முப்பது கொடுங்கோலர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முப்பது கொடுங்கோலர்கள் (Thirty Tyrants, பண்டைக் கிரேக்கம்οἱ τριάκοντα τύραννοι , hoi triákonta týrannoi ) என்பவர்கள் கிமு 404 இல் பெலோபொன்னேசியப் போரில் ஏதென்சு தோல்வியடைந்த பின்னர் அங்கு நிறுவப்பட்ட எசுபார்த்தன் சார்பு சிலவர் ஆட்சியினர் ஆவர். எசுபார்த்தன் தளபதி லைசாந்தரின் அறிவுருத்தலின், ஆதரவின் பேரில், முப்பது பேரும் இணைந்து ஒரு சட்டமன்றக் குழுவாக மட்டும் அல்லாமல், ஒரு கொடுங்கோல் அரசாங்கமாகத்தையும் நிறுவினர் . [1] முப்பது கொடுங்கோலர்களால் எட்டு மாதங்கள் மட்டுமே அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது. குறைந்த காலமே இருந்தாலும், அவர்களின் ஆட்சியின் விளைவாக ஏதெனியன் மக்கள் தொகையில் 5% பேர் கொல்லப்பட்டனர், குடிமக்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மற்றும் சனநாயக ஆதரவாளர்கள் நாடுகடத்தப்பட்டனர். [2] அவர்களின் கொடூரமான மற்றும் அடக்குமுறை ஆட்சியினால் அவர்கள் "முப்பது கொடுங்கோலர்கள்" என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் கிரிடியாஸ், தெரமீன்ஸ் ஆகியோர் முக்கியமானவர்களாக இருந்தனர். [3]

முப்பதுபேரின் ஆட்சி[தொகு]

எசுபார்த்தாவிடம் சரண்டைந்த பிறகு, ஏதென்சில் நடைமுறையில் இருந்துவரும் அரசியலை மாற்றியமைக்க வேண்டுமென்றும், இதற்கான சட்டங்களை உருவாக்க முப்பதுபேர் கொண்ட ஒரு குழுவினை நியமிக்க வேண்டுமென்றும், புதிய சட்டதிட்டங்கள் தயாரிக்கப்படும் வரையில், இந்த முப்பதுபேரே அரசு நிர்வாகத்தை நடத்திவர வேண்டுமென்று சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானம் எசுபார்த்தன் தளபதி லைசாந்தர் முன்னிலையில் கொண்டுவரப்பட்டது. அவரைக் கண்டு அஞ்சிய அவை உறுப்பினர்கள் அதை நிறைவேற்றினர். அதன்படி முப்பது பேரும் நியமிக்கபட்டனர் (அந்த முப்பது பேரும் எசுபார்தன் ஆதரவாளர்களான பணக்காரப் பிரிவினர்). இதன் விளைவாக, முப்பது பேர் கொண்ட சிலவர் ஆட்சியை நிறுவியவர்கள் ஏதெனியன் குடிமக்களின் உரிமைகளைக் குறைத்தனர். அந்த முப்பது பேர் 500 பேர் கொண்ட குழுவை நியமித்தனர். அந்த 500 பேரும் முன்பு அனைத்து குடிமக்களும் பங்குகொண்ட நீதித்துறை செயல்பாடுகளில் பணியாற்றினர். [4] இருப்பினும், ஏதெனியன் ஆண்கள் அனைவரும் தங்கள் உரிமைகளை முற்றுமாக இழக்கவில்லை. உண்மையில், முப்பது பேர் 3,000 ஏதெனியன் ஆண்களை "அரசாங்கத்தில் பங்குகொள்ள" தேர்ந்தெடுத்தனர். [5] இந்த வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் ஆயுதங்களை எடுத்துச் செல்லவும், நடுவர் மன்ற விசாரணையை நடத்தவும், நகர எல்லைக்குள் வசிக்கவும் உரிமை பெற்றனர். [6] தேர்ந்தெடுக்கப்பட்ட 3,000 பேரின் பட்டியல் தொடர்ந்து திருத்தப்பட்டது. [6] இந்த 3,000 ஆடவரைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை என்றாலும் - ஒரு முழுமையான பதிவாக ஆவணப்படுத்தப்படவில்லை - இது அனுமானிக்கப்படுகிறது[யாரால்?] முப்பது பேரும் தங்கள் ஆட்சிக்கு விசுவாசமாக இருக்கும் நபர்களையே இதற்கு நியமித்தனர். [7]

