உள்ளடக்கத்துக்குச் செல்

ஈகோஸ்ப்பொட்டாமி சமர்

ஆள்கூறுகள்: 40°15′N 26°33′E / 40.250°N 26.550°E / 40.250; 26.550
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈகோஸ்ப்பொட்டாமி சமர்
பெலோபொன்னேசியன். போர் பகுதி
நாள் கிமு 405
இடம் ஈகோஸ்ப்பொட்டாமி, தார்தனெல்சு நீரிணை
(தற்கால கனக்கலே மாகாணம், துருக்கி)

40°15′N 26°33′E / 40.250°N 26.550°E / 40.250; 26.550
தீர்க்கமான எசுபார்த்தாவின் வெற்றி
● ஏதென்சு முற்றுகையிடப்பட்டு சரணடைகிறது
● பெலோபொன்னேசியன் போர் முடிவுக்கு வந்தது
பிரிவினர்
தளபதிகள், தலைவர்கள்
லைசாந்தர்
அரக்கஸ்
சமோசின் கிளிமிடிஸ்[1]
கானான்
பிலோகிள்ஸ்
அடிமண்டஸ்
பலம்
170 கப்பல்கள்[2] 180 கப்பல்கள்[3]

36,000 படையினர்[4]

இழப்புகள்
குறைந்தபட்சம் 160 கப்பல்கள்,
3,000 கடற்படையினர் கொல்லப்பட்டனர்[5]

ஈகோஸ்ப்போட்டாமி சமர் (Battle of Aegospotami) என்பது பண்டைய கிரேக்கத்தில் கிமு 405 இல் நடந்த ஒரு கடற்படை சமராகும். மேலும் இது பெலோபொன்னேசியப் போரின் கடைசி பெரிய போராகும். இந்தப் போரில், லைசாந்தரின் தலைமையிலான எசுபார்த்தன் கடற்படையானது ஏதெனியன் கடற்படையை அழித்தது. ஏதென்சு தானியங்களை இறக்குமதி செய்யவோ அல்லது கடலில் தடையின்றி தன் பேரரசின் பகுதிகளுடன் தொடர்பு கொள்ளவோ முடியாத நிலை ஏற்பட்டதால் இந்தப் போருடன் பெலோபொனிசியப் போர் முடிவுக்கு வந்தது.

முன்னுரை

[தொகு]

லைசாந்தரின் போர்த்தொடர்கள்

[தொகு]

கிமு 405 இல், அர்ஜினூசி சமரில் எசுபார்த்தா கடுமையான தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, முதல் எசுபார்த்தன் கடற்படை வெற்றிகளுக்குப் பொறுப்பு வகித்த தளபதியான லைசாந்தர் வசம் பொறுப்பு ஓப்படைக்கப்பட்டது.[6] எசுபார்த்தன் சட்டப்படி ஒரு முறை கடற்படைக்கு தலைமை வகித்தவர் மறுமுறை தலைமை வகிக்கக்கூடாது என்பதால் கடற்படைக்கு பெயருக்கு ஒருவரை தளபதியாக நியமித்து லைசாந்தர் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டு அவரிடமே பொறுப்புகள் ஒப்படைக்கபட்டன.[7]

ஃபிரான்செஸ்கோ அன்டோனியோ க்ரூ (1618–1673) வரைந்த இளைய சைரஸ் மற்றும் லைசாந்தர் இடையே சந்திப்பு.

தளபதியாக லைசாந்தர் நியமிக்கப்பட்டதில் உள்ள நன்மைகளில் ஒன்று பாரசீக இளவரசர் சைரசுடன் அவர் கொண்டிருந்த நெருங்கிய நட்பு ஆகும். இந்த உறவைப் பயன்படுத்தி, எசுபார்த்தன் கடற்படையை மீண்டும் கட்டியெழுப்பும் பணியைத் தொடங்க விரைந்து பணத்தை திரட்டினார்.[8] சைரசை அவரது தந்தை டேரியஸ் சூசாவுக்கு திரும்ப அழைத்தபோது, அவர் சின்ன ஆசியாவின் அனைத்து நகரங்களிலிருந்து வரும் வருவாயை லைசாந்தருக்கு வழங்கினார்.[9] இந்த பாரசீக செல்வந்த மாகாணங்களின் வருவாய் வளங்களையும் லைசாந்தர் தன் வசம் கொண்டிருந்ததால், அவர் தனது கடற்படையை விரைவாக மறுசீரமைக்க முடிந்தது.

பின்னர் அவர் ஏஜியன் கடல்பகுதி முழுவதும் தொடர்ச்சியான போர்த் தொடர்களைத் தொடங்கினார்.[10] அவர் ஏதென்சின் கட்டுப்பாட்டில் இருந்த பல நகரங்களைக் கைப்பற்றினார், மேலும் பல தீவுகளைத் தாக்கினார். எவ்வாறாயினும், சமோசில் உள்ள ஏதெனியன் கடற்படையின் அச்சுறுத்தல் காரணமாக அவர் தார்தனெல்சு நீரிணைக்கு வடக்கே செல்ல முடியவில்லை. ஏதெனியர்களை திசை திருப்ப, லைசாந்தர் மேற்கு நோக்கி தாக்கினார். ஏதென்சுக்கு மிக அருகில் நெருங்கி, அவர் ஏஜினா மற்றும் சலாமிசைத் தாக்கினார், மேலும் அட்டிகாவில் கூட இறங்கினார். ஏதெனியன் கடற்படை துரத்தியது, ஆனால் லைசாந்தர் அவர்களைச் சுற்றவைத்து, தார்தனெல்சு நீரிணையை அடைந்து, அபிடோசில் ஒரு தளத்தை நிறுவினார். அங்கிருந்து, அவர்கள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரான லாம்ப்சாகசைக் கைப்பற்றி அங்கே முகாம் அமைத்தனர். அதனால் போஸ்போரசுக்கான வழியை ஏற்படுத்திக் கொண்டனர். அவர்கள் நீரிணையில் போக்குவரத்தை அடைந்தால், ஏதென்சுக்கு பெரும்பகுதி தானியங்கள் வரும் வர்த்தக வழியை தடுக்கலாம். ஏதெனியர்கள் உணவுப் பஞ்சத்தை தவிர்க்க வேண்டுமானால், லைசாந்தரை உடனடியாக அங்கிருந்து அகற்ற வேண்டும் என்ற கட்டாயம் ஏதெனியர்களுக்கு ஏற்பட்டது.

ஏதெனியன் எதிர்வினை

[தொகு]

லைசாந்தர் லாம்ப்சாகசைக் கைப்பற்றிய கொஞ்ச காலத்திலேயே, 180 கப்பல்கள் [11] கொண்ட ஏதெனியன் கடற்படை அவர்களை எதிர்க்க அனுப்பப்பட்டது. போதிய அனுபவமற்றவர்களால் வழிநடத்தப்பட்ட ஏதெனிய கடற்படை லாம்ப்சாகசில் உள்ள ஈகோஸ்ப்பொட்டாமி என்ற இடத்தில் தன் முகாமை அமைத்தது. ஆபத்தான இடமாக இருந்தாலும், லைசாந்தரை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தின் காரணமாக, அவர்கள் லாம்ப்சாகசுக்கு மிக அருகில் உள்ள கடற்கரையிலேயே முகாமிட்டனர். அப்பகுதியில் துறைமுகம் இல்லாததாலும், கப்பற்படையை வழிநடத்துவதில் உள்ள சிரமத்தாலும், இந்த இடம் பாதுகாப்பற்றதாகவே இருந்தது, ஆனால் ஏதெனியன் தளபதிகளின் மனதின் முதன்மையான நோக்கமாக எசுபார்த்தன் கடற்படையை அருகில் இருந்து கண்காணிக்கவேண்டும் என்பதாகவே இருந்தது.[12] ஒவ்வொரு நாளும், ஏதெனிய கப்பற்படை போர் புரிய லாம்ப்சாகசுக்குப் புறப்பட்டு, துறைமுகத்திற்கு வெளியே காத்திருந்தது. ஆனால் லைசாந்தர் வெளிவர மறுத்ததால், அவர்கள் முகாம் திரும்பினர்.[13]

ஆல்சிபியாடீசின் ஈடுபாடு

[தொகு]

இந்த நேரத்தில், நாடுகடத்தப்பட்ட ஏதெனியன் தலைவர் ஆல்சிபியாடீசு ஏதெனியன் முகாமுக்கு அருகிலுள்ள தனது கப்பல் கோட்டையகத்தில் வசித்து வந்தார். ஏதெனிய கப்பல்கள் கூடியிருந்த கடற்கரைக்கு வந்திறங்கி, தளபதிகளுக்குப் பல ஆலோசனைகளை வழங்கினார். முதலில், இந்த இடத்தில் இருந்து கடற்படையை அழைத்துக் கொண்டு எதிரிலுள்ள பாதுகாப்பான துறைமுகமான செஸ்டோசுக்கு சென்றுவிடுமாறு ஆலோசனை கூறினார். இரண்டாவதாக, பல திரேசிய மன்னர்கள் தனக்கு இராணுவத்தை வழங்க முன்வந்ததாக அவர் கூறினார். தளபதிகள் தனக்கும் போர் வழிநடத்துதலில் ஒரு பங்கை அளித்தால், ஏதெனியர்களுக்கு உதவ அவர்கள் அளிக்கும் இராணுவத்தைப் பயன்படுத்துவதாக கூறினார். இருப்பினும், தளபதிகள் இந்த வாய்ப்பையும், அவரது ஆலோசனையையும் நிராகரித்தனர். அவர்களால் அலட்சியப்படுத்தப்பட்டதால் ஆல்சிபியாடீசு தனது இருப்பிடத்துக்குத் திரும்பினார்.[14]

சமர்

[தொகு]
ஹெலஸ்பாண்ட் வழியாக ஏகோஸ்போடாமி வரை காண்க.

ஈகோஸ்ப்பொட்டாமி போர் குறித்து இரண்டு தரவுகள் உள்ளன. செஸ்டோசில் ஐந்தாவது நாளில் ஏதெனியன் தளபதி, பிலோக்லெஸ், முப்பது கப்பல்களுடன் புறப்பட்டு, மீதமுள்ளவர்களைத் தன்னைப் பின்தொடரும்படி கட்டளையிட்டதாக டியோடோரஸ் சிகுலஸ் கூறுகிறார்.[15] டொனால்ட் ககன், இந்த தரவு துல்லியமாக இருந்தால், பெரிய படை என்றால் தயங்கும் எசுபார்த்தன்கள் சிறிய படையின் மீது தாக்குதல் நடத்த விரைவார்கள் என்று ஏதெனியர்கள் திட்டமிட்டிருக்க வேண்டும் என்று வாதிடுகிறார்.[16] நிகழ்வில், சிறிய படை உடனடியாக தோற்கடிக்கப்பட்டது, மீதமுள்ள கடற்படை கடற்கரையில் போரிட தயாராக இல்லாமையால் பிடிபட்டது.

இதற்கு நேர்மாறாக, போர் நடந்த அன்று முழு ஏதெனியன் கடற்படையும் வழக்கம் போல் வெளியே வந்ததாகவும், லைசாந்தர் வழக்கம் போல் துறைமுகத்திலேயே இருந்ததாகவும் செனபோன் கூறுகிறார். ஏதெனியர்கள் தங்கள் முகாமுக்குத் திரும்பியபோது, மாலுமிகள் உணவுக்காக கப்பல்களை விட்டு கரைக்கு சென்றிருந்த சமயம்; லைசாந்தரின் கப்பற்படை திடீரென்று தோன்றி கடற் போர் புரியாமலேயே ஏதெனியக் கப்பல்களில் பெரும்பாலானவற்றை அப்படியே கைப்பற்றிக்கொண்டது.[17][11]

போர் குறித்த தரவுகள் சில வேறுபட்டாலும், முடிவு தெளிவாக உள்ளது. இவ்வாறு ஏதெனியன் கடற்படை அழிக்கப்பட்டது; தளபதி கோனான் தலைமையிலான ஒன்பது கப்பல்கள் மட்டுமே தப்பின. ஏறக்குறைய மூன்று அல்லது நான்காயிரம் ஏதெனியன் மாலுமிகளுடன் எஞ்சியிருந்த அனைவரையும் லைசாந்தர் கைதுசெய்தார். தப்பிய கப்பல்களில் ஒன்றான பரலஸ் என்ற செய்திக் கப்பல் ஏதென்சுக்கு நேர்ந்த பேரழிவைப் பற்றி தெரிவிக்க அனுப்பப்பட்டது. மீதமுள்ள கப்பலில் இருந்தவர்கள், தளபதி கோனனுடன், சைப்ரசில் இருந்த ஒரு நட்பு மன்னரான எவகோரசிடம் தஞ்சம் அடைந்தனர்.

பின்விளைவு

[தொகு]

லைசாந்தரும் அவரது வெற்றி ஈட்டிய கடற்படையும் மீண்டும் லாம்ப்சாகசுக்குச் சென்றன. முன்பு இரண்டு கப்பல்களில் பிடிபட்ட மாலுமிகளை கப்பலில் இருந்து வெளியே தூக்கி எறிந்த ஏதெனிர்களின் அட்டூழியத்தை காரணம் காட்டி,[18] எசுபார்த்தன்களும் அவர்களது கூட்டாளிகளும் ஃபிலோக்லெஸ் மற்றும் 3,000 ஏதெனியன் போர்க் கைதிகளை கொன்றனர், மற்ற கிரேக்க கைதிகளை கொல்லவில்லை.[19] பின்னர் லைசாந்தரின் கடற்படை ஏதென்சை நோக்கி மெதுவாக நகரத் தொடங்கியது. வழியில் இருந்த நகரங்களைக் கைப்பற்றியது. கடற்படை இல்லாத ஏதெனியர்கள், அவரை எதிர்க்க சக்தியற்றவர்களாக இருந்தனர். சமோசில் மட்டுமே லைசாந்தர் எதிர்ப்பைச் சந்தித்தார்; அங்குள்ள சனநாயக அரசாங்கம், ஏதென்சுக்கு மிகவும் விசுவாசமாக இருந்தது, அடிபணிய மறுத்தது. அதனால் சமோசை முற்றுகையிட ஒரு படையை நிறுத்திவிட்டு புறப்பட்டார்.

தோல்வி பற்றிய செய்தி ஏதென்சை அடைந்ததும் நடந்ததை, செனெபோன் தெரிவிக்கையில்.

...ஒரே அழுகை ஒலியானது பைரேயசிலிருந்து நீண்ட சுவர்கள் வழியாக நகரத்தில் பரவியது, ஒருவர் செய்தியை இன்னொருவருக்கு தெரிவித்தனர்; அந்த இரவில் யாரும் தூங்கவில்லை, அந்த துக்கமானது, போரினால் இல்லாமல் போனவர்களுக்காக மட்டும் அல்ல, மாறாக தங்கள் சொந்த நலனுக்காகவும் மிகுதியாக இருந்தது.[20]

