உள்ளடக்கத்துக்குச் செல்

இரட்டைத்திமில் ஒட்டகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரட்டைத்திமில் ஒட்டகம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
பாக்ட்ரீய ஒட்டகம்
C. bactrianus
இருசொற் பெயரீடு
காமெலஸ் ‘பாக்ட்ரீயானஸ்
Camelus bactrianus

லின்னேயஸ் 1758
L, 1758
வளர்ப்பு இரட்டைத்திமில் ஒட்டகம் வாழிடப் பரப்பு

இரட்டைத்திமில் ஒட்டகம் (Camelus bactrianus) என்பது இரட்டைத் திமில் கொண்ட, பாலூட்டி விலங்கினத்தைச் சேர்ந்த ஒட்டகம் ஆகும். இவ் ஒட்டகங்கள் ஈடான சுமை தாங்கும் இரட்டைக் குளம்புகளைக் கொண்டுள்ளன. இவை சீனாவின் வடக்கேயும், மங்கோலியாவிலும் உள்ள கோபி பாலைநிலப்பகுதியில் வாழ்கின்றன. ஆப்கானிஸ்தானுக்கு வடக்கே, கிரேக்க மொழியில் பாக்ட்ரியா என்று அழைக்கப்பட்ட பகுதியில் கி.மு 2500 ஆண்டளவில் இந்த இரட்டைத் திமில் ஒட்டகம் வளர்ப்பு விலங்காக மாற்றப்பட்டது (கொல்லைப்படுத்தப்பட்டது) என்று நினைப்பதால், இதனை பாக்ட்ரிய ஒட்டகம் என்றும் அழைப்பர். பெரும்பாலும் காணப்படும் ஒற்றைத்திமில் ஒட்டகம் கி.மு 4000 ஆண்டளவில் வளர்ப்பு விலங்காக ஆனது என்று கருதப்படுகின்றது.

இன்று ஏறத்தாழ 1.4 மில்லியன் இரட்டைத்திமில் ஒட்டகங்கள் உலகில் வாழ்கின்றன. இவை வளர்ப்பு வகை ஒட்டகங்கள். ஆனால் 2002 அக்டோபர் மாதத்தில், வட மேற்கு சீன-மங்கோலியாப் பகுதியில் வளர்ப்புக்கு உட்படுத்தப்படாத இயற்கைசூழலில் வாழும் இரட்டைத்திமில் ஒட்டகங்களைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த இயற்கைவாழ் இரட்டைத்திமில் ஒட்டகங்கள் இன்று உலகில் ஏறத்தாழ 950 இருக்கலாம் என்றும், இந்த இயற்கைவாழ் வகை முற்றாக அழிவுறும் நிலையில் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு அதற்கான பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]

இந்த இரட்டைத்திமில் ஒட்டகங்கள் ஏறத்தாழ 3 மீட்டர் நீளமும் 2 மீட்டர் உயரமும் கொண்டவை. திமில்கள் மட்டுமே 20 செ.மீ உயரம் உடையவை. ஆண் ஒட்டகங்கள் 400 கிலோ கிராம் முதல் 600 கிலோகிராம் வரை எடையுள்ளதாக இருக்கும். பெண் ஒட்டகங்கள் ஏறத்தாழ 350 கிலோ கிராம் முதல் 500 கிலோ கிராம் வரை எடையுள்ளதாக இருக்கும். இரட்டைத்திமில் ஒட்டகங்களுக்கு அதிகமாக முடி (உடல்மயிர்) இருக்கும். இவற்றின் மூக்குத் துளைகளை இறுக்கி மூடிக்கொள்ளும் வசதி கொண்டவை. மணல் வீச்சில் இருந்து காத்துக்கொள்ள தடிப்பான கண்ணிமைகளும் உள்ளன.

இந்த ஒட்டகங்கள் நடக்கும் பொழுது இடப்புறம் உள்ள முன்னங்காலையும் பின்னங்காலையும் ஒரு சேர முன்னெடுத்து வைத்துப் பின்னர் வலப்புறம் உள்ள முன்னங்காலையும் பின்னங்காலையும் ஒரு சேர முன்னெடுத்து வைத்து நடக்கின்றன. இப்படி இடக்கால்களும் பின்னர் வலக்கால்களும் நகர்த்தி நடத்தலுக்கு குதிரை நடைக் கலைச்சொல்போலவே பண் அல்லது போக்கு என்று பெயர். இரட்டைத்திமில் ஒட்டகம் ஒன்று ஏறத்தாழ 200 கிலோ கிராம் எடையைச் சுமந்துகொண்டு ஒரு நாளைக்கு 50 கிலோ மீட்டர் தொலைவு நடக்க வல்லது [2]. சிறுதொலைவு ஓட்டத்தில் மணிக்கு 65 கிலோ மீட்டர் விரைவில் ஓட வல்லது.

