தண்டநாயக்கன் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கருநாடகப் போசள (ஹொய்சள) அரசர்களில் வீரசோமேசுவரன் ஒருவன். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1234-1264 என்னும் குறிப்புள்ளது. இவனது மகன் மூன்றாம் நரசிம்மன். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1263-1292. கருநாடகத்தில் மைசூரை அடுத்துள்ள இன்றைய குண்ட்லுப்பேட்டைப் பகுதி முன்னாளில் தெற்கணாம்பி என்னும் பெயரில் இருந்தது. அதன் உட்பிரிவான பதிநால்கு நாட்டின் தலைவர்களாக இந்தத் தண்ட நாயக்கர்கள் ஆட்சிசெய்தனர். இவர்களில் பெருமாள் தண்ட நாயக்கன் என்பவர், மூன்றாம் நரசிம்மன், மூன்றாம் வீரவல்லாளன் ஆகியோரிடம் பிரதானி என்னும் முதன்மையான ஒரு பதவியில் பணியாற்றியவர். பெருமாள் தண்ட நாயக்கனுக்கு இரு மகன்கள். ஒருவர் மாதப்ப தண்டநாயக்கன். மற்றவர் கேத்தய தண்டநாயக்கன். மாதப்ப தண்டநாயக்கன் மூன்றாம் வீர வல்லாளனின் படைத்தலைவனாக இருந்தவன்.

மாதப்ப தண்டநாயக்கன் மூன்றாம் வீரவல்லாளன் காலத்தில் டணாயக்கன் கோட்டையை நிறுவினான். மூன்றாம் நரசிம்மன் (கி.பி. 1263-1292) தன் ஆட்சிக்காலத்தில் தன் தந்தை பெயரால் சோமேசுவரன் கோவிலைக்கட்டினான் என்று வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது. பவானிசாகர் அணைப்பகுதியில் மூழ்கிப்போன கோயில்களுள் இக்கோயிலும் ஒன்று எனக்கருதலாம். ஏனெனில், சோமேசுவரர் கோயில் என்னும் பெயருடைய கோயில் நீரில் மூழ்கிய செய்தி பவானி சாகர் அணைப்பகுதிக் கோயிலில் பொறிக்கப்பட்டுள்ளது. இச்செய்தியின் அடிப்படையில், டணாயக்கன் கோட்டையை மாதப்ப தண்டநாயக்கன் கட்டும்போதே அப்பகுதியில் சோமேசுவரர் கோயில் இருந்துள்ளது என்பது பெறப்படுகிறது. எனவே, டணாயக்கன் கோட்டை கி.பி. 1292-ஆம் ஆண்டுக்குப் பின்னரே கட்டப்பட்டிருக்கவேண்டும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தண்டநாயக்கன்_கோட்டை&oldid=3416977" இருந்து மீள்விக்கப்பட்டது