உள்ளடக்கத்துக்குச் செல்

கம்பளி யானை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கம்பளி யானை
Woolly mammoth
புதைப்படிவ காலம்:Pleistocene - Recent, 0.15–0 Ma
புரூணோ அருங்காட்சியகத்தில் உள்ள பளிங்கு யானையின் எலும்புக்கூடு.
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Proboscidea
குடும்பம்:
யானைப் பேரினம்
பேரினம்:
இனம்:
M. primigenius
இருசொற் பெயரீடு
Mammuthus primigenius
(புளூமென்பாக், 1799)

கம்பளி யானை (woolly mammoth, Mammuthus primigenius அல்லது tundra mammoth), என்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியின் வடஅரைக் கோளத்தில் வாழ்ந்து வந்துள்ள பெரும் விலங்கு இனம். இவை இன்றைய யானைகளின் மூதாதையினராகக் கருதப்படுகின்றன. இவற்றின் உடல் முழுவதும் அடர்த்தியான உரோமங்களால் போர்த்தப்பட்டிருந்த காரணத்தால் இவை கம்பளி யானைகள் என அழைக்கப்பட்டன. ஆதிகால மனிதர்களால் வரையப்பட்ட குகை ஓவியங்களில் இவ்விலங்குகளின் உருவங்கள் வரையப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வினம் பூமியிலிருந்து முற்றாக அழிந்து மறைந்துவிட்டதாக அறிவியலாளர்கள் கருதுகின்றனர்[1].

வட அமெரிக்காவிலும் வடக்கு யூரேசியாப் பகுதியில் சைபீரியாவிலும் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகள், மற்றும் பனியில் உறைந்த எலும்புக்கூடுகள் ஆகியவற்றில் இருந்து இந்த விலங்குகள் பற்றி அறியவந்துள்ளது. குறைந்தது 150,000 ஆண்டு வயதான இவ்விலங்கு பற்றிய முதலாவது தரவு யூரேசியாவின் உறைபனிப் பரவலின் போது பெறப்பட்டது[2].

அழிவின் காரணங்கள்

[தொகு]

பெரும்பாலான கம்பளி யானைகள் புதிய பிளியசுடோசீன் காலத்திலும் பழைய கோலோசீன் காலத்திலும் அழிவைத் தழுவின. இந்த கம்பளி யானை மாமூத் என்னும் இனத்தைச் சேர்ந்தவை. மொத்த மாமூத் இனங்களின் வசிப்பிடம் 42,000 அண்டுகளுக்கு முன் 77 இலட்சம் சதுர கிலோமீட்டர்களில் இருந்து 8 இலட்சம் சதுர கிலோமீட்டர்களாக குறைந்தது. அதிலும் குறிப்பாக இந்த கம்பளி யானைகள் 12.5 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே பெருமளவு அழிவைத் தழுவியது. இதற்கு முக்கிய காரணம் கடைப் பனியூழிக் காலத்தில் நடந்த தட்பவெப்ப மாற்றங்களும் இதன் இனம் அக்கால மனித இனங்களால் வேட்டையாடப் பட்டதுமே ஆகும்.

சிதைவடையாத உடல்

[தொகு]
கம்பளி யானை -சித்திரம்

சைபீரியாவின் துந்திரா பனிக்காட்டில் புதையுண்டிருந்த கம்பளி யானையொன்று 1999 ஒக்டோபர் மாதத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்டது. சுமார் 20,000 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்திருக்கலாம் எனக் கருதப்படும் இந்த ஆண் யானையின் சிதைவடையாத உடல் இரசியாவின் சைபீரியப் பகுதியில் உள்ள தைமூர் தீபகற்பத்திற்கு அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்பகுதியில் மான்களை மேய்க்கச் சென்ற டொல்கன் இனத்தைச் சேர்ந்த ஜார்க்கொவ் என்ற பெயருடைய குடும்பத்தினர் 1997ல் இப்புதைகுழியை இனங்கண்டனர். இதனால் இந்தக் கம்பளி யானைக்கும் ஜார்க்கொவ் என்ற பெயர் இடப்பட்டுள்ளது.

பனிப் பாறையினுள் புதைந்திருந்த முழுமையான உடல் பனிக்கட்டிப் படையோடு சேர்த்துத் தோண்டியெடுக்கப்பட்டு உலங்குவானூர்தி மூலம் அண்மையிலுள்ள கட்டாங்கா என்ற நகருக்குத் தூக்கிச் செல்லப்பட்டது. சூழப்படிந்திருந்த பனிக்கட்டிப் படலத்தோடு சேர்ந்து அது 23 தொன் நிறையுடையதாக இருந்தது. முற்றாக உறைந்து போயுள்ள இந்த உடல் அதற்கென அமைக்கப்பட்ட குளிர் அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

ஆய்வு

[தொகு]
கம்பளி யானையின் தந்தம்

இவ்விலங்கின் தந்தங்களையும், பற்களையும் ஆராய்ந்த அறிவியலாளர்கள் இது 11 அடி உயரமானது எனவும் தனது 47வது வயதில் இறந்துள்ளது எனவும் தீர்மானித்துள்ளனர். பனிப்பாறைக்கு வெளியே திறந்திருந்ததால் அதன் தலைப் பகுதி ஓரளவு சிதைந்து போயுள்ளது. ஏனைய பகுதிகள் எவ்வித குறைபாடும் இன்றி முழுமையாக இருந்தன. இதன் தந்தங்களை ஆராய்ந்த டச்சு அறிவியலாளரான டிக் மோல் என்பவர் இவ்விலங்கு நேற்று இறந்ததுபோல் வாட்டமுறாது இருக்கின்றது என கூறியுள்ளார். உரோமம் அடர்ந்த அதன் உடலைத் தடவும்போது உயிருள்ள மிருகமொன்றின் உடலை வருடிவிடுவது போன்ற உணர்வு ஏற்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இக்கம்பளி யானை இரசியாவின் கட்டாங்கா ஆய்வு நிலையத்துக்கு அண்மையில் நிறுவப்படவுள்ள குளிர் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இது போன்ற மேலும் பல முற்கால விலங்குகளின் உடல்கள் பனிக்காட்டினில் புதைந்திருப்பதை உள்வாசிகள் கண்டுள்ளனர். இத்தகைய விலங்குகளையும் அகழ்ந்தெடுத்து அங்கு காட்சிக்கு வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

படியெடுப்பு முறையில்

[தொகு]
கம்பளி யானை - களம்

ஜார்க்கொவ் கம்பளி யானையின் உடற்கலங்களிலிருந்து டி.என்.ஏ மூலக்கூறுகளைப் பெற்றுப் படியெடுப்பு (குளோனிங்) முறையில் இவ்விலங்கினத்தை மீண்டும் உற்பத்தி செய்யலாம் என அறிவியலாளர்கள் கருதினர். எனினும், இது இலகுவான காரியமாக இல்லை. இந்த ஆய்வை திறம்படச் செய்ய 15-20 வருடங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. அப்படியே குளோனிங் முறையில் கம்பளி யானைகளை உருவாக்கினாலும் அவை பிழைத்து வாழ்வதற்குத் தேவையான இயற்கைச் சூழல் பூமியில் இப்போது இல்லை என டிக் மோல் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் 2013ஆம் ஆண்டு சூன் முதலாம் தேதி கென்ரிக் பொய்நர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் வருங்காலத்தில் ஜார்க்கொவ் கம்பளி யானையின் உடற்கலங்களிலிருந்து டி.என்.ஏ மூலக்கூறுகளைப் பெற்று அதன் மூலம் உருவாக்கப்படும் கம்பளி யானை வெளித் தோற்றத்தில் கம்பளியானை போல் தோற்றம் அளித்தாலும் அவை யானைக்கு மாறுவேடம் போட்ட மாதிரியே எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஜார்க்கொவின் உடலில் உறைந்த நிலையிலுள்ள அதன் விந்துக் கலங்களைப் பிரித்தெடுத்து இப்போதுள்ள பெண் யானையொன்றுக்குச் செலுத்துவதன் மூலம் கம்பளி யானையை ஒத்த புதிய விலங்கினமொன்றை உருவாக்க முடியுமா என்றும் ஆராய்ந்து வருகின்றனர். இதுவரை காலமும் அகழ்வுகளின் போது கிடைத்த எலும்புக் கூடகளை வைத்துக் கொண்டே கம்பளி யானையின் உருவமைப்பு எப்படியிருந்திருக்கும் என்பதை ஊகித்தனர். இந்த வகையில் ஜார்க்கொவின் கண்டுபிடிப்பு அறிவியலாளர்களுக்குக் கிடைத்த பெரும் பேறொன்றாகவே கருதப்படுகின்றது.

ஊடகங்களில்

[தொகு]

2008ஆம் ஆண்டு வெளியான 10000 பி. சி. (10000 BC) என்னும் ஆங்கிலத் திரைப்படத்தில் இந்த கம்பளி யானைகள் எவ்வாறு மானிடரால் வேட்டையாடப்பட்டன எனக் சித்தரிக்கப் பட்டிருந்தது. இதில் உடல் அதிகம் பருத்திருக்கும் யானை அனைத்து யானைகளுக்கும் தலைவன் யானை என காட்டப்பட்டிருந்தது. இந்த யானைகளை வைத்து பிரமிடுகளைக் கட்டவும், இதன் உரோமங்களை ஆடையாகவும், இதன் மாமிசம் மானிடருக்கு உணவாய் இருந்தது போலவும் சித்தரிக்கப்பட்டிருந்தது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Nowak, Ronald M. (1999). Walker's Mammals of the World. Baltimore: Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0801857899. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  2. "Yukon Beringia Interpretive Centre - Woolly Mammoth". www.beringia.com. Archived from the original on 2009-04-03. பார்க்கப்பட்ட நாள் 2009-03-26.

வெளி இணைப்புகள்

[தொகு]

அரும்பு - பொது அறிவுச் சஞ்சிகை

"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்பளி_யானை&oldid=3582359" இலிருந்து மீள்விக்கப்பட்டது