இனப்பெருக்கம்

[தொகு]

இவ்விலங்கின் இனப்பெருக்கம் பின்பனிக் காலத்தில் நடக்கிறது. ஆண் ஒட்டகங்கள் தம்முடைய ஐந்து முதல் ஆறு வயதிற்குள் இனப்பெருக்கத்திற்கான வளர்ச்சியை அடைகின்றன. பெண் ஒட்டகங்கள் மூன்று முதல் நான்கு வயதிற்குள் இனப்பெருக்கத்திற்கான வளர்ச்சியை அடைகின்றன. இனப்பெருக்கப் பருவத்தின்போது ஒரு குழுவில் உள்ள ஆண்களில் மிகவும் வலிமை வாய்ந்த ஒட்டகம் மற்ற ஆண் ஒட்டகங்களைக் கடித்தோ அவற்றின் மேல் அமர்ந்து காட்டியோ தன் வலிமையைப் பறைசாற்றும். இப்படி பெண் ஒட்டகத்தைக் கவர்ந்து பின் உறவு கொள்ளும். தன் வாழ்நாளில் ஒரு ஆண் ஒட்டகம் பல பெண் ஒட்டகங்களுடன் உறவு கொள்ளும். இவ்விலங்கின் சூல்கொள்ளும் காலம் பதிமூன்று மாதங்களாகும். ஒட்டகக் கன்று பிறந்த சில மணி நேரத்தில் நன்றாக நடக்கத் தொடங்கிவிடும். ஒட்டகக் கன்று மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை தன் தாயுடன் வாழும்.

சூழியல்

[தொகு]

இரட்டைத்திமில் ஒட்டகம் பகற்பொழுதில் உற்சாகத்துடன் இரை தேடும்.[3] இவை தனியாகவோ 30 விலங்குகள் வரை கொண்ட குழுக்களாகவோ காணப்படும்.[4] இவ்விலங்கு ஒரு தாவரவுண்ணி ஆகும்.[3] எவ்வகையான கடினமான முட்களையும் உண்ணக்கூடிய தன்மையை இவ்விலங்கின் வாய்ப் பகுதிகள் பெற்றுள்ளன. இவை உண்ணும்பொழுது உணவைப் பகுதியாக மென்றுவிட்டு உணவுப் பையில் சேகரித்துக்கொண்டு பின்பு ஓய்வு நேரத்தில் அசை போடும்.

இரட்டைத்திமில் ஒட்டகத்தின் சிற்றினங்கள்

[தொகு]

இரட்டைத்திமில் ஒட்டகங்களில் தனித்த ஒரு சில உள்ளினங்கள் (சிற்றினிங்கள்) இருப்பதாக நம்ப இடம் உண்டு. இந்த ஒட்டகங்களில் மூன்று வெவ்வேறு இடங்களில் வாழும் வகைகளாகக் கொள்ள இடம் உள்ளது. இயற்கைவாழ் இரட்டைத்திமில் ஒட்டகங்கள் கோபி பாலை நிலத்தில் காழ்சுன் கோபி (Gashun Gobi) என்னும் பகுதியில் மட்டுமே வாழ்கின்றன. இவை வளர்ப்பு இரட்டைத் திமில் ஒட்டகங்களில் இருந்து பழக்க வழக்கங்களிலும், மரபணு தொடரமைப்பு முறைகளிலும் மாறுபட்டது. ஆனால் இம்மாறுபாடுகளின் சிறப்புத் தன்மையை இன்னும் நிறுவவில்லை. மரபணுக் குறிப்புத்தொடரில், 3% வேறுபாடு உள்ளதாக கூறப்படுகின்றது. மிகக் குறைந்த எண்ணிக்கையிலான இயற்கைவாழ் விலங்குகளின் தரவில் இருந்து பெற்றதால், இவை உறுதியான முடிவுகள் அல்ல.

கனடிய ஆய்வாளர் வில்லியம் சோம்மர்சு (William Sommers) என்பவர், இயற்கைவாழ் ஒட்டகங்கள் உப்புநீரை குடிக்கக்கூடியவை என்று கண்டு கூறியுள்ளார். வளர்ப்பு ஒட்டகங்கள் உப்புநீரைக் குடிக்க மாட்டா என்பது குறிப்பிடத்தக்கது. உப்புநீரைக் குடித்தாலும், அது இவ்விலங்குகளுக்குப் பயன்படுகின்றதா என்பது நிறுவப்படவில்லை.

காப்புநிலை

[தொகு]

படிவளர்ச்சியில் சிறப்பான மாறுபாடு கொண்ட, அதே நேரத்தில் உலகளாவிய வகையில் அழிவுறும் நிலையில் உள்ள விலங்குகள் என்னும் பட்டியலில் (“EDGE”), 8 ஆவதாக உள்ளது இந்த இரட்டைத்திமில் ஒட்டகம்[5]. குறிப்பாக இயற்கைவாழ் இரட்டைத்திமில் ஒட்டகம் அழிவுறும் தருவாயில் உள்ளது. .

படவரிசை

[தொகு]

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

[தொகு]
  1. Hare (2007). Camelus ferus. 2007 சிவப்புப் பட்டியல். IUCN 2007. Retrieved on 31 January 2008. இந்த தரவுத் தளத்தில் ஏன் அழிவுநிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் குறிக்கப்பெற்றுள்ளது.
  2. Camel. (2008). In Encyclopædia Britannica. Retrieved May 10, 2008, from Encyclopædia Britannica Online: http://www.search.eb.com.proxy.lib.uwaterloo.ca/eb/article-233465
  3. 3.0 3.1 Crump, D.J. ed. 1981. Book of the Mammals National Geographic Society, Washington, D.C.
  4. Boitani, L. and S. Bartoli. 1982. Simon and Schuster's Guide to Mammals. Simon and Schuster, Inc., New York.
  5. "Protection for 'weirdest' species". பிபிசி. 2007-01-16. http://news.bbc.co.uk/2/hi/science/nature/6263331.stm. பார்த்த நாள்: 2007-05-22. 

உசாத்துணைகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Camelus bactrianus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரட்டைத்திமில்_ஒட்டகம்&oldid=3603845" இலிருந்து மீள்விக்கப்பட்டது