வெற்றி பெற்ற எசுபார்த்தன்கள் தங்களைப் பழிவாங்குவார்கள் என்று பயந்து, ஏதெனியர்கள் முற்றுகையில் இருந்து தங்களை பாதுகாக்க முடிவு செய்தனர். கருங்கடலில் இருந்து தானியங்களை இறக்குமதி செய்ய கடற்படை இல்லாமலும், எசுபார்த்தன் ஆக்கிரமிப்பால் டிசெலியாவின் தரைப் போக்குவரத்தை துண்டிக்கபட்டதால், ஏதெனியர்கள் பட்டினியால் வாடத் தொடங்கினர். அதனால் மக்கள் தெருக்களில் பட்டினியால் இறந்தனர்.[21] 404 மார்ச்சில் நகரம் சரணடைந்தது. நகரத்தின் மதில் சுவர்கள் இடிக்கப்பட்டன, மேலும் எசுபார்த்தன் சார்பு சிலவர் ஆட்சிக்குழு அரசாங்கம் ( முப்பது சர்வாதிகாரிகளின் ஆட்சி என்று அழைக்கப்பட்டது) ஆட்சியில் அமர்ந்தது. ஈகோஸ்போட்டாமியில் எசுபார்த்தன் அடைந்த வெற்றியானது 27 ஆண்டுகாலப் போருக்கு முடிவுரை எழுதியது. எசுபார்த்தாவை முழு கிரேக்க உலகத்துக்கும் முழுமையான ஆதிக்க சக்தியாக இருந்து முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த அரசியல் ஒழுங்கை நிறுவியது.

போர் நினைவேந்தல்

[தொகு]

எசுபார்த்தன்கள் தங்கள் வெற்றியை கொண்டாடும் விதமாக போரில் ஈடுபட்ட முப்படைகளின் சிலைகளை தெல்பியில் அமைத்து நினைவுகூர்ந்தனர். மேலும் ஒரு கல்வெட்டையும் செதுக்கினர்.

குறிப்புகள்

[தொகு]
  1. Pausanias; Levi, P. (July 27, 2006). Guide to Greece, Volume 2 (2nd ed.). Penguin. p. 10.9.10. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-044226-7.
  2. Eggenberger, p 6. The author writes that the Athenians had 170 ships and that 20 escaped.
  3. Donald Kagan, The Fall of the Athenian Empire, (1987), p. 386; Diod. 13.105.1.
  4. Donald Kagan, The Fall of the Athenian Empire, (1987), p. 386.
  5. Pomeroy et al, p 327. The authors claim 171 Athenian ships were captured and a "handful" escaped.
  6. Xenophon, Hellenica 2.1.6-7
  7. Kagan, The Peloponnesian War, 469
  8. Xenophon, Hellenica 2.1.11-12
  9. "He then assigned to Lysander all the tribute which came in from his cities and belonged to him personally, and gave him also the balance he had on hand; and, after reminding Lysander how good a friend he was both to the Lacedaemonian state and to him personally, he set out on the journey to his father." in Xenophon, Hellenica 2.1.14[தொடர்பிழந்த இணைப்பு]
  10. Xenophon, Hellenica 2.1.15-19
  11. 11.0 11.1 Bury, J. B.; Meiggs, Russell (1956). A history of Greece to the death of Alexander the Great (3 ed.). London: Macmillan. pp. 501–506.
  12. Kagan, The Peloponnesian War, 473
  13. Xenophon, Hellenica 2.1.23
  14. Xenophon, Hellenica 2.1.25-26
  15. Diodorus Siculus, Library 13.106.1
  16. Donald Kagan, The Peloponnesian War
  17. Xenophon, Hellenica 2.2.1
  18. Pomeroy et al, p318
  19. Pomeroy et al, p327
  20. Xenophon, Hellenica 2.2.3
  21. Burn, A. R. (1988). The Pelican history of Greece. London: Penguin. pp. 297–299.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈகோஸ்ப்பொட்டாமி_சமர்&oldid=4150980" இலிருந்து மீள்விக்கப்பட்டது