ஆகுளி (இசைக்கருவி)
ஆகுளி (aguli) என்பது ஒருவகைச் சிறுபறையாகும். இந்தத் தாளவிசைக்கருவி முழவுக்கு இணையாகவும் துணையாகவும் அமையும்.[1] துடி - கொம்பு - ஆகுளி - இவை மூன்றும் ஐவகை நிலங்களில் குறிஞ்சித்திணைக்குரிய இசைக்கருவியாகக் குறிப்பிடப்படுகின்றன.[2]
இலக்கியங்களில் ஆகுளி
[தொகு]பெரிய புராணம்
[தொகு]“ | வெல்படைத் தறுகண் வெஞ்சொல் வேட்டுவர் கூட்டந் தோறும்
கொல்லெறி குத்தென் றார்த்துக் குழுமிய வோசையன்றிச் சில்லரித் துடியுங் கொம்புஞ் சிறுகணா குளியுங்கூடிக் கல்லெனு மொலியின் மேலுங் கறங்கிசை யருவியெங்கும்.[3] |
” |
வெல்லும் படையும், தறுகண்மையும், கூடிய சொல்லும் உடைய வேட்டுவர் கூட்டங்களில் எங்கும் கொல், எறி, குத்து, என்றும் ஆரவாரித்துக் கூடுதலால் எழும் ஓசைகளேயல்லாமல் சிலவாய பரல்களையுடைய உடுக்கையும், ஊதுகொம்பும் சிறிய முகமுடைய ஆகுளியும் (சிறுபறையும்) சேர்ந்து பெருகுகின்ற ஒலியினும் மிக்குச் சத்தித்து ஓடும் அருவிகள் அங்கே எங்கும் உள்ளன. என்பது இதன் பொருளாகும். ஆகுளி, சிறுகணாகுளி எனக் குறிப்பிடப்படுகிறது. எனவே துடியினை விட ஆகுளி சிறிய முகமுள்ளன என அறியலாம். இக்கருவிகள் குறிஞ்சி நிலக்குறவர்களின் வேட்டையின்போதும் பாட்டுக்களிலும், குறிஞ்சி நிலத்திருவிழாக்களிலும் பயன்பட்டன.[4]
“ | கோடு முன்பொ லிக்க வுங்கு றுங்க ணாகு ளிக்குலம்
மாடு சென்றி சைப்ப வும்ம ருங்கு பம்பை கொட்டவுஞ் சேடு கொண்ட கைவி ளிச்சி றந்த வோசை செல்லவுங் காடு கொண்டெ ழுந்த வேடு கைவ ளைந்து சென்றதே.[5] |
” |
வேடர்கள் வேட்டையாடும் போது எல்லாப் பக்கங்களிலும், சுற்றிலும் முற்றுகையிட்டாற் போல் வளைந்து சூழ்ந்து. கொம்பு, ஆகுளி, பம்பை, கைவிளி என்றிவற்றின் ஓசைகளுடன் சூழ்ந்து சென்றனர் பெரிய ஓசைகளுடன் சூழ்தலால் முழை புதர் முதலிய மறைவிடங்களிற் பதுங்கியிருக்கும் விலங்குகள் பயந்துவெளிப்பட்டு ஓடும்போது அவற்றை வேட்டையாடுவர்; ஓடுவதனால் அடிச்சுவடுகண்டு அதற்குத் தக்கவாறு செய்வர். இது வேட்டையில் முற்ம்ற்செய்தொழில்களில் ஒன்று. இதனை விலங்கு எழுப்புதல் என்பர்.[6]
புறநானூறு
[தொகு]“ | 1."நல்யாழ், ஆகுளி, பதலையடு சுருக்கிச்,
செல்லா மோதில் சில்வளை விறலி" [7] |
” |
“ | 2."பாடுவல், விறலி! ஓர் வண்ணம்; நீரும்
மண்முழா அமைமின் ; பண்யாழ் நிறுமின் ; கண்விடு தூம்பின் களிற்று உயிர் தொடுமின்: எல்லரி தொடுமின் ; ஆகுளி தொடுமின்; பதலை ஒருகண் பையென இயக்குமின்; மதலை மாக்கோல் கைவலம் தமின்` என்று,"[8] |
” |
“ | 3."அன்பின்று தலைஇ,
........... ........... விசியுறு தடாரி அகன்கண் அதிர, ஆகுளி தொடாலின், ..... பெரும!" [9] |
” |
மலைபடுகடாம்
[தொகு]மலைபடுகடாம் எனும் நூலில் பழந்தமிழரின் பத்து இசைக்கருவிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவை, முழவு, ஆகுளி, பாண்டில், கொட்டு, தூம்பு, குழல், அரி, தட்டை, எல்லரி, பதலை(தவில்) ஆகியவையாகும்.
“ | திருமழை தலைஇய இருள் நிற விசும்பின்
விண்ணதிர் இமிழிசை கடுப்பப் பண்ணமைத்துத் திண்வார் விசித்த முழவோடு ஆகுளி நுண்ணுருக் குற்ற விளங்கடர்ப் பாண்டில் மின்னிரும் பீலி அணித்தழைக் கோட்டொடு கண்ணிடை விடுத்த களிற்று உயிர்த் தூம்பின் இளிப்பயிர் இமிரும் குறும்பரந் தூம்பொடு விளிப்பது கவரும் தீங்குழல் துதைஇ நடுவு நின்று இசைக்கும் அரிக்குரல் தட்டை கடிகவர் பொலிக்கும் வல்வாய் எல்லரி நொடிதரு பாணிய பதலையும் பிறவும்[10] |
” |
இவற்றையும் காணவும்
[தொகு]மேற்கோள்
[தொகு]- ↑ தமிழர் இசைக்கருவிகள்
- ↑ தமிழ் இணைய பல்கலைக் கழகம்
- ↑ சேக்கிழார் திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்),paa. 654
- ↑ சேக்கிழார் திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்),பாடல்கள். 721,726,687.
- ↑ சேக்கிழார் திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்),பாடல். 721.
- ↑ சேக்கிழார் திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்),பாடல்721,
- ↑ பாடியவர் – நெடும்பல்லியத்தனார், பாடப்பட்டோன் - பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, புறநானூறு பா. 64,
- ↑ வண்பரணர், புறநானூறு 152, வரிகள் (13 – 21)
- ↑ கல்லாடனார், புறநானூறு 371, வரிகள் (9 – 22)
- ↑ பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார், மலைபடுகடாம்,(1–11)
வெளியிணைப்புகள்
[தொகு]தொகு | தமிழிசைக் கருவிகள் |
---|---|
தோல் கருவிகள் | ஆகுளி | உறுமி | தவில் | பறை | மிருதங்கம் | மத்தளம் | பெரும்பறை | பஞ்சறை மேளம் | முரசு | தமுக்கு | பேரிகை | பம்பை | மண்மேளம் | கஞ்சிரா | ஐம்முக முழவம் | கொடுகொட்டி (அல்லது) கிடிகிட்டி
|
நரம்புக் கருவிகள் | வீணை | யாழ் | தம்புரா | கோட்டு வாத்தியம் | கின்னாரம்
|
காற்றிசைக் கருவிகள் | கொம்பு | தாரை | நாதசுவரம் | புல்லாங்குழல் | சங்கு | மகுடி | முகவீணை| எக்காளம் |கொக்கரை|மோர்சிங்
|
கஞ்சக் கருவிகள் | தாளம் | சேகண்டி |
|
பிற | கொன்னக்கோல் | கடம் |
|