மம்லுக் வம்சம்
மம்லுக் வம்சம் அல்லது குலாம் வம்சம் (Urdu: غلام خاندان, Hindi: ग़ुलाम ख़ानदान) என்பது, நடு ஆசியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட துருக்கத் தளபதியான குதுப்புத்தீன் ஐபாக் என்பவரால் இந்தியாவில் நிறுவப்பட்டது. இவ்வம்சம் 1206 தொடக்கம் 1290 வரை தில்லி சுல்தானகத்தை ஆண்ட ஒன்றுக்கொன்று தொடர்பற்ற ஐந்து வம்சங்களுள் முதலாவது ஆகும்.[1][2] இவ்வம்சத்தைச் சேர்ந்த ஆட்சியாளர்கள் பலர் முன்னர் கோரிய மன்னனின் அடிமைகளாக இருந்தமையால் இவ்வம்சம் தில்லி அடிமை வம்சம் எனவும் அழைக்கப்படுவது உண்டு. கோரிய அரசனால் அவரது இந்தியப் பகுதிகளுக்கு நிர்வாகியாக்கப்பட்ட ஐபாக், 1192 முதல் 1206 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், இந்தியாவின் கங்கைச் சமவெளி வரை படை நடத்திப் பல புதிய பகுதிகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.[2] கோரிய மன்னன் கொலை செய்யப்பட்டபோது, தில்லியில் ஆளுகைக்கு உட்பட்டிருந்த பகுதிகளுக்குத் தானே ஆட்சியாளரானார்.[3] எனினும் தில்லியின் சுல்தானாக இவரது ஆட்சிக்காலம் குறுகியதாவே இருந்தது. 1210 ஆம் ஆண்டில் ஐபாக் காலமானார். இவரைத்தொடர்ந்து மகனான அராம் சா அரியணையில் அமர்ந்தார். எனினும் 1211 ஆம் ஆண்டில் இல்த்துத்மிசு என்பவர் புதிய சுல்தானைக் கொன்று தானே ஆட்சியைக் கைப்பற்றினார்.

இல்த்துத்மிசின் ஆட்சியில் 1228க்கும் 29க்கும் இடையில், தில்லி சுல்தானகம், அப்பாசியக் கலீபகங்களோடு நல்லுறவு கொண்டிருந்தது. இதனால் கெங்கிசுக் கானின் படையெடுப்புக்கள் இந்தியாவைப் பாதிக்காமல் பார்த்துக்கொள்ள முடிந்தது[2] 1236 ஆம் ஆண்டில் இல்த்துத்மிசு இறந்ததும் பலமற்ற ஆட்சியாளர்கள் சிலகாலம் தொடராக ஆட்சியில் இருந்தனர். அக் காலத்தில் பல பிரபுக்களும் சுல்தானகத்தின் சில பகுதிகளில் தன்னாட்சியை நடத்தி வந்தனர். ஆட்சி, ருக்கினுத்தீன் ஃபைரூசு என்பவரிடம் இருந்து, ராசியா சுல்தானாவுக்கும், பின்னர் கியாசுத்தீன் பல்பான் என்பவருக்கும் கைமாறியது. பல்பான் வெற்றிகரமாக உள்நாட்டிலும், வெளியிலும் இருந்து சுல்தானகத்துக்கு ஏற்பட்டிருந்த பயமுறுத்தல்களை வெற்றிகரமாகக் களைந்தார்[2][3] இந்த வம்சத்தின் கடைசி சுல்தான் முயிசுத்தீன் கைக்காபாத் என்பவராவார். பல்பானின் பேரனான இவர் காலத்தில், சலாலுத்தீன் ஃபைரூசு கில்சி என்பவர் தில்லி சுல்தானகத்தைக் கைப்பற்றி மம்லுக் வம்சத்தினரை ஆட்சியில் இருந்து அகற்றிப் புதிய கில்சி வம்சத்தை நிறுவினார்.[4]
கட்டிடக்கலை[தொகு]
இவ் வம்சத்தினரின் கட்டிடக்கலைப் பங்களிப்பாகச் சில எடுத்துக்காட்டுகள் உள்ளன. குதுப்புத்தீன் ஐபாக்கினால் கட்டப்பட்ட மெகரௌலியில் உள்ள குதுப் மினார், வசந்த்கஞ்ச் அருகில் உள்ள சுல்தான்காரி, இல்த்துத்மிசின் மூத்த மகனன நசிருத்தீன் மகுமூத்துக்காகக் கிபி 1231 ஆம் ஆண்டில் கட்டப்பட இந்தியாவின் முதலாவது இசுலாமியச் சமாதிக் கட்டிடம், மெகரௌலியில் தொல்லியல் பூங்காவில் அமைந்துள்ள பல்பானின் சமாதி என்பன இவற்றுள் அடங்கும்.
ஆட்சியாளர் பட்டியல்[தொகு]
- குதுப்புத்தீன் ஐபாக் (1206–1210)
- அராம் சா (1210–1211)
- சம்சுத்தீன் இல்த்துத்மிசு (1211–1236), குதுப்புத்தீன் ஐபாக்கின் மகளின் கணவர்
- ருக்கினுத்தீன் ஃபைரூசு (1236), இல்த்துத்மிசின் மகன்
- ராசியாத்துத்தீன் சுல்தானா (1236–1240), இல்த்துத்மிசின் மகள்
- முயிசுத்தீன் பகராம் (1240–1242), இல்த்துத்மிசின் மகன்
- அலாவுதீன் மசூத் (1242–1246), ருக்னுத்தீனின் மகன்
- நசிருத்தீன் மகுமூத் (1246–1266), இல்த்துத்மிசின் மகன்
- கியாசுத்தீன் பல்பான் (1266–1286), பழைய அடிமை. இல்த்துத்மிசின் மகளின் கணவர்
- முயிசுத்தீன் கைக்காபாத் (1286–1290), பல்பானினதும், நசிருத்தீனினதும் பேரன்
குறிப்புகள்[தொகு]
உசாத்துணைகள்[தொகு]
- Anzalone, Christopher (2008). "Delhi Sultanate". Encyclopedia of World History 2. Ed. Ackermann, M. E. etc. Facts on File. 100-101. ISBN 9780816063864.
- Walsh, J. E. (2006). A Brief History of India. Facts on File. ISBN 0816056587.
- Dynastic Chart The Imperial Gazetteer of India, v. 2, p. 368.
மேலும் அறிய[தொகு]
- Srivastava, A. L. (1967). The History of India, 1000-1707 A.D.,. Shiva Lal Agarwala. http://lccn.loc.gov/sa%2065000828.
![]() |
விக்கிமீடியா பொதுவகத்தில் Slave Dynasty என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |