மூன்றாம் வீர வல்லாளன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மூன்றாம் வீர வல்லாளன் (ஆட்சிக்காலம் 1291-1343) என்பவன் போசாளர்களில் கடைசி மாமன்னனாவான். இவனது ஆட்சியின்போது நாட்டின் வடக்கு, தெற்கு கிளைகள் ஒருங்கிணைக்கப்பட்டு, (இது தற்கால கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டின் வடக்குப் பகுதி) அலேபேடுவில் (அல்லது துவாரகாசமுத்திரம்) இருந்து ஆட்சிசெய்யப்பட்டது. இவனது ஆட்சியின்போது, பல போர்களைத் தேவகிரி யாதவர்கள் , மதுரை பாண்டியர்களுடனும், தென்னிந்திய சிற்றரசர்களுக்கு எதிராகவும் நடத்தினான்.

கி.பி.1343 இல் இவனது மரணத்துக்குப் பின், தென் இந்தியாவில் ஒரு புதிய இந்து மதப் பேரரசாக விஜயநகரப் பேரரசு தோன்றி வளர்ந்தது.

பாண்டிய மற்றும் யாதவ விவகாரங்கள்[தொகு]

கி.பி.1303 இல், மூன்றாம் வீர வல்லாளன் தனக்கு அடங்காமல் இருந்த துளு நாட்டு அளுப்பர்களை அடக்கினான். யாதவர்களை ஒடுக்க அவர்கள்மீது கி.பி.1305 இல் படையெடுத்து ஹொல்லல்கெரேயிலிருந்து அவர்களை லக்குண்டி என்ற இடம்வரை பின்வாங்கச் செய்தான்.

தமிழ்நாட்டில் ஆட்சியைக் கைப்பற்ற வீர பாண்டியனுக்கும், சுந்தர பாண்டியனுக்கும் நடந்த போட்டியில் சுந்தர பாண்டியனை ஆதரித்து அவனை அரசனாக்கி தனது ஆதிக்கத்தைத் தமிழகத்தில் நிலைநிறுத்திக் கொண்டான்.

தில்லி சுல்தான் அலாவுதீன் கில்சியின் ஆணையின்படி மாலிக் கபூர் தென்னிந்தியாமீது படையெடுத்து வந்தான். 1311ல் போசாள நாட்டின் துவார சமுத்திரத்தை (அலேபீடு) முற்றுகையிட்டான். ஆனால் வீரவல்லாளன் மாலிக் கபூரின் பெரும்படைகளுக்கு அஞ்சிப் போரிடாது, மாலிக் கபூருடன் ஒரு சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்படி துவார சமுத்திர அரசின் கருவூலத்தில் இருந்த அனைத்துச் செல்வங்களையும் மாலிக் கபூர் கைப்பற்றினான். மேலும் போசாள நாடு, தில்லி சுல்தானகத்திற்கு அடங்கி, ஆண்டுதோறும் பெருந்தொகை கப்பம் செலுத்த வேண்டும் என்று உடன்படிக்கை ஏற்பட்டது.

தில்லியிலிருந்து படையெடுப்பு[தொகு]

கி.பி.1318இல் தேவகிரி தில்லி சுல்தானால் ஆக்கிரமிக்கப்பட்டதன் மூலம், யாதவ ராஜ்யம் முற்றிலும் அழிந்து விட்டது. அங்குத் தில்லி சுல்தான் முஹம்மது பின் துக்ளக் ஆட்சி நடந்து வந்தது. மூன்றாம் வீர வல்லாளன் தில்லிக்குத் திரை செலுத்த மறுத்துத் தனது முந்தைய ஒப்பந்தத்திலிருந்து விலகினான். இதனால் முஹம்மது பின் துக்ளக் கி.பி.1327 தெற்கில் மீண்டும் ஒரு படையை அனுப்பினான் அலேபீடுவை இரண்டாவது முறையாகத் தில்லி படைகள் கொள்ளையிட்டன. இதனால் மூன்றாம் வீர வல்லாளன் பின்வாங்கிச் சென்று திருவண்ணாமலையிலிருந்து தனது எதிர்ப்பைத் தொடர்ந்தான். கி.பி.1336 வாக்கில் தென்னிந்தியாவின் போசாளர்களைத்தவிர அனைத்து இந்து அரசுகளும் தில்லியால் தோற்கடிக்கப்பட்டு பெரும்பாலான பகுதிகள் தில்லி சுல்தானகத்தால் இணைத்துக் கொள்ளப்பட்டது. மதுரையும் சுல்தான் ஆட்சியில் கி.பி.1335-6 காலகட்டத்தில் இருந்தது. சுல்தானியர்கள் படையெடுப்பை எதிர்கொள்ளும் நோக்கத்துடன், மூன்றாம் வீர வல்லாளன் துங்கபத்ரை ஆற்றங்கரையில் ஹொசபட்டணா எனும் இரண்டாவது தலைநகரை நிறுவினான். இதுவே பின்னர் வந்த விஜயநகரம் என்ற பெயருடன் விஜயநகர பேரரசின் தலைநகரமாக விளங்கியது. கி.பி.1342-3 இல், போசாளர்களின் வருங்காலத்தை முடிவுசெய்யும் வகையில் கடுமையான போர் மூன்றாம் வீர வல்லாளனுக்கும் மதுரை சுல்தானகத்தின் சுல்தான் கியாஸ்-உத்-தின் ஆகியோருக்கு இடையில் நடைபெற்றது. முதலில் வெற்றி அடைந்தாலும் பின்னர் கண்ணனூர் கொப்பம் கோட்டையின் முற்றுகையின் கிபி 1343 போது வீர வல்லாளன் சுல்தானின் படைகளால் சிறைபிடிக்கப்பட்டான். இதன்பிறகு வல்லாலனைக் கொன்று, வைக்கோல் அடைக்கப்பட்ட அவனது உடலை மதுரை கோட்டை சுவர்களில் காட்சிக்கு வைத்தனர். போசாள மன்னன் வீர வள்ளாளன் சுல்தான்களால் கொல்லப்பட்டதால் அவரது மகன் நான்காம் வீர வல்லாளனுடன் போசாளர்களின் ஆட்சி கி.பி.1346யுடன் முடிவுக்கு வந்தது.

படைத்தலைவன்[தொகு]

மாதப்ப தண்டநாயக்கன் மூன்றாம் வீர வல்லாளனின் படைத்தலைவனாக இருந்தவன்.மாதப்ப தண்டநாயக்கன், மூன்றாம் வீரவல்லாளன் காலத்தில் டணாயக்கன் கோட்டையை நிறுவினான். மூன்றாம் நரசிம்மன் (கி.பி. 1263-1292) தன் ஆட்சிக்காலத்தில் தன் தந்தை பெயரால் சோமேசுவரன் கோவிலைக்கட்டினான்.பவானிசாகர் அணைப்பகுதியில் மூழ்கிப்போன கோயில்களுள் இக்கோயிலும் ஒன்று எனக்கருதலாம். ஏனெனில், சோமேசுவரர் கோயில் என்னும் பெயருடைய கோயில் நீரில் மூழ்கிய செய்தி பவானிசாகர் அணைப்பகுதிக் கோயிலில் பொறிக்கப்பட்டுள்ளது. இச்செய்தியின் அடிப்படையில், டணாயக்கன் கோட்டையை மாதப்ப தண்டநாயக்கன் கட்டும்போதே அப்பகுதியில் சோமேசுவரர் கோயில் இருந்துள்ளது என்பது பெறப்படுகிறது.

புதினம்[தொகு]

மதுரை சுல்தான்களுக்கும் மூன்றாம் வீர வல்லாலனுக்கும் நிகழ்ந்த போரை மையமாகக் கொண்டு ஸ்ரீவேணுகோபாலன் திருவரங்கன் உலா என்ற புதினத்தை எழுதியுள்ளார்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்றாம்_வீர_வல்லாளன்&oldid=3510298" இலிருந்து மீள்விக்கப்பட்டது