உள்ளடக்கத்துக்குச் செல்

வங்கி நிலை வைப்புக் கணக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வங்கி நிலை வைப்புக் கணக்கு வங்கி வைப்பு நிதிக் கணக்குகள் (Term Deposits) பொதுவாக இரண்டு வகைப்படும். நிலை வைப்புக் கணக்குகள் (Fixed Deposits) மற்றும் கூட்டு முதலீட்டுக் (Cumulative / Reinvestment Plan) கணக்குகள். இத்தகைய கணக்குகளில் வங்கி தரும் வட்டி விகிதம் சேமிப்புக் கணக்குகளை விட அதிகமாக இருக்கும். ஒவ்வொரு வங்கியின் நிதி நிர்வாகத்தைப் பொறுத்து வங்கிக்கு வங்கி வட்டி விகிதம் சற்றே வேறுபடலாம்.

நிலை வைப்புக் கணக்குகளில் மாதா மாதம் அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறை வட்டி சேமிப்புதாரருக்கு வழங்கப்படும். முதிர்வு தேதியன்று முதலீடு செய்த பணம் திருப்பித் தரப்படும்.

கூட்டு முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு மூன்று அல்லது ஆறு மாதத்திற்கு ஒரு முறை வட்டி அசல் தொகையுடன் சேர்க்கப்படும். அடுத்தடுத்த காலங்களில் அசலோடு சேர்ந்த வட்டிக்கும் வட்டி கணக்கிடப்பட்டு வைப்புநிதிக் கணக்கில் வரவு வைக்கப்படும். ஆகவே முதிர்வு தொகை சற்றே அதிகமாக இருக்கும்.

வங்கிகள் நிலை வைப்பு நிதிக் கணக்குகளை முன்னரே முடித்துக் கொள்ளவோ அல்லது அதிலிருந்து கடன் பெறவோ வழி வகை செய்துள்ளன.