் கோடிடல் என்பது இரண்டு கோடுகளுக்கிடையில் 'இன்னொரு வங்கிக் கணக்கில் தான் இக்காசோலையின் வரவு வைக்கப்படல் வெண்டும்' என்றோ, இன்ன வங்கியில் இன்னார் கணக்கில் தான் வரவு வைக்கப்படல் வெண்டும் என்றோ ஏதாவது ஒரு சிறப்புச் சொற்களை எழுதுவது ஆகும்.இவ்வாறு கோடிட்ட காசோலையின் பணம், வெறும் கோடிட்ட காசோலையின் பணத்தைக் காட்டிலும், உறுதியாக குறித்தவர்க்கே சென்று சேரும். பெரும்பாலும் காசோலைகள் சிறப்புக் கோடிடப்பெறுவதில்லை. பணம் தவறாது சேறும் என்ற உறுதி இருந்தாலும், குறித்தவருடைய உரிமையை ஓரளவு கட்டுப்படுத்துவதாக இருப்பதனால், சிறப்புக் கோடிட்ட காசோலை வழியாகப் பணம் பெறுதலை யாரும் விரும்புவதில்லை. ஆனால் பணம் அனுப்புபவருக்கு இதுவே பெரும் பாதுகாப்பு ஆகும்.

காசோலையை மதித்தல்[தொகு]

காசோலையில் கண்ட பணத்தைக் காசோலையைக் காட்டியதும் கொடுத்துவிடுவதே 'காசோலையை மதித்தல்'(Honour a Cheque) ஆகும். காசோலை எந்த வங்கியின் மீது எழுதப்பட்டுள்ளதோ அந்த வங்கியில் தான் அதைக் காட்டிப் பணம் கேட்பர். தற்போது தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக காசோலையை எந்த வங்கியில் வேண்டுமானாலும் நாம் பணமாக மாற்றலாம். காசோலை எழுதியவர் கணக்கில் போதிய பணம் இலாவிட்டாலும் பிற காரணங்கள் ஏதேனும் இருந்தாலும் (ஒப்பம், கணக்கு எண், பெயர், போன்ற பிழைகள்) காசோலை மதிக்கப்படாது. காசோலையைக் காட்டியதும் பணம் தராமல் திருப்பி விடுவதே, 'காசோலை மதிக்கப்படாதிருத்தல்' எனப்படும்.

காசோலை மேலெழுது[தொகு]

காசோலை ஒருவருடைய பெயர் அல்லது ஒரு நிறுவனத்தின் பெயருக்கு எழுதப்பட்டிருக்கும். அவரே நேரில் சென்று வங்கியில் பணம் பெறலாம். அல்லது காசோலையின் பணத்தை இன்னொருவரிடம் தந்திடுமாறு கூறலாம். அவ்வாறு கூறுவதை, அக்காசோலையின் பின்புறத்தில் எழுவதன் மூலம் கூறுவர். "இக்காசோலையின் பணத்தைப் பெற்றுக் கொண்டேன். இதனை இன்னாரிடம் தரவும்" என்று எழுதுவர். இந்த எழுத்து காசோலையின் மேல் எழுதுவதால் 'காசோலை மேலெழுது' (Endorse a Cheque) என அழைக்கப்படுகிறது. வங்கியில் குறிப்பிட்ட தனது கணக்கில் வரவு வைக்கும் படியும் மேலெழுத்து எழுதலாம்.

உசாத்துணை[தொகு]

கீ. இராமலிங்கம்,'தமிழ் ஆட்சிச்சொற்கள்(அகராதியும்-விளக்கமும்),மீனாட்சி புத்தக நிலையம்,மதுரை. 1962

மேற்கோள்கள்[தொகு]

<references>

 1. Durant, Will (1944). Caesar and Christ : a history of Roman civilization and of Christianity from their beginnings to A.D. 325. The story of civilization. Vol. 3. New York: Simon & Schuster. p. 749.
 2. "Evolution of Payment Systems in India =Reserve Bank of India".
 3. Glubb, John Bagot (1988), A Short History Of The Arab Peoples, Dorset Press, p. 105, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780880292269, இணையக் கணினி நூலக மைய எண் 603697876
 4. Baigent, Michael; Leigh, Richard; Lincoln, Henry (1982). The holy blood and the Holy Grail. London: Corgi. p. 528. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-552-12138-5.
 5. "Guide to Checks and Check Fraud" (PDF). Wachovia Bank. 2003. p. 4.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காசோலை&oldid=2943627" இலிருந்து மீள்விக்கப்பட்டது