வலைவாசல்:கருநாடக இசை/உங்களுக்குத்தெரியுமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Purge cache to refresh this page

உங்களுக்குத் தெரியுமா.. பெட்டகம்[தொகு]

இங்கு உங்கள் பரிந்துரைகளைத் தரலாம்.

திங்கள்[தொகு]

  • கீதங்கள், கீர்த்தனைகள், பதங்கள் போன்றவற்றை இயற்றுபவர் கருநாடக இசைத் துறையில் வாக்கேயக்காரர் என அழைக்கப்படுவார்.
  • மேளகர்த்தா இராகங்கள் கருநாடக இசையின் இராகங்களில், ச - ரி - க - ம - ப - த - நி என்ற ஏழு சுரங்களையும் கொண்டவையாகும். வேறுபாடுள்ள சுரங்கள் மாறுவதாலேயே வித்தியாசங்கள் ஏற்படுகின்றன.
  • 'மதங்கம்' என்னும் பழந்தமிழ்ச் சொல்லின் திரிபே மிருதங்கம் என்னும் வடமொழிச் சொல் எனக் கருதுகிறார்கள். தமிழின் 'மெது' என்பதே 'மிருது' எனத் திரிந்தது.

செவ்வாய்[தொகு]

  • கீர்த்தனைகளை இயற்றும் பாடலாசிரியர்கள், ஒரு குறிப்பிட்ட சொல் தங்களின் பாடலில் இடம்பெறும் வகையில் எழுதுவர். அச்சொல் முத்திரை என அழைக்கப்படும்.
  • ஜன்னிய இராகங்கள் என்பது கருநாடக இசையில் மேளகர்த்தா இராகங்கள் என அழைக்கப்படும் ஜனக இராகங்களிலிருந்து பிறந்தவை. இவை பிறந்த இராகம் அல்லது சேய் இராகம் என்றும் அழைக்கப்படுகின்றன.
  • மோர்சிங் (யூத யாழ்) இவ்வுலகின் தொன்மையான இசைக்கருவிகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. ஒரு இசைக்கலைஞன் இக்கருவியை வாசிப்பதை கி.மு 3ம் நூற்றாண்டு சீன ஓவியத்தில் காணலாம்.

புதன்[தொகு]

  • மனோதர்மம் எனும் சொல், கருநாடக இசைத் துறையில் வழங்கப்பெறுவதாகும். ஒரு இசைக் கலைஞர், கச்சேரி நடந்துகொண்டிருக்கும்போது தனது படைப்புத்திறனை முன்னேற்பாடின்றி வெளிப்படுமாறு செய்தல் (improvisation) மனோதர்மம் என்றழைக்கப்படுகிறது.
  • சிறீரஞ்சனி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது இருபத்தோராவது மேளகர்த்தா இராகமும், "வேத" என்று அழைக்கப்படும் நான்காவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய கரகரப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும்.
  • ஜலதரங்கம் என்பது ஒரு இந்திய தாள இசைக்கருவி ஆகும். நீரால் நிரப்பப்பட்ட பீங்கான் கிண்ணங்கள் இசைக்கலைஞரை சுற்றி வைக்கப்பட்டிருக்கும். இக்கிண்ணங்களின் விளிம்புகளை தனது கைகளிலுள்ள குச்சிகளால் தட்டி அக்கலைஞர் ஒலி எழுப்புவார்.

வியாழன்[தொகு]

  • கருநாடக இசை நிகழ்ச்சிகளில் பக்கவாத்தியக் கலைஞர்களால் ஒரு குறிப்பிட்ட கால அளவு வழங்கப்படும் இசைப்பகுதி, தனி ஆவர்த்தனம் என அழைக்கப்படுகிறது. இதனை 'தனி' என்றும் பேச்சு வழக்கில் அழைப்பர்.
  • காம்போதி கருநாடக இசையில் மிகப் பிரபலமான ஒரு இராகமாகும். இது 72 மேளகர்த்தா இராகங்களில் 28வது மேளமாகிய அரிகாம்போதி இராகத்தின் ஜன்னிய இராகமாகும்.
  • கொன்னக்கோல் என்பது கருநாடக இசையில் பயன்படுத்தப்படும் ஒரு உப பக்க வாத்தியம். இதற்கு கலைஞர்களின் குரலே இசைக்கருவி ஆகும். அதாவது வாயால் உச்சரிக்கப்படும் தாளலயம் அல்லது வாயால் சொற்கட்டுகளுடன் வாசிப்பது கொன்னக்கோல் எனலாம்.

வெள்ளி[தொகு]

  • ஒரு இசை நிகழ்ச்சியில் பாடலுக்கு அல்லது முக்கிய இசைக்கருவிக்கு உறுதுணையாக இருந்து வாசிக்கக்கூடிய இசைக்கருவிகள், பக்கவாத்தியம் என்றழைக்கப்படும்.
  • மாயாமாளவகௌளை என்பது கருணை, பக்தி ஆகிய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் இராகம் ஆகும். கருநாடக இசையின் 15 வது மேளகர்த்தா எப்போதும் பாடத்தகுந்த இராகம். இந்துஸ்தானி இசையில் இதற்கு பைரவ தாட் எனப் பெயர்.
  • கருநாடக வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சிகளில் மங்களம் பாடி நிறைவு செய்வதற்கு முன்பாக பாடப்படும் சிறிய பாடல்கள், துக்கடா என அழைக்கப்படும். துக்கடா என்பதற்கு ‘அளவில் சிறிய’ எனப்பொருள்.

சனி[தொகு]

  • கருநாடக வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சிகளில் பாடப்படும் ஒரு இசை வடிவம் இராகம் தானம் பல்லவி என அழைக்கப்படும். இது இராக ஆலாபனை, தானம், நிரவல் மற்றும் கல்பனஸ்வரா ஆகியவை ஒருங்கிணைந்து அமைந்த இசை வடிவம் ஆகும்
  • சண்முகப்பிரியா கருநாடக இசையின் 56வது மேளகர்த்தா இராகமாகும். விரிவான ஆலாபனைக்கு இடம் தரும் இராகம். இந்த இராகத்தின் தோற்றமான (ஜன்யமான) சாமரம் அசம்பூர்ண மேள பத்ததியில் 56 வது இராகமாக விளங்குகிறது.
  • தாளம் இசையில் கால அளவுகளை ஒழுங்கு முறையில் அமைப்பதற்கு பயன்படுவது ஆகும். கர்நாடக இசையில் தாளங்கள் ஏழு வகைகளாக உள்ளன. இவற்றை சப்த தாளங்கள் என்றும் கூறுவர். சப்தம் என்பது வடமொழியில் ஏழு என்று பொருள்படும்.

ஞாயிறு[தொகு]

  • இசைக்கருவியில் நேரடியாக பாடலைப் பாடாமல், 'வாயால் பாடி' நடத்தப்படும் கருநாடக இசை நிகழ்ச்சியே வாய்ப்பாட்டு என்றழைக்கப்படும்.
  • தமிழ்நாடு அரசு இசைப்பள்ளி தமிழ்நாடு அரசால் தமிழிசையை கற்பிப்பதற்கென உருவாக்கப்பட்ட இசைப்பள்ளிகள் ஆகும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு இசைப்பள்ளியை நிறுவதே தமிழ்நாடு அரசின் திட்டமாக இருக்கிறது.
  • பாரம்பரிய வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகளின் இறுதியில் வாழ்த்துப்பாடல் இடம்பெறும். இதற்கு மங்களம் பாடுதல் எனப்பெயர்.