கிரிடியாஸ் முப்பது கொடுங்கோலர்களின் பயங்கர ஆட்சிக்கு தலைமை தாங்கினார். இவர்களின் ஆட்சியில் நூற்றுக்கணக்கான ஏதெனியர்கள் மரண தண்டனை விதிக்கப்பட்டு, நாடுகடத்தப்பட்டனனார். மேலும் அவர்களின் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையின்றி 1,500 பேருக்கு முப்பது கொடுங்கோலர்களால் மரண தண்டனை விதித்ததாக ஐசோக்ரடீஸ் மற்றும் அரிசுட்டாட்டில் ( பிந்தைய ஏதெனியன் அரசியலமைப்பில் ) ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். [8] [4] சாக்ரடீசின் முன்னாள் மாணவரும் முப்பதுபேரில் ஒருவருமான கிரிடியாஸ், அவரது கொடூர மற்றும் மனிதாபிமானமற்ற தன்மையின் காரணமாக "முதல் ரோபஸ்பியர் " [9] என்று குறிப்பிடப்படுகிறார்; மனித மதிப்பைப் பொருட்படுத்தாமல் சனநாயகத்தை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டிருந்தார். [10] சனநாயகத்துக்கு ஆதரவாக இருந்ததற்காக புதிய ஆட்சிக்கு "நட்பற்றவர்கள்" என்று அவர்கள் கருதிய பல சாதாரண குடிமக்களையும் இல்லாமல் ஆக்கினார். சிறிது காலத்தில் இந்த முப்பது பேர்களுக்குள்ளேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டது இவர்களில் மிதவாதியான தெரமெனெசசுக்கு கிரிட்டியாசின் தீவிரப் போக்கு பிடிக்காமல் அவரை எதிர்க்க முயற்சித்ததாக செனபோன் குறிப்பிட்டுள்ளார். கிரிட்டியாஸ் தெரமென்சசு மீது சதி, தேசத்துரோகம் போன்ற குற்றங்களை சாட்டி, அவருக்கு மரண தண்டனை விதிக்க வைத்தார், அவருக்கு நஞ்சு குடிக்க வைத்து தண்டனையை நிறைவேற்றினார். [11] பல செல்வந்த குடிமக்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. அதன் பிறகு சிலவர் ஆட்சியினர் அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து, அவை முப்பது சர்வாதிகாரிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களிடையே பிரித்துக்கொள்ளப்பட்டன. [12] அவர்கள் ஏதெனியன் குடிமக்களை மிரட்டுவதற்காக 300 சவுக்கு சுழற்றுபவர்களை வேலைக்கு அமர்த்தினர். [4]

பல ஏதெனியர்கள் புதிய அரசாங்கத்தை விரும்பவில்லை என்றாலும், முப்பது சர்வாதிகாரிகளின் ஆட்சி பெரும்பாலும் வெளிப்படையான எதிர்ப்பைச் சந்திக்கவில்லை. புதிய சட்டங்களை ஏற்காதவர்கள் - நாடுகடத்தப்படுவர் அல்லது மரணதண்டனைக்கு ஆளாக நேரிடுவர். அதனால் பலர் முப்பது சர்வாதிகாரிகளின் விதிகளை ஏற்றனர். [13] சனநாயக ஆதரவாளர்கள் பலர் நாடுகடத்தப்பட்டனர், அவர்களில் ஏதெனியன் கடற்படையில் முப்படை தளபதியாகவும், சனநாயக அரசாங்கத்தின் ஆதரவாளராக இருந்த திராசிபுலஸ் ஆவார். கிமு 403 இல் முப்பது சர்வாதிகாரிகளை வீழ்த்திய எழுச்சியானது திராசிபுலஸ் தலைமையிலான நாடுகடத்தப்பட்ட குழுவினரால் நடத்தப்பட்டது. ஏதென்சின் வாயிலில் நடந்த சண்டையில் கிரிடியாஸ் கொல்லப்பட்டார். [14]

பின்விளைவு[தொகு]

முப்பது கொடுங்கோலர்களின் குறுகிய கால ஆட்சி வன்முறை மற்றும் ஊழலால் சிதைக்கப்பட்டது. முப்பது கொடுங்கோலர்களின் ஆட்சி எவ்வளவு வன்முறை கொண்டதாக மாறியதோ, அவ்வளவு எதிர்ப்பை அவர்கள் எதிர்கொண்டனர். [15]

எதிர்ப்பு அதிகரித்த நிலையின் இறுதியில் திராசிபுலசின் கிளர்ச்சிப் படைகளால் முப்பது சர்வாதிகாரிகளின் ஆட்சி அகற்றப்பட வழிவகுக்கப்பட்டது. புரட்சிக்குப் பிறகு, முப்பது பேரிடமிருந்து விடுவிக்கப்பட்ட நகர அரசை ஆளுவதற்கும் முப்பது பேர் செய்த அட்டூழியங்களுக்கு உரிய நீதி வழங்குவதற்கும் சிறந்த வழியை ஏதென்சு தீர்மானிக்க வேண்டியிருந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட 3,000 உறுப்பினர்களில் முப்பது பேரைத் தவிர மற்ற அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது. [16] முப்பது கொடுங்கோலர்களை அகற்றிய புரட்சிக்குப் பிறகு, ஏதென்சு குடிமக்கள் அரசை மீண்டும் கட்டியெழுப்ப போராடினர்.

குறிப்புகள்[தொகு]

  1. Krentz, Peter. The Thirty at Athens p. 50 (hardcover ISBN 0801414504)
  2. Wolpert, Andrew. Remembering Defeat: Civil War and Civic Memory in Ancient Athens. (hardcover ISBN 0-8018-6790-8).
  3. Xenophon, Hellenica, 2.3.15–16
  4. 4.0 4.1 4.2 "Aristotle, Athenian Constitution, 35.1 (350 BCE)". Archived from the original on 2011-01-06. பார்க்கப்பட்ட நாள் 2022-06-06.
  5. Krentz, The Thirty at Athens. p. 64
  6. 6.0 6.1 Xenophon, Hellenica, 3.4.1
  7. Krentz, The Thirty at Athens. p. 65
  8. Nails, Debra. The People of Plato: A Prosopography of Plato and Other Socratics. Hackett Publishing, 2021. ISBN 0872205649
  9. Stone, I.F. The Trial of Socrates. Anchor Books, reprinted edition 1989. ISBN 978-0385260329
  10. Linder, 2002, p. 213
  11. Xenophon, Hellenica, 2.3.56
  12. Xenophon Hellenica 2.4.1
  13. Krentz, The Thirty at Athens. p. 69
  14. Xenophon, Hellenica, 3.4.19.
  15. Lewis, Sian. Ancient Tyranny, p. 213. Edinburgh: Edinburgh University Press, 2006. Print. (Hardcover, ISBN 0748621253)
  16. Xenophon, Hellenica, 2.4.38
"https://ta.wikipedia.org/w/index.php?title=முப்பது_கொடுங்கோலர்கள்&oldid=3702051" இலிருந்து மீள்விக்கப்பட